வெள்ளி, 6 மே, 2016

அட்சய திருதியை செய்ய வேண்டியவை!

அட்சய திருதியை தினத்தன்று  10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண் ணியத்தை தேடித்தரும்.

இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை காலை, மாலை இரு நேரமும் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வெள்ளியும் வாங்கலாம்.  பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.

அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

(கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம். மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம்.

ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது.

அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.
 
அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை அவசியம் தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதாவது தங்கம் என்பது ஒரு உயிருக்கு பிரதிநிதியாக, சம அந்தஸ்து கொண்டது. நமது உயிரை மற்றவருக்கு தானமாக தர இயலாது என்பதால் உயிருக்கு சமமான தங்கத்தை தானம் செய்வதால் நம்மையே தானம் செய்த உயர்வும், பலனும் கிடைக்கும்.

ஏழைகளுக்கு தங்கம் கொடுத்தால் அளவிடற்கரிய பலன்கள் வந்து சேரும். அது முடியாத பட்சத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, மகன், மகள் போன்ற உறவினர்களுக்காவது தங்கம் தானம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் கொடுக்க முடியவில்லையா? கவலையேப்படாதீர்கள். உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும். ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம். உணவு செய்து கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிரும் போது உங்கள் வாழ்வு குளிர்ச்சி பெறும். இப்போது கோடைகாலம்.

உச்சக்கட்ட வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே ஏழை-எளியவர்களுக்கு செருப்பு, குடை, குளிர்பானம் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம். மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை. அன்று ஆடு, மாடு போன்றவற்றுக்குக் கூட உணவு கொடுத்தும், தண்ணீர் கொடுத்தும் உதவலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

இத்தகைய தானத்தால், நமது மறைந்த முன்னோர்களுக்கு ஏற்படும் தாகம் தீர்க்கப்படும். அதோடு அவர்களுக்கு மேல் உலகில் நற்கதி உண்டாகும். எனவே அட்சய திருதியை தினத்தன்று தானம், உதவிகள் செய்ய தவறாதீர்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எதுவெல்லாம் தேவை, அவசியம் என்று நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது, ஆசைப்படுவது பல மடங்கு பெருகி, உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 
அட்சய திருதியை நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்:

மேஷம்: விநாயகர், சுப்பிரமணியர்
ரிஷபம்: சாந்தரூப அம்பிகை
மிதுனம்: விஷ்ணு, மகாலட்சுமி

கடகம்: அம்பிகை சிம்மம்: சிவபெருமான்
கன்னி: விஷ்ணு, மகாலட்சுமி
துலாம்: துர்க்கை, அம்பிகை

விருச்சிகம்: கற்பக விநாயகர், முருகன்
தனுசு: தட்சிணாமூர்த்தி
மகரம்: விநாயகர், அனுமன்

கும்பம்: சனீஸ்வரன், அனுமன்
மீனம்: தென்முகக் கடவுள், நந்தீஸ்வரர்
 
அட்சய திருதியை அன்று 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்: 
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர் களும் தங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற கடவுளை வணங்க வேண்டும். இதனால் கடவுள் அருள் கிடைப்பது அதிகரிக்கும். வாழ்க்கையில் வளம் பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விபரம் வருமாறு:-

1. அஸ்வினி - விநாயகர்
2. பரணி - ஸ்ரீரங்கநாதர்
3. கிருத்திகை - ஆஞ்சநேயர்
4. ரோகிணி - சிவன்
5. மிருகசீரிஷம்-துர்க்கை

6. திருவாதிரை - பைரவர்
7. புனர்பூசம்-ராகவேந்திரர்
8. பூசம் - சிவன்
9. ஆயில்யம் - பெருமாள்
10. மகம் - விநாயகர்

11. பூரம் - ஸ்ரீரங்கநாதர்
12. உத்திரம் - ஸ்ரீஆஞ்சநேயர்
13. அஸ்தம் - சிவன்
14. சித்திரை - துர்க்கை
15. சுவாதி - பைரவர்

16. விசாகம் - ராகவேந்திரர்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - திருமால்
19. மூலம் - விநாயகர்
20. பூராடம் - ஸ்ரீரங்கநாதர்

21. உத்திராடம் - ஆஞ்சநேயர்
22. திருவோணம் - சிவன்
23. அவிட்டம் - துர்க்கை
24. சதயம் - பைரவர்
25. பூரட்டாதி - ராகவேந்திரர்
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி - பெருமாள்
 

அள்ளித்தரும் அட்சய திரிதியை!

அமாவாசைக்குப்பின் வரும் 3-ம் நாள், திரிதியை திதி. சித்திரை மாத அமாவாசைக்குப்பின் வரும் 3-ம் நாளில் வரும் திரிதியை `அட்சய திரிதியை' என்றழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது குறையாதது என்று பொருள். அள்ள அள்ள குறையாமல் அள்ளித்தரும் அற்புதத்திருநாள் இது என்று போற்றுகின்றனர்.

இந்நாளில் செய்யப்படும் நற்காரியங்கள், தானதர்மங்கள் அனைத்தும் நல்ல பலன்களைத் தரும். இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவில்லாமல் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

திருமகள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரன் இடத்தில் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், குடும்பத்தில் கிரகலட்சுமியாகவும், வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாகவும், பசுவில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகமளிக்கும்போது சுவாகாதேவியாகவும், இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக திருமகள் அமைந்துள்ளாள். இப்படிப்பட்டவள், திருமாலின் திருமார்பில் இடம்பிடித்த திருநாளும் இதுவே என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அட்சய திரிதியை அன்று லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பார்கள். இப்படிச் செய்பவர்களுக்கு செல்வம் பெருகும். லட்சுமி திருவருள் எளிதில் கிடைக்கும். அன்று செய்யப்படும் தான தர்மங்களால் உடல்நலம்பெறும். நோய் விலகும், மரணபயம் இருக்காது. அன்னதானம் செய்தால் விபத்துகள் தடுக்கப்படும்.

ஆடைதானம் நோய் நீக்கும். ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்தால் நம் வீட்டுக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை சிறிதளவு வாங்கினாலும் அது மேன்மேலும் பெருகும்

1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.

3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

4. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

5. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

6. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

7. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

8. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

9. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

10. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.

11. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப் படுகிறது.

12. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், "கனகதாரை'' நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

13. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

14. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

15. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

16. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

17. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

18. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

19.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

20. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள்.

கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

21. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

22. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர்.

23. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

24. அட்சய திருதியை நாளில் பிவசந்த் மாதவாய நம' என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.

25. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

27. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

28. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

29. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

30. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

 

அக்னி நட்சத்திரம்!

து ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேத கோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை!

ஒருநாள், ராஜகுமார்கள் சிலர், தங்கள் நண்பர் களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய யமுனை தீரத்துக்கு நீராட வந்தார்கள். சிலபல நாழிகைகள் நதியில் நீராடி மகிழ்ந்தபின் பலரும் கரையேறியபின்னர், இருவர் மட்டும் கடைசியாக கரைக்கு வந்தனர்.

மாமனும், மைத்துனனுமான அவர்கள் கரையேறும்போது, வயோதிக அந்தணர் ஒருவர் அவர்களை வணங்கி, “உங்களைப் பார்த்தால், கருணை நிறைந்தவர்களாகத் தெரிகிறது. எனக்கு பசிக்கிறது. உணவிடுவீர்களா?” என்று கேட்டார்.

அந்த இருவரில் ஒருவர் கிருஷ்ணன்; மற்றவன் அர்ஜுனன். வயோதிகரை உற்று நோக்கிய கிருஷ்ணன்  “அக்னி பகவானே! உமக்கேன் இந்த வேடம்? வேண்டியதை எங்களிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாமே?” என்றார்.

“பரம்பொருளே! உலகுக்கே படியளக்கும் உமக்குத் தெரியாததா? சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து நூறாண்டுகள் தீ வளர்த்து யாகம் செய்தார் (12 ஆண்டுகள் எனவும் சில புராணங்கள் சொல்கின்றன). நூறாண்டுகள் தொடர்ந்து நெய்யையும் ஹவிஸையும் (வேள்வி யில் இடும் பொருட்கள்) உண்டதால், எனக்கு வயிறு மந்தமாகி, இயல்பான செயல்களைச் செய்யமுடியவில்லை. இதற்குத் தீர்வு,  மூலிகைகள் நிறைந்த இந்த காண்டவ வனத்தைச் சாப்பிடுவதுதான். ஆனால், அதை எரிக்கச் சென்றால், வருணன் வந்து என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். என் பிணி தீர உதவுங்கள்” என வேண்டினார் அக்னி.

அக்னியே பிரதானம். அக்னி மந்தமானால் உலக வாழ்க்கை ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தால் சிருஷ்டி முதல் அனைத்துக் காரியங்களும் தடைப்படும். கண்ணுக்குத் தெரியாத இழையால் பிணைக்கப்பட்ட அனைத்துமே ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதையெல்லாம் ஒரு விநாடியில் யோசித்த கிருஷ்ணர், கூடவே ஒரு தந்திரமும் செய்தார் அர்ஜுனனுக்காக.

“அக்னியே! நாங்கள் நீராடவே வந்தோம். எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. என்ன செய்வது?” என யோசிப்பது போல நடித்தார்.

உடனே, எடுக்க எடுக்க அம்புகள் குறையாத அம்பறாத் தூணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான். அப்புறமென்ன... காண்டீபத்தைக் கொண்டு வருணன் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு அம்புகளாலேயே பந்தலிட்டு (ஒரு சொட்டு நீர் கூட புகாத வண்ணம்), வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினான் அர்ஜுனன். முன்னதாக ரிஷிகள் முதலானோர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தை 21 நாட்கள் எரித்து தீர்த்தார் அக்னி.

பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:
    அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:
கமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:
    தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:
ஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:
-  ஸ்ரீசூர்ய ஸ்தோத்ரம்


பிறகு ஸ்ரீகிருஷ்ணர், “பசியா, வாழ்வியலா என்றால், பசி போக்குவதே முதல் காரியம். அக்னி பசியாறுவது லோக கல்யாணம். இனி, உங்களுடைய தவபலத்தால் மீண்டும் காண்டவ வனத்தைப் புதுப்பிக்கும் சக்தியையும் வழங்கு கிறேன்” என்று காண்டவ வன ரிஷிகளுக்கு அருள்புரிந்தார்.

இந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரமாக இன்றளவும் தொடர்கிறது. பூமத்திய ரேகைக் கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம்; புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.

இந்த காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயணிக்கும் காலம், ‘கத்ரி காலம்' என பண்டைய பாரத வானியலாளர்கள் கணித்துள்ளனர். சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகம் என்பது விஞ்ஞானம்.

கார்த்திகையும் கத்திரியும்!

தாரகாசுரனை அழிக்கவேண்டி அனைத்து தேவர்களும் மஹாதேவனான ஈஸ்வரனிடம் முறையிட்டனர். அவர்களின் இன்னல்களைக் கண்டு சினந்து, தனது நெற்றிக்கண்ணை திறந்தார் சிவனார். அப்போது ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிவந்தன. அவற்றின் பிரகாசத்தை அன்னை பார்வதியால்கூட தாங்க இயலவில்லையாம்!

அந்த ஆறு ஒளிப் பிழம்புகளையும் வாயுவிடம் ஒப்படைத்தார். வாயு அவற்றைக் கொண்டு இமயமலையின் அடியில் உள்ள சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கே தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக, ஆறு  தாமரை மலர்களில் தவழ்ந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் எடுத்துவளர்த்தனர். அவ்வேளையில் தீப்பொறிகளின் வெம்மை, அதாவது குழந்தைகளின் வெம்மை - உக்கிரம் தணிகிறது. கார்த்திகைப் பெண்களிடம் இந்த உஷ்ணம் (அக்னி) இடம்பெயர்கிறது. பின்னர், கார்த்திகைப் பெண்கள் உமையிடம் குழந்தை களைச் சேர்க்க, அவள் அவர்களை ஆனந்தத்தில் அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுக னாக, அழகனாக, முருகனாக தோற்றம் தந்தனர்.

கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திர மாக மாறும் பேறு பெறுகிறார்கள். மங்காத ஒளியுடன் அக்னியின் அம்சமாக மாறி ஜொலிக்கிறார்கள். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அக்னியே அதிபதி. கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பிரவேசிப்பதே கத்திரி எனப் படும். கத்திரிக்கு முந்தைய காலம் முன்கத்ரி. பிந்தைய காலம் பின் கத்திரி. கத்ரியின் உக்ரம் தணிக்க தணிகைவேலனை வழிபடுவது சிறப்பு. (பவிஷ்யோத்ரபுராணம்).
அக்னி நட்சத்திரத்தில் ...என்ன செய்யலாம்! என்ன செய்யக்கூடாது?

 சிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும்.

கோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.

கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.

விஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு.

இந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு,

‘அஸ்வத் த்வஜாய வித்மஹே!
பாஸ ஹஸ்தாய தீமஹி!
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.

சிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.

இந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு
பணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல்  நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அக்னி பூஜை!

இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.

ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் - பிரகாசம், ரூபம் - ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).

அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும்.  பிரசாதமாக முறையே ஞாயிறு - பாயசம், திங்கள் - பால், செவ்வாய் - தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி - பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.

சூரியபகவானைப் போற்றுவோம்!

வானுலகமாகிய சுவர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.

நமது பேரண்டத்தை ஒரு முட்டையைப் போல கற்பனை செய்யுங்கள். அதன் மேல் பகுதி: பூமி முதலான ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம்). கீழ்ப் பகுதி: அதல, சுதல, விதல, ரசாதல, தலாதள, பாதாள, மஹாதள லோகங்கள் ஆகும். 

இவற்றுள், பூமியின் மத்தியில் மேரு பர்வதம் உள்ளது. அந்த மலைக்கு பொன்மயமான சிகரங்கள் நான்கு உண்டு. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் கொண்டது. அவை: சௌமனஸம் - பொன் மயம், ஜோதிஷ்கம் - பத்மராகம் மயம், சித்துரம் - சர்வதாது மயம், சாந்திரமாசம் - வெள்ளி மயம். இந்த நான்கில் உத்தராயனத்தில் சௌமனஸம் எனும் சிகரத்தில் இருந்தும், தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்தும் உதயமாகிறார் சூரியன். விஷூக்களின் போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார்.

சூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம். அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.

இப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும். சரி! அவரை வணங்கும்போது என்ன சொல்லி வணங்கலாம்?

  அந்த ஸ்லோகங்கள்:

 ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
  ஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
   ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர்மரீசிமான்
  திமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:

 

வியாழன், 5 மே, 2016

ஐஸ்வர்யம் அருளும் லக்ஷ்மி கடாக்க்ஷம்!

 
 
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் |
சந்த்ராம்ஹிரண்ம’யீம்லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
 
ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும்.

ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால்  பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரகுணமுடையவள். இவள் "ஈம்'' என் பீஜாசரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.

மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர். இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம்.

இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள்.



பதினான்கு மன்வந்திரங்களிலும் லட்சுமி பதினான்கு விதமாக அவதாரம் எடுத்திருக்கிறாள்.



1. ஸ்வாயம்பு மன்வந்திரத்தில் பிருகுவின் மகள் பார்கவியாக அவள் அவதரித்தாள்.
2. ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில் நெருப்பிலும்,
3. ஒளலத்தம மன்வந்திரத்தில் நீரிலும்,
4. தாமச மன்வந்திரத்தில் நீரிலும்,
5. சாட்சூச மன்வந்திரத்தில் தாமரையிலும்,
6. ரைவத மன்வந்திரத்தில் வில்வமரத்திலும்,
7. வைவஸ்த மன்வந்திரத்தில் பாற்கடலிலும் தோன்றியவள் லட்சுமி.
இப்போது நடப்பது வைவஸ்த மன்வந்திரம். 
 
இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள்.

 ஸ்ரீசுக்தத்தை தினமும் 16 முறை ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும். 


 

திருவருள் புரியும் திதி நித்யா தேவியர்!

திதி நித்யா தேவியர் யார்? அவர்கள் பராக்ரமம் என்ன?

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (பௌர்ணமியுடன் 15 நாட்கள்), சுக்ல பக்ஷம் (அமாவாசையுடன் 15 நாட்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த நலன்களை அந்த உபாசனை தரும். பிரதமை முதல் பௌர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகளுக்கும் நம் அன்றாடப் பணிகளில் ஒரு பணியும், அப்பணி நன்கு நடைபெற ஒரு மந்திரமும், யந்திரமும் நியமிக்கப்பட்டுள்ளன.

1.காமேஸ்வரி

‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

வழிபடு பலன்கள்:
குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

2. பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு. சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள்.

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ த்விதியை, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி.

வழிபடு பலன்கள்:
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

3. நித்யக்லின்னா

நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருள்பாலிக்கும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
 சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ணபக்ஷ திரயோதசி.

வழிபடு பலன்:
குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.

4. பேருண்டா நித்யா

அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ’ என்றும் ஓர் திருநாமம் உண்டு. உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார். தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

மந்திரம்:

ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவாதசி.

வழிபடு பலன்கள்:
விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.

5. வஹ்னிவாஸினி

அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.

மந்திரம்:

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி.

வழிபடு பலன்கள்:
நோய் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.

6. மஹா வஜ்ரேஸ்வரி

இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிற பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள். வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

மந்திரம்:

ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ தசமி.

வழிபடு பலன்:
அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.

7. சிவதூதி

இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப&நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சப்தமி, கிருஷ்ண பக்ஷ நவமி.

வழிபடு பலன்கள்:
நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.

8. த்வரிதா

இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்திகளும் ஞானமும் கைகூடும்.

மந்திரம்:

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.

வழிபடு பலன்கள்:
எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

9. குலஸுந்தரி

குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள்  துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும்கூட இந்த அன்னையின் அருளை வேண்டி  நிற்கின்றனர்.

மந்திரம்:

ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ஸப்தமி.

வழிபடு பலன்கள்:
இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.

10. நித்யா

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி.

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ தசமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.

வழிபடு பலன்கள்:
அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

11. நீலபதாகா

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ ஏகாதசி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.

வழிபடு பலன்கள்:
எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.

12. விஜயா

இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன. திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.

மந்திரம்:

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ துவாதசி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.

வழிபடு பலன்கள்:
எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.

13. ஸர்வமங்களா

இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின்  கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள். இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை திமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ திரயோதசி, கிருஷ்ண பக்ஷ த்ரிதியை.

வழிபடு பலன்கள்:
பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

14. ஜ்வாலா மாலினி

இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது. வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜ்வாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள். பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

மந்திரம்:

ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
மஹாஜ்வாலாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷ த்விதியை

வழிபடு பலன்கள்:
எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.

15. சித்ரா

திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

மந்திரம்:

ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:
பௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிரதமை.

வழிபடு பலன்கள்:
திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.

 
 

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருக்கல்யாணம்!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 காஸ்யப முனிவரும் பிருகு முனிவரும் மற்றும் பலரும் தேவலோகத்தில் மிகப்பெரிய யாகத்தைச் செய்தார்கள். யாகத்தின் அவிர்பாகத்தை ஸ்ரீமன் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதற்காக பிருகு முனிவர், அவிர்பாகம் அடங்கிய கலசத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

காக்கும் தொழிலுக்குரியவன் செய்ய வேண்டிய காரியத்தை, மாபெரும் யாகத்தை, அந்த தெய்வத்தின் முதல் பக்தனாகிய தான் செய்த இறுமாப்பு, பிருகு முனிவரிடம் குடிகொண்டது. தன் சேவைக்கு மதிப்பு மிக அதிகம் என்று, தானே கணக்குப் போட்டுக் கொண்டார். தப்புக் கணக்கு!

நேராக ஸ்ரீவைகுண்டம் போனார். அங்கே நாராயணன் மோனத் துயிலில் ஆழ்ந்திருந்தார். அருகே மகாலட்சுமி, தன் தலைவனுக்கு பூஜை செய்துகொண்டிருந்தாள்.

பிருகு முனிவர் அவிர்பாக பாத்திரத்தை கையில் பிடித்தபடி காத்துக் கொண்டிருந்தார். நாராயணனோ துயில் நீங்கி எழவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? தான் வந்திருக்கும் காரியம் எவ்வளவு மகத்தானது என்று இந்த நாராயணனுக்கு ஏன் புரியவில்லை! கோபம் தலைக்கேறியது முனிவருக்கு. தன்னை நாராயணனுக்கும் மேலாகக் கருதிக்கொண்ட அவருக்கு, ஆணவமும் தலையில் கனத்தை சேர்த்தது. தன்னை கவனிக்காமல் ‘உறக்கத்தி’லேயே ஆழ்ந்திருக்கும் பரந்தாமனின் நெஞ்சைத் தன் காலால் உதைத்தார் பிருகு முனிவர்.

கண் மூடியிருந்தும் விழித்தே இருந்த நாராயணன் மெல்லக் கண் திறந்தார். கோபமாய் நின்றிருந்த முனிவரின் காலைத் தன் கரங்களால் பிடித்துக் கொண்டார். ‘‘என் மார்பில் ஏதோ ஒரு மலர் வந்து விழுந்ததுபோல உணர்ந்தேன். தங்களது மலர்ப்பாதம்தானா அது?’’ என்று பணிவாகக் கேட்டார். கூடவே, ‘‘அடடா... அவ்வாறு உதைத்த காலுக்கு வலிக்குமோ!’’ என்றும் நாராயணன் பதைபதைத்தார். தன் மார்பை உதைத்த அந்தக் காலைத் தன் மென்மலர்க் கரங்களால் பிடித்துவிட்டார்.

திடுக்கிட்டார் பிருகு முனிவர். தன்னுடைய தீச்செயலுக்கு இப்படி ஒரு ‘தண்டனை’யா? குற்ற உணர்வால் தகித்துக் கொண்டிருந்தார் முனிவர். ‘என்ன ஒரு அபவாதம் செய்துவிட்டேன்...’
ஆனால் அருகிலிருந்து மகாலட்சுமி சீறினாள். ‘‘உதைத்த காலுக்கு உபசாரம் செய்கிறீர்களே, இது தகுமா?’’ தன் நாயகனிடம் கேட்டாள். ‘‘உதைப்பட்டது உங்கள் பொன் மார்பு மட்டுமா? நான் உறையும் திரு இடமும் அதுதானே? தங்களுக்கு நான் பூஜை செய்துகொண்டிருந்தபோது, கொஞ்சமும் நாகரிகமின்றி அடாது செயல் புரிந்த இந்த முனிவரிடம் ஏன் அன்பு பாராட்டுகிறீர்கள்? நான் வாழும் இருப்பிடம் இப்போது அசிங்கப்படுத்தப்பட்டு விட்டது. இனி அங்கு நான் வாழ முடியாது. நானும் பாவப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இதற்கு ஒரு விமோசனம் தேவை. எனக்கு மானிடர் உலகில் பிராயச்சித்தம் கிடைக்கும். நான் வருகிறேன்,’’ என்று படபடத்த மகாலட்சுமி, அந்த நொடியே விண்ணுலகம் துறந்தாள், மண்ணுலகம் வந்தாள். நாராயணன் மெல்லப் புன்னகைத்துக் கொண்டார். தன்னையும் மானுட வாழ்க்கைக்குத் தயார் பண்ணிக்கொண்டார்.

நாராயணன் பூலோகத்திற்கு வந்தார். நாடெல்லாம் அலைந்து திரிந்து, தன் மகாலட்சுமியின் பூலோக முகவரியைத் தேடினார். மானுடராய் அலைந்த களைப்பில் அசதியுடன் மயங்கிச் சாய்ந்தார். ஆனால் ஆயர்குல அழகனுக்கு அசதியென்றால், ஆவினத்துக்கு ஆகுமோ? ஓடோடி வந்தது ஒரு பசு. மடி நிறைந்த பாலை நாராயணன் வாய்க்குள் புகட்டியது.

தான் வளர்க்கும் பசுவின் மடிப்பால் மாயமாகிப் போனதை அறிந்த இடையன், தன் பசு தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவே கருதினான். கோபம் கொண்டான். பிருகு முனிவரைப் போலல்லாத, இழப்பின் வெளிப்பாடாக உண்டான கோபம். பால் தர மறுக்கும் பசுவின் பிடிவாதத்தை தண்டிக்க வேண்டும். கைக்குக் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீசினான். பசு அதுபோன்ற அவனுடைய கோபத்தை ஏற்கெனவே சந்தித்திருக்குமோ? லாவகமாக ஒதுங்கிக் கொண்டது. வீசப்பட்ட ஆயுதம் கடமையிலிருந்து தவறாமல், வேகமாய் எறிந்த கைக்கு மதிப்பளிக்கும் வகையில், நேராகச் சென்று, பசுவைத் தவற விட்டாலும், அதன் பாலை அருந்திய நாராயணனைச் சென்று தாக்கியது. நாராயணனின் முகவாய்க்கட்டை அந்தத் தாக்குதலுக்கு பதிலாக குருதியை வெளிப்படுத்தியது.

காயத்துடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்ட நாராயணன், அருகில் இருந்த ஓர் ஆசிரமத்துக்கு வந்தார். அது, வராக முனிவரும் அவர் மனைவி வகுளாதேவியும் குடியிருக்கும் குடில். நாராயணனைப் பார்த்த வகுளாதேவி, அவருடைய நிலை கண்டு பதறினாலும், இரு கரம் நீட்டி, யாசோதையாய் வரவேற்றாள். அவருடைய முகவாய்க் கட்டை காயத்துக்கு மருந்திட்டு, அவருக்குப் புசிக்க வெண்ணெய் கொடுத்து, ஆசிரமத்தில் தன் சீடர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். புது அவதாரத்தில் இருந்த இறைவனை அடையாளம் கண்டுகொண்ட முனி பத்தினி, தனக்குப் பிள்ளையாக அந்த இறைவனே வந்திருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தாள். கணவர் வராக முனிவரிடம், ‘நம்பிள்ளை’ என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தாள். ஸ்ரீநிவாசன் என்று நாராயணனை அழைத்தாள். நாராயணன் அந்த ஆசிரமத்திலேயே வராக முனிவர்&வகுளாதேவி தம்பதியின் மகனாகவே வாழ்ந்து வந்தார்.

பூலோகத்தில் ஆகாசராஜன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்திருந்தாள் மகாலட்சுமி.

அவளுக்கு பத்மாவதி என்று பெயரிட்டு சீராட்டிப் பாராட்டி வளர்த்து, கன்னிப் பெண்ணாகப் பார்த்து பிரமித்து மகிழ்ந்தான் ஆகாசராஜன்.

தினசரி நீராடலுக்காகத் தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்குச் சென்றாள் இளவரசி பத்மாவதி. கும்மாளமிட்டு நீரில் அளைந்து, குதித்து மகிழ்ந்தாள். பசுமையாய், யௌவனப் பொலிவுடன்,
அரச போக பளபளப்பில் தங்கச் சிலையாய் மின்னிக் கொண்டிருந்தாள் பத்மாவதி.

குளித்து முடித்துக் கரையேறியதும், அவளிடமிருந்து புறப்பட்ட நறுமணம், பக்கத்திலிருந்த காட்டையும் அடைந்ததோ! பிளிறியபடி ஓடோடி வந்தன யானைகள். ஆற்றங்கரையில் தங்களைப் பார்த்து மிரண்டு, அரண்டு தடுமாறி நிற்கும் பூக்களைப் பார்த்து யானைகளுக்கு மேலும் உற்சாகம். பயந்து நிற்கும் அந்தப் பெண்களை மேலும் துன்புறுத்த காலை முன்வைத்தன.

அப்போது அவற்றின் கண்கள் கூசுமளவுக்கு அங்கே ஓர் ஒளிப்பிழம்பு தோன்றியது. மனித ரூபத்தில் வந்த அந்தப் பேரொளி, வேறு யாருமல்ல, நாராயணனாகிய ஸ்ரீநிவாசன்தான். அந்தப் பேரொளியைக் கண்ட மாத்திரத்திலேயே யானைகள் அனைத்தும் வந்த வேகத்திலேயே திரும்பி ஓட்டமெடுத்தன. நாயகிக்கு உரிமை கொண்டாடுபவன் வந்துவிட்டான் என்று சரியாகக் கருதி விட்டனவோ?

விரட்டப்படாமலேயே ஓடிச் சென்ற யானைகளைப் பார்த்து நிம்மதியும் சந்தோஷமும் அடைந்து கைதட்டிக் குதித்த பத்மாவதி, தன்னை நெருங்கி நின்ற ஸ்ரீநிவாசன் மீது மோதிக் கொண்டாள். மோதியவள், காந்த ஈர்ப்பாக அவரை அணைத்துக் கொண்டாள்.

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் உறைந்துபோயிருந்த தோழிகள் சுதாரித்துக் கொண்டு தம் தலைவியிடம் ஓடோடி வந்தார்கள். ஸ்ரீநிவாசனுடன் சண்டை போட்டார்கள். ‘‘விடு, விடு அவளை விடு. எங்கள் தோழியை விடு...’’ என்று பதறினார்கள்.

தன் மீது மோதி அணைத்து நின்ற பத்மாவதியைத் தானும் அணைத்துக் கொண்ட ஸ்ரீநிவாசன், அவளுடைய காதருகே குனிந்து, ‘வேதவதி’ என்று மெல்ல அழைத்தார். உடனே பத்மாவதிக்கு தன் பூர்வ ஜன்ம நினைவுகள் ஊர்வலமாய் மணம் முகிழ்த்து அணிவகுத்தன...

வேதவதி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணக்க விரும்புகிறாள். அக்னி தேவனை சாட்சியாக வைத்துக்கொண்டு தன் விருப்பத்தை அவன் மூலமாகவே ராமச்சந்திரனுக்குத் தெரியப்படுத்துகிறாள், வேதவதி. ‘சீதையைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் தீண்டேன்’ என்று முற்றிலும் மறுத்துவிடுகிறான் ராமன். ‘வேதவதியும் சீதையின் அம்சம்தான்’ என்று அவனை சமாதானப்படுத்துகிறார் அக்னி. ஆனாலும் அதை ஏற்கவில்லை ராமன். ‘‘அப்படியானால் சரி, அந்த அம்சம் விரும்பினால் எனக்காக ஒரு யுகம் காத்திருக்கட்டும். இந்த யுகத்தில் நான் சீதைக்கு மட்டுமே உரியவன்’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுகிறான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.

அப்போதைய ஏக்கம், ராமன் சொன்னதுபோலவே இந்த யுகத்தில் நிறைவேறப் போகிறதோ? கடந்த யுகத்துக் காதலனோ இந்த வீரன் என்றெண்ணி மயங்கி, மனம் சிலிர்க்க நின்றிருந்தாள்
பத்மாவதி. ஆனால் அவளோடுகூட இருந்தவர்களே துரோகம் இழைக்க ஆரம்பித்துவிட்டனர். ஆமாம், தோழிப் பெண்கள் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டனர்.

விவரத்தைத் தெரிந்து கொண்டார்கள் வராக முனிவரும் வகுளாதேவியும். ‘தம் மகனு’க்குத் திருமணம் செய்து பார்ப்பதில் அவர்களுக்கு உள்ளபடியே சந்தோஷம்தான். தகுதி வாய்ந்த பெண் கிடைத்திருக்கும்போது, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியதுதானே முறை?

ஆனால் முனிவர் பராமரிப்பில் வாழ்ந்தவன் என்பதால், பத்மாவதியின் தந்தை ஆகாசராஜன் யோசிப்பானோ? அரண்மனைக் கிளி ஆசிரமக்கூட்டில் வாழ சம்மதிப்பானா?

உண்மைதான், ஆகாசராஜன் அவ்வளவு எளிதில் சம்மதிக்கவில்லைதான். இருப்பினும் ஒரு சமரசத்திற்கு அவன் தயார். அதாவது ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளை சீதனமாகத் தன் மகளுக்கு ஸ்ரீநிவாசன் தந்தால், தன் மகளை அவனுக்கு மணமுடித்து வைப்பானாம்! தன் மகள் ஒரு பட்ட மகிஷியாகத்தான் இருக்க வேண்டுமேயல்லாது, முனி பத்தினியாக இருப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. அலங்கார பூஷிதையாக இருக்க வேண்டியவள், அணிகலன் இல்லா அழகுப் பதுமையாக இருப்பதிலும் அவனுக்கு விருப்பமில்லை. அரண்மனை சுகபோகங்களை  அனுபவித்தவள், ஆரண்யச் சூழலில் வாழ்வதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஒரு சராசரி தந்தையாகவே இருந்தான் ஆகாசராஜன் & தன் மகள் ஒரு தெய்வக் குழந்தை என்பதை உணராமல்!

முனிசிரேஷ்டர்களான ஸ்ரீநிவாசனின் பெற்றோரால் ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளைக் கொடுக்க இயலாது என்று கருதியே அந்த நிபந்தனையை விதித்தான் ஆகாசராஜன். ஒரு கோடி பொற்காசுகள்! யார் தருவார்? கடனாகவே பெறுவதென்றாலும் இவ்வளவு பெரிய தொகையை யாரிடமிருந்து பெறுவது?

ஏன் இல்லை? குபேரன் இருக்கிறானே! அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா? கேட்டார்கள்.

குபேரன் கடன் ஒப்பந்த பத்திரத்தைத் தயாரித்தான்: ‘சேஷாசலத்தில் வசிக்கின்ற ஸ்ரீநிவாசனாகிய நான், குபேரனுக்கு எழுதிக் கொடுக்கும் பத்திரம். என் திருமணத்தின் பொருட்டு தங்களிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஒரு கோடி ராமநிஷ்காமப் பொற்காசுகளைத் தங்களிடமோ அல்லது தாங்கள் நியமிக்கும் அதிகாரபூர்வமான நபரிடமோ பகுதி பகுதியாக
செலுத்திவிட நான் சம்மதிக்கிறேன். அதற்கிடையில் என் அன்பர்களிடமிருந்து வரும் நன்கொடைகள், பக்தர்களிடமிருந்து வரும் காணிக்கைகள் ஆகியவற்றை வட்டியாகத் தர சம்மதிக்கிறேன்&ஸ்ரீநிவாசன்’.

ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. ஆனாலும் பத்மாவதிக்கு சரியான கோபம். ‘எனக்குப் பிடித்திருக்கிறது, அவருக்கும் பிடித்திருக்கிறது. எங்கள் திருமணத்தை நடத்த தந்தைக்கு ஏன் பொற்காசுகளை சீதனமாக அவர் தரவேண்டும்?’ இவ்வாறு நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்திய தன் தந்தையார் ஆகாசராஜன், தன் தவறை உணர வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீநிவாசனை விட்டுப் பிரிந்து கீழே திருப்பதியில் கோயில் கொண்டாள் அவள். தான் பெற்ற கடனை முழுமையாக தன் கணவர் அடைத்த பிறகே மலைக்கு வந்து அவருடன் இணைந்திருப்பது என்று முடிவெடுத்தாள்.

ஆகாசராஜன் பரிதவித்துப் போனான். ‘சீரும் சிறப்புமாக வாழ வேண்டிய தன் மகள் இப்படி கடன்காரனுக்கு மனைவியாகிவிட்டாளே’ என்று வருந்தினான். ஆனால், ‘பக்தர்களின் கடன்களையெல்லாம் தீர்க்கும் பத்மாவதி அவள்தான்’ என்பது அவனுக்கு அப்போது புரியவில்லை.

ஸ்ரீநிவாசன்&பத்மாவதி திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் பிருகு முனிவர். பத்மாவதியாகிய மகாலட்சுமியிடமும் ஸ்ரீநிவாசனிடமும் அவர் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தான் மலை மீதும் தன் மனைவி மலையடிவாரத்திலும் கோயில் கொண்டிருப்பதைப்பற்றி ஸ்ரீநிவாசன் என்ன சொன்னார்? ‘‘இதுவும் நன்மைக்கே’’ என்று புன்னகை பூத்தார் அவர். ‘‘பூவுலகில் மனிதர்கள் தங்கள் பாவத்துக்கு பிராயச்சித்தமாக அல்லது தாம் பெற்ற நற்பேறுகளுக்கு நன்றிக் கடனாக எனக்குக் காணிக்கைகள் செலுத்துவார்கள். இந்தக் காணிக்கை, நான் குபேரனுக்கு வட்டி செலுத்தப் பயன்படும். நான் குபேரனிடம் கடன் வாங்கியதும், எனக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்ததும் உலக மக்களின் பாவ விமோசனத்துக்காகத்தான். பூவுலகம் நன்மையுறத்தான்...’’ அப்படித்தானே திருமலையின் ஸ்ரீநிவாசனுக்கு காணிக்கைகள் குவிந்து கொண்டிருக்கின்றன!
 
 

ருக்மிணி-கிருஷ்ணர் திருக்கல்யாணம்!

Anmega palan magazine, Anmega palan monthly magazine, Tamil Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly magazine

                விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து மகன்கள், ஒரே ஒரு மகள். அந்த மகள்தான் ருக்மிணி. அவளை அப்படியே மஹாலக்ஷ்மியின் அவதாரம்  என்று பார்த்தவரெல்லாம் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்தக் கிளியைத்தான் ஒரு குரங்கின் கையில் பிடித்துக் கொடுக்க அவளுடைய அண்ணன் ருக்மி திட்டமிட்டான். ஆனால் தங்கையின் மனமோ கிருஷ்ணனிடம் சிறைப்பட்டிருந்தது & கிருஷ்ணனைப் பாராமலேயே!

ஆமாம், அரண்மனைக்கு வரும் முனிவர்கள், கிருஷ்ணனைப் பற்றி மன்னனாகிய தன் தந்தையிடம் சொல்வதையெல்லாம் ருக்மிணி செவிமடுத்திருந்தாள். அவனுடைய அழகு, கம்பீரம், வீரம் போன்ற எல்லா நற்குணங்களும் அவளை வசீகரித்திருந்தன. அவனே தன்  நாயகன்  என்பதை அவள்  தீர்மானித்துவிட்டிருந்தாள். எப்போது பார்த்தாலும் அவனைப் பற்றியே சிந்தனை, பேச்சு எல்லாம்.

மன்னன் பீஷ்மகன், மகள் ருக்மிணியின் மனதைத் தெரிந்து கொண்டான். அவளுடைய விருப்பப்படியே கிருஷ்ணனுக்கே அவளை மணமுடிப்பதாக வாக்களித்தான். ருக்மிணி எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆனால் அண்ணன் ருக்மி இதற்கு சம்மதிக்கவில்லை. கிருஷ்ணன் மீது அவனுக்குத் தனிப்பட்ட கோபமும் பகையும் இருந்தன. தன் நண்பன் கம்சனை கிருஷ்ணன் வதம்  செய்ததிலிருந்து ஏற்பட்ட பகை அது. இன்னொரு நண்பன் ஜராசந்தனுக்கு கிருஷ்ணன் எதிரியாக இருப்பதால், கூடுதலாக வளர்ந்த பகை அது. அதனால், தான் பகைவனாகக் கருதும் கிருஷ்ணன், தனக்கு சம்பந்தி உறவு கொள்ளலாகாது என்று நினைத்தான்.

மாற்று ஏற்பாடாக மற்றும் ஒரு நண்பனான, சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்கு தங்கையை மணம் செய்து கொடுக்கும் முடிவுக்கு வந்தான். மகனுடைய இந்த ஏற்பாட்டுக்கு மன்னனால் மறுப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. அவனுடைய பிடிவாதத்துக்கு அவர் பயந்தார்.  தன் மகளுக்குத் தந்த வாக்குறுதியையும் அவர் மறந்தார்; வேறு வழி தெரியாமல் மறந்தார்.

ருக்மிணி தவித்தாள். தந்தையும் தனக்கு எதிராக மாறிவிட்ட அவலத்தை நினைத்து அவதிப்பட்டாள். அண்ணனுடைய அராஜகத்துக்கு அப்பாவே அடிபணிந்தபோது, அபலைப் பெண்ணின் கெஞ்சல் அம்பலத்தில் ஏறுமா?

ருக்மியோ, தன்னை எதிர்ப்போர் யாருமில்லை என்ற ஆணவத்துடன், தன் தங்கைக்கும் சிசுபாலனுக்குமான திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டான். விதர்ப்பநாடு முழுவதுமே விழாக்கோலம் பூண்டது. திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. எல்லா தேசத்து மன்னர்களுக்கும் திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. ருக்மிக்கு ஆதரவாக அவனுடைய நான்கு சகோதரர்களும் இந்தத் திருமண ஏற்பாட்டில் அவரவர்க்கென்று பொறுப்புகளை பிரித்துக்கொண்டு, செயல்படத் துவங்கினர்.

யாருமே தனக்கு ஆறுதலாகவோ, பரிவாகவோ இல்லாத சூழ்நிலையில், தானே தன் வாழ்வுக்கு வழி தேடிக்கொள்ள வேண்டிய நெருக்கடியின் எல்லை விளிம்பில் நிற்பதை ருக்மிணி புரிந்துகொண்டாள்.

அண்ணனுடைய நண்பனை கிருஷ்ணர் வதம் செய்தார் என்றால், அந்த கம்சன் வதம் செய்யப்பட வேண்டியவனாக இருந்ததுதான் காரணம். அவனுடன் நட்பு கொண்டதற்காக தன்னுடைய அண்ணன், அவனுக்காக வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம்?

ருக்மிணி ஒரு முடிவுக்கு வந்தாள். பாழுங்கிணற்றில் தள்ளுவதற்குத் தன் குடும்பத்தாரே தீர்மானித்து விட்ட பிறகு, தெரிந்தே அதில் விழ தானும் தயாராகிவிடக் கூடாது என்று நினைத்து, தன் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்த அரண்மனை குரு ஒருவரை உடனடியாக அணுகினாள். அவள் கையில் ஓலைக் கடிதம்.

‘‘வந்து... இந்த ஓலையை என் ஜீவன் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்து உதவுவீர்களா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் ருக்மிணி.

‘‘போன ஜென்மத்தில் ராமனுக்கு உதவிய அணில்பிள்ளை நானாகத்தான் இருந்திருப்பேன் அம்மா. இப்போது இந்த ஜென்மத்தில் உனக்கு உதவுகிறேன். தயக்கம் வேண்டாம் அம்மா. கொடு கடிதத்தை, கொண்டு சேர்க்கிறேன் கிருஷ்ணரிடம்’’ என்று சொல்லி ஆவலுடன் அவர் அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

துவாரகையை அடைந்தார் குருதேவர். கிருஷ்ணன் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டான்.

புன்சிரிப்புடன் கிருஷ்ணன் அந்த ஓலையை வாங்கிப் படித் தான். ‘‘பரந் தாமா, என்னை ஆட்கொண்ட வரே! தங்களுடைய நிறை குணங்களை கேள்விப்பட்டு என் மனதில் தங்களை நிறைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். என் மனம் தெரிந்து என் தந்தையாரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் என் அண்ணன் ருக்மி என் விருப்பத்துக்குத் தடையாக நிற்கிறான். சேதி நாட்டு மன்னன் சிசுபாலனுக்கு என்னை மணமுடிப்பதில் தீவிரமாக இருக்கிறான். எனக்கு ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் அண்ணனுக்கு பயந்து அவனுடைய ஏற்பாட்டிற்குத் தலையாட்டி வருகிறார்.

‘‘இந்த நிலையில் என்னைக் காப்பாற்றத் தங்களை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை. உள்ளத்தை உங்களுக்குத் தந்துவிட்டபிறகு, இன்னொருத்தனைக் கரம் பிடிப்பது எப்படி சாத்தியமாகும்? தாங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால்  என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. எங்கள் சம்பிரதாயப்படி, திருமணத்திற்கு முன்னால் கௌரி பூஜை செய்வதற்காக நான் ஆலயத்துக்கு வருவேன். அப்போது தாங்கள் என்னைக் காப்பாற்றி அல்லது கடத்திச் சென்று என்னை ஆட்கொள்ள வேண்டும்...’’

கிருஷ்ணன் குருதேவரைப் பார்த்தான். ‘‘ருக்மிணியின் உள்ளக்கிடக்கை எனக்குப் புரிகிறது. நான் அவளுடைய விருப்பத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள். அவள் யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம்’’ என்று உறுதியாகச் சொன்னான். குருதேவர் மனமகிழ்ச்சியுடன் விதர்ப்ப நாட்டிற்குத் திரும்பினார்.

‘‘ருக்மிணி, உன்னுடைய மனோரதம் நிறைவேறப் போகிறது. கிருஷ்ணர் உடனேயே வருகிறார். நிச்சயம் உன்னைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வார். ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதைத் தகர்த்தெறிய ஒரு போர்ப்படையே அவருடன் வருகிறதம்மா. உன் கவலை தீர்ந்தது’’ என்று சொல்லி ஆசிர்வதித்தார் குருதேவர்.

தான் கடிதத்தில் எழுதிக் கேட்டுக்கொண்டபடியே தன்னை மீட்டுச் செல்ல கிருஷ்ணன் வந்துவிட்டதை அறிந்த ருக்மிணி, அவனுக்குத் தோதாக கௌரி பூஜையை மேற்கொள்வதற்காக ஆலயத்துக்குச் சென்றாள். மனமுருக தேவியை வழிபட்டாள். அவளுடைய மனம் படபடத்தது. தன் வாழ்நாளின் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் நாள் அது என்பதில் சந்தேகமில்லை.

பூஜையை முடித்து ஆலயத்தைவிட்டு வெளியே வந்த ருக்மிணியை, சற்றுத் தொலைவில், ஒரு ஒளி, ‘‘வா, ருக்மிணி...’ என்று காதலுடன் அழைத்தது. ஓடிச் சென்று தஞ்சமடைந்தாள் ருக்மிணி. பேரொளியாகத் திகழ்ந்த கிருஷ்ணன், ருக்மிணியை அள்ளிக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தினான்.

இதைப் பார்த்துவிட்டார்கள் திருமணத்திற்காக வந்திருந்த அசுர அரசர்கள். நேராக ஓடிப்போய் ருக்மியிடம் விவரம் சொன்னார்கள். அவ்வளவுதான், கிருஷ்ணனை எதிர்க்க, ருக்மிணியை மீட்க, பெரிய படையே திரண்டது. எதிர்பார்த்ததுதானே? எதிரிப் படைகளை எதிர்கொண்டான் கிருஷ்ணன். அசுரர்கள் அலங்கோலமாயினர். புறமுதுகிட்டுத் தப்பித்துத் தத்தமது நாடுகளை நோக்கி ஓடலாயினர்.

ஆதரவாளர்கள் அனைவரும் அறுபட்டுப்போன நிலையிலும், ருக்மிக்கு உண்மை புரியவில்லை. தான் மஹாவிஷ்ணுவிடமே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதை உணராமல் போரிட்டு, இறுதியில் அவனும் சிசுபாலனும் தப்பித்து ஓடினார்கள்.

ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை என்ற சூழ்நிலையில் கிருஷ்ணன் ருக்மிணியை அழைத்துக் கொண்டு வடமதுரைக்குச் சென்றான். அந்நாட்டு அரசன் உக்கிரசேனர், நகரையே பிரமாண்ட அலங்காரத்தில் மூழ்கடித்தார். அனைவரும் கிருஷ்ணன் ருக்மிணியை வரவேற்றார்கள்.

விதர்ப்ப நாட்டு இளவரசியை வடமதுரையில் திருமணம் செய்துகொண்டு, அவளைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றான் கிருஷ்ணன்.
 
சுபம்!