திங்கள், 8 ஆகஸ்ட், 2016

நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சனேயர்!


திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது.
 
 
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்றும் அவற்றில் ஒன்றே இந்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும் என்கின்றார்கள்.
 
திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயத்தின் ஹனுமார் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறுகிறார்கள்.
 

இந்த ஹனுமானின் சிலை கரும் பச்சை நிறத்திலான பாறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த  சிலையின்  சிறப்பு பல உண்டு. இந்த சிலை ஹனுமாரை பால உருவிலான ஹனுமான் என்கின்றார்கள். வலது பக்கத்தை நோக்கி பார்த்தபடி அவர் நின்று இருப்பது விசேஷமானது. வலது கை மேலே தூக்கியபடி இருக்க அதில் அபய முத்திரை காணப்படுகிறது. சிலையின் சிறப்பு இன்னும் பல உள்ளது.
 
 ஹனுமான் நீண்ட வாலின் நுனியில் மணி, தலையில் நாமம், காதுகளில் குண்டலங்கள், கோரப்பற்களுடன் சங்கு, தலை உச்சியில் தாழம்பூ, அருகில் சுதர்சன சக்கரம், கழுத்தில் சாலிக்கிராமத்திலான மாலை, இடுப்பில் துஷ்டர்களை வதம் செய்யும் கத்தி போன்றவற்றுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் தனி ஆஞ்சநேயர் அல்ல.
 


சாதாரணமாகவே வாயுவின் புத்திரரான ஆஞ்சநேயரை சிவனின் அவதாரம் அல்லது சிவனின் அம்சம் என்பார்கள். ஆகவே மகாபாரத யுத்த காலத்திலே பூலோகத்தில் கொடுமைகளை செய்து வந்திருந்த அரக்கர்களை வதம் செய்து மக்களை துயரங்களில் இருந்து மீட்க இங்கு வந்து அவதரித்திருந்த ஆஞ்சநேயருக்கு அநேக சக்தி தரும் வகையில் அவருடைய உருவில் பல்வேறு அம்சங்களை சிவபெருமான் கொடுத்தார். 
 
  தலையில் ராமர்  பாதம், இடது கையில் தாமரைப் பூ உருவில் மகாலஷ்மி, காதுகளில் அணிகலன்களாக காளி தேவி, கோரைப் பற்களாக துர்க்கை, இடுப்பில் கத்தியாக பரசுராமர், நெற்றியில் திருநேத்ரமாக (கண்) சிவபெருமான், இருபுறங்களிலும் சங்கும் சக்கரமுமாக விஷ்ணு பகவான், கால்களில் தண்டையாக கிருஷ்ணர் என பல தெய்வங்கள் ஆஞ்சநேயரின் உடலில் குடியேற, அங்கு வந்த பார்வதி தேவி அனைவரும் அனைத்து இடத்தையும்  அனைவரும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதினால் தனக்கு தங்க ஒரு இடம் இல்லையே என அனுமானிடம் கூற அவரும் தனது வாலை உயர்த்திக் காட்டி அதில் கட்டப்பட்டு இருந்த சிறு மணி கட்டப்பட்டு உள்ள இடமே மீதம் உள்ளது என்று கூற பார்வதி அவர் வாலில் மணியாக அமர்ந்து கொள்ள, அங்கு வந்த வியாசர் ஒரு பூணூலாக மாறி அந்த ஹனுமாரின் உடலில் அமர்ந்து கொண்டாராம்.
 
 
 அந்த ஆஞ்சநேயர் இப்படியாக பல்வேறு தெய்வங்களின் சக்திகளைக் கொண்டவராக இருந்து கொண்டு அங்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் செல்வமும், வாழ்க்கையில் வளத்தையும் குறைவில்லாது அள்ளித் தந்து வருகிறார் என்கின்றார்கள். மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித்தரும் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கினால் வெற்றியும், செல்வமும் வீடு தேடி வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தனித் தனி சன்னதிகளில் வினாயகரும், குடும்ப சமேதகர்களாக ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி போன்றவர்களும், தனி சன்னதியில் நவகிரகங்கள் தமது வாகனங்களுடன் காட்சி தந்தபடி இருக்கிறார்கள். ஹனுமானைப் நேராகப் பார்த்தபடி சனிபகவானும் உள்ளார் என்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். அதனால்தான் இங்கு வந்து சனி பகவானையும் ஹனுமானையும் வணங்கிச் சென்றால் சனியின் எந்த தொல்லை இருந்தாலும் அவை பூரணமாக விலகிவிடும் என்கிறார்கள்.
 
மூலஸ்தானத்தில் நின்றிருக்கும் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் தன்னிடம் வந்து வேண்டிடும் பக்தர்களுக்கு காட்சி தந்து அபயம் அளிக்க, அதே சன்னதியின் இடப்புறத்தில் நாகதேவதை சன்னதியும் இருக்க சன்னதியின் பின்னால் இரண்டு சந்தன மரமும், நாக சன்னதியின் பின்புறத்தில் சிவப்பு செம்பருத்தி மரமும் உள்ளன. அந்த நாக சன்னதியில்தான் ஹனுமானின் பாறையைக் காலம் காலமாக காத்து நின்ற நாகத்தின் வம்சமும் தொடர்ந்து வசிப்பதாகக் கூறுகிறார்கள். ஆகவேதான் அந்த பாம்பு புற்றை அகற்றாமல் பூஜித்து வருகிறார்கள். இன்றும் அந்த புத்தில் நாகம் வந்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் யாரும் அதற்கு இடையூறு செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
 
இந்த ஆலயத்தின் ஒரு முக்கிய அம்சம் இங்கு நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் ஆகும். மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சன்னதியில் இருந்து புறப்பட அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம். இந்த சுப வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான்.
 
ஆகவே திருமண வயதை எட்டிவிட்ட ஆனால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும். அந்த நிகழ்ச்சியன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள்.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து திருத்தணி மலைக்  கோவிலுக்கு செல்லும் பாதையின் எதிர்புறமாக அதாவது நேர் எதிரில் அமைந்துள்ள சின்ன சாலை வழியே தாழவேடு, பூனிமாங்காடு போன்ற கிராமங்களின் வழியே இருபுறத்திலும் இயற்கை எழில் தரும் விவசாய நிலங்களின் வழியே போடப்பட்டு உள்ள நல்ல பாதையில் சென்று இந்த ஆலயத்தை அடையலாம். இருபுறமும் பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள விளை நிலங்களின் வழியே செல்லும்போது நமது மனம் அமைதி அடைகிறது.
 

ஆலய வளாகத்தின் நுழை வாயில் அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்து கொண்டு தியானிக்கும் காட்சியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கும் வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.
 
 

திருப்பாற்கடல் ஆலயங்கள்!



சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NH 4 சாலையில் வருவது காவேரிப்பாக்கம் எனும் சிறு ஊர். இது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் அல்லது காஞ்சிபுரம் வழியே வந்தால் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் அங்கு யாரையாவது கேட்டால் திருப்பாற்கடலுக்கு செல்லும் வழியைக் கூறுவார்கள். பெங்களூரில் இருந்து சென்றால் ராணிபேட்டையைத் தாண்டியவுடன் அந்த சிற்றூர் உள்ள பெயர் பலகையைக் காணலாம்.

சென்னையில் இருந்து வரும்போது  ராணிபேட்டைக்கு முன்பே வரும்  காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் இடது புறம் திரும்பிச் செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து சென்றால் காவேரிபாக்கத்தை அடைந்ததும் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

திருப்பாற்கடலில் இரண்டு பண்டை கால ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுவானவர் சிவபெருமானின் சிவலிங்கத்தின் ஆவுடையார் மீது நின்ற காட்சியில் இருக்கின்றார். அந்த ஆலயத்தின் பக்கத்திலேயே உள்ள இரண்டாவது ஆலயமான ஆதி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் விஷ்ணு ஆதிசேஷன் மீது படுத்தவாறு காட்சி தருகிறார். சிவன் -விஷ்ணு ஆலயத்தில் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவம் காணப்படுகின்றது.

இந்த புண்ணியதலத்தில்தான் சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா என மூவரும் தோன்றி ரிஷி முனிவர்களுக்கு தரிசனம் தந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த சப்தரிஷிகளில் நான்கு ரிஷிகள் இங்கு வந்து நான்கு வேதங்களையும் பாடியதினால் இந்த தலத்தின் பெயர் சதுர்வேத மங்களம் என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியம்

107 வது திவ்ய தேசம் என அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியத்தைப் பற்றிக் கூறுகையில் அதற்கு ஒரு கதை கூறுகிறார்கள். ஒருமுறை விஷ்ணு அனந்த சயனத்தில்- சேஷ நாகம் மீது பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். அபோது அவர் நாபியில் இருந்து எழுந்த நாபித் தண்டில் பிரும்மா பிறப்பு எடுத்து உலகை சிருஷ்டி செய்யத் துவங்கினார். அவர் பூமிக்குச் சென்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்த இந்த தலத்தில் ஒரு யாகம் செய்யக் கிளம்பி தனது மனைவியான சரஸ்வதியை அதற்கு உடன் அழைத்தார். ஆனால் சரஸ்வதியோ அவருடன் செல்ல மறுக்கவே, வேறு வழியின்றி பிரும்மா தன்னுடன் காயத்ரி மற்றும் சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்று யாகத்தைத் துவக்கினார்.
 
ஆகவே கோபமுற்ற சரஸ்வதி வேகவதி என்ற ஒரு நதியாய் உருவெடுத்து, அந்தப் பகுதியில் பாய்ந்து யாகசாலையே மூழ்கடிக்க வந்தவுடன் பிரும்மா விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். உடனே சற்றும் தயங்காமல் விஷ்ணுவானவர் அங்கு வந்து நதிக்கு நடுவில் சேஷ நாகத்தின் மீது படுத்து நதியின் ஓட்டத்தை ஒரு அணைப் போலத் தடுத்து நிறுத்தி யாகம் நடந்து முடிய அருள் புரிந்தார். அவரை அந்த கோலத்தில் கண்ட சரஸ்வதி கோபம் தணிந்து திரும்பிச் சென்றாள்.
 
ஆகவே திருப்பாற்கடலில் தான் சயனித்து இருந்த அதே கோலத்தில் பூமியில் வந்து திருப்பாற்கடல் காட்சியை இங்கு அருளியதினால்தான் இந்த சேஷ்திரத்தின் பெயரும் திருப்பாற்கடல் என ஆயிற்று. அவருக்கு ஸ்ரீ ரங்கநாதர் என்ற பெயரில் ஆலயமும் அமைந்தது. இந்த ஆலயத்தில் விஷ்ணுவை பாற்கடலில் சயனிக்கும் கோலத்தில் சிலை அமைத்து பூஜிக்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாதர் தன்னுடன் தாயார் பூதேவி மற்றும் தாயார் ஸ்ரீ தேவியுடன் காட்சி தருகிறார்.
 
ஒருமுறை சரீர ரோகத்தினால் அவதிப்பட்ட சித்ரகுப்தர் (ஜனன மரண கணக்கு வழக்குகளை வைத்துள்ளவர்) விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரை இந்த ஷேத்திரத்தில் வந்து தன்னை பூஜித்தால் ரோகம் தீரும் என்று கூறினார். ஆகவே சித்ரகுப்தர் இங்கு வந்து விஷ்ணுவை துதித்து ரோக நிவாரணம் அடைந்தார். அதற்கு நன்றிக் கடனாக இங்கு வந்து யார் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தையும் தான் நீக்குவேன் என்றும்  உறுதி தந்தார்.
 
 
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலய மகாத்மியம்
ஒரு காலத்தில் பாலாறு எனக் கூறப்படும் அந்த நதிக் கரையில் ஒரு விஷ்ணு ஆலயமும் கிடையாதாம். இருந்த ஆலயங்கள் அனைத்துமே சிவன் ஆலயங்களாகவே இருந்தன. அப்போது ஒரு விஷ்ணு பக்தர் பல சேத்திரங்களுக்கும் சென்று விஷ்ணுவை தரிசனம் செய்தப் பின் இந்த தலம் உள்ள ஊரின் வழியே வந்தார். அந்த பக்தர் தினமும் நதிகளில் நீராடியப் பின் விஷ்ணுவின் ஆலயத்துக்கு சென்று விஷ்ணுவை தரிசிக்காமல் உணவு அருந்த மாட்டார். 
 
அப்படி பயணத்தில் இருந்தவர் இந்த ஊரை அடைந்தார். குளித்துவிட்டு அங்கும் இங்கும் விஷ்ணுவின் ஆலயத்தை தேடினார். ஒன்று கூடத் தென்படவில்லை. அப்போது முடிவாக அவர் கண்ணில் பட்ட இந்த ஆலயத்துக்குள் நுழைந்தார். வெளியில் அது விஷ்ணுவின் ஆலயமா, சிவன் ஆலயமா எனத் தெரியாமல் இருந்ததினால் உள்ளே நுழைந்தவர் அடுத்த கணம் போன வேகத்திலேயே ஓடி வந்து விட்டார். ' நான் இன்று என்ன பாவம் செய்தேன், விஷ்ணுவை தரிசிக்க முடியவில்லையே என வருத்தத்தில் அமர்ந்து இருந்த அவரிடம் ஒரு கிழவர் வந்து ''என்ன ஸ்வாமி விஷ்ணுவின் தரிசனம் முடிந்து ஆகாரம் அருந்த உட்கார்ந்து இருக்கின்றீர்களா?'' எனக் கேட்டார்.
 
விஷ்ணு பக்தரோ எரிச்சல் அடைந்து  '' ஆகாரமா, விஷ்ணுவின் ஆலயம் இல்லாத இந்த ஊரில் எங்கிருந்து நான் சாப்பிட முடியும்?'' என்று கோபமாகக் கூற அந்தக் கிழவர் கூறினார் ''ஆச்சர்யமாக இருக்கிறது, அதோ தெரிகிறதே, அது விஷ்ணுவின் ஆலயம்தானே''.
 
அந்த அந்தணரோ அப்போதுதான் அந்த ஆலயத்துக்குள் சென்று விட்டு அது சிவன் கோவில் என்று வெளியே ஓடி வந்து விட்டவர். ஆகவே அவர் கோபமாக மீண்டும் கூறினார் '' ஸ்வாமி என் வயிற்று எரிச்சலை ஏன்  கொட்டிக் கொள்கிறீர்கள்...அது சிவன் கோவில் என்று தெரிந்தும் ஏன் பொய் கூறுகிறீர்கள்''. கிழவரோ, '' சரியான ஆளப்பா  நீங்கள், அது விஷ்ணுவின் ஆலயம்தான் வாருங்கள் காட்டுகிறேன் ''என்றார்.  அந்தனரோ அதை ஒத்துக் கொள்ளவில்லை.
 
கிழவரும் விடவில்லை. '' பந்தயம் கட்டும்....அது விஷ்ணுவின் ஆலயம் என உமக்கு காட்டுகிறேன்...வாரும்'' என்றார். அந்த பண்டிதரும் செல்ல மறுத்தார் .  ஒருவர் மாற்றி ஒருவர் மீது பொய் கூறுகிறார் என்று குற்றம் சுமத்த அவர்கள் சண்டை  வலுத்துக் கொண்டே  போய் பஞ்சாயத்தில் அந்த சண்டை போய் நின்றது. இருவருடைய வாதத்தையும் கேட்டவர்கள்  அந்த ஆலயத்துக்குள் சென்று  யார் பொய் கூறுகிறார்கள் எனப் பார்க்கலாம் என்று அந்த ஆலயத்துக்கு அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். உள்ளே போய் பார்த்தால் ஒரு சிவலிங்க  ஆவுடயார் மீது விஷ்ணு நின்று கொண்டிருந்த கோலத்தில் ஆலய மூர்த்தியின் சிலை இருந்தது. 
 
அடடா....மகாவிஷ்ணு அல்லவா இங்கு இருக்கின்றார்...முதலில் என் கண்ணுக்கு ஏன் மாறித் தெரிந்தது  என்று வருந்திய விஷ்ணு பக்தர் அங்கேயே விஷ்ணு  மீது தோத்திரம் பாடினாராம். அதன் பின் அவர்கள் அந்தக் கிழவரைத் தேட அவரைக் காணவில்லை. அப்போதுதான் அனைவரும் புரிந்து கொண்டார்கள் நடந்தது விஷ்ணுவின் நாடகமே என்பதை. 
 
இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே ஆலயத்தில், ஒரே சன்னதியில் இருந்தபடி சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறானவர்கள்  அல்ல  என்பதைக் காட்டும்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் எழுந்தது.

இந்த தலத்தின் மகிமை!

 இந்த ஆலயங்கள் விஜயநகரத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகின்றது.

 ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் வந்து கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன்- திருமஞ்சனம் செய்வதினால் சரீர வியாதிகள் விலகும்.

ஆஞ்சனேயருக்கு பதினோரு பூஷனிக்காய் மாலையை சாத்துவதின் மூலம் மிருத்யு தோஷங்கள் விலகும்.

இங்கு வந்து  எவர் ஒருவர் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

சிவ-விஷ்ணுவை ஒரு சேர இங்கு வணங்குபவர்கள் ஞானம் பெறுவார்கள், முக்தி கிடைக்கும்.


 

சனி, 6 ஆகஸ்ட், 2016

ராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம்!

1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே
சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே

2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே
பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே
கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

4. சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே
சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

5. அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே
அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

6. ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

7. அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே
அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

8. அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸெளபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

9. பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி!

ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

எனவே தான் 'கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி' அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி' என்றும், 'ஆடிப்பட்டம் தேடி விதை', 'ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்' என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.

இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

ஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும். ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, 'அருளோடு வரும் பொருள் தான்' என்று பதில் கிடைக்கும்.

அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் லட்சுமி என்றும், திருமகள் என்றும் வர்ணிக்கின்றோம். எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடியே வாழ்க்கையை திட்டமிட்டநடத்த இயலும். அங்ஙனம் வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையாகும்.

அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். 'திருமகளே வருக' என்று கோல மாவினால் எழுதலாம். பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும்.

குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும். அன்றாட வாழ்க்கையின் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ? இன்றோடு துயர்விலக, இனிய தனலட்சுமியே! மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்று பாடுங்கள்.

லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.


வம்ச கவசம்!

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் நிறைந்த, அவர் வாசம் செய்கின்ற புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பதாலும், அதன் இலையை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.

சுக்கில சதுர்த்தி, பௌர்ணமி தினங்களில் சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் செய்து ஆல், அரசு, புரசம் சமித்துக் களால் ஹோமம் செய்து, அவரவர் குல சம்பிரதாயப்படி வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



வம்ச விருத்தி பூஜை!


பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.
 
வம்ச கவசம்!

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:



ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியில்,

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:

எனும் ஸ்லோகத்தில் ,

"ஹே தேவி, சிவஸ்வரூபமான நான்கு சக்கரங்கள், சக்திவடிவமான ஐந்து சக்கரங்கள், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தாதுக்கள் ஒன்பது, உன்னுடைய பிந்து ஸ்தானத்துடன் கூடிய மந்திர கோணங்கள், எட்டு தளங்கள், பதினாறு தளங்கள், மூன்று மேகலைகள், மூன்று பிரகாரங்கள், ஆகியவற்றுடன் சேர்ந்து, 44 தத்துவங்களாக அமைந்துள்ளன."


என்று ஸ்ரீசக்ரத்தின் வடிவத்தை விளக்குகிறார்.


இந்த ஸ்லோகத்தை, காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 8 நாட்கள்,தினந்தோறும், 1000 முறை ஜபம் செய்தால், புத்திர சந்தானம் உண்டாகும். ஜபம் செய்துவிட்டு, வெல்லப் பாயசம், மஹாநைவேத்தியம் (பச்சரிசி சாதம் ஒரு பிடி, வேக வைத்த துவரம்பருப்பு ஒரு ஸ்பூன்,ஒரு துளி நெய் சேர்ந்தது) நிவேதனம் செய்ய வேண்டும்.

தம்பதி ஒற்றுமைக்கு ஐக்யபத்ய வழிபாடு!


தம்பதி ஒற்றுமைக்கு அருள் செய்யும் ஐக்யபத்ய வழிபாட்டை அறிவோம்.


நல்லதொரு சுபநாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து மடியுடுத்தி, பூஜையறையில் தீபம் ஏற்றி வையுங்கள். பிறகு, அரிசி மாவினால் ஸ்வஸ்திகம் வரைந்து அதன் மீது இரண்டு குத்துவிளக்குகளை தீபமேற்றி வைக்க வேண்டும். பின்னர், அன்றைய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிவிட்டு, கீழ்க்காணும் குறிப்புகளின்படி மந்திரம் சொல்லவும் - செய்யவும் வேண்டும்.


ஓம் சமஞ்சந்து இத்யாதி மந்த்ரஸ்ய
சிவித் யீருபதி :  (நெற்றியில் தொடுக)
அனுஷ்டுப் சந்த : (மூக்கில்)
சாவித்ரீ தேவதா (இதயத்தில்)
அனயோர் தம்பத்யோ அவிச்சிந்ந ப்ரீதி
அபிவிருத்யர்த்தே விநியோக :



(கைகூப்பி 11 முறை இதைச் சொல்லி வணங்க வேண்டும்)


பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.


ஓம் சமஞ்சந்து விச்வே தேவதா
சமாபோ இருதயாநி நௌ
சம்மாதரிச்வாசம் தாதா
சமுதேஷ்டயீ ததாது நௌ



இதையடுத்து, ஐக்ய பத்ய சூக்த மந்திரம் கூற வேண்டும்.


ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானீ ஸமானம் மன: ஸஹ
சித்த மேஷாம் ஸமானம் கேதோ அபிஸம்ரபத்வம்
ஸம்ஞானேன்வோ ஹவிஷா யஜாம: ஸமானீவ ஆஹுதி:
ஸமானா ஹ்ருதயானீவ: ஸமானமஸ்து வோமன:
யதாவ: ஸுசகா ஸதி (பெயர்) புருஷ பத்நீ அந்யோந்ய :



(இதை 32 முறை ஜபிக்கவும்)


பின்னர் ஸ்த்ரீ புருஷ வஸ்ய துதியை 3 முறை கூறி, தீபத்தில் அரளி மலரைப் போட்டு பழம், கல்கண்டு, தாம்பூலம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.


இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, தீபாராதனை செய்து வழிபடுவது விசேஷம். 54 நாட்கள் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்கிவர, உமையருபாகனாய்த் திகழும் இறைவன், உங்களையும் மனம் ஒருமித்த தம்பதியாய் வாழ வைப்பான்.



வலம்புரிச் சங்கு பூஜை!


வலம்புரிச் சங்கு




பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். 'சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’ என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.

ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும்.அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

புராணங்களில் வலம்புரிச் சங்கு

அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ''குருதட்சணையாக என்ன வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை

பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு 'பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.

கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்

திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.



பூஜிப்பது எப்படி?

வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் இந்த பூஜையைத் துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில் செய்து முடிக்கலாம்.

விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், வாசனைத் திரவியங்களான ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.

முதலில் சந்தனத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து, 'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’ 'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும், 'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

அடுத்ததாக...

* 'மம குபேர நிதி தர்சனார்த்தம்’

* 'ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி

தந்நோ சங்க ப்ரசோதயாத்’

* 'குபேர லக்ஷ்மி ரூபாய சங்காய ஸ்வாகதம்... ஸ்வாகதம்...ஸ்வாகதம்...

என்று மூன்றுமுறை சொல்லி நீர்விட வேண்டும்.

அடுத்த நிலை, எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று. அதாவது வலம்புரிச் சங்கை ஆகம முறைப்படி வர்ணித்து அதில் அமரச் செய்வதற்கு ஏதுவாக, 16 கலைகளையும் ஆவாஹனம் செய்து வழிபட வேண்டும். அதற்குப் பிறகு சங்கை பூஜிக்கவேண்டும்.

ஓம் அம்ருதா கலாய நம:

ஓம் சந்த்ரிகா கலாய நம:

ஓம் மானதா கலாய நம:

ஓம் காந்தி கலாய நம:

ஓம் பூஷா கலாய நம :

ஓம் ஜயோத்ஸ்னா கலாய நம:

ஓம் துஷ்டி கலாய நம:

ஓம் ஸ்ரீகலாய நம:

ஓம் புஷ்டி கலாய நம:

ஓம் ப்ரீதி ரங்கதா கலாய நம:

ஓம் ரதி கலாய நம:

ஓம் பூர்ணா கலாய நம:

ஓம் த்ருதி கலாய நம:

ஓம் பூர்ண முகா கலாய நம:

ஓம் சசி ஸ்ரீ கலாய நம:

ஓம் காமதாயினீ கலாய நம:

அடுத்ததாக நவநிதிகளை அழைத்து அர்ச்சிக்கவேண்டும். 'ஓம் பத்ம நிதயே நம:’ எனத்துவங்கி சங்கம், மகரம், சுகச்சபம், முகுந்தம், குந்தாக்யம், நீலம், மகரம், வரம் என்று ஒன்பது நிதிகளையும் (முன்னும் பின்னுமாக ஓம் - நம சேர்த்து) போற்றி வழிபட்டு...

ஓம் நவநிதிதேவதாயை நம; சகலாராதனை சுவர்ச்சிதம்,
ஓம் யக்ஷேஸ்வர ரூபாய மகாசங்காய நம; சகல ஆராதனம் பூஜயேத்

என்று வணங்கவேண்டும். பிறகு குபேரனை தியானித்து, அவரது முக்கியமான 16 நாமாக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் க்லீம் குபேராய நம:

ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம:

ஓம் க்லீம் ஸ்ரீபதயே நம:

ஓம் க்லீம் நித்யானந்தாய நம:

ஓம் க்லீம் பூர்ணாய நம:

ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாசாய நம:

ஓம் க்லீம் அஸ்வாரூபாய நம:

ஓம் க்லீம் சுகாஸ்ரயாய நம;

ஓம் க்லீம் நரவாகனாய நம:

ஓம் க்லீ ம் மிகதெஸ்வர்ய ரூபாய நம;

ஓம் க்லீம் சதா புஷ்பக வாகனாய நம:

ஓம் க்லீம் சர்வக் ஞாய நம;

ஓம் க்லீம் சீல பூஜகாய நம:

ஓம் க்லீம் யக்ஷ£ய நம:

ஓம் க்லீம் கட்காறதாய நம:

ஓம் க்லீம் சீல பூஜ காய நம:

ஓம் க்லீம் ராஜயோக வராய நம:

ஓம் ஸ்ரீம் க்லீம் பாஞ்ச ஜன்ய ரூபாய நம:

குபேர அர்ச்சனை முடிந்தபிறகு, அவல் பாயசம், கற்கண்டு பால் வைத்து, தூப-தீப நிவேதனம் செய்யவும். தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற மலர்களை எடுத்துக்கொண்டு, தரையில் மண்டியிட்டபடி...

''ஓம் வடதிசை வல்லவா போற்றி,

ஓம் நவநிதி தேவனே போற்றி

ஓம் செல்வத்தின் உருவமே போற்றி,

ஓம் கடலினில் பிறந்தாய் போற்றி,

ஓம் பரந்தாமன் கரமே போற்றி,

ஓம் வெண்ணிறத்து மேனியே போற்றி,

ஓம் திருமகள் நட்பே போற்றி,

ஓம் ஐஸ்வர்ய இருப்பிடமே போற்றி,

ஓம் ஆனந்த வடிவினனே போற்றி,

ஓம் குபேரனின் இல்லமே போற்றி,

ஓம் தோஷங்கள் விரட்டுவோய் போற்றி,

ஓம் ஈஸ்வரன் விருப்பமே போற்றி,

ஓம் ஏற்றம் தருவோய் போற்றி,

ஓம் எளிமையின் சொல்லே போற்றி,

ஓம் நாதத்தைக் கொண்டவா போற்றி,

ஓம் நலமே தருவாய் போற்றி

என்று மலர்களைச் சமர்ப்பித்து போற்றி கூறி முடித்ததும் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நிறைவாக,

* ஓம் விஷ்ணுப்ரியாய வித்மஹே வேத நாதாய தீமஹி

தந்நோ: ஸங்க ப்ரசோதயாத்

* சங்கு ரூப லக்ஷ்மி குபேர நாராயண ஸ்வாமினே நம:

* கற்பூர நீராஜன தீபம் தரிசயாமி என்று ஆர்த்தி செய்து பிரசாதம் எடுத்துக்கொண்டு சங்கு தீர்த்தத்தை வீட்டின் எல்லா பாகங்களிலும் தெளிக்கவேண்டும்.

- வழிபடுவோம்

சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமை யால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைப்பட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்த வரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன் படாமல் கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

குழந்தைப் பேறுபெற  வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும்.

ஆலயங்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட செல்வம் சேரும்.

ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.