திங்கள், 18 நவம்பர், 2019

பத்ரகாளி சபை!

போர், பூகம்பம் சூறாவெளி, வெள்ளம் இவற்றின் அச்சங்களைப் போக்குபவள். காலரூபினி கரியநிறமுள்ளவள். காலரூபத்தில் நியதிக்கு அடங்கி வெளி உருவை அழிக்கும் பிராணசக்தி. தீயவர்களுக்கு அச்சம்தரும் விதமாக வாளும் துண்டித்த தலையும் கரத்தில் தாங்கி இருகைகள் அபயவரதத்துடன். நோய்களைத் தீர்ப்பவள். 

ஸ்ரீசக்ர அஷ்டகாளிகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீபத்ரகாளி, ஸ்ரீமகாகாளி, ஸ்ரீகாளாராத்திரி, ஸ்ரீசர்வமயாமுண்டி, ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீசரசண்டிகை, ஸ்ரீபைரவி. .

ஸ்ரீதக்ஷிணகாளியின் தாத்பர்யம்- பரந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு கோரைப்பற்கள், கருத்த திருமேனியில் பருத்த தனங்கள், 51 கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட பல கரங்கள் கொண்டு புனையப்பட்ட சிற்றாடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறுகரத்தில் குருதி கொட்டும் அசுரனின் தலையுடன் சடலமாக தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன் இரு கால்களைப் பதித்து விசித்திர தரிசனம்.

இத் தோற்றத்திற்கான அற்புத தத்துவங்கள்- உயிர்கள் அவளிடமே தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவள் மாலையிலுள்ள கபாலங்கள் உணர்த்தும். மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் அவள் என்பதை உடைந்த கரங்கள் கொண்ட உடை அறிவிக்கும். ஆணவத்துடன் மனிதன் செய்யுமற்ப காரியங்களை காலக்கிரமத்தில் அவள் வெட்டி வீழ்த்துகின்றாள் என்பதை வலது மேற்கரத்திலுள்ள வாள் தெரிவிக்கும். இயற்கை நடை முறைகளுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மனிதன் இறுதியில் தாயின் வாளுக்கு பலியாகி விடுவான் என்பதை வெட்டுண்ட சிரம் விவரிக்கும். காளியை ஆராதிப்பன் வீரனாக இருக்க வேண்டும். பயம் கொண்டவர்களுக்கு அவள் அருள் கிட்டாது. மரண ஸ்வரூபிணியான் அவள் அனுதினமும் சம்ஹாரத் தொழிலை செய்கின்றாள். என்பதை செந்நிற நாக்கு தெரிவிக்கும். காளின் கோரத்தாண்டவம் ஆடும் இடம் சுடுகாடு. ஆசை, காமம், வெகுளி எல்லாம் பஸ்பமாகும் இடமான சுடுகாடாக நம் மனம் மாற வேண்டும் என்பதை தாண்டவம் குறிக்கும்.

தாருகனை வதம் செய்த பின்னரும் காளின் கோபம் தணியாததால் உலக உயிர்களைக் காப்பாற்ற சிவனார் தரையில் சடலம்போல் படுத்திருக்க அவர் மார்பில் ஏறி ஊழிக்கூத்தாடினாள் காளி. உடன் சிவனார் கைக்குழைந்தையாக மாறி அழுக காளியின் கவனம் குழந்தைமீது திரும்ப தாய்ப்பாசம் பீறிட குழந்தையை வாரி எடுத்து ஸ்தன்ய பானம் கொடுத்தாள். குழந்தையான சிவன் காளியின் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தையும் சேர்த்து பாலாக உறிஞ்சி விடவே காளி சாந்தமடைந்தாள். இதனால் சிவனுக்கு சேத்திரபாலன் என்ற பெயர் உண்டானது. அப்போது அந்த கோபசக்தியினால் சிவனிடமிருந்து அஷ்டசேத்ரபாலர்கள் தோன்றினர்.

உக்கிரம் தனியத் தனிய அழகிய நங்கையானாள். அவளை மேலும் சாந்தப் படுத்த மகேசன் நர்த்தனம் புரிந்தார். அதனால் கவரப்பட்ட காளியும் நடனம் ஆடினாள். அன்று முதல் சந்தியா நேரத்தில் ஈசனும் காளியும் சந்தியா தாண்டவம் ஆடலானார்கள்

ஸ்ரீகாளியின் மூல மந்திரத்தால் யாகம் செய்தால் அதிதீயான தைரியம், வாக்குவன்மை, முன்கூட்டியே அறியும் தன்மை, நிலையான செல்வம், நோயற்ற வாழ்வு கிட்டும்.

கிராமங்களில் இந்த எழுவரையும் கன்னிமாராக 1.பட்டரிகா, 2.தேவகன்னிகா, 3.பத்ம கன்னிகா, 4.சிந்து கன்னிகா, 5.அகஜா கன்னிகா, 6.வன கன்னிகா, 7.சுமதி கன்னிகா எனப் போற்றி வழிபடுகின்றனர்

இரண்யன் வம்சத்தில் பிறந்த சும்பன், நிகம்பன் அசுரர்கள் பிரம்மனிடம் பெண்களைத்தவிர மற்ற எவராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று பெற்ற வரத்தினால் ஆணவம் கொண்டு அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் தேவியை சரணடைய நீராடிக்கொண்டிருந்த தேவி தன் உடம்பிலிருந்து ஒர் சக்தியை தோற்றுவித்து- கௌசிகி அனுப்பியதால் தேவி நீல நிறமானாள். சும்ப நிகம்பர்கள் தேவியைப் பற்றி உளவு பார்க்க அனுப்பியவர்கள் தேவியின் சேனைப் பற்றிச் சொல்லாமல் அவரின் அழகு பற்றிச் சொல்ல சுக்ரீவன் எனும் தூதுவன் மூலம் மணம் புரிய தூது விடுத்தனர். தேவி போரில் என்னை யார் வெல்லப் போகின்றார்களோ அவர்களையே தான் மணமுடிப்பதாகச் சொன்னார். தூம்ரலோசனன் என்ற சேனாபதி தேவியால் எரித்துக் கொல்லப்பட சண்டன் முண்டன் என்ற இரு சேனாதிபதிகள் வர அவர்களையும் சம்ஹரித்தாள் தேவி. அதனால் அன்னை அவளுக்கு சாமுண்டா எனப்பெயர் சூட்டினாள்.

தன் சேனாபதிகள் இறந்ததனால் சும்பன், நிகம்பன் இருவருமே சேனாபதி ரத்த பிந்துவுடன் போருக்கு வந்தனர். ரத்த பிந்து உடம்பிலிருந்து கீழே விழுந்த ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அசுரர்கள் தோன்றிவே அன்னையிடமிருந்து அஷ்ட மாத்ருகா- அஷ்ட துர்க்கைகள்: 1.வசினி, 2.காமெசி, 3.மோதினி, 4.விமலா, 5.அருணா, 6.ஜயினி, 7.சர்வேஸ்வரி, 8.கௌலினி தோன்றினர்.

அன்னையின் உடம்பின் ஒவ்வொரு பாகத்திலிருந்து 64 பேரைத் தோற்றுவித்தாள். எட்டு பேராக பிரித்து அவர்களுக்கு ஒரு தலைவியாக இந்த எட்டு பேரையும் தோற்றுவித்தாள். அஷ்டமாசித்தி பெற்ற அந்த தெய்வங்கள் ஒவ்வொரு தலைவிக்கும் தங்கள் திவ்ய சக்திகளை வழங்கினார்கள். இந்த 64 பேரும் யோகினிகள் எனப்பட்டனர். ஒவ்வொரு யோகினிக்குள்ளும் ஒரு கோடி யோகினிகள். மொத்தம் 64 கோடி யோகினிகள். இவர்கள் இரத்த பீஜனின் உடலிலிருந்து ரத்தம் கீழே சிந்தி உயிர் பெறுவதற்கு முன்பே இரத்தம் நிலத்தில் வீழாமல் குடிக்க ரத்தபீஜன், சும்பன், நிகம்பன் அசுரர்களை வதம் செய்தாள். இவர்கள் உலக இயக்கங்களுக்கு காரணமாகிறார்கள். சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டின் முக்கிய பரிவாரங்கள் இந்த யோகினிகள்தாம்.

துர்க்கா பூஜை ஆஸ்வின் மாதம்-புரட்டாசி கிருஷ்ணபட்சத்தில் நவமியன்று தொடங்கி பதினைந்து தினங்கள் பூஜை செய்து சுக்லபட்ச தசமியன்று நீரில் சேர்க்க வேண்டும். மிருக பலி யில்லாமல் செய்யும் பூஜை வைஷ்ணவி பூஜை-சாத்வீகபூஜை. விலங்குகளை பலிகொடுத்து செய்யும் பூஜை துர்கா பூஜை. பலிகளை சப்தமி, நவமி திதிகளில் செய்யலாம். அஷ்டமியில் செய்யக்கூடாது.

சிவபெருமானின் மனைவி என்பதால் சிவை. விஷ்ணுவின் அம்சம் வைஷ்ணவி/ விஷ்ணுவின் மாயை, நாராயணின் சக்தியைப் பெற்றிருப்பதால் நாராயணி. மேலும் இஷானி, சத்யை, நித்யை, சனாதனி, பகவதி, சர்வானி, சர்வமங்களா, கௌரி, பார்வதி, அம்பிகை என்று பல பெயர்கள் கொண்டவள்.

நரம்பின் அதிபதியான இவள் சினம் கொண்டாள் ஊரில் கலகம் உண்டாகும். தயிர் அபிஷேகம், அவல், சேமியா நிவேதனங்கள் படைத்து விநியோகம் நலன். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ, சாமுண்டா ப்ரசோதயாத்.

துக்கங்களை போக்குவதால் துர்க்கா என்றழைக்கப்படும் துர்க்காவின் மற்ற திருநாமங்கள்!
வனதுர்க்கா-கொற்றவை. மகாவித்யாவே வனதுர்க்கையாவாள். வனம்-காடு. தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய காட்டிலிருந்து காப்பவள். - கதிராமங்கலம், தருமபுரம் (மயிலாடுதுறை)

சூலினிதுர்க்கா- சரபேஸ்வரின் இறக்கை ஒன்றில் இருப்பவள். சிவனின் உக்ரவடிவானவள். முத்தலை சூலத்தினை கையில் வைத்திருப்பதால் சூலினி துர்க்கா. - அம்பர்மாகாளம்

ஜாதவேதோ துர்க்கா- சிவனின் நெற்றிக் கண்னிலிருந்து உருவான தீப்பொறிகளை கங்கையில் சேர்த்ததால் ஜாதவேதோ எனப்பெயர்.

சாந்தி துர்க்கா- தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவ வழி செய்பவள்.

சபரி துர்க்கா- சிவன் வேடுவ உருவம் எடுத்தபோது வேடுவச்சி உருவம் எடுத்த பார்வதியார் சபரிதுர்க்கா.

ஜ்வால துர்க்கா-ஆதிபராசக்தி பாண்டாசுரன் போரில் எதிரிகள் அருகில் வராமல் இருக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தவள் இந்த ஜ்வாலாதுர்க்கா.

லவணதுர்க்கா- லவணாசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் வெற்றி கிடைக்க வழிபட்ட துர்க்கை லவண துர்க்கா

தீபதுர்க்கா -பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்ற அக இருளை நீக்கி மெய்ஞாசமான ஒளியை வழங்குவது தீபதுர்க்கா.

ஆசுரி துர்க்கா-பக்தர்களிடையே உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்பவள். ஆசுரி துர்க்கா.


சப்த கன்னியர் -சப்த மங்கையர்-சப்த மாதர்
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை, சூலமங்கலம்- சூலமங்கை, நல்லிச்சேரி- நந்திமங்கை, பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.

அந்த தலங்களில் உள்ள அம்மன் பெண்களின் ஏழு பருவங்களையும் காட்சியாக ஒவ்வொரு தலத்தில் காசி தம்பதியினருக்கு அளித்துள்ளனர். சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும்.

சப்த கன்னியர், மங்கையர், மாதர் !

1. பிராம்மி- - பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சக்கரப்பள்ளி-சக்ரமங்கை- தேவாரப் பாடல் பெற்ற தலம். பிராம்மி வழிபட்டதால் சக்கரவாகீஸ்வரர் எனும் திருப்பெயருடன் மங்கை சேர்ந்து சக்கரமங்கை என அழைக்கப் படுகின்றது. இந்த அம்பிகை தேவநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவதான பேதைப் பருவ சிறுமியாக காட்சி. பிராம்மி-பிரம்மாவின் படைப்புக்கு துணை, அன்னவாகனம். நான்கு கரங்கள். குண்டம், அட்சயப் பாத்திரம், ஜெபமாலை, ஓமக் கரண்டி ஏந்தியிருப்பாள்.

2. மகேஸ்வரி-- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். ஹரிமங்கை- அரிமங்கை. நெல்லிவனமாக இருந்த இந்த இடத்தில் நெல்லிக்கனியை உண்டு சத்ய கங்கை தீர்த்தத்தில் நீராடி ஹரிமுக்தீசுவரரை வழிபட்டு மகாலட்சுமி, திருமாலை ஒருகாலும் பிரியா வரம் பெற்ற தலம். இந்த அம்பிகை ஞானம்பிகை, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் இரண்டாவதான பெதும்பை (பள்ளி) பருவ சிறுமியாக காட்சி. மகேஸ்வரி- ஈசனின் இடப்பக்கம் இருந்து தீமைகளை ஒழிப்பதில் உறுதுணை,

3. நாராயணி-(வைணவிதேவி) பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். நல்லிச்சேரி- நந்திமங்கை. நந்திகேசுவரர் ஈசனை பூஜித்து நடராஜர் பாத தரிசனம் கண்ட தலம். ஈசன் ஜம்புகேஸ்வரர். இந்த அம்பிகை அலங்காரவல்லி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் நான்காவதான கன்னிகை வடிவில் காட்சி. நாராயணி-அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவி.

4. வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில்- பசுமங்கை. பசுபதி நாதரின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு அதிலிருந்து பிரபஞ்சங்கள் உற்பத்தி ஆவதை அறிந்தாள் அம்பிகை. ஈசன்- பசுபதீஸ்வரர். பால்வளைநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி.

பரந்தாமனின் வராஹ வடிவுடன் இனைந்தவள், மேக நிறம். வராஹ-பன்றி முகம். கலப்பை, உலக்கை, வாள், கேடயம், சங்கு, சக்கரம், அபய வரத முத்திரையுடன் காட்சி தருபவள்.. காட்டுப்பன்றிகள் இழுக்கும் கிரி சக்ர ரதம் இவரது வாகனம். எப்பொழுதும் அம்பிகையை விட்டு நீங்காமல் இருக்கும் இரு சக்திகள் சியாமளா என்கிற மந்த்ரிணி, மற்றும் வாராஹி என்கிற தண்டினி ஆவர். இராஜராஜேஸ்வரியின் சேனாநாயகி. பயம் நீக்கி ஜயம் அருள்பவள். குற்றம் புரிந்தோரை தண்டிப்பதில் திட சித்தமும் தீர்க்கமான அறிவும், தீரமும், வீர்யமும் கொண்டவள். ‘வீர்யவதி” பிரளயத்தின்போது பூமியை வெளிக்கொணர விஷ்ணுவிற்கு துணையாகி பூமித்தாயானவள். நம் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்தியில் உறைபவள். காசி நகரை இரவில் உலாவந்து காப்பவள் வராஹியே!

ஆஷாட நவராத்திரி வராஹிக்கு உரியதாகப் கருதப் படுவதால் ஆனிமாத அமாவாசை முதல் ஒன்பதுநாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

காட்சி தலம்: திருமால்பூர் அருகில் உள்ள பள்ளூர், தஞ்சை பெரிய கோவில் அக்னிதிசையில். காசியில்.

வராஹி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபட அருள். எலும்பிற்கு அதிதேவதையான வராஹி கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். பொதுவாக வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்.

“ஓம் சியாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்”

5. இந்திராணி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –தாழமங்கை. தட்சன் சாபத்தால் தேய்ந்த சந்திரன் வழிபட்டத்தலம். தாழம் புதரில் தோன்றியவர் சந்திரமௌளீச்வரர். இந்த அம்பிகை ராஜராஜேஸ்வரி,, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் காட்சி. இந்திராணி -இந்திரனுக்கு உதவி, ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.

விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள். சதியின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டாள் அம்மை நோய் பெருகும். வேப்பிலையால் விசிறி சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் நலம்.
‘ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்”

6. கௌமாரி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். சூலமங்கலம்- சூலமங்கை- சூலதேவர் இங்குள்ள கிருத்திவாஸேஸ்வரிடம் எப்போதும் காவல் காக்கும் வரம் பெற்றார். இந்த அம்பிகை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் மூன்றாவதான மங்கை பருவத்தினளாக காட்சி. கௌமாரி-முருகனின் சக்தி, வாகனம் மயில். இரண்டு கைகள் ஒன்றில் ஈட்டி ஏந்தியிருப்பாள்.

7. சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.

இந்த சப்தகன்னியர் -சப்த மங்கையர்-சப்தமாதர் ஏழு பேரும் தனித்தனியாகவோ அல்லது ஒன்று கூடி செல்லியம்மனாக பக்தர்களின் துயர் நீக்கி அருள்புரிய அருள் புரிந்தார் ஈசன்,

காளியின் பிரமஹத்தி!
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது.-அப்பர் மாகாளம்

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்!

ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.

பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?

ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.

இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.

அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.

அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்

அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.

சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.

குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்

1. கந்த தைலம் - இன்பம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி - அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி
8. பால் - ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் - முக்தி
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23. பன்னீர் - குளிர்ச்சி தரும்
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்

ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனை அடையலாம்.

 

 

அபிஷேக நீரின் மகிமைகள்!

தமிழ்நாட்டில் இன்றைக்கு இருக்கின்ற கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களில் தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்; பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;

சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;

இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)

ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;

ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;

நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!

இன்று விளம்பி வருடம்,வைகாசி மாதம்,பவுர்ணமி திதி, அனுஷம் நட்சத்திரம் இருக்கின்றது;இந்த அனுஷம் நட்சத்திரம் நேற்று இரவு 12.02 முதல் இன்று இரவு 1.38 வரை இருக்கின்றது;எனவே,இன்று கோவிலில் அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடிக்க வேண்டும்;இன்று எப்போது பிடித்தாலும் இன்று இரவு 1.38க்குள் பயன்படுத்தினால் மட்டுமே அதற்குரிய தெய்வீகப் பலனை அது தரும்;

பரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;

வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்;ஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;

இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;

அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;

பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;

கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;

ரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;

மிருகசீரிடம்:பேய்/கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;

திருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;

புனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;

பூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;

ஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;

மகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;

பூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;

உத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;

அஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;

சித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;

சுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;

விசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;

அனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;

கேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;

மூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;

பூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;

உத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;

திருவோணம்;உணவுப்பஞ்சம் வராது;

அவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;

சதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;

பூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;

உத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;

ரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;

குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;

உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;

இது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;

கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்.

 நன்றி:  ஆன்மீக களஞ்சியம்.

 

 

 

 

 

புதன், 6 நவம்பர், 2019

கேட்டதை கொடுக்கும் தன தாரை!

கேட்டதை கொடுக்கும் தான தாரை!

சம்பத்து நட்சத்திரம் என்பது  ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வது நட்சத்திரம்!

உதாரணமாக உத்திராடம் என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரம் என்றால் திருவோணம், ரோகிணி, ஹஸ்தம் ஆகியவை தனம் தரும் நட்சத்திரம். 

அந்த நட்சத்திரங்களின் அதிபதி  கிரகம் சந்திரன் ஆகும்.  ஒவ்வொரு நாளும் சந்திர ஹோரையில் வழிபாடு செய்ய அபரிமித செல்வம் பெருகும்.  இதுவே தன ஓரை குறிப்பாக வெள்ளி கிழமையில் வழிபட வேண்டும்.

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!

சம்பத்து நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வது நட்சத்திரம்
பரம மித்தர நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 9, 18, 27 வது நட்சத்திரம்
சாதக நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 6, 15, 24 வது நட்சத்திரம்

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!


பொருளாதார வளர்ச்சிக்கு தனம் எனும் பணவரவு மிக மிக முக்கியம். இந்த தன ஸ்தானத்தைக் குறிப்பிடும் இடம் இரண்டாமிடம்!
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த ஸ்தானமே தன ஸ்தானம் ஆகும்.

இந்த தன ஸ்தானம் பாப கர்த்தாரியாக இருந்தாலும், தன ஸ்தானத்தின் அதிபதி பாபகர்த்தாரியாக இருந்தாலும், பண வரவில் தடைகளும், தாமதமும் ஏற்படும். அப்படியே பணம் நிறைவாக வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாமல் ஏதாவதொரு செலவு வந்து பணத்தைக் கரைக்கும். இது பலருக்கும் உள்ள பிரச்சினை.
என்ன செய்தால் தன வரவை அதிகரிக்கச் செய்யலாம்? வந்த செல்வத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

பாபகர்த்தாரியாகவே இருந்தாலும், நாம் சில விஷயங்களை கவனித்து முறைப்படுத்திக் கொண்டாலே செல்வ வளத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதோ... இந்த நட்சத்திரத் தகவலை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் படி செயல்படுங்கள். பணமும் வந்து கொண்டே இருக்கும். சொத்துக்களும் சேரும்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திரம் வரும் நாட்களிலும், அந்த நட்சத்திரத்தின் அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம நட்சத்திர நாளிலும், உங்களுக்கு பணம் வரும் விஷயங்கள் எதுவானாலும் முழுமையான வெற்றியைத் தரும்.

''என்னாங்க சார், ஏதோ அனு ஜன்மம், திரி ஜென்மம்னு சொல்றீங்க? எதுவுமே புரியலீங்களே?'' என்று ஒரு சிலர் சொல்லலாம்.
அதற்காகத்தான் அட்டவணை.. இதோ!

உங்கள் நட்சத்திரம் அஸ்வினி என்றால் ,
டுத்த அதாவது இரண்டாவது நட்சத்திரம் "பரணி."
இந்த பரணியின் அனு ஜென்ம நட்சத்திரம் "பூரம்" நட்சத்திரம்.
திரி ஜென்ம நட்சத்திரம் "பூராடம்."
ஆக இந்த பரணி பூரம் பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரக்கார்ர்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

மேலும் இந்த பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரத்திற்கான அதிதேவதையை வணங்கிவந்தால், இன்னும் செல்வ வளம் பெருகும்.

பணம் பல வழியிலும் வரும். செல்வவளம் குறையாமல் பார்த்துக்கொள்ளும். மன நிறைவான வாழ்க்கையைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் வைத்துக்கொள்ளும்.

இனி மற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை? அதன் அதன் அதிதேவதை யார் என்பதை பார்ப்போம்.


அஸ்வினி :-
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)

பரணி :- கார்த்திகை (அக்னி) உத்திரம் (சூரியன்), உத்திராடம்( கணபதி),

கார்த்திகை :- ரோகிணி (பிரம்மா), அஸ்தம்: (சாஸ்தா),திருவோணம்(விஷ்ணு),

ரோகிணி :- மிருகசீரிடம்(சந்திரன்), சித்திரை(விஷ்வகர்மா), அவிட்டம்(அஷ்டவசுக்கள்)

மிருகசீரிடம் :- திருவாதிரை(நடராஜர்),சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்),


திருவாதிரை :- புனர்பூசம்(அதிதி), விசாகம்(முருகர்), பூரட்டாதி(குபேரன்),

புனர்பூசம் :- பூசம்(குரு), அனுசம்(லட்சுமி), உத்திரட்டாதி(காமதேனு)

பூசம் :- ஆயில்யம்(ஆதிசேஷன்), கேட்டை(இந்திரன்),ரேவதி(சனி)

ஆயில்யம் :- மகம்(பித்ருக்கள்,சுக்ரன்), மூலம்(நிருதி வாயு) அஸ்வினி(சரஸ்வதி)

மகம் :- பூரம்( பார்வதி) பூராடம்( வருணன்), பரணி(துர்கை)

பூரம் :- உத்திரம் ( சூரியன்), உத்திராடம் ( கணபதி), கார்த்திகை
(அக்னி)

உத்திரம் :- அஸ்தம் (சாஸ்தா), திருவோணம்( விஷ்ணு),ரோகிணி
(பிரம்மா),

அஸ்தம் :- சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்ட வசுக்கள்),
மிருகசீரிடம் (சந்திரன்),

சித்திரை :- சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்), திருவாதிரை(நடராஜர்),

சுவாதி :- விசாகம் (முருகர்), பூரட்டாதி (குபேரன்),புனர்பூசம் (அதிதி)

விசாகம் :- அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு),

அனுசம் :- கேட்டை (இந்திரன்), ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),

கேட்டை :- மூலம் (நிருதி), அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்),

மூலம் :- பூராடம் (வருணன்), பரணி (துர்கை),பூரம் (பார்வதி),

பூராடம் :- உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்),

உத்திராடம் :- திருவோணம் (விஷ்ணு), ரோகிணி (பிரம்மா), அஸ்தம்( சாஸ்தா),

திருவோணம் :- அவிட்டம் (அஷ்டவசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா),

அவிட்டம் :- சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு),

சதயம் :- பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி),விசாகம் (முருகர்),

பூரட்டாதி :- உத்திரட்டாதி (காமதேனு),பூசம் (குரு), அனுசம் (லட்சுமி),

உத்திரட்டாதி :- ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),கேட்டை (இந்திரன்),

ரேவதி :- அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்), மூலம் (நிருதி)

இப்படி இந்த சம்பத்து நட்சத்திரங்களையும், அதன் அதிதேவதைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தலங்களில் வழிபாடுகள் செய்து வந்து, தன வரவையும், சேமிப்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.