புதன், 29 மார்ச், 2017

முத்தைத் தரு (திருப்புகழின்) பொருள் விளக்கம்!

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன், அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன். மு, ரு, க,  எனும் அழகன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.


எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால்  இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம்!



                                       நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                           தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

 
 
 
 

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் தமிழில்!

1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி  திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

 15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

 
 
 

அஷ்டலட்சுமிகள் பிரபாவம்!

ஸ்ரீ மகாலட்சுமி தேவி அஷ்டலட்சுமிகள் என்ற வகையில் எண்வகைப் பெரு வடிவங்கள் கொண்டும் தம்மை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சகல விதமான வாழ்க்கை வளங்களையும் அள்ளி அள்ளித் தந்து ஜொலிக்கிறாள். அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீ ஆதி லட்சுமி    - அக அழகும், புற அழகும், கல்யாண வாழ்வும் தருபவள்.

2. ஸ்ரீ சந்தான லட்சுமி    - குழந்தைப் பேறு தருபவள்.

3. ஸ்ரீ வித்யா லட்சுமி    - கல்வியையும், கலைஞானங்களையும் கற்கச் செய்பவள்.

4. ஸ்ரீ தன லட்சுமி    - சகல செல்வங்களும் அள்ளித் தருபவள்.

5. ஸ்ரீ தான்ய லட்சுமி    - தானியங்கள் அனைத்தையும் செழிக்கச் செய்பவள்.

6. ஸ்ரீ கஜ லட்சுமி    - ராஜ போகமான வாழ்வளிப்பவள்.

7. ஸ்ரீ வீர லட்சுமி    - மனஉறுதியும், உடலுறுதியும், செயலாற்றலும் தருபவள்.

8. ஸ்ரீ விஜய லட்சுமி    - வெற்றிகளை அள்ளித்தருபவள்.

'திருவுந்தியார்' - பகை நீங்கி நலம் பெற!

விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம்.(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                        8-ம் திருமுறை
 
தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கியிருந்த காலத்தில் மகளிர் சிலர் கூடி, கைகள் இரண்டையும் மேலே தூக்கி இரு பக்கமும் நீட்டி, வானில் பறப்பது போல், இரு கைகளையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு பாடி ஆடும் ஓர் ஆட்டவகையான, திருவுந்தியார் விளையாடுதலைக் கண்டு அவர்கள் வாய் மொழியாக இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
 
'திருவுந்தியார்' எனப்படும் இந்த இருபது பாடல்களிலும், மும்மல காரியம் ஆகிய முப்புரங்களும் சிவபெருமானது பேராற்றலினால் அழிந்ததையும், தக்கன் யாகம் ஒழிந்ததையும், அதனால் சூரியன், இந்திரன் முதலிய தேவர்களின் அகங்காரம் ஒடுங்கியமையும் பற்றியே கூறப்பட்டுள்ளது.
 
இறைவரது வெற்றியைப் போற்றுவதால் நாமும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதில் ஐயமே வேண்டாம், பகைமை, விரோதம் யாவும் நீங்கி நலம் பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், மணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய இத்திருப்பதிகம் பெரிதும் உதவும்.
 
திருவாசகத்தின் பெருமைக்கு மாணிக்கவாசகர் கூற இறைவரே தம் திருக்கையால் எழுதிக் கொண்டார் என்ற வரலாறே சான்று.

திருச்சிற்றம்பலம்

1. வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.


சிவபெருமான் முப்புரங்களை அழிக்கத் திருவுளங்கொண்டார். உடனே பொன் மலையாகிய மேருமலை வில்லாக வளைந்து அவர்தம் திருக்கையினடத்து வந்து சேர்ந்தது. உடனே போர் நிகழ்ந்தது. முப்புரங்களும் வருந்தின எனப்பாடி உந்திப் பறந்து விளையாடுவோமாக. அவை ஒன்று சேர எரிந்தன என்று பாடி ஆடுவோமாக.

2. ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஏகம்பர் எனப்படுவார். அவர் திருக்கரத்தில் இரண்டு அம்புகள் காணப்படவில்லை. உள்ளது திருமாலாகிய ஓரம்பேயாகும். அந்த ஓர் அம்பும் அவருக்குப் பயன்படவில்லை. எதிர்த்து நின்ற கோட்டைகள் மூன்றாயினும் அவன் நகை செய்து எரித்தமையால் அவ்வோர் அம்பும் வேண்டாத ஒன்றாயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

3. தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்;
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

தேவர்கள் தச்சுத் தொழிலால் அமைத்தத் தேரினைக் கொண்டு வந்து சிவபெருமான் முன் நிறுத்தினர். தேவர்களின் வேண்டுகோளின்படி அத்தேரில் சிவபெருமான் அடியெடுத்து வைத்தான். உடன் அத்தேரின் அச்சு முறிந்தது. ஆனாலும் திரிபுரம் அழிந்தன என்று சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

4. உய்யவல் லாரொரு மூவரைக் காவல்
கொண்டுஎய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் சிவபக்தியில் ஈடுபட்டனர். திரிபுரம் எரிந்த போது அவர்கள் பிழைக்கும்படி இறைவன் அவர்களைக் காத்து, அவர்களை கயிலைக்குத் துவார பாலகர்களாகச் செய்து ஏனையோரை அம்பால் அழித்தொழித்தான். அத்தகைய வல்லமை யுடையவன் இளமை மாறாத தனங்களையுடைய அருளம்மையின் பாகன் என்று கூறி பாடி ஆடுவோமாக.

5. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.

வீரபத்திரர் தாக்கிய போது, தக்கனது யாகம் அழியவே, தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடிய விதத்தினைப் பாடுவீர். அத்தகைய உருத்திரனாகிய தலைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

6. ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

பிரமதேவனுக்குத் தநதையாகிய திருமால் தக்கன் யாகத்தின் அவியுணவைக் கொண்டான். அந்நாளில் வீரபத்திரக் கடவுளால் தாக்கப்பட்டு உயிர் ஒன்றை மட்டும் உடையவனாய் இருந்தான். அதனைக் கூறி உந்தி பறப்பாயாக!

7. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டியகையைத்
தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

விருப்புடன் அக்கினி தேவன், அவியை உண்ணும் பொருட்டு ஒன்று சேர்த்த கையை வீரபத்திரர் வெட்டினார். யாகம் நிலைகுலைந்து போயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறப்பாயாக!

8. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்;
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

உமையம்மை தனது மகள்தானே என்றும், அரனின் மனைவிதானே என்றும் இகழ்ந்து பேசின தக்கனை நாம் பெருமை யுடையவனாக நினைப்பது கூடாது என்று பாடுக. பருத்த தனங்களையுடைய உமாதேவி பங்கனாகிய சிவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

9. புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரம்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்;றே உந்தீபற.

தேவேந்திரன், யாகத்தை அழித்த வீரபத்திரருக்கு அஞ்சி, ஒரு அழகிய குயிலின் வடிவம் எடுத்து ஒரு மரத்தின் மேல் ஏறினான் என்று பாடுக. அவன் தேவர்களின் தலைவன் என்று உந்தி பறப்பாயாக.

10. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தெடர்ந்து பிறப்பற உந்தீபற.

கொடிய கோபத்துக்கு ஆளாகிய தக்கன் வேள்வியில் யாக குருவாகிய வியத்திரனது தலை வெட்டுப் பட்டதைப் பாடி உந்தி விளையாடுக. நம்மைத் தொடர்ந்து பற்றி வருகின்ற நம் பிறப்பு நீங்கும்படி பாடி உந்தி பறப்பாயாக.

11. ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

யாகத்திற்குப் பலிகொடுத்து எஞ்சி நின்ற அறிவில்லாத ஆட்டினுடைய தலையைத் தக்கனுக்குத் தலையாகப் பொருத்திய விதத்தினைப் பாடி, நம் தனங்கள் நினறசைய உந்தி பறப்பாயாக.

12. உண்ணப் புகுந்த பகன்ஒளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற.

தக்கன் யாகத்தில் அவிர் பாகத்தை உண்ண வந்த 'பவன்' என்பவன் வீரபத்திரரைக் கண்டு ஒளித்து ஓடாத வண்ணம் அவனுடைய கண்களைப் பிடுங்கிய விதத்தை எல்லோருடைய பிறவியும் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

13. நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

தக்கன் வேள்வியில் கலைமகள் மூக்கறு படவும், பிரமன் தலை அறுபடவும், அவற்றோடு சந்திரன் முகத்தைத் தேய்த்துக் அழித்ததையும் பாடுவீர். நம் பழவினைகள் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

14. நான்மறை யோனும் மகத்திய
மான்படப்போம்வழி தேடுமா ருந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

தக்கனது யாகத்தில், பிரம தேவனும், யாகத்திற்குத் தலைவனாகிய தக்கனும் அழிய, இந்திரன் தப்பி ஓடும் வழியைத் தேடித் தவித்த விதத்தைப் பாடி உந்தி பறப்பாயாக.

15. சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

சூரியனுடைய கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயில் உள்ள பற்களைத் தகர்த்து உதிர்த்த விதத்தைப் பாடி ஆடுக. அதனால் யாகமானது கலக்கமடைந்தது என்று சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

16. தக்கனா ரன்றே தலையிழந் தார்
தக்கன்மக்களை சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

தக்கனுடைய மக்கள் அவனைச் சூழ்ந்திருந்தும் அவனைக் காக்க முடியாமல் போனதால் தக்கன் தன் தலையை இழந்து விட்டான். யாகமும் அழிந்தது. இதனைச் சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

17. பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

அக்காலத்தில் பால் வேண்டிய வியாக்ரபாத முனிவரின் பாலனாகிய உபமன்யுவுக்கு திருப்பாற் கடலையே வரவழைத்துக் கொடுத்தருளியவன். அழகிய சடையுடையவனும், முருகப் பெருமானின் தந்தையானவனும் ஆகிய அவ்விறைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

18. நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம தேவனுடைய ஐந்து தலைகளுள் ஒரு தலை விரைவாக சிவபெருமானுடைய நகத்தால் கிள்ளப்பட்டதென்று பாடி உந்தி பறப்பாயாக.

19. தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

இராவணன் தனது திக்கு விசயத்தின் போது தேரைச் செலுத்தினான். எதிர்ப்பட்ட கயிலை மலையை நகர்த்தத் தன் தேரை நிறுத்தி விட்டு அதனைப் பெயர்த்தெடுத்தான். அப்போது அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் இறைவனால் நெரிந்தது. அவ்வாறு நெரிந்த விதத்தினைப் பாடி உந்தி பறப்பாயாக.

20. ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

மேலாடை அணிந்து வானிலே செல்லும் முனிவர்கள் சூரிய வெப்பத்தால் அழிந்து போகாமல் அவர்களைக் காக்கின்றவன் நம் இறைவன் என்றும், ஆகாயத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் அவனே காக்கின்றான் என்றும் பாடி உந்தி பறப்பாயாக.
 
 
 
 
 
 
 
 

ஸ்ரீசுக்தம் தமிழில்!

ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும்.

ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவன் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரகுணமுடையவள். இவள் "ஈம்'' என் பீஜாசரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை உபாசிப்பவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற அலட்சுமி அடையமாட்டாள். தரிச்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர். இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம்.

இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள்.

இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள். இந்த ஸ்ரீசுக்தத்தை தினமும் ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும்.

அஷ்ட லக்ஷ்மீ தியான சுலோகம்!

1 தன லட்சுமி

 யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

 

செல்வம் பெருக சில விஷயங்கள்!

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.