போர், பூகம்பம் சூறாவெளி, வெள்ளம் இவற்றின் அச்சங்களைப் போக்குபவள். காலரூபினி கரியநிறமுள்ளவள். காலரூபத்தில் நியதிக்கு அடங்கி வெளி உருவை அழிக்கும் பிராணசக்தி. தீயவர்களுக்கு அச்சம்தரும் விதமாக வாளும் துண்டித்த தலையும் கரத்தில் தாங்கி இருகைகள் அபயவரதத்துடன். நோய்களைத் தீர்ப்பவள்.
ஸ்ரீசக்ர அஷ்டகாளிகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமகாகாளி, ஸ்ரீகாளாராத்திரி, ஸ்ரீசர்வமயாமுண்டி, ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீசரசண்டிகை, ஸ்ரீபைரவி. .
ஸ்ரீதக்ஷிணகாளியின் தாத்பர்யம்- பரந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு கோரைப்பற்கள், கருத்த திருமேனியில் பருத்த தனங்கள், 51 கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட பல கரங்கள் கொண்டு புனையப்பட்ட சிற்றாடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறுகரத்தில் குருதி கொட்டும் அசுரனின் தலையுடன் சடலமாக தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன் இரு கால்களைப் பதித்து விசித்திர தரிசனம்.
இத் தோற்றத்திற்கான அற்புத தத்துவங்கள்- உயிர்கள் அவளிடமே தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவள் மாலையிலுள்ள கபாலங்கள் உணர்த்தும். மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் என்பதை உடைந்த கரங்கள் கொண்ட உடை அறிவிக்கும். ஆணவத்துடன் மனிதன் செய்யுமற்ப காரியங்களை காலக்கிரமத்தில் அவள் வெட்டி வீழ்த்துகின்றாள் என்பதை வலது மேற்கரத்திலுள்ள வாள் தெரிவிக்கும். இயற்கை நடை முறைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மனிதன் இறுதியில் தாயின் வாளுக்கு பலியாகி விடுவான் என்பதை வெட்டுண்ட சிரம் விவரிக்கும். காளியை ஆராதிப்பன் வீரனாக இருக்க வேண்டும். பயம் கொண்டவர்களுக்கு அவள் அருள் கிட்டாது. மரண ஸ்வரூபிணியான் அவள் அனுதினமும் சம்ஹாரத் தொழிலை செய்கின்றாள். என்பதை செந்நிற நாக்கு தெரிவிக்கும். காளின் கோரத்தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. ஆசை, காமம், வெகுளி எல்லாம் பஸ்பமாகும் இடமான சுடுகாடாக நம் மனம் மாற வேண்டும் என்பதை தாண்டவம் குறிக்கும்.
தாருகனை வதம் செய்த பின்னரும் காளின் கோபம் தணியாததால் உலக உயிர்களைக் காப்பாற்ற சிவனார் தரையில் சடலம்போல் படுத்திருக்க அவர் மார்பில் ஏறி ஊழிக்கூத்தாடினாள் காளி. உடன் சிவனார் கைக்குழைந்தையாக மாறி அழுக காளியின் கவனம் குழந்தைமீது திரும்ப தாய்ப்பாசம் பீறிட குழந்தையை வாரி எடுத்து ஸ்தன்ய பானம் கொடுத்தாள். குழந்தையான சிவன் காளியின் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தையும் சேர்த்து பாலாக உறிஞ்சி விடவே காளி சாந்தமடைந்தாள். இதனால் சிவனுக்கு சேத்திரபாலன் என்ற பெயர் உண்டானது. அப்போது அந்த கோபசக்தியினால் சிவனிடமிருந்து அஷ்டசேத்ரபாலர்கள் தோன்றினர்.
உக்கிரம் தனியத் தனிய அழகிய நங்கையானாள். அவளை மேலும் சாந்தப் படுத்த மகேசன் நர்த்தனம் புரிந்தார். அதனால் கவரப்பட்ட காளியும் நடனம் ஆடினாள். அன்று முதல் சந்தியா நேரத்தில் ஈசனும் காளியும் சந்தியா தாண்டவம் ஆடலானார்கள்
ஸ்ரீகாளியின் மூல மந்திரத்தால் யாகம் செய்தால் அதிதீயான தைரியம், வாக்குவன்மை, முன்கூட்டியே அறியும் தன்மை, நிலையான செல்வம், நோயற்ற வாழ்வு கிட்டும்.
கிராமங்களில் இந்த எழுவரையும் கன்னிமாராக 1.பட்டரிகா, 2.தேவகன்னிகா, 3.பத்ம கன்னிகா, 4.சிந்து கன்னிகா, 5.அகஜா கன்னிகா, 6.வன கன்னிகா, 7.சுமதி கன்னிகா எனப் போற்றி வழிபடுகின்றனர்
இரண்யன் வம்சத்தில் பிறந்த சும்பன், நிகம்பன் அசுரர்கள் பிரம்மனிடம் பெண்களைத்தவிர மற்ற எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் தேவியை சரணடைய நீராடிக்கொண்டிருந்த தேவி தன் உடம்பிலிருந்து ஒர் சக்தியை தோற்றுவித்து- கௌசிகி அனுப்பியதால் தேவி நீல நிறமானாள். சும்ப நிகம்பர்கள் தேவியைப் பற்றி உளவு பார்க்க அனுப்பியவர்கள் தேவியின் சேனைப் பற்றிச் சொல்லாமல் அவரின் அழகு பற்றிச் சொல்ல சுக்ரீவன் எனும் தூதுவன் மூலம் மணம் புரிய தூது விடுத்தனர். தேவி போரில் என்னை யார் வெல்லப் போகின்றார்களோ அவர்களையே தான் மணமுடிப்பதாகச் சொன்னார். தூம்ரலோசனன் என்ற சேனாபதி தேவியால் எரித்துக் கொல்லப்பட சண்டன் முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் வர அவர்களையும் சம்ஹரித்தாள் தேவி. அதனால் அன்னை அவளுக்கு சாமுண்டா எனப்பெயர் சூட்டினாள்.
தன் சேனாபதிகள் இறந்ததனால் சும்பன், நிகம்பன் இருவருமே சேனாபதி ரத்த பிந்துவுடன் போருக்கு வந்தனர். ரத்த பிந்து உடம்பிலிருந்து கீழே விழுந்த ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அசுரர்கள் தோன்றிவே அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா- அஷ்ட துர்க்கைகள்: 1.வசினி, 2.காமெசி, 3.மோதினி, 4.விமலா, 5.அருணா, 6.ஜயினி, 7.சர்வேஸ்வரி, 8.கௌலினி தோன்றினர்.
அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64 பேரைத் தோற்றுவித்தாள். எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டு பேரையும் தோற்றுவித்தாள். அஷ்டமாசித்தி பெற்ற அந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள். இந்த 64 பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒரு கோடி யோகினிகள். மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள் இரத்த பீஜனின் உடலிலிருந்து ரத்தம் கீழே சிந்தி உயிர் பெறுவதற்கு முன்பே இரத்தம் நிலத்தில் வீழாமல் குடிக்க ரத்தபீஜன், சும்பன், நிகம்பன் அசுரர்களை வதம் செய்தாள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள். சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.
துர்க்கா பூஜை ஆஸ்வின் மாதம்-புரட்டாசி கிருஷ்ணபட்சத்தில் நவமியன்று தொடங்கி பதினைந்து தினங்கள் பூஜை செய்து சுக்லபட்ச தசமியன்று நீரில் சேர்க்க வேண்டும். மிருக பலி யில்லாமல் செய்யும் பூஜை வைஷ்ணவி பூஜை-சாத்வீகபூஜை. விலங்குகளை பலிகொடுத்து செய்யும் பூஜை துர்கா பூஜை. பலிகளை சப்தமி, நவமி திதிகளில் செய்யலாம். அஷ்டமியில் செய்யக்கூடாது.
சிவபெருமானின் மனைவி என்பதால் சிவை. விஷ்ணுவின் அம்சம் வைஷ்ணவி/ விஷ்ணுவின் மாயை, நாராயணின் சக்தியைப் பெற்றிருப்பதால் நாராயணி. மேலும் இஷானி, சத்யை, நித்யை, சனாதனி, பகவதி, சர்வானி, சர்வமங்களா, கௌரி, பார்வதி, அம்பிகை என்று பல பெயர்கள் கொண்டவள்.
நரம்பின் அதிபதியான இவள் சினம் கொண்டாள் ஊரில் கலகம் உண்டாகும். தயிர் அபிஷேகம், அவல், சேமியா நிவேதனங்கள் படைத்து விநியோகம் நலன். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள்.
“ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.
துக்கங்களை போக்குவதால் துர்க்கா என்றழைக்கப்படும் துர்க்காவின் மற்ற திருநாமங்கள்!
வனதுர்க்கா-கொற்றவை. மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம்-காடு. தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பவள். - கதிராமங்கலம், தருமபுரம் (மயிலாடுதுறை)
சூலினிதுர்க்கா- சரபேஸ்வரின் இறக்கை ஒன்றில் இருப்பவள். சிவனின் உக்ரவடிவானவள். முத்தலை சூலத்தினை கையில் வைத்திருப்பதால் சூலினி துர்க்கா. - அம்பர்மாகாளம்
ஜாதவேதோ துர்க்கா- சிவனின் நெற்றிக் கண்னிலிருந்து உருவான தீப்பொறிகளை கங்கையில் சேர்த்ததால் ஜாதவேதோ எனப்பெயர்.
சாந்தி துர்க்கா- தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.
சபரி துர்க்கா- சிவன் வேடுவ உருவம் எடுத்தபோது வேடுவச்சி உருவம் எடுத்த பார்வதியார் சபரிதுர்க்கா.
ஜ்வால துர்க்கா-ஆதிபராசக்தி பாண்டாசுரன் போரில் எதிரிகள் அருகில் வராமல் இருக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தவள் இந்த ஜ்வாலாதுர்க்கா.
லவணதுர்க்கா- லவணாசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் வெற்றி கிடைக்க வழிபட்ட துர்க்கை லவண துர்க்கா
தீபதுர்க்கா -பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்ற அக இருளை நீக்கி மெய்ஞாசமான ஒளியை வழங்குவது தீபதுர்க்கா.
ஆசுரி துர்க்கா-பக்தர்களிடையே உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள். ஆசுரி துர்க்கா.
சப்த கன்னியர் -சப்த மங்கையர்-சப்த மாதர்
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை, சூலமங்கலம்- சூலமங்கை, நல்லிச்சேரி- நந்திமங்கை, பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.
அந்த தலங்களில் உள்ள அம்மன் பெண்களின் ஏழு பருவங்களையும் காட்சியாக ஒவ்வொரு தலத்தில் காசி தம்பதியினருக்கு அளித்துள்ளனர். சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும்.
சப்த கன்னியர், மங்கையர், மாதர் !
1. பிராம்மி- - பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சக்கரப்பள்ளி-சக்ரமங்கை- தேவாரப் பாடல் பெற்ற தலம். பிராம்மி வழிபட்டதால் சக்கரவாகீஸ்வரர் எனும் திருப்பெயருடன் மங்கை சேர்ந்து சக்கரமங்கை என அழைக்கப் படுகின்றது. இந்த அம்பிகை தேவநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவதான பேதைப் பருவ சிறுமியாக காட்சி. பிராம்மி-பிரம்மாவின் படைப்புக்கு துணை, அன்னவாகனம். நான்கு கரங்கள். குண்டம், அட்சயப் பாத்திரம், ஜெபமாலை, ஓமக் கரண்டி ஏந்தியிருப்பாள்.
2. மகேஸ்வரி-- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். ஹரிமங்கை- அரிமங்கை. நெல்லிவனமாக இருந்த இந்த இடத்தில் நெல்லிக்கனியை உண்டு சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி ஹரிமுக்தீசுவரரை வழிபட்டு மகாலட்சுமி, திருமாலை ஒருகாலும் பிரியா வரம் பெற்ற தலம். இந்த அம்பிகை ஞானம்பிகை, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் இரண்டாவதான பெதும்பை (பள்ளி) பருவ சிறுமியாக காட்சி. மகேஸ்வரி- ஈசனின் இடப்பக்கம் இருந்து தீமைகளை ஒழிப்பதில் உறுதுணை,
3. நாராயணி-(வைணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.
4. வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில்- பசுமங்கை. பசுபதி நாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதை அறிந்தாள் அம்பிகை. ஈசன்- பசுபதீஸ்வரர். பால்வளைநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி.
பரந்தாமனின் வராஹ வடிவுடன் இனைந்தவள், மேக நிறம். வராஹ-பன்றி முகம். கலப்பை, உலக்கை, வாள், கேடயம், சங்கு, சக்கரம், அபய வரத முத்திரையுடன் காட்சி தருபவள்.. காட்டுப்பன்றிகள் இழுக்கும் கிரி சக்ர ரதம் இவரது வாகனம். எப்பொழுதும் அம்பிகையை விட்டு நீங்காமல் இருக்கும் இரு சக்திகள் சியாமளா என்கிற மந்த்ரிணி, மற்றும் வாராஹி என்கிற தண்டினி ஆவர். இராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி. பயம் நீக்கி ஜயம் அருள்பவள். குற்றம் புரிந்தோரை தண்டிப்பதில் திட சித்தமும் தீர்க்கமான அறிவும், தீரமும், வீர்யமும் கொண்டவள். ‘வீர்யவதி” பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானவள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். காசி நகரை இரவில் உலாவந்து காப்பவள் வராஹியே!
ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப் படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
காட்சி தலம்: திருமால்பூர் அருகில் உள்ள பள்ளூர், தஞ்சை பெரிய கோவில் அக்னிதிசையில். காசியில்.
வராஹி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபட அருள். எலும்பிற்கு அதிதேவதையான வராஹி கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். பொதுவாக வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்.
“ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”
5. இந்திராணி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –தாழமங்கை. தட்சன் சாபத்தால் தேய்ந்த சந்திரன் வழிபட்டத்தலம். தாழம் புதரில் தோன்றியவர் சந்திரமௌளீச்வரர். இந்த அம்பிகை ராஜராஜேஸ்வரி,, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் காட்சி. இந்திராணி -இந்திரனுக்கு உதவி, ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.
விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள். சதியின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டாள் அம்மை நோய் பெருகும். வேப்பிலையால் விசிறி சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் நலம்.
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”
6. கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சூலமங்கலம்- சூலமங்கை- சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றார். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி. கௌமாரி-முருகனின் சக்தி, வாகனம் மயில். இரண்டு கைகள் ஒன்றில் ஈட்டி ஏந்தியிருப்பாள்.
7. சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.
இந்த சப்தகன்னியர் -சப்த மங்கையர்-சப்தமாதர் ஏழு பேரும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று கூடி செல்லியம்மனாக பக்தர்களின் துயர் நீக்கி அருள்புரிய அருள் புரிந்தார் ஈசன்,
காளியின் பிரமஹத்தி!
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது.-அப்பர் மாகாளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக