லட்சுமி என்பதற்குப் பிரியாது, பொருத்தி இருப்பவள் என்பது பொருள். அவள் அனேக வடிவங்களில் உலகில் நிறைந்திருக்கிறாள். அவளை அஷ்ட லட்சுமிகளாகவும், ஷோடஸ லட்சுமிகளாகவும் கொண்டாடுகிறோம்.
செல்வமானது, வீடு, மாடு, மனை, படிப்பு, வீரம் என்ற பல நிலைகளில் இருந்தாலும், அது பொன்னாபரணங்களாலும், பொற்கட்டிகளாலும் இருக்கும்போதே முதன்மைச் சிறப்பைப் பெறுகிறது.
அதனால் மகாலட்சுமியை சுவர்ணலட்சுமி என்று கொண்டாடுகிறோம். பெரிய கூட்டத்தில் ஒருவர் தான் அணிந்திருக்கும் பொன்னாபரணங்களுக்கு ஏற்பவே கூடுதல் மதிப்பைப் பெறுகிறார். செல்வங்களை அருளி சகல சௌபாக்கியங்களுடன் வாழவைக்கும் மகாலட்சுமியை சௌபாக்ய லட்சுமி என்று அழைக்கிறோம். சகல செல்வங்களையும் தந்து அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் செல்வத் திருமகளை ஐஸ்வர்ய மகாலட்சுமி என்று போற்றுகிறோம்.
மகாலட்சுமியைத் திருமாலின் தேவியாகப் போற்றி வழிபடுவதே பொதுவான நிலையாகும். அவளை பாற்கடலில் இருந்து தோன்றிய கன்னிப் பெண்ணாக, மணமாலை ஏந்தி வரும் சுயம்வர லட்சுமியாக வழிபடுவது ஒருமுறையாகும். இவளைக் கன்யாலட்சுமி என்றும், சுயம்வர லட்சுமி என்றும் அழைக்கின்றனர். பாரத தேச சமய வழிபாட்டில் கன்னிப் பெண்கள் தனியிடம் பெறுகின்றனர். பெண் தெய்வங்களைக் கன்னிப் பெண் வடிவில் வைத்து வழிபட்டால் அதிகமான நன்மைகளைப் பெறலாம் என்று நம்புகின்றனர்.
செல்வத் திருமகளான மகாலட்சுமியைப் பாற்கடலில் இருந்து பிறந்து வரும் கன்னியாக வழிபடுவதே இந்த ஐஸ்வர்ய லட்சுமி வழிபாடாகும். இவளுடன் தோன்றிய கற்பகமரம், காமதேனு, உச்சைச்ரவஸ் என்னும் குதிரை, மணமாலை ஏந்திய அப்சரஸ், காவல் தேவியான விந்தியாவாசினி என்னும் துர்க்கை, இந்திரன் ஆகியோருடன் இவள் வடிவத்தையும் ஓவியமாக வரைந்து வழிபடுகின்றனர். இவள் திருமாலைக் கணவனாக வரித்து அவருக்கு மாலையிடும் கருத்தில் இருக்கின்றாள்.
பாற்கடலில் பிறந்த ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பவளான மகாலட்சுமியின் அருள் எல்லோருக்கும் கிடைத்து எல்லோரும் இன்பமுடன் வாழ வேண்டிப் பிரார்த்தித்து, பொதுவாக மகாலட்சுமி பூஜை நடைபெறுவதுண்டு. கார்த்திகை மாதத்து பஞ்சமிக்கு ஸ்ரீபஞ்சமி என்பது பெயர். ஐஸ்வர்யம் என்பதற்கு மேலான செல்வம் என்பது பொருள்.
ஒரு சமயம் சாகா நிலையைத் தரும் அமிர்தத்தைப் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் கூடி பாற்கடலைக் கடைந்தபோது எட்டுக் கிளைகளுடன் கூடிய கற்பகவிருட்சம் தோன்றியது. அதில் காமவல்லி என்னும் கொடி படர்ந்திருந்தது. கிளைகளில் ஏராளமான பழங்களும், வண்ண வண்ணப் பூக்களும் இருந்தன.
அது தன் நிழலில் இருந்து கேட்பவர்களுக்குக் கேட்டதைக் கொடுக்கும் தெய்வீக மரமாக இருந்தது. அதற்குப் பிறகு ஐராவதம் என்னும் வெண்மை நிறம் கொண்ட யானை தோன்றியது. அதன் பிறகு காமதேனு என்னும் தெய்வீகப் பசு தோன்றியது. அதை அடுத்து வண்ணப் பட்டாடைகள் அணிந்து பலவிதமான ஆபரணங்களைப் பூண்ட 60,000 தேவமங்கையர் தோன்றினர். அவர்களை அடுத்து கௌஸ்துப மணி, பஞ்சவிருட்சங்கள் எனப் பல பொருட்கள் தோன்றின. அவற்றுடன் சந்திரன் தோன்றினான்.
இறுதியாக வண்ணப்பட்டாடை அணிந்து அனேக நவரத்தினங்கள் பதித்த அனேக அணிமணிகளைப் பூண்டவளாகப் பேரழகுப் பாவையாக மகாலட்சுமி தோன்றினாள். அவள் மணமாலையுடன் காணப்பட்டாள். அவளுக்கு அடுத்தபடியாக தேவவைத்தியனான தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டான். பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பொருட்களை தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.
மகாலட்சுமி திருமாலுக்கு மாலையிட்டு அவருக்குத் தேவியானாள். அமிர்தத்திற்குத் தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் மோகினி ஆரவாரத்துடன் தோன்றி, அனைவரையும் மாயையால் மயக்கி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை அளித்து விட்டு எஞ்சியதை பாதுகாப்பான இடத்தில் வைத்தார். பிறகு திருமகளுடன் தனது வைகுண்டத்தை அடைந்தார்.
மகாலட்சுமியுடன் பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் எழுதி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களையும் அடைந்து சுகமாக வாழலாம் என்று நம்பப்படுகிறது. வெண்பட்டுத் துணியில் சிவப்பு அல்லது நீலவண்ணத்தில் இந்த உருவத்தை எழுதி வழிபடுவது வழக்கம். பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் தீட்டி வழிபடுவது இயலாது என்பதால், சிறந்ததாகவும், தனிச்சிறப்பு கொண்டதாகவும் இருக்கும் சிலவற்றை மட்டும் வரைந்து வழிபடுகிறோம்.
இங்கேயுள்ள படத்தில் நடுவில் ஐராவதம் என்னும் யானை மீது மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். அவளது மேற்கரங்களில் தாமரை மலர்கள் இருக்க, முன்கரங்களில் அபய முத்திரையும், அமிர்த கலசத்தையும் தாங்கியுள்ளாள். அவளுக்கு மேலே கற்பக மரம் நிழல் பரப்புகிறது.
லட்சுமியின் வலது தோளுக்கு மேல் உச்சைச்ரவஸ் என்னும் குதிரையும், இடது தோளுக்கு மேல் காமதேனு என்னும் பெண் முகம் கொண்ட பசுவும் உள்ளன. தேவியின் வலப்புறம் விந்தியாவாசினி என்னும் துர்க்காதேவி வில்லேந்தி நிற்கிறாள். அவளுக்கு அருகில் சந்திரதேவன் நிற்கின்றான். தேவியின் இடதுபுறம் மணமாலையைத் தாங்கியவாறு அப்சரப் பெண் நிற்கிறாள். (இங்குள்ள மகாலட்சுமி திருமணமாகாதவள். அப்போது தான் பாற்கடலில் பிறந்தவள். அவள் தனக்கென மணாளனைக் காணக் காத்திருப்பவள். அதனால் கன்யாலட்சுமி என்று போற்றப்படுகிறாள். ஆகவே இங்கு இவளைக் கன்னிப்பெண் தெய்வமாகவே கொண்டாடுகிறோம். அவளை அடுத்து தேவ வைத்தியனான தன்வந்திரி சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி ஆகியவற்றுடன் நிற்கின்றார்.
வேண்டியதை விரும்பியவாறு தரும் காமதேனு, தனது நிழலில் இருப்பவர் விரும்பியதை அளிக்கும் கற்பகமரம், எங்கும் எளிதில் செல்ல உதவிடும் உச்சைச்ரவஸ், காவல் தரும் விந்தியாவாசினி, மன அமைதியைத் தரும் சந்திரன், அழகும் இளமையும் நல்கும் அப்சரஸ், நோய் நொடி அற்ற வாழ்வைத் தரும் தன்வந்திரி ஆகியோர் புடைசூழ சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வை அளிக்கும் தேவியாக வரதான மங்கையாக மகாலட்சுமி வீற்றிருக்கும்படியாக அமைந்ததே இதன் அமைப்பாகும்.
ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பதால், இந்த லட்சுமியின் வடிவம் ஐஸ்வர்ய லட்சுமி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய லட்சுமியை
வாழ்வில் வளமான செல்வநலம் பெற வேண்டி ஆயிரம் வில்வ தலங்கள், தாமரை மலர் களைக் கொண்டு வழிபடுபவர் சகல செல்வங்களையும் பெற்று இனிது வாழ்வர்.. ஐச்வர்ய மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் இன்பமான வாழ்வைப் பெறு வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக