சனி, 5 மார்ச், 2016

நலமே நல்கும் நல்லிணக்கீஸ்வரர்!


 

சென்னை தாம்பரத்தில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் வழியில் ஒரகடம் கூட்டு ரோடு நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ.ல் எழுச்சூரில் இருக்கிறது.


மூலவர்                 :       நல்லிணக்கீஸ்வரர்
அம்மன்/தாயார்   :       தெய்வநாயகி
தல விருட்சம்      :        பனை மரம், வில்வம், ஏறழிஞ்சில்
தீர்த்தம்                  :       தாமரை புஷ்கரணி, சிவன் குட்டை
பழமை                   :       1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்                          :       எழுச்சூர்

 


 
 
 தல சிறப்பு:
 
 பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.

தலபெருமை:
 
மகா மண்டபத்தின் வலப்பக்கத்தில் தெற்குத் திசை நோக்கி, நின்ற கோலத்தில் தெய்வநாயகி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இந்த விக்கிரகத்தின் கால் விரல்கள் மற்றும் நகங்கள், சேலை கட்டியுள்ள மடிப்புகள் போன்றவை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமணம் தடைப்படுபவர்களுக்கு இந்த அம்மன் பெரிய வரப்பிரசாதம். அம்பாளிடம் ஒரு மஞ்சள் சரடை வைத்து மூன்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அங்குள்ள தல விருட்சங்களுள் ஒன்றான பெண் பனை மரத்தில் இந்த மஞ்சள் சரடைக் கட்டிவிட்டால், 90 நாட்களுக்குள் திருமண பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றொரு தலவிருட்சமான ஏறழிஞ்சில் மரத்தின் முன் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

இங்கு வள்ளி-தெய்வானை சமேதராக ஒரே கல்லில் திருவாசியுடன் கூடிய வடிவமைப்பில் ஆறுமுகப் பெருமான் தேவ மயில் மீது அமர்ந்து ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மற்றொரு காலை மடக்கி வைத்துக் கொண்டும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆறுமுகரைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே மயில் வாகனம் கம்பீரமாகக் காட்சி அளிக்கும். ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார்.
 

தல வரலாறு:
 
விஜய நகரப் பேரரசின் (நரஸா-திப்பாஜி தம்பதிக்குப் பிறந்த) மன்னன் வீரநரசிம்மா கி.பி. 1429-ஆம் வருடம் காஞ்சிப் பகுதியில் உள்ள எழுச்சூர் உட்பட சில கிராமங்களை காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த 54-வது சங்கராச்சார்யரான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு தானமாக வழங்கினான் என கண்டெடுக்கப்பட்ட தாமிரப் பட்டயம் ஒன்றில் உள்ளது. இதன் பின்னர் மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சில காலத்துக்கு இந்த எழுச்சூரில் நல்லிணக்கீஸ்வரர் ஆலயத்திலேயே தங்கியிருந்து, முக்தி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குச் சான்றாக 54-வது ஆச்சார்யரின் ஜீவசமாதி (அதிர்ஷ்டானம்) இந்த ஆலய வளாகத்தில் நல்லிணக்கீஸ்வரர் சன்னதிக்குப் பின்புறம் அமைந்துள்ளது. 
 

 பொது தகவல்:
 
ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின் அருளாசி, விக்கிரகங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு.
 

கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரகங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள், 54-வது காஞ்சி பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் போன்றவை உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளன.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவும், ஒவ்வொருவரும் தம்மை சார்ந்தவரோடு இணக்கமாக இருக்க இங்குள்ள நல்லிணக்கீஸ்வரரைப் பிரார்த்தனை செய்கின்றனர். தவிர, நல்ல குரல் வளம் வேண்டுவோர் (பாடகர்கள்), பேச்சாளர்கள், அரசியலில் பிரகாசிக்க விரும்புபவர்கள் நல்லிணக்கீஸ்வரருக்கும், நந்தி தேவருக்கும் பால் மற்றும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷமுள்ள ஆண்-பெண் இரு பாலாரும் தோஷ நிவர்த்தி பெற இங்குள்ள ஆறுமுகரை வணங்குவது சிறப்பு.
 

சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன் அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
 

திறக்கும் நேரம்:
காலை மணி 6 முதல் மணி 12.30 வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.




 

வியாழன், 3 மார்ச், 2016

குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை

1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே

2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே

3. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே

4. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே

5. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

7. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

8. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ

9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே

10. மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ!

 
நீங்கள் மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை தினமும் 1 முறை பாராயணம் செய்ய குலம் தழைக்கும். குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

புதன், 2 மார்ச், 2016

சுபமங்களம் தரும் ஸ்ரீ ஆத்யந்த பிரபு!



விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத் "

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.

இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

அனுமனுக்கு என்ன மாலை

ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.

அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

எலுமிச்சம்பழம் ராஜாக்களுக்கு மரியாதை நிமித்தமாகவும், சம்ஹார தொழில் செய்யும் காவல் தெய்வங்களுக்கும் மிகவும் பிடித்தமானது. நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சாத்துவர். வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப்பெறுவர்.

வடை மாலை அணிவித்து தானம் செய்தால் செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை விசேஷம்.

அனுமனின் குரு

 விநாயகருக்கும், அனுமனுக்கும்  குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான்.

அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.