சனி, 22 அக்டோபர், 2016

மும்பை தஹானு மகாலக்ஷ்மி!



விஷ்ணு ஆலயங்களில் மகாலக்ஷ்மி தாயாராக தனி சந்நிதியிலும், சிவாலயங்களில் பிரகாரச் சுற்றில் கஜலக்ஷ்மியாகவும் காட்சி தரும் மகாலக்ஷ்மிக்கு பிரதானமான ஆலயங்களும் உண்டு. மும்பை மகாலட்சுமி, கோலாப்பூர் மகாலட்சுமி,திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார், நாமக்கல் நாமகிரி தாயார் சந்நிதிகள் தனிச்சிறப்பு கொண்டவை.
 
அது போன்று மும்பை தஹானுவில் அமைந்துள்ள மகாலக்ஷ்மி ஆலயம் தனிச்சிறப்பும்,  சக்தியும் கொண்டு விளங்குகிறது.
 
 
மகாராக்ஷ்டிராவின் மிக முக்கியமான சக்தி ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் தஹானுவில் தேவி கோயில் கொண்ட வரலாற்றைக் காண்போம். கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தன்னை இடையறாது வணங்கி செல்வந்தராக விளங்கும் குஜராத்தி மக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, தான் குஜராத்தில் சென்று கோயில் கொள்ள ஆசைப்பட்டாள். அவள் நடந்து சென்ற இடமெல்லாம்  செழுமை பெற்றுக் குலுங்கியது!

ங்கு வாழ்ந்த அரக்கன் ஒருவன் மகாலக்ஷ்மியுடன் யுத்தம் செய்தான். தேவிக்கும் அரக்கனுக்கும் மகாபயங்கரமான போர் நடைபெற்றது. தேவியின் கோபத்தில் கானகமே ஸ்தம்பித்தது. மகாலக்ஷ்மியின் ஆயுதம் அரக்கனின் கண்களை எரித்தும், அவன் இறக்காமல் முழு வீரியத்துடன் போர் புரிந்தான். தேவி தன் திரிசூலத்தால் அவனைக் கொன்றாள். 

அசுரனைக் கொன்ற களைப்புதீர மகாலக்ஷ்மி அந்த மலையில் அமர்ந்தாள். அம்மலையின் இயற்கைக் காட்சிகளின் அழகிலும், செழிப்பிலும் மனம் மயங்கியவள் அங்கேயே கோயில் கொண்டாள். தன் அருளை மக்களுக்கு வாரி வழங்க மனம் கொண்ட தேவி, கன்னா டாக்கூர் என்பவர் கனவில் தான் மலைமீது இருப்பதை சொல்லி பூஜை செய்யும்படி ஆணையிட்டாள்.
 





சமீபத்திய ஆலயம் கீழேயே உள்ளது. தேவி கீழே கோயில் கொண்டது ஏன்? 



மலைமீது தேவியைத் தரிசிக்கச் சென்ற கர்ப்பிணி ஏறமுடியாமல் மயங்கி விழ, தேவி தான் கீழே இருப்பதாக அருள் செய்தாள். சுயம்புவாகத் தோன்றி அவளுக்கு தரிசனமும் தந்தாள். அவ்வாலயமே இன்று அனைவரும் வழிபடும் ஆலயம்.


தேவி முதலில் சாந்நித்யம் கொண்ட மலை 1400 அடி உயரம். அங்குதான் தேவியின் சந்நிதியும் உள்ளது. அங்கு யாரும் செல்ல மிடியாது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பெளர்ணமியன்று 'துவஜ ஸ்தாபனம்' மலைக் கோயிலில் நடைபெறுகிறது. ஆதிவாசிகளே இவ்வாலயத்தில் பூஜை செய்ய தகுதி உடையவர்கள்.

அக்குடும்பத்தில் ஒருவரே மிக்க நியம நிஷ்டையுடன் இருந்து இரவு பனிரெண்டு மணிக்குக் கொடியையும், மகாலக்ஷ்மியின் மடியை நிறைக்க பனிரெண்டு தேங்காய்கள், தாம்பூலம் இவற்றுடன் மேலே ஏறிச்செல்வார். அந்நாளில் தேவி அங்கு சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அவருள் தேவியே ஆட்கொண்டு விடுவதாக சொல்லப்படுகிறது. மேலே சென்று தேவிக்குப் பூஜை செய்து விட்டு, கொடியும் நட்டு விட்டு, அங்கு தேவி ரூபமாக காட்சி தரும் புலியையும் தரிசித்து காலை ஏழு மணிக்குக் கீழே வந்து விடுவர்.

அதைத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் 'யாத்ரா உத்சவம்' மிக விமரிசையாக நடைபெறுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அச்சமயம் இங்கு வழிபட வருகின்றனர்.

 

 
இனி தேவியைத் தரிசிப்போம். ஓங்கி உயர்ந்த இரு தீபத்தம்பங்களை தரிசித்து, ஆலயத்துள் நுழைவோம். அலங்கார வளைவுகளுடன் பளிச்சென்று காணப்படும் முன் மண்டபத்தை தாண்டிச் சென்றால் தேவியின் கர்ப்ப க்ருஹம். தேவியின் ஜாஜ்வல்லியமான முகதரிசனம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. இரு யானைகள் தாங்கும் தூண்களுடன் கலை நயம் மிக்க மண்டபத்துள், தேவியின் இருபுறமும் துவாரபாலகர் நின்று காட்சி தருகின்றனர்.

 

சிரத்தில் ஜொலிக்கும் தங்க கிரீடத்துடன், மூக்கில் மீன் போன்ற மூக்குத்தி அணிந்து, கருணை பொங்கும் நயனங்களுடன் பூ மாலைகள் அழகு செய்ய காட்சி தருகிறாள் அன்னை மகாலக்ஷ்மி. நேரில் நிற்கும்போது தேவியின் விரிந்து பரந்த கண்கள் நம்மையே பார்ப்பது போல் தோன்றுகிறது!



நாம் சுமங்கலிகளுக்கும், சுவாசினிகளுக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தருவோம். ஆனால் மராட்டியப் பெண்களோ தெய்வங்களுக்கே 'வோட்டிபரி' (மடியை நிரப்புதல்) செய்வார்கள். புடவைத் தலைப்பால் மூடியபடி மஞ்சளையும், குங்குமத்தையும் தேவி மால் தெளித்து தாம்பூலம், பழம், தேங்காயை தேவியின் மடியில் சமர்ப்பிப்பார்கள். பக்தியும், பணிவும் கொண்டு தேவியை தம் குடும்பப் பெண்போல் பாவிக்கும் மராட்டியப் பெண்களிடம் தேவி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறாள்.
 

தேவி மிகவும் சக்தியுள்ள தெய்வம் என்றும், இவளிடம் எது நினைத்தாலும் நிமிடத்தில் நிறைவேறும் என்றும் ஆலயத்திலுள்ளோர் சொன்னார்கள். தேவியின் பரிபூரண சாந்நித்தியத்தை நன்கு உணர முடிந்தது. இங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் விழாக்கோலம் கொண்டு, அற்புதமான அலங்காரத்தில் அன்னை காட்சி தருவாள். அஷ்டமி நாட்களில் மிக விசே ஷமான வழிபாடுகள் உண்டு.

தஹானு மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில் மும்பையிலிருந்து 124 கி.மீ திலைவில் உள்ளது. தஹானுவிலுள்ள 'சாரோட்டி நாகா' என்ற இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு வரை தரிசனம் உண்டு. மும்பை செல்வோர் அனைவரும் தரிசிக்க வேண்டிய அழகிய ஆலயம் தஹானு மகாலக்ஷ்மி ஆலயம்.




 
 

மும்பை நகரின் பட்டத்து ராணி மும்பாதேவி!


இன்றைய மும்பை நகரின் வளமைக்கும், பெருமைக்கும் காரணமாய் நின்று அந்நகர வாசிகளைக் காத்து நிற்கும் தேவியர் இருவர். ஒன்று அன்னை மஹாலக்ஷ்மி. இன்னொன்று அன்னை மும்பாதேவி.



மும்பாதேவியின் பெயராலேயே அந்நகரம் மும்பை ஆயிற்று. மீனவ மக்களின் குலதெய்வமான மும்பாதேவியின் ஆலயம் மும்பையின் முக்கிய வியாபாரத் தலமான பூலேஷ்வர் பகுதியில் அமைந்துள்ளது.



அங்கு அருளாட்சி செய்யும் அன்னையின் ஆலயம் சிறிதானாலும், அனுதினம் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் மகிமை பெற்றது. அன்னை மும்பாதேவி பார்வதி தேவியின் அவதாரம் எனப் போற்றப்படுகிறாள். மும்பை இவ்வளவு செல்வச் செழிப்போடு இருப்பதற்குக் காரணம் இவளே என்பது மும்பை வாசிகளின் நம்பிக்கை. 






இவ்வாலயம் தோன்றியதற்கான புராணக் கதை இது. பல்லாண்டுகளுக்கு முன் ‘மும்பாரக்’ என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாக அவன் முன் தோன்றிய பிரம்மா, அவன் கேட்டபடி எப்பொழுதும் இறவாத வரம் கொடுக்க, அதைப் பெற்ற ஆணவத்தால் தேவர்களையும், பூவுலக மக்களையும் கொடுமைப்படுத்த, அனைவரும் மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர்.


 
மகாவிஷ்ணு, சிவபெருமான் இருவரின் அம்சமாக எட்டு கரங்கள் கொண்ட சக்தி தேவியை அவனுடன் போரிட்டு, அழிக்க அனுப்பினார், ஸ்ரீமந் நாராயணர். வெகு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போரின் இறுதியில் மும்பாரக்கின் மரணம் நெருங்கிய நேரம், மும்பாரக், தேவியை வணங்கி ஒரு வரம் வேண்டினான். தேவி அவனுடைய பெயரையே கொண்டு, அவ்விடத்திலேயே கோயில் கொண்டு, தீயோரை அழித்து, நல்லோரை வாழவைக்க வேண்டினான். அதனாலேயே தேவிக்கு ‘மும்பாரக் தேவி’ என்று பெயர். நாளடைவில் ‘மும்பா தேவி’யாகக் குறுகிவிட்டது.



600 ஆண்டுகளுக்கு முன் கடலோர மீனவர்களின் குல தெய்வமாக விளங்கிய தெய்வத்திற்கு, ‘முங்காதேவி’ என்ற மீனவப் பெண் அளவற்ற பக்தியால் தன் பெயரையே அன்னைக்கு வைத்து பூஜித்து வந்ததால், முங்காதேவி என்றழைக்கப்பட்டு நாளடைவில் ‘மும்பாதேவி’யாகி விட்டதாகவும் ஒரு கதை உண்டு.

மும்பாதேவியின் முகம் மட்டுமே பெரிதாகக் காட்சி தரும். அலங்கார ஆடையுடன், சிரத்தில் வெற்றி கிரீடம், மூக்கில் பெரிய மூக்குத்தி, கழுத்தில் அழகான நெக்லஸ், எட்டு கரங்களில் விதவிதமான ஆயுதங்களோடு, கருணை பொங்கும் அழகு விழிகளோடு காட்சி தரும் அன்னையின் தரிசனம் கண்களை நிறைக்கிறது. நினைத்ததை நிறைவேற்றும் மும்பாதேவியின் சன்னிதிக்கு இடப்புறம், சிம்ம வாகனத்தில் ஸ்ரீஜகதம்பா என்ற பெயரில் துர்கா தேவியும், மயில் வாகனத்தில் ஸ்ரீஅன்னபூரணியும் அருள் பாலிக்கிறார்கள்.

 
ஆலயத்திற்கு வெளியே கணபதி, சந்தோஷிமா, அனுமன், சிவபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதி உள்ளன. தினமும் இரண்டு வேளை ஆர்த்தி நடைபெறும். இங்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு தினமும் ஒரு அலங்காரம், தினம் ஒரு வாகனம். திங்களன்று சிவபெருமானுக்குகந்த நந்தி  வாகனம், வெள்ளியன்று மகாலட்சுமிக்கான அன்ன வாகனம், நவராத்திரி முழுவதும் அம்மனின் தரிசனத்திற்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

 
வேண்டியோர்க்கு வேண்டும் வரம் தந்து, வளமான வாழ்வை அருளும் மும்பை நகரின் பட்டத்து ராணியாய் விளங்கும் மும்பாதேவி இந்நகரின் முதல் தெய்வம், இவ்வூரைக் காத்து நிற்கும் காவல் தெய்வம், அனைவரின் கண் கண்ட தெய்வமும் கூட!



 

ஆயுள் பலம் தரும் உஜ்ஜீவன நாதர்!

சமயக் குறவர் முதல் மூவரால்  பாடப்பெற்ற தலங்கள் 274. அவற்றுள் 67வது தேவாரத்தலமாக விளங்குவது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லவ மன்னன் நந்திவர்மனால் கட்டப்பட்ட, நூறடி உயரத்தில் மிகப் பெரிய மதில் சுவர்களுடன், அழகிய கருங்கல் மலையின் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான உய்யக் கொண்டான் திருமலை சிவாலயம். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ உஜ்ஜீவநாதர்.

மார்க்கண்டேயனை எமனின் பிடியிலிருந்து காப்பாற்றி அருள் செய்தவர். உயிர்களை உய்யக்கொள்வதற்கு எழுந்தருளியபடியால் உய்யக் கொண்டான் திருமலை எனப் பெயர் பெற்றது இத்தலம். நூறு அடி உயர மலையில் எண்பது படிகளுடன் கல்லினால் கட்டப்பட்ட ஆலயத்தில் குடியிருப்பதாலும், இத்தலப் பாறைகள் களவு போனபோது பெருமான் கல்லின் சாரத்தைக் குடித்து விட்டதாலும் இம்மலைக்கு திருக்கற்குடி என்ற பெயரும் உண்டு. பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயில் இயற்கை வளமிக்க, குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மூர்த்தி,தலம், தீர்த்தம் இவற்றில் சிறந்த  தலமாக விளங்குகிறது. ஐந்து பிரகாரங்களும், மூன்று வாயில்களும், ஐந்து தீர்த்தங்களும் கொண்டு   ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக  ஆலயம் நம்மை பரவசப் படுத்துகிறது.


உய்யக்கொண்டான் திருமலை


வலிமையான மதில்களுடன் ஒரு கோட்டை போல விளங்கும் இவ்வாலயம்  18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும், மைசூர்க்காரரும் தங்கும் யுத்த அரணாக விளங்குகியது.   ராணுவ வீரர்கள்  தங்கவும், பகைவர் நெருங்கியபோது தப்பிச் செல்லும் இடமாகவும் இருந்தது. இவ்வாலய சுற்றுச் சுவர்களிலும், தூண்கள், தளவரிசைகள் மற்றும்  கோபுர வாயில்களிலும் பல  தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. 
 
இங்கு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் கொண்டது எவ்வாறு? மார்க்கண்டேயருக்கு பதினைந்து வயதானபோது , தாய், தந்தையர் தன்னைப் பற்றிக் கவலைப் படுவது கண்டு காரணம் கேட்டு அறிந்து, ' தான் ஈசனின் அருளால் சிரஞ்சீவியாவேன்' என்று காசி முதல் தெற்கு நோக்கி எல்லா தலங்களுக்கும் சென்று வழிபட்டபோது, இத்தலம் வந்து பொன்னொளி ஓடையில் நீராடி இறைவனை தரிசிக்க மலை மீது சென்றார்.அம்மலையைச் சுற்றிலும் பல முனிவர்கள் அருந்தவம்  செய்வது கண்ட மார்க்கண்டேயர் அங்கிருந்த உபமன்யு  முனிவரையும், நாரதரையும் கண்டு இறைவனை பூசிக்கும் முறை அறிந்து, இறைவனை நோக்கி தவம் புரிந்தார். பக்தனுகிறங்கிய பகவான் உமையுடன் கருவறையிலிருந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாக வாழ வரம் அருளினார். அதன் பொருட்டே திருக்கடையூரில் பாசக்கயிறு வீசிய எமனை அழித்து மார்க்கண்டேயரை ஆட்கொண்டார்.மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவத்துக்கு வரம் பெற்ற இடம் இத்தலம்.
 

உஜ்ஜீவன நாதர்


இதனைக் காண நெடுநாளாய் தவம் புரிந்த ரிஷிகள் 'தமக்கு உலகின் நியம நெறியை அனுக்கிரகிக்க வேண்டும்' எனக்கூற, ஈசனும்தெற்கு முகமாய் எழுந்தருளி, அதனை எடுத்துக் கூறி மறைந்தருளினார். எவருக்கும் யமபயம் இல்லாதிருக்கும் பொருட்டு தெற்கில் கொடிமரமும்,ஈசனின் திருப்பாதுகை கொடிமரத்தின் அருகிலும் விளங்குகின்றன. மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்ததன் அடையாளமாக  லிங்கத்தின் சிரத்தில் இரு சிறிய குழிகள் உள்ளன.  ஆலயத்தின் ஆலயத்தின் தலமரம் வில்வம். இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் ஐந்து. அவை பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு. மூன்றாம் பிரகாரத்திலுள்ள நாற்கோணக் கிணற்று நீரே ஆலய இறைவனின் அபிஷேகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
படிகளில் ஏறிச் செல்லும்போது வல்லப கணபதியை வணங்கிச்  செல்வோம்.  ஓம் வடிவில் அமைந்துள்ள மலைக்கோவிலில் இறைவன் உஜ்ஜீவநாதர் சுயம்பு மூர்த்தியாக  ஆவுடையுடன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவித்துவம் அளித்துக் காத்த உய்யக்கொண்ட நாயனார் சிரத்தில் ஐந்துதலை நாகக் குடையுடன்  அழகிய அலங்காரத்தில் அற்புதக் காட்சி அளிக்கிறார்.என்னை முழுதும் நம்பி வந்து தரிசித்தவர்களுக்கு சிரஞ்சீவித்துவமும் முக்தியும் உறுதி என்று அருளும் கற்பக நாதரிடம் நாமும் மனக்குறைகளைக் களைந்து, முக்தியை   வேண்டுவோம்.மார்க்கண்டேயருக்கு உயிர்வரம் தந்த நாள் ஆடி பௌர்ணமி என்பதால் அன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். ஒவ்வொரு பௌர்ணமியன்றும்  ஈசனுக்கு தேன் , பால் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். வேண்டுவார் வேண்டுவதை அளிக்கவல்ல எம்பெருமான் இவ்வூரில் வசிப்போருக்கு நீண்ட ஆயுள், செல்ச்வம், பிள்ளைப்பேறு அனைத்தும் தரவல்லவராம். இத்தல ஈசனை சஷ்டி அப்த பூர்த்திக்கு முன்பாக ஐம்பத்தொன்பதாம் வயதில் வழிபட்டால், எந்த உடல்நலக் கோளாறும் இல்லாமல் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பாக நடப்பதுடன் தம்பதிகள் நீண்ட நாள் வாழலாம்.

மை தீட்டிய அழகிய கண்களைக் கொண்ட அஞ்சனாட்சி தேவி அலங்கார ரூபமாய் காட்சி தருகிறாள்.நான்கு கரங்களுடன், அபயவர ஹஸ்தங்களுடன்  நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகை தொழுதவரை அஞ்சேல் என்று ஆறுதலும், அபயமும் அளித்துக் காக்க வல்லவளாம். தை மாதத்தில் ஒரு நாள் இறைவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி படுவதோடு, அது முதல் 90 நாட்களுக்கு ஒரு முறையாக வருடத்தில்  நான்கு முறை சூரிய பூஜை நடைபெறும்.
அஞ்சனாட்சி அம்மன்
இவர்களுக்கு இடையில் தரிசனம் தரும் பாலாம்பிகை  குழந்தைகளின் பாலாரிஷ்டம் போக்கும் அபூர்வ சக்தி கொண்டவளாம். இவ்வன்னையின் இடது கரத்திருந்த  பூவின் ஒரு இதழ் உடைபட்டதால், அவளை அப்புறப் படுத்த முயன்றபோது, கோயில் அதிகாரியின் கனவில் தோன்றிய அம்மை தன்னை அப்புறப் படுத்த வேண்டாம் என்றதால் அவ்வம்மனும் அங்கு காட்சி தருகிறாள்.நான்கு கரங்களுடன் அழகுக் காட்சிதரும் அன்னை பெண்களுக்கு திருமணவரம், மற்றும் பிள்ளை பாக்கியம் தர வல்லவளாம். இவ்வன்னையின் அருளால் அவ்வூரில் குழந்தைகளின் பாலாரிஷ்டம் எனும் நோய்க்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் முடிகயிறு போடப்படுகிறது. 
 
பாலாம்பிகை
சாரமா முனிவரால் பட்டம் சூட்டப்பட்ட மன்னனுக்கு இங்கு ஆனந்த தாண்டவக் காட்சி அருளினாராம் எம்பெருமான். பாதம் மட்டுமே பிடிமானமாகக் கொண்டு காட்சி தரும் நடராஜா மிக விசேஷமாக திருவாதிரை நாட்களில் கொண்டாடப் படுகிறார்.

வள்ளி, தேவசேனாவுடன் காட்சி தரும் ஆறுமுகத்தானை அருணகிரிநாதர் 'திருப்புகழ் பாடும் அறிவைக்கொடு' என்று பாடி சிறப்பித்துள்ளார்.வைகாசி விசாகத்தில் புறப்பாடு, கந்தசஷ்டியில் திருமணம், கார்த்திகை உற்சவம் என்று இந்த கந்தக் கடவுளுக்கு பல விழாக்கள் தவறாது நடக்கும்.

தைப்பூசநாளில் உற்சவரான  சந்திரசேகரர் அம்மையுடன் அருகிலுள்ள சோமரசம்பேட்டைக்கு  எழுந்தருளுவார். அங்கு வயலூர் முருகப்பெருமானும் எழுந்தருள, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிரகாரத்தில் நால்வர், கஜலக்ஷ்மி,  நவக்கிரகம்,பைரவர்,சனீஸ்வரர், சூரியன்,ஜேஷ்டாதேவிக்கு சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள ஜேஷ்டாதேவியின் சிலை வித்யாசமாக உள்ளது.அவளது இரு கைகளிலும் இரண்டு குழந்தைகளைத் தாங்கியவாறு அமைந்துள்ள இவளை வணங்குவதால் விபத்துக்கள் ஏற்படாமல் காப்பாற்றுவாள்.நவாவர்ணத்தில் இரண்டாவது ஆவரண தேவதையான ஜேஷ்டாதேவி இங்கு ஆதிபராசக்தி ரூபமாக விளங்குவதாகக் கூறுகிறார்கள்.பிரயாணங்களின்போது இந்த தேவியை  வழிபட்டுச் சென்றால் விபத்துகள் ஏற்படாது என்கிறார்கள்.இந்த ஜேஷ்டா தேவிக்கு புது வஸ்திரம் வாங்கி சாற்றுவது இங்கு சிறப்பான வழிபாடாகும்.

திருஞான சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற இத்தலத்தை,கரன், உபமன்யு முனிவர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.கரன் வழிபட்ட ஆளுடையார் கோயில் மேற்கிலும், இரண்டாம் பிரகாரத்தில் இடர் தீர்த்தார்  கோயிலும், நான்காம் பிரகாரத்தில் சண்முகர் கோயிலும் சுற்றுக் கோயில்களாக அமைந்துள்ளன.மகாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ்வாலயம் பற்றி கற்குடி மாமலை மாலை என்ற 100 பாடல்களை எழுதியுள்ளார்.

இவ்வாலயத்தில் இரண்டு கால பூஜைகளும், பங்குனியில் பிரம்மோற்சவமும், மாத கார்த்திகைகள்,நவராத்திரி,தைப்பூசம், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள் மிக விசேஷமானவை.

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் 5 கி.மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது.
ஆலய நேரம்...காலை  6 - 9...மாலை 5 - 9
தொலைபேசி..திரு சத்தியகீர்த்தி .குருக்கள்....94426 28044
ஆலயம்....04364 223 207...9443150332
 
 

குல தெய்வ வழிபாடு!

உங்கள் குல தெய்வத்தை நீங்கள் வசிக்கும வீட்டிற்குள் அழைக்க எளிய வழி உண்டு ;

மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி - இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் - இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைக்கவும்.
வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
கலசத்தில் உள்ளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.
 
பூஜைக்குறிய மந்திரம்:-
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்
ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்
ஈசாய நம
தினமும் 11 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள்.
 
 

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான ஸ்வாதி நட்சத்திரம் மர்மத்தைப் பார்ப்போம்!



நட்சத்திர அதிசயங்கள்!
 
அதிசயமே ஸ்வாதி!
 
27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஸ்வாதி போல முன்னேறுவேன்
 
சப்த ரிஷி  மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!

வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம்  சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை.

வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வான மண்டலத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் நவீன கால கிரிமால்டி கேடலாக்கில் எகிப்து தேசத்தினர் குரங்கு எனக் குறிப்பிடுவதை 29 எண்ணுடைய நட்சத்திரமாகவும் சீனர்கள் குரங்கு வடிவம் என குறிப்பிடுவதை 142,143 எண்ணுடைய நட்சத்திரங்களாகவும் இந்த கேடலாக்கில் காணலாம்!

ஸ்வாதி பவனோ
 
இந்த ஸ்வாதி நட்சத்திரம் சாதாரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி முடிய சூரியனுடன் இணைகிறது. அப்போது இந்தியாவில் பயங்கரமான சூறாவளியும் புயல் காற்றும் ஏற்படுவது வழக்கம்.ஒரிஸாவில் அக்டோபர்-நவம்பரில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளியை மக்கள் ஸ்வாதி பவனோ (ஸ்வாதிக் காற்று) என்றே குறிப்பிடுகின்றனர்.

ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம், ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல்  ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.

வான மாணிக்கம்
 
ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள்.  வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும். (தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்!

கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது.

அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.பைபிளும் ஆர்க்ட்ரஸை வெகுவாகப் புகழ்கிறது.இதன் குறுக்களவு பேராசிரியர் மிகல்சனால்19 கோடி மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும்!
 
திருவோண நட்சத்திரம் விஷ்ணு பதம் எனக் குறிப்பிடப் படுவதை முன்பே பார்த்தோம். அதன் அருகில் உள்ள மருத் தேவதைகளே ஸ்வாதியாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்கத்தில் அவனது பக்தனான ஹனுமான் அமைந்திருப்பது பொருத்தம் தானே!

மாத்வ சம்பிரதாயத்தில் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஹனுமனை சிறப்பாக வழிபடுவது மாத்வ சம்பிரதாயத்தில் இடம் பெறுகிறது, வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும் என்று அது கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

ஹனுமத் ஜெயந்தி என ஹனுமான் அவதரித்த தினத்தை இந்த நட்சத்திரத்தின் சஞ்சாரத்தை வைத்தே நிர்ணயிக்கின்றனர்!

சுவர்க்கத்தின் நுழைவாயில் என்றும் பிரபஞ்சத்தின் தலைநகரமான விஷ்ணுலோக வாயில் என்றும் போற்றப்படும் ஸ்வாதியையும் ஹனுமானையும் தொழுது அனைத்து நலன்களோடு விஷ்ணுவின் அருளையும் பெறலாம்!

 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

காரிய சித்தி மாலை!

நினைத்த காரியங்கள் நிறைந்த வெற்றி பெற, காஸ்யப முனிவர் அருளி, கச்சியப்பர் மொழி பெயர்த்த, காரிய சித்தி மாலையைப் பாராயணம் செய்தால், விநாயகப் பெருமான் அருளால், எண்ணிய யாவையும் திண்ணமாக நடக்கக் காணலாம்.
 
மூன்று தினங்கள், மூன்று சந்தி வேளைகளிலும், (காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி) பக்தியுடன் பாராயணம் செய்ய, நினைத்த காரியங்கள் நடப்பது உறுதி என நூற்பயன் கூறுகிறது.
 
பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
 
உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
 
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
 
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
 
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
 
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
 
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
 
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
-----------------------------------------------------

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.
 
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.
 
 

முருகனின் 16 வகை திரு கோலங்கள் !!!

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.
சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.


6.சரவணபவர்: தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது

8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி: `தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிïர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
 
16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.
 
அதி சூட்சும சண்முக மந்திரம்!
 
ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய
ஷண்முகாய மகாத்மனே

ஸ்ர்வ சத்ரு ஸம்ஹார காரணாய
குஹாய மஹா பல பராக்ரமாய

வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய  பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
 
இதை அனுதினமும் முருகன் படத்தின் முன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் உபதேசிக்கப்படும் மந்திரமாகும்.