ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள்!



ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோயில். இத்தலம் அக்காலத்தில், விரஜாபுரி எனப் புகழ் பெற்றிருந்தது.

ஸ்ரீ சுகப்பிரம்மம் நிர்மாணித்த திருக்கோயில் என்பதால் இன்றும் இக்கோயிலில் பச்சைக் கிளிகள் அதிகம் காணப் படுகிறது.



தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)
தாயார் : ஸ்ரீ வேதநாயகி.
தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்
சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.



இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயன திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார்.

விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தரும் அழகே அழகு. அருகே பூதேவி - அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி - ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

பிரகலாதன், சுகபிரம்ம மகரிஷி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கு எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த பெருமானாகும். ஸ்ரீ வேதநாயகித் தாயார் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் பாலிக்கிறார்.



திருமால்பாடி திருத்தலத்திற்கு சென்று வழிபட, வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை ஸ்ரீ ரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு, டிரான்ஸ்ஃபர் பெருமாள் (Transfer Perumal) என்றே பெயர் வந்தது.


கோயில் அமைவிடம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம்.



ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.

கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

வளமான வாழ்வையும், அஷ்ட லக்ஷ்மி அம்சங்களான அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் திருத்தலம் இந்த திருமால்பாடி திருத்தலம்.




நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்!

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்.

பொன்கொண்ட மலர்அயனும் நெடுமாலும்
அமரர்களும் புகழ்ந்து போற்ற
மின்கொண்ட மருங்குமையாள் இடம்பயில்
நடம்புரியும் விமல மேலோன்
கொன்கொண்ட ஐங்கரனும் அறுமுகனும்
புடைசூழுங் கோமான் எம்மான்
மன்கொண்ட நெல்வேலி நாதன் இரு
பாதமலர் மனத்துள் வைப்பாம்!!!

என வேணுவன புராணத்தில் நெல்வேலி நாதரைப் பற்றியும்,

ஏர்கொண்ட நெல்லை நகர் இடங்கொண்டு
வலங்கொண்டங் கிறைஞ்சு வோர்கள்
சீர்கொண்ட தன்னுருவும் பரனுருவும்
விளங்க அருள்செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும் வேய்ஈன்ற
முத்தைமிக விரும்பிப் பூணும்
வார்கொண்ட கபளமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வாம்!!!

என வேணுவன புராணத்தில் காந்திமதி அம்மனைக் குறித்தும் பாடப்பட்டுள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் நெல்லை பூமிக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்பதால் வயல்வெளிகள் செழிப்போடு காட்சி அளிக்கின்றன. இவ்வூர் மக்கள் பேசும் நெல்லைத் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர்களது தமிழிலும் சரி, பேச்சு நடையிலும் சரி அன்பு இழையோடுகிறது. அன்பு மட்டுமல்ல வீரம் விளைந்த மண்ணும் கூடத்தான். நம் நாட்டில் நிறைய இரட்டை நகரங்கள் உள்ளன. அவற்றுள் பெருமை மிகு திருநெல்வேலியும் ஒன்று. பாளையங்கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாக திகழ்வது கூடுதல் பெருமை.

இத்திருநெல்வேலி நகரம் சிவபிரான் ஆட்சி செய்யும் திருக்குற்றாலத்திற்கு கிழக்கு திசையிலும், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு தெற்கு திசையிலும், ஆறுமுகன், வேல்முருகன் ஆட்சி செய்யும் திருச்செந்தூருக்கு மேற்கு திசையிலும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரியை அடுத்த சுசீந்திரத்திற்கு வடக்கு திசையிலும் அமையப் பெற்றுள்ளதாக நெல்லை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 km தொலைவிலும், மதுரையில் இருந்து 154 km தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்வாவிற்கும் புகழ் கொண்டதல்லவா? இந்த அல்வா கிடைக்கும் இருட்டுக் கடை கூட இத்திருக்கோயிலின் எதிரே தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காந்திமதி அம்மனுக்கும், நெல்லையப்பருக்கும் என இரு தனித்தனி கோயில்களாக அமைந்துள்ளன.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நெல்லையப்பர் (வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)
தல இறைவி : காந்திமதி அம்மை (வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)
தல விருட்சம் : மூங்கில்
தல தீர்த்தம் : மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.


திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென்காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது. சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றி பாடப்பட்டுள்ளன.

நான்கு வேதங்களும் சிவபிரானிடம், ஈசனின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் வேண்டும் எனக் கேட்க, அதன்படியே இறைவன், தான் நடனம் புரியும் இருபத்தியோரு திருத்தலங்களில் தென்காஞ்சி எனப்படும் திருநெல்வேலியில், மூங்கில் மரங்களாய் வேதங்கள் தோன்ற லிங்க உருவில் சிவன் அருள்பாலிக்கிறார்.


ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து
பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேரே சென்றால் நெல்வேலி நாதரை வழிபடலாம். பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை
என இந்த வரிசையில்,
5. திருநெல்வேலி - தாமிரசபை
அமைந்துள்ளது.


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை

அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.


அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இருந்து நமக்குத் தெரிய வரும் விஷயம் திருநெல்வேலி மாநகரம் அக்காலத்தில் இருந்தே சீரும் சிறப்புமாக விளங்கியுள்ளது என்பது. மதுரை நாயக்க மன்னர் தனது ஆட்சிகாலத்தில் தங்களது தெற்கு பிராந்தியப் பகுதிகளுக்கு திருநெல்வேலியையே தலை நகராகக் கொண்டிருந்தனர். நவாப் ஆட்சி காலத்திலும் திருநெல்வேலி தலைநகரமாக விளங்கியுள்ளது.

இத்திருக்கோயில் வேணுவன நாதரின் திருவிளையாடல்கள்:
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார்.

திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்:
முன்னொரு காலத்தில் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடினர். வேதசன்மா என்னும் சிவனடியாரிடம் அவரது பக்திக்கு இணங்கி, "நீ, நான் குடியிருக்கும் நெல்லை நகருக்கு வந்தால் உன் துயர் நீங்கும்", எனக் கட்டளை இட்டார் ஈசன். அவ்வண்ணமே அங்கு சென்றார் வேதசன்மா. அவ்வாறு வந்த சிவனடியாருக்கு இறைவன் நிறைய செல்வங்களை வழங்கினார். அதுமுதல் நாடு செழிப்புடன் விளங்கியது. தன்னிடம் இருந்த நெல்லைக் கொண்டு நாள்தோறும் இறைவனுக்கு பூஜை செய்து அமுது படைத்தார் வேதசன்மா. பஞ்ச காலத்தில் தனது அடியவரை சோதிக்க நினைத்தார் சிவபிரான். தான் வைத்திருந்த நெல் அனைத்தும் அமுது படைத்து தீர்ந்து போன நிலையில் அன்றைய பொழுதிற்கு மட்டும் மீதம் வைத்திருந்தார் வேதசன்மா.

பொருநை நதியில் நீராடிவிட்டு வந்து இறைவனுக்கு உணவு படைக்கலாம் என நினைத்து, அந்த நெல்லினை உலர வைத்துவிட்டு நீராடச் சென்றார் அடியவர். அந்த நேரத்தில் இறைவன் பெருமழையினைப் பொழியச் செய்தார். இதனைக் கண்ட வேதசன்மா ஒரு நாளைக்கு மட்டுமே மீதம் இருந்த நெல் இந்த மழையில் நனைந்தால் ஈசனுக்கு அமுது படைக்க முடியாதே என வேகமாக வந்து காய வைத்த நெல்லை அள்ள முயல, அவர் கண்ட அதிசயக் காட்சி இறைவனின் பேராற்றலை அவருக்கு உணர்த்தியது. சுற்றி மழை பெய்து கொண்டிருக்க நெல் காயும் இடத்தில் மட்டும் வேலி இட்டது போல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட சிவனடியாரும், அந்நாட்டு மன்னரும் வேணுவன நாதரின் தாள் பணிந்தனர். அன்று முதல் வேணுவன நாதர், நெல்வேலி நாதர் என்ற திருநாமத்துடனும் விளங்கினார்.

இத்திருக்கோயிலில் நிகழ்ந்த மற்றொரு திருவிளையாடல் சுவேதகேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல். இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென் கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலி நாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்ற சீர் நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல், என பல்வேறு திருவிளையாடல்களை இத்தலத்தில் புரிந்துள்ளார் இறைவன்.

திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

இத்திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடி பெருமை கொண்டுள்ளனர். நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் நாட்டு திருக்கோயில்களின் சிறப்பம்சமான சிற்ப வேலைப்பாடுகள் இத்திருக்கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்றன. திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.


உள்ளே சென்றால் கொடிமரத்தின் முன்னே நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.


தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு.













ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


போர்காட்சியை கண்முன்னே நிறுத்தும் புடைப்புச் சிற்பம்.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


மல்யுத்த வீரர்கள் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி அப்படியே சாளர வடிவத்தில். மேல் புறம் ஒரு தலை, கீழ்புறம் ஒரு தலை வடிவம். ஒருவரது ஒரு காலால் மற்றவரது காலினையும், கையினால், கையினையும், துளி கூட நகர முடியாத அளவிற்கு கால் கைகளாலேயே கிடுக்கி பிடி பிடித்திருக்கும் மல்யுத்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பக் காட்சி.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


அக்காலத்திய சிவனடியார்களின் தோற்றத்தினை அப்படியே நம் கண் முன் காட்டும் சிலை வடிவம். தலையைச் சுற்றிய உத்திராட்ச மாலை. கழுத்தில் அணிந்திருக்கும் மாலையின் வடிவம் அனைத்தும் வடிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் வரிசையாக நீண்ட தூண்களை படுக்கை வாக்கில் அடுக்கியது போன்ற அமைப்பு.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் எத்தனை அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இக்கோயிலில் அமையப் பெற்றுள்ள சிற்பங்களைக் காண ஒரு நாள் போதாது.


திருக்கோயிலில் உள்ளே மட்டுமல்லாது வாயிற் கதவுகளில் கூட அழகிய சிற்ப வடிவங்கள்.


நிலைக் கதவுகள் உயரமாகவும், கலை வண்ணத்துடன் காட்சி தருவது, எங்கு திரும்பினாலும், கோயிலுக்குள் எங்கு சென்றாலும் அங்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு சிற்ப வடிவத்தை கண்டாகவேண்டிய அளவிற்கு கணக்கிலடங்கா சிற்பங்கள்.

****************

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:
மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் ***

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை!

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்
இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.


திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

திருக்கோயில் அமைவிடம்:
பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 20 km தூரத்திலும், சாலியமங்கலத்தில் இருந்து 10 km தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.

திருக்கோயில் குறிப்பு:
தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)
தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)
தல விருட்சம்: முல்லைக்கொடி
தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)



இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். திருநாவுக்கரசர் மேலும் இவ்விறைவனை தனது அன்பின் பக்தியின் மிகுதியால் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி, எட்டுருவ மூர்த்தி என்றும் தனது பாடல்கள் மூலம் போற்றிப் புகழ்கிறார்.

திருத்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.

கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.


இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.

பழைய தலவரலாறு:
பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.


திருக்கோயில் அமைப்பு:
திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:
1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.
2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.
3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.
4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.
5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.

திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,
தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்
இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


இராசகோபுரத்தினை வணங்கி உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது நடவான மண்டபமும், வசந்த மண்டபமும்தான். அதன் பின் உட்கோபுரம் இரண்டாம் கோபுரத்தினை அடைந்து உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரத்தில் சுவாமி சன்னதியும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் அமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும், ஒரு மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:
சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:
இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!!

திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்:
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!


மதுரை மீனாட்சி!


திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்)

தல நாயகி : மீனாட்சி (அங்கயற்கண்ணி, பச்சைதேவி, மரகதவல்லி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், மாணிக்கவல்லி)

தலவிருட்சம் : கடம்பமரம், வில்வமரம்

தலதீர்த்தம் : பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம்


தலவரலாறு:
மலையத்துவச பாண்டிய மன்னரும், அவரது மனைவி காஞ்சனமாலையும், தங்களுக்கு குழந்தை பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்கள். அதன் பலனாக, மூன்று தனங்களையுடைய பெண் குழந்தையாக உமாதேவி வேள்விகுண்டத்தில் இருந்து தோன்றினாள். அக்குழந்தையின் தோற்றம் கண்ட அரசரும், அரசியும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, "இக்குழந்தையின் தோற்றம் கண்டு வருத்தப்பட வேண்டாம், அப்பெண்ணிற்கு கணவன் வரும்போது தனம் தானாக மறையும்" என்று அசரீரி கேட்டது. இறைவனது ஆணைப்படி தடாதகை என அப்பெண் குழந்தைக்குப் பெயரிட்டனர்.

தடாதகை பல கலைகளிலும் மிகச்சிறந்து விளங்கினாள். மிகுந்த வீரத்துடனும் வளர்க்கப்பட்டாள். அதன் காரணமாக, தனது தந்தை காலமான பிறகு, மதுரையம்பதியை வெகு சிறப்பாக ஆட்சி செய்தார் தடாகை. கன்னிப் பெண் மதுரையை ஆண்டதால் அவ்வூர் கன்னி நாடு எனப் பெயர் பெற்றது.

தடாகை திருமண வயதை அடைந்தார். அவர் தனது நாட்டுப்படைகளுடன் நீண்ட பயணம் மேற்கொண்டார். சிவகணங்களுடன் திருக் கைலாயம் சென்றடைந்தார். அங்கே சிவபிரானைக் கண்டவுடன் தனங்களில் ஒன்று மறைந்தது. இந்நிகழ்வினால் சிவனே தனது கணவன் என்பதை தடாதகை உணர்ந்து கொண்டார்.

திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. திருமணத்திற்கு திருமால், தேவர்கள், முனிவர்கள் வருகை தந்தனர். திருமணக் காட்சி கண்கொள்ளாக்க் காட்சியாக இருந்தது. பிரம்மதேவன் திருமணத்தை உடனிருந்து நடத்திவைத்தார். பங்குனி உத்திர நன்னாளில் தடாதகை, சொக்கநாதர் திருமணம் இனிதே நடந்தேறியது.

தலப்பெருமை:
உலகப் புகழ் பெற்ற சிவாலயம். பாண்டியநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான திருத்தலமாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் புலவர்களுடன் ஒருவராய் இருந்து தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ந்த சிறப்புத் திருத்தலம். மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவம் காத்த திருத்தலம். மந்திரமாவது நீறு எனத்தொடங்கும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடப் பெற்ற திருநீற்றுப் பதிகம் இயற்றப் பட்ட திருத்தலம். இந்த திருநீற்றுப் பதிகம் பாடியே கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்த்தார் திருஞானசம்பந்தர்.

கபிலர், பரணர், நக்கீரர், போன்ற சான்றோர்கள் வாழ்ந்த பெருமைமிகு ஊர். ஐந்து சபைகளுள் மதுரையில் வெள்ளி சபை அமைந்துள்ளது. மூர்த்தி நாயனார் வாழ்ந்த பதி. அனல் வாதம், புனல் வாதம் நிகழ்த்தி திருஞானசம்பந்தர் சைவத்தை தழைக்கச் செய்த இடம். பாணபத்திரர் மூலம் சேரமான் பெருமாளுக்கு திருமுகப்பாசுரம் தந்தருளியவர். வரகுண பாண்டியனின் கோரிக்கையை ஏற்று சிவபிரான் கால் மாற்றி ஆடிய தலம். சங்க கால தங்கப் பதியாக விளங்கியது. குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடிய இடம். திருஞானசம்பந்தர் அமைத்த பழைய மடம் உள்ளது.


பாண்டிய மன்னனுக்கு அம்பிகை மகளாகப் பிறந்து நல்லாட்சி செய்த ஊர் மதுரை. சிவன் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய இடம். சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியுள்ள அதி அற்புதமான திருத்தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் கூறப்படும் சுலோகம் உருவாகக் காரணமாக இருந்த தலம்.

இந்திரன், வருண பகவான் வழிபட்ட தலம். இத்தலம் சிவஸ்தலம் என்றாலும் 64 சக்தி பீடங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹத் தலங்களுள் புதன் ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் 14 கோபுரங்களுடனும், 5 வாயிலுடனும் அமைந்துள்ளது. கலையழகு, சிலையழகு, சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் மிக உயரமானது.

பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை, சிவன் அமிர்தமாகிய மதுவை தெளித்து நீக்கி புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயரும், சிவனுக்கு அணிகலனாயிருந்த பாம்பு வட்டமாய்ச் சுற்றி வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயரும், கடம்ப மரங்கள் நிறைந்து காணப் பட்டதால் கடம்பவனம் என்ற பெயரும், மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் விதமாக பெருமான் தன் சடையிலிருந்து அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி இருந்து காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.

தலச் சிறப்பு:
அம்மனின் சக்தி பீடங்களுள் முதன்மையானது. ராஜ மாதங்கி சியாமள பீடம் எனப் பெயர் பெற்ற பீடம். மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. பூலோகக் கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெயர் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலிலோ மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம். இவற்றைக் காண எத்தனைக் கோடி கண்கள் வேண்டுமோ.

சிவபிரான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன் சாபம் தீர்த்த படலம். இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல இடங்களுக்குச் சென்றார். கடைசியாக மதுரையில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு அதனை பூஜித்தார். அவரது தோஷம் நீங்கப் பெற்றது. அங்கேயே இந்திர விமானத்துடன் கூடிய கோயிலைக் கட்டினார்.

திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்ட போது தெப்பக்குளம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அவ்வாறு நோய் சரியானதும் தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்ட விநாயகர் சிலை கிடைத்தது. சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கி முக்குறுணி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை வைத்து விநாயகருக்கு படையல் நடைபெறும்.

திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா சித்திரை மாதம் வளர்பிறையில் 12 நாட்கள் நடைபெறும். வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வசந்த விழா, திருஞானசம்பந்தர் விழா, ஆடி மாதத்தில் முளைக்கொட்டு விழா, ஆவணி மாதத்தில் 12 நாட்கள் மூலப் பெருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கோலாட்ட உற்சவம், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத் திருவிழா, 1008 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் 4 நாட்கள் எண்ணைக் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தி விழா, தைப் பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்தில் சுந்தரேஸ்வரர், தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா, மாசி மகா சிவராத்திரி சகஸ்ர சங்காபிஷேகம், பங்குனி மாதத்தில், மீனாட்சி அம்மனும், சுந்தரரும், செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளல் என வருடம் முழுவதும் இக்கோயிலில் திருவிழாக் கோலம் தான்.

பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், ஆறுகால் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், புது மண்டபம், 5 இசைத் தூண்கள் போன்றவை இக்கோயிலின் சிறப்பம்சங்கள். இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். சிவபிரான் நடனம் ஆடிய பஞ்சசபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.


இத்தலம் குறித்த பதிகங்கள்:

மாணிக்கவாசகர் - திருவாசகம்
அருணகிரிநாதர் - திருப்புகழ்
பாணபத்திரர் - திருமுகப்பாசுரம்
பரஞ்ஜோதிமுனிவர் - திருவிளையாடல் புராணம்
குமரகுருபரர் - மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்
திருநாவுக்கரசர் - தேவாரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் இந்த மதுரை திருத்தலத்தில் பாடி அருளிச் செய்த தேவாரப் பாடல்:

வேதியா வேத கீதா
விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி
ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்
படர்சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நம்பனே நான்மு கத்தாய்
நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று
ஏத்தி நான் ஏசற்று என்றும்
பின்பினே திரிந்து நாயேன்
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில்
அப்பனே அருசெ யாயே !!

ஒரு மருந்தாகி யுள்ளாய்
உம்பரோடு உலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்
பேரமுது இன்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்
ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந்து ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

செய்யநின் கமல பாதம்
சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே
மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானம்
கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வெண்டலை கையில் ஏந்தி
மிகவும் ஊர் பலிகொண்டு என்றும்
உண்டதும் இல்லை சொல்லில்
உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்
பளகனேன் உளமதார
அண்டனே ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

எஞ்சலில் புகலி தென்றென்று
ஏத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சகம் ஒன்றும் இன்றி
மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த
நற்பொருட் பதமே நாயேற்கு
அஞ்சலென்று ஆலவாயில்
அப்பனே அருள்செ யாயே !!

வழுவிலாது உன்னை வாழ்த்தி
வழிபடும் தொண்ட னேனும்
செழுமலர்ப் பாதம்காணத்
தெண்டிரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ
கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நறுமலர் நீரும் கொண்டு
நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்
திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா
மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

நலந் திகழ் வாயில் நூலால்
சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள
அருளினாய் என்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள்
கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!

பொடிக்கொடு பூசிப் பொல்லாக்
குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் தாள்கள் என்றும்
பிதற்றிநான் இருக்க மாட்டேன்
எடுப்பன்என்று இலங்கைக் கோன்வந்து
எடுத்தலும் இருபது தோள்
அடர்த்தனே ஆல வாயில்
அப்பனே அருள்செ யாயே !!



புதன், 15 பிப்ரவரி, 2017

கேட்டதை கொடுக்கும் காமதேனு!



காமதேனு காயத்ரீ மந்திரம்!

ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்ரியை ச தீமஹி
தந்தோ தேனு: ப்ரசோதயாத்!



தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடந்த போது அதிலிருந்து  பல பொருட்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காமதேனு.

காமதேனு என்பது தேவலோகத்தில் வசிக்கின்ற பசு . யார் அதனிடம் என்ன கேட்டாலும்  அதை கொடுக்கும் சக்தி  படைத்தது .இது பெண்ணின் தலை, மார்பு, பசுவின் உடல், மயில் தோகை போன்றவற்றுடன் இருக்கும்.




சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது. இறைவன் வீதி உலா வருகையில் காமதேனு வாகனத்தில்  காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன.



பசு காயத்ரீ மந்திரம்!

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்!

பசு  கன்று ஈனும்போது (தலை வெளிப்படும் சமயம்) வலம் வந்தால் உலகத்தைச் சுற்றி வந்ததற்குச்சமம் என்கிறது  சாஸ்திரம்.



பசு உடலில் எல்லா தெய்வங்களும் உள்ளதால்  கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பம் விலகி இன்பம் பிறக்கும்.

1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் அவன் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றிவிடுவான்.

பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது.




வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள்!

நட்சத்திரங்களின் வடிவம்!

அஸ்வினி                 - குதிரைத்தலை
பரணி                       - யோனிஅடுப்புமுக்கோணம்
கிருத்திகை               - கத்திகற்றைவாள்தீஜ்வாலை

ரோஹிணி               - தேர்வண்டிகோயில்ஆலமரம்,
ஊற்றால்சகடம்

மிருகசீரிடம்             - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை             - மனித தலைவைரம்கண்ணீர்துளி
புனர்பூசம்                 - வில்
பூசம்                           - புடலம்பூஅம்புக்கூடுபசுவின்மடி

ஆயில்யம்                 - சர்ப்பம்அம்மி
மகம்                          - வீடு,  பல்லக்குநுகம்

பூரம்                          - கட்டில்கால்கண்கள்அத்திமரம்சதுரம்,மெத்தை

உத்திரம்                   - கட்டில்கால்கம்புகுச்சிமெத்தை
ஹஸ்தம்                   - கை
சித்திரை                   - முத்துபுலிக்கண்
ஸ்வாதி                     - பவளம்தீபம்

விசாகம்                    - முறம்தோரணம்குயவன் சக்கரம்
அனுசம்                     - குடைமுடப்பனைதாமரை,
வில்வளசல்

கேட்டை                   - குடைகுண்டலம்ஈட்டி
மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின்வால்பொற்காளம்,யானையின் துதிக்கை

பூராடம்                     - கட்டில்கால்
உத்திராடம்              - கட்டில்கால்
திருவோணம்            - முழக்கோல்மூன்று பாதச்சுவடுஅம்பு
அவிட்டம்                 - மிருதங்கம்உடுக்கை

சதயம்                        - பூங்கொத்துமூலிகைகொத்து
பூரட்டாதி                  - கட்டில்கால்
உத்திரட்டாதி          - கட்டில்கால்
ரேவதி                       - மீன்படகு


ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். 

எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம். 

இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளைப்பார்ப்போம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.


பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.

பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை, தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.


புதன், 1 பிப்ரவரி, 2017

“மங்கள சண்டிகை துதி”!

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே!
மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி!
மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!

வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!