புதன், 29 மார்ச், 2017

மங்களம் அருளும் பங்குனி உத்திரம்!


பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும்.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.  திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும்.  

உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.


புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 




சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். 


ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான்.


ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். 


மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.


மோகினிசுதன் ஐயப்பன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். 

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். 


அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 


கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. 

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. 


இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். 


காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், 


மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. 

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. 


அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. 


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். 

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். 


கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில், 

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர் 
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம். 


மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில்  பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. 


பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான். 

ஸ்ரீ ராம நவமி!


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' 

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். 
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், 

பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...!
ஸஹஸ்ர நாமதத் துல்யம் ராம நாம வராநநே

ஒரு சமயம் பார்வதி அதி விசேஷமான மந்திரத்தை தமக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டாளாம். சிவபெருமான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பார்வதிக்கு உபதேசித்தார்.

ஒரு சமயம் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பினார்கள். பார்வதியால் முழு பூஜையைச் செய்ய இயலவில்லை. மேற்கூறிய ``ஸ்ரீ ராம ராமேதி'' என்ற மந்திரத்தை மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டாளாம்.

இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் கூட விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பூஜித்த பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை :

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். 

வீடுகளில் பாயசம், வடை அத்துடன் நீர் மோர், பானகம், பயத்தம் பருப்பை ஊற வைத்து அதில் வெள்ளரிக்காய், மாங்காய் போட்டுக் கலந்து கடுகு தாளித்து விநியோகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள்!



நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை

ஐஸ்வர்யம் அருளும் சங்கு!

சங்கு பொதுவாகவே லக்ஷ்மியின் அம்சத்தை தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக கூறுவார்கள்.

இறை வழிபாட்டில்  சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும் .


சாதாரணமாக உள்ள சங்கில் ...
அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது .இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது . இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.

பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஊதுவதால் மூலாதார சக்கரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது .மேலும் மூச்சு சீராகவும் ,நுரையீரல் செயல் பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது . சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுப்படுகிறது இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகிறது.

ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார்.

சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, ஐஸ்வர்யம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.


அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம். 


 

15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வங்களும்!

 சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி

சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பகமாலினி

சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும்
அதிதேவதை சித்ரா!







 

ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் - தமிழில்!

அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே. 1


நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே. 2
 
அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும். 3
 
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே. 4
 
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே. 5
 
மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் செளலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா. 6
 
விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே. 7
 
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே. 8
 
சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால். 9
 
சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம். 10
 
வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம் 11
 
பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம் 12
 
தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம் 13
 
மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம் 14
 
சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம் 15
 
தாமரைக் கண்கள் படைத்த தாயே செளபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய் 16
 
கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி 17
 
கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே 18
 
தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே 19
 
கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே 20
 
மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே. 21
 
 
 
 

குபேர சம்பத்து அருளும் சங்கு ஸ்தாபண பூஜை!

பணத்தைக் கொட்டி வீடு கட்டினேன் நிம்மதி இல்லை என்று புலம்புவர்களுக்கும் இனி வீடு கட்டப்போகிறவர்கள் குபேர சம்பத்துடன் வாழ்வதற்கும் சங்கு ஸ்தாபன முறை முக்கியமான விஷயம்.

வீட்டில் ஆயாதநிலை பார்த்து ஓட்டு மொத்தப் பணிகளைச் செய்வதற்கு சங்கு ஸ்தாபணம் என்று சொல்வது வழக்கச்சொல். இவை தவிர சங்கு ஸ்தாபண பூஜை என்று ஒரு விதி இருக்கிறது.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலம் அல்லது சுப தினங்களில் வாசற்படி அருகே கலச பூஜையில் வாஸ்து பகவானை வழிபட்டு அதன் எதிரெ வடக்கு(அ) கிழக்கு முகமாக அரிசியில் வலம்புரிசங்கு ஒன்றை வைத்து அதற்கு உபசாரங்கள் செய்து.

தபினீ கலா முதல்... பூர்ணா கலா வரை 18 கலைகளை சங்கீன் மேல் வர்ணித்து நிலைவாசம் மேல் மையக்குறியீடு செய்து அதில் சங்கு அளவு பார்த்து சுழிமுனை உள்ளே வரும்படி பிரதிட்டை செய்தல் வேண்டும் சங்கினுள் நவரத்திம் பஞ்ச லோகம், லட்சுமிகாசு வைத்து ஆலய குடமுக்கில் யாகத்தில் இட்ட காசு ஒன்றையும் வைத்து இரண்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும். 


நவதான்யம்,பூமிகிழங்கு, பூமிசமூலம் என்ற கலவை ஆகிய வற்றால் நிலை வாசல் அருகே உட்பகுதியில் வாஸ்து கிருஹலட்சுமி மூல மந்திரத்தால் சிறிதளவு(ஹோமம்) யக்ஞ வழிபாடு செய்து விடல் வேண்டும். சங்கு ஸ்தாபனம் பூஜை செய்து வலம்புரிச்சங்கு பதித்து பிரதிட்டா பணம் செய்யும் வீட்டில் பொருளாதார வசதி, ஏற்பட்டு பணம் காசுகள் சேர்ந்து கொண்டிருக்கும் குபேர சம்பத்துக்குக் குறைவு இருக்காது.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லிம் வாஸ்து க்ரஹ லக்ஷ்ம்யை
குபேர ஸகாயை, ஐஸ்வர்ய நிலயாயை, சௌபாக்ய கராயை
க்ரஹ பீடா கரணாயை  ஸ்ரீம் க்லீம் சுவாகா!


என்ற மூலமந்திரத்தால் அரசங்குச்சி நவதான்யத்தால் ஹோமம் செய்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் வாஸ்து தேவியே போற்றி
ஓம் கிருஹ லட்சுமியே போற்றி
ஓம்வளமூலமே போற்றி
ஓம்யோக சக்தியே போற்றி
ஓம் இல்லத்தின் செழிப்பேபோற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் கலசம் ஏந்திய தேவி  போற்றி
ஓம் கற்பக விருட்சம் போற்றி
ஓம் சங்கு மூலமே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் தானியத் திருமகனே போற்றி
ஓம் கலைகள் உடையோய்  போற்றி
வாஸ்து கிருஹ லட்சுமியே போற்றி! போற்றி !