செவ்வாய், 27 செப்டம்பர், 2016

அற்புத வாழ்வருளும் அக்னி துர்க்கை!



அக்னி துர்க்கை த்யானம்!

ஜ்வாலாமாலா வலீடாஜ்வலநசாதனு: சங்க சக்ராஸிகேடான்
சூலம் ஸ்ந்தக் ஜநீம்பா கர ஸரஸிருஹை: ஸந்ததானா த்ரிநேத்ரா:
ஔர்வாக்னீம் ஸங்கிரந்தீ ரணபுவிதிதீஜான் நாசயந்தீ பராஸா
துர்க்கா ஜாஜ்வல்யமானா பவது மம ஸதா ஸிம்ஹஸம்ஸ்தா புரஸ்தாத்:


அக்னி துர்க்கை காயத்ரி!

ஓம் அக்னி துர்க்காயை வித்மஹே
ஸிம்ம வாஹின்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.


அக்னி எனும் நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையே, ஜாதவேதோ எனும் அக்னி துர்க்கை. இத்தேவியின் புகழை, துர்க்கா ஸூக்தம் பல இடங்களில் போற்றுகிறது; செந்தீ நிறத்தினள். தனது ஒளியால் பகைவர்களை அழிப்பவள். தன்னை வணங்கும் பக்தர்களின் ஆபத்துகளை போக்குபவள். சிங்கத்தின் மீது ஆரோகணித்திருப்பவள். கேடயம் ஏந்திய தோழியரால் வணங்கப்படுபவள். எட்டு கரங்கள் கொண்ட தேவி இவள். இத்தேவியே இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, சிம்மாரூடையாய் தோற்றமளிக்கும்போது, கந்த துர்க்கா தேவி எனவும் போற்றப்படுகிறாள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அக்னி இல்லாமல் யாக, யக்ஞங்கள் நடைபெறவே முடியாது. அதன் வடிவாக விளங்குபவள் இந்த அம்பிகை. கிராம தேவதைகளான மாரியம்மன், பிடாரி போன்றோரின் தலையில் கொழுந்து விட்டு எரியும் அக்னி ஜ்வாலையைக் காணலாம். இது, அவர்கள் அக்னி துர்க்கையின் அம்சம் கொண்டவர்கள் என்பதை எடுத்துணர்த்தவே.
இத்தேவி அம்பிகையின் முகத்திலிருந்து தோன்றியவள்.

ஒரு நொடியில் உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் சக்தி கொண்டவள். தேவியின் திருவருளைப் பெற விழையும் ஒவ்வொரு பக்தரும் இந்த அம்பிகையையே சரணடைகின்றனர். தேவரும் முனிவரும் இவளை நாடியே அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். இத்தேவி பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்கு பயத்தையும் தருபவள்.

யோகத்தில் இருந்த ஈசனின் யோகத்தைக் கலைக்க தேவர்களின் தூண்டுதலால் மன்மதன் மலரம்புகளை ஈசன் மீது தொடுத்தான். தேவியின் பதியாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய நெருப்பு அவனைச் சாம்பலாக்கியது. சித்திரசேனன் என்பவன் அந்த சாம்பலை ஒரு பொம்மையாக்கினான். அதை ஈசன் பார்த்தவுடனே அந்த பொம்மை உயிர் பெற்று கம்பீரமாக எழுந்து நின்றது. அவனே பண்டாசுரன். ஈசனின் கோபாக்னி சாம்பலிலிருந்து உண்டானதால் உக்கிரத் தன்மை கொண்ட அசுரனானான். அசுரகுருவான சுக்கிராச்சார்யாரின் ஆலோசனைப்படி அரிய தவமிருந்து ஈசனருளைப் பெற்றான். வலிமை மிக்கவனாகி, பெரும் அசுர சேனையோடு தேவர்களை தேவ லோகத்திலிருந்து விரட்டி விட்டு தன் ஆதிக்கத்தை அங்கு செலுத்தி எல்லா லோகங்களையும் ஜெயித்து வெற்றி வீரனானான்.

அதனால் மனம் நொந்த தேவரும் முனிவரும் பராசக்தியைக் குறித்து யாகம் செய்யத் தீர்மானித்தனர். அதன்படி அவர்கள் செய்த வேள்வியில் பேரொளியாய் யாகத் தீயினின்று வெளிப்பட்டாள் அக்னி துர்க்கை. அனைவருக்கும் திருவருள் புரிந்தாள். தேவியை தரிசித்த பேரானந்தத்தில் அனைவரும் அவளை வணங்கினர். விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. தேவி தன் பரிவாரங்களுடன் பண்டாசுரன் வசிக்கும் சூன்யக நகரை அடைந்தாள். யுத்த களத்தில் இரு படைகளும் போரிட்டன. பெரும் போர் மூண்டது. வெற்றி தோல்வி யாருக்கு என புரியாத நிலை உருவானது. போர் தர்மத்தை மீறி பண்டன் இருளில் போர் புரிந்தான். திடீர் திடீரென இருளில் தாக்கும் அசுர சேனைகளுக்குப் பதிலடி கொடுக்க திருவுளம் கொண்டாள் தேவி.

மண், கல் கோட்டைகளைத் தகர்த்து எதிரிகள் உள்ளே நுழையலாம். முதலைகள் நிறைந்த அகழியைக்கூட எதிரிகள் சமாளித்துவிடுவர் என தீர்மானித்த தேவி, அக்னியால் கோட்டை அமைக்க தீர்மானித்தாள். அதில் பிரவேசிக்க முனைந்தால் எரிந்து சாம்பலாக வேண்டியதுதான். எனவே யுத்த களத்தைப் பிரகாசப்படுத்தும்படி திதி நித்யா தேவியருள் இருவரான வஹ்னிவாசினிக்கும், ஜ்வாலாமாலினி தேவிக்கும் கட்டளையிட்டாள். அதன்படி நூறு யோஜனை பரப்பளவுள்ள பூமியை வளைத்து முன்னூறு யோஜனை ஜ்வாலை வரும்படி நெருப்புக்கோட்டையை எழுப்பினர். அதன் வாயிற்படி மட்டும், தான் நின்று போர்புரிய, வெப்பமின்றி இருக்க அன்னை கட்டளையிட்டாள்.

எதிரிகளின் சேனைகள் தேவியின் சேனையை அண்டாமல் தடுக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய அக்னி பிராகாரம் அமைத்த காரணத்தால் இந்த தேவி அக்னி துர்க்கை எனப் போற்றப்படுகிறாள்.

பண்டாசுர வதத்தின் பின் காமனைப் பிரிந்த ரதி தேவியின் அவல நிலைக்கு மனமிரங்கி கருணை உள்ளத்துடன் அருள் புரிய ஈசனை தேவி வேண்டினாள். அவளது பெருங்கருணையால் மன்மதன் உயிர்பெற்று ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு வரமளித்தார்.

இத்தேவி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகளினால் துன்பம் ஏற்படாமல் இருக்க ஜ்வாலாமாலினி, வஹ்நிப்ராகாரமண்டலா என்ற பெயர்களைப் பெற்று அக்னி ஜ்வாலை போன்ற அரணாக இருந்து அவர்களைக் காக்கிறாள். இவள் தன் திருக்கரங்களில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கியருள்பவள்.

இவளே அறியாமை எனும் இருளை அழிப்பவள். ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்து யோக சித்தியையும் அருள்பவள். இருள் சூழ்ந்த இடத்தில் நம் கண்களுக்கு எதுவும் புலப்படாது. அதனால் அந்த இடத்தில் எதுவுமே இல்லை என்ற பொருளில்லை. நமது கண், காது, மூக்கு போன்ற இந்திரியங்கள் ஓரளவுக்குத்தான் பொருட்களை உணர்த்தும்.

 அக்கண்களால் காணமுடியாத அரிய பெரிய பொருட்களை நாம் அகக் கண்களால் காணமுடியும். அறியாமை எனும் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியை நாம் மனதில் ஏற்ற, அறியாமை என்ற இருள் தானாகவே மறையும். அந்த ஞானத்தை நாம் எவ்வளவு முயன்றாலும் பெறமுடியாது.

அவள் அருள் கிட்டினால் நொடியில் பெற்றிடலாம். அக்னி துர்க்கையே நம் அறியாமை இருளைப் போக்கியருள்பவள்.

இந்த அக்னி துர்க்கையின் தத்துவத்தில்தான் ஸப்தஸதி பாராயணம் எனும் தேவி மஹாத்மியத்தின் பதிமூன்று அத்தியாய தேவதைகளை பதிமூன்று தீபங்களில் ஆவாஹனம் செய்தும் சமஷ்டியாக பூஜிப்பதும் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

கேரள தேசத்தில் பகவதி சேவை எனும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தீபத்தில் தேவியை ஆவாஹனம் செய்து அனுஷ்டிக்கப்படும் பிரசித்தி பெற்ற வழிபாடு அது. யோக முறையில் சித்தி அடைய பெரிதும் உதவுபவள் இந்த அக்னி துர்க்கை. இவளே ஆத்மா. உள்ளத்தில் ஜோதிபோல் ஆத்மா விளங்குகிறது. இவள் சத், சித், ஆனந்தம் போன்ற வடிவினளாய் நம் உடலின் உள்ளேயும் வெளியேயும் பிரவேசித்து தான் ஒருவளாகவே விளங்குகிறாள். எது இருக்கிறதோ அது சத், எது பிரகாசிக்கிறதோ அதுவே சித், எது பிரியமானதோ அது ஆனந்தம் இந்த மூன்றும் சேர்ந்தவளே சச்சிதானந்த ரூபிணியான அக்னி துர்க்கை.

நவராத்திரியின் மூன்றாவது நாளான த்ரிதியை திதி அக்னி துர்க்கைக்கு உரியது.

இவளே அக்னியில் ஷடாக்ஷர வடிவமாய் இருப்பவள். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பு 6 குழந்தைகளாக வெளியில் வந்தபோது அதில் ஞானச்சுடர்களாக சூட்சுமமாக இருந்தவளே அக்னி துர்க்கை. யாகங்களில் அர்ப்பணிக்கப்படும் யாக திரவியங்களை தனக்குள் ஏற்று அவற்றை பரிசுத்தமாக்கி, அக்னி வடிவமாய் துலங்குபவள். இவளை வணங்கினால் மாயை விலகி ஞானம் கிட்டும். மாயை, மகாமாயை என இரு வித மாயைகள் உண்டு. மாயை என்பது சாதாரண மனிதர்களைப் பற்றும். ஆனால், மஹாமாயையோ ஞானியரையும் சித்தர்களையும்கூடப் பற்றும். நாம் ஞானம் அடைந்துவிட்டோம் என்ற அகங்காரம்தான் அந்த மகாமாயை.

தட்சனின் மகளாகப் பிறந்த தாட்சாயணி அக்னியில் பஸ்மமான பின், ஈசன் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தாட்சாயணியே மஹாமாயை. அந்த மஹாமாயையை சாம்பலாக்கியபின் ஞானசக்தியாக ஈசன் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார் என்பதே அதன் தாத்பரியம். யாகத்தில் தோன்றும் அக்னி மூலமாக நம்முடைய எத்தனையோ தீய கர்மாக்களுக்கு பரிகாரம் கிட்டும். அதனால் இந்த துர்க்கை யாகபரிகார துர்க்கை என்றும் போற்றப்படுகிறாள். யாகங்களில் இடப்படும் திரவியங்களுக்கு அதிபதி என்பதால் இத்தேவி வாசம் செய்யும் இடங்களில் பரிமள சுகந்தம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும். கேனோபநிஷத்தில் அம்பிகை ஒரு மாபெரும் ஜோதியாக வர்ணிக்கப்படுகிறாள்.

நம் சரீரத்தினுள்ளும் தினமும் ஹோமம் நடக்கிறது. நாம் உண்ணும் உணவையே நம் உடலில் ஜீரண சக்தியாக ஜீரணாக்னியாக இருந்து தினமும் ஏற்றுக்கொண்டு நம்மை சக்தியோடு வைத்திருக்கிறாள் தேவி. நம்முள் நடக்கும் நித்ய ஹோமத்திற்கு நாம் இடும் ஹவிஸே அன்னம்.  பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளை இத்தேவி தீர்த்தருள்பவள்.

திரிதியை திதியில் பொங்கலிட்டு அதில் தேன் கலந்து இத்தேவிக்கு படைக்க அந்தக் குறைகள் தேவியின் திருவருளால் நீங்கும். இந்த தேவியை தினமும் வேண்டிக்கொள்ள, நின்று போன கட்டிட வேலைகள் முடியும். சொத்து பிரச்னைகள் நீங்கும். மூலம், சூலநோய், வயிற்று நோய்கள், வெண்குஷ்டம் போன்ற வியாதிகள் மறையும். மாணவர்கள் இந்த தேவியை பிரார்த்தித்தால் ஞாபகமறதி நோய் நீங்கும்.

முக்கண்ணியாக விளங்கி பக்தர்களைக் காப்பதே தன் கடமையாகக் கொண்ட அக்னி துர்க்கை தேவியைப் பணிந்து,

ஜாத வேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸன: பர்ஷத்தி துர்காணி
விச்வாநாவேவசிந்தும் துரிதாத்யக்னி

-என்ற மந்திரத்தைச் சொல்லி அக்னி துர்க்கையை வழிபட்டு வளம் பல பெறுவோம்.

திங்கள், 26 செப்டம்பர், 2016

ஜகம் புகழும் ஜாதவேதோ துர்க்கை!

 

அக்னியின் வடிவமாக துலங்குபவளே ஜாதவேதோ துர்க்கை. அக்னியில் க்ஷடாஷர வடிவாய் ஒளிர்பவள் இத்தேவி. பரமேஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புச் சுடர்கள் வெளிப்பட்டு வந்தபோது அக்னியின் வடிவமான ஜாதவேதோ துர்க்கையே அவற்றை  அக்னி பகவான் மூலமாக சரவணப் பொய்கையில் சமர்ப்பித்து ஆறுமுகன் தோன்றக் காரணமாய் இருந்தாள். எனவே இவளை ‘ஸ்கந்த துர்க்கா’ என்றும் அழைக்கின்றனர்.

அக்னியையே ஜாதவேதோ துர்க்கை எனக்கூறுகிறது, துர்க்கா ஸூக்தம். அவள் ‘சிவப்பு நிறமான தீயின் நிறத்தினள் என்றும், தன்னுடைய ஜ்வாலையினால் தீயவைகளை எரித்தழிப்பவள்’ என்றும் அது கூறுகிறது.

 இத்தேவியின் அம்சமாகத் தோன்றியவரே வீரபத்திரர். உலகில் உள்ள அனைத்திலும் சிறந்தது அக்னியே. ஏனென்றால் அதுதான் மிகவும் பவித்ரமானது. சுத்தமானது. அதுமட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்த எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடக்கூடிய தன்மையுடையது.

இத்தேவி யாகத்தீயில் அலங்கார வடிவத்துடன் திருக்காட்சி அளிப்பவள். தேவ தேவியர்களை திருப்திப்படுத்த மகாயாகங்கள் பல செய்கிறோம். ஜாதவேதோ துர்க்கை அந்த யாகங்களுக்கெல்லாம் அதிதேவதையாக நின்று நாம் செய்யும் யாகங்களை அந்தந்த தேவ தேவியரின் வடிவத்தில் நம் வேண்டுதல்களை அந்தந்த பரிகார ப்ரீதியுடன் ஏற்றுக் கொண்டு அவற்றை நிறைவேற்றி அருள்பவள்.

 அதன் மூலம் யாகம் செய்பவர்களுக்கு சாந்தம், சந்தோஷம் இரண்டையும் அள்ளித் தருபவள். நம் பாவங்களை பஸ்மமாக்கி நல்வாழ்வு கொடுப்பதோடு நம்மை ஞான வழிக்கு அழைத்துச் செல்பவள்.

செந்தீ வர்ணத்தினளான இவள் தனது பேரொளியால் பகைவர்களை எரிப்பவள். ஆபத்தைப் போக்குபவள். மின்னல் போன்ற ஒளியுடையவள். ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவள். கேடயம் ஏந்திய கன்னியர்களால் சேவிக்கப்படுபவள். எட்டுக் கரங்களையுடைய இவள் சக்கரம், கதை, வாள், கேடயம், வில், பாசம், தர்ஜனி ஆகியவற்றைத் தன் கரங்களில் தாங்கி அமர்ந்திருக்கின்றாள்.

இத்தேவி இரு கரங்கள் கொண்டவள் எனவும் சில புராணங்கள் கூறுகின்றன. சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியிருப்பவள் என்றும் அவை சித்தரிக்கின்றன. இந்த அம்பிகையும் வனதுர்க்காவைப் போல முக்கண்கள் கொண்டவள். சிரசில் உள்ள கிரீடத்தில் சந்திரகலையைத் தரித்தருள்பவள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் வடிவாக இருப்பவள் அம்பிகை. உக்கிர தேவதைகள் பலருக்கும், உதாரணமாக மாரியம்மன், பிடாரி போன்ற தெய்வங்களின் தலையில் கொழுந்து விட்டு எரியும் அக்னி ஜ்வாலை இருப்பது அவர்கள் ஜாதவேதோ துர்க்கையின் அம்சம் என்பதை எடுத்துரைக்கவே.தன் தவத்தைக் கலைக்க முனைந்த மன்மதனின் செயலைக் கண்டு ஈசன் கோபம் கொண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தார்.

அந்த கோபாக்னி மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது. எனினும் ஈசனின் கோபம் தணியவில்லை. அச்சுடர்கள் மூவுலகங்களையும் தகிக்கத் தொடங்கியது. ஈசன் அந்த தீப்பிழம்பை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்க அக்னி பகவானுக்கு ஆணையிட்டார். அக்னி பகவானாலும் அந்த தீப்பிழம்பைத் தொடமுடியவில்லை. அக்னி பகவான் மனமுருக தேவியைத் துதிக்க, அவரின் வேண்டுகோளுக்கிணங்க தேவி அந்த தீப்பிழம்பினுள் பிரவேசித்தாள்.

அக்னி பகவான் தீப்பிழப்பின் வெப்பத்தை உணரா வண்ணம் அந்த வெம்மையைத் தான் ஏற்று, துணை நின்று சரவணப் பொய்கையில் அதனைச் சேர்ப்பிக்க திருவருள்புரிந்தாள். அந்த தீப்பிழம்பான சிவ தேஜஸே பின் முருகனாக உருவெடுத்தது. அக்னி வீரபத்திரர், இவரது அம்சமாகத் தோன்றியவர்.  கேனோபநிஷத்தில் அம்பிகை ஒரு மாபெரும் ஜோதியாகவே வர்ணிக்கப்படுகிறாள். உடலில் உஷ்ண சம்பந்தமான நோய்களை இத்தேவி தீர்ப்பவள். சொத்து விவகாரங்களை சுலபமாக முடித்து வைப்பவள்.

சடைமுடியில் பிறைச்சந்திரனை அணிந்த ஈசனாகிய செம்பவளக் குன்றில், தேவி மணம் வீசும், பசும்கொடியாக படர்ந்து நிற்பவள். சிவானுபவத்தில் திளைப்பவர்கள் பக்தி எனும் அன்பு நீர் பாய்ச்சி அந்தக் காட்சியில் மனமொன்றி, மன, வாக்கு, காயங்களின் துன்பங்களையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் கடந்து சிவானுபவத்தில் தோய்ந்து, மற்றுமொரு பிறவி எடுக்காத பெறும் பேற்றைப் பெறுவதுடன் இப்பிறவியின் பயனையும் அடைந்து விடுகிறார்கள்.

அவர்கள் உலகில் அதன் பின் வாழ்ந்திருந்தாலும் அக்காட்சி, அந்த அனுபவம் அவர்களை விட்டு அகலுவதில்லை. ஈசனைக் குன்றாக உருவகப்படுத்தி, தேவியை பசுமையான பூங்கொடியாக ஒளி பொருந்திய ஈசனின் மேனியைத் தழுவிக்கொண்டிருப்பது போல் ஆதார கமலங்களில் குண்டலினீ சக்தி ஊடுருவிச் சென்று ஸஹஸ்ராரத்தில் குன்றாக விளங்கும் ஈசனைத் தழுவி நிற்கின்றாள் என்றும் கூறலாம்.

இவ்வுலகியல் சேற்றில் நாம் மூழ்கியிருந்தாலும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேவியின் பாத கமலங்களை நாம் தியானிக்க வேண்டும். அதிலிருந்து பெருகும் அமிர்த தாரையை நம் மனதில் சிந்திக்க வேண்டும்.

ஓம் ஹ்ரீம் தும் ஜாதவேதஸே ஸுனவாம  ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸன: பர்ஷத்தி துர்காணி
விச்வாநாவேவசிந்தும் துரிதாத்யக்னி

- எனும் மந்திரத்தை பாராயணம் செய்து ஜாதவேதோ  துர்க்கையை வழிபட்டு வளங்கள் பல பெறுவோம்.
 
 

ஜோதிமயமான வாழ்வருளும் ஜ்வாலா துர்கா!


யோகாதிபதி சிவனின் யோகத்தைக் கலைப்பதற்காக தேவர்களது தூண்டுதலால்  காமன் மலரம்புகளை ஈசன் மீது தொடுத்தான். அதனால் கோபமுற்ற ஈசனின் நெற்றிக்கண் கிளப்பிய தீப்பொறிகள் மன்மதனைச் சாம்பலாக்கியது. சித்திரசேனன் என்பவன் அந்தச் சாம்பலை மனித உருவாக்கினான். அதை ஈசன் நோக்கியவுடன் அது உயிர் பெற்று எழுந்து கம்பீரமாக நின்றது. அவனே பண்டாசுரன் எனப் பெயர் பெற்றான்.

ருத்ர கோபாக்னி சாம்பலிலிருந்து தோன்றியதால் உக்கிரத் தன்மையுடைய அசுரனாகத் தோன்றிய பண்டாசுரன் ஈசனைப் பணிந்து வணங்கினான். அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் உதவியால் விவரமறிந்து கடுந்தவம் புரிந்து ஈசனருள் பெற்றான் பண்டாசுரன். பெரும் அசுர சேனையோடு மிக்க வன்மையுடவனாகி, தேவர்களை தேவலோகத்தினின்று விரட்டிவிட்டு தன் ஆதிக்கத்தை அங்கு செலுத்தி, எல்லா லோகங்களையும் ஜெயித்து வெற்றி வீரனாகத் திகழ்ந்தான்.

தேவர்களும் முனிவர்களும் வேதனைப்பட்டு பராசக்தியைக் குறித்து மஹாயக்ஞம் செய்வதென்று தீர்மானித்தனர். அன்னை பேரொளியாய் யாகத் தீயில் இருந்து வெளிப்பட்டு அனைவருக்கும் திருவருள் புரிந்தாள். தேவியின் தரிசனம் கண்டு அனைவரும் பேரானந்தம் கொண்டு எல்லோரும் அவளை வணங்கினர். விண்ணிலிருந்து பூமாரி பெய்தது. அன்னை தன் பரிவாரங்களுடன் பண்டாசுரன் வாழ்ந்து வரும் ‘சூன்யக நகரை’ அடைந்தாள். யுத்த களத்தில் இரு படைகளும் சந்தித்தன. பெரும்போர் மூண்டது. வெற்றி யாரைச் சார்வது என்று மயக்கம் கொண்டது. போர் தர்மத்தை மீறி பண்டாசுரன் இருட்டில் யுத்தம் செய்தான். திடீர் திடீரென இருளில் தாக்கும் அசுர சேனைகளுக்குப் பதிலடி கொடுக்க திருவுளம் கொண்டாள் பராசக்தி.

மண், கல் கோட்டைகளைத் தகர்த்து எதிரிகள் உள்ளே நுழைந்து விட வாய்ப்புண்டு. நீரால் சூழப்பட்ட முதலைகள் நிறைந்த அகழியைக் கூட எதிரிகள் சமாளித்து விடுவர். ஆனால், அக்னியால் சூழப்பட்ட அரணைக் கடக்க முற்பட இயலுமா? யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அப்படி முயற்சித்தால் சாம்பலாக வேண்டியதுதான். அஞ்ஞான வடிவான எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, ஞானவடிவான அக்னியால் கோட்டை அமைக்க தீர்மானித்தாள் தேவி.

 போர் தர்மத்தை மீறி பண்டனின் மந்திரியான விஷங்கன் இருளில் போர் புரிந்தான். யுத்தத்தில் தமனன், சந்த்ரகுப்தன் முதலான அசுர சேனாதிபதிகள் இரவு நேரத்தில் அம்பிகையைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டார்கள். அன்னை இதனால் சற்று கோபம் கொண்டு புருவத்தை நெறித்தாள். அன்னையின் கோபம் கண்ட நித்யா தேவிகள் பதினைந்து பேரும் ஆவேசமுற்றார்கள். அவர்களில் ஜ்வாலா மாலினிதேவியும் வஹ்நி வாஸினி தேவியும் ஜ்வலிக்கும் தன்மை கொண்டவர்கள்.

ஜ்வாலா மாலினி என்றால், நெருப்பையே மாலையாக அணிந்தவள் என்று பொருள்! பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்கு பயத்தையும் தருபவள். நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையை தாமக்னி வர்ணாம் என்று வேதம் போற்றுகிறது. அவர்கள் அன்னையின் உத்தரவு பெற்று, எங்கும் பேரொளியைப் பரப்பினார்கள்.

இருளில் வந்த அரக்கர்கள் நன்றாகவே தெரியலானார்கள். சக்தி சேனை திருப்பித் தாக்கத் துவங்கிவிட்டது! பதினைந்து நித்யைகளும், விஷங்கனுக்குத் துணைவந்த பதினைந்து அக்ரோணி சேனைகளையும் அவற்றின் தலைவர்களையும் கணப்போதில் கபளீகரம் செய்தார்கள். காமேசி தமனையும், பகமாலினி தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுல்லகனையும், வஹ்நிவாஸினி கல்கஸனையும், மகாவஜ்ரேச்வரி கல்கிவாஹனனையும், சிவதூதி புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுந்தரி சண்டபா குவையும், நித்யா குக்குரனையும், நீலபதாகா ஜம்புகாட்சனையும், விஜயா ஜம்பனையும், ஸர்வமங்களா திக்ஷ்ணச்ருங்கனையும், ஜ்வாலாமாலினி த்ரிகண்டகனையும், சித்ரா சந்த்ரகுப்தனையும் கொன்றழித்தார்கள். அவர்களின் செயல் வீரத்தைக் கண்டு அன்னை அவர்களைப் பாராட்டினாள்.

‘‘உங்கள் பதினைந்து பேரையும் வணங்குபவர்களுக்கு, வாழ்வில் அவர்கள் என்னவெல்லாம் கோருகிறார்களோ அவை அனைத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும். உங்களை வணங்குபவர்களுக்கே என் அருள்கிட்டும்,’’ என்றும் அம்பிகை அருளினாள்.

எதிரிகளின் சேனைகள் தேவியின் சேனைகளை அண்டாமல் தடுக்க அக்னி ஜ்வாலையுடன் கூடிய அக்னி ப்ராகாரம் அமைத்த காரணத்தினால் இந்த தேவி ஜ்வாலா துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

எதிரி வர்க்கங்களை அழிப்பது ஒரு வகை என்றால், எதிரிகள் தன் பக்கமே நெருங்காமல் தடுப்பது ஒரு வகை. அப்படி தன் பக்தர்களிடம் தீமை ஏதுமே நெருங்க முடியாதபடி காப்பவள் ஜ்வாலா மாலினி. இவளது பக்தர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். புறப் பகைவர்கள் மட்டுமல்லாது நம்முள்ளேயே இருந்து நம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பொறாமை, கோபம், பேராசை போன்ற எதிரி வர்க்கங்களையும் ஜ்வாலா மாலினி பொசுக்கி விடுவாள்.

எதிரி என்றும் பகை என்றும் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் அஞ்ஞானம். அறியாமை எனும் இருள் நம்மைச் சிந்திக்க விடாது; குரோதமும் கோபமும் அஞ்ஞானத் தின் பிள்ளைகள்.

இவற்றுக்கு இடம் கொடுத்தால் வாழ்வே இருள் மயமாகி விடும். ஆனால், அக்னியோ என்றும் ஞான ஸ்வரூபம். இந்த அக்னியின் ஒளி வந்தால் மட்டுமே இருள் விலகும், அதுதான் ஜ்வாலா மாலினியின் பணி!எதிர்பார்ப்பில்லாமல் இவளை உள்ளார்ந்த பக்தியுடன் வணங்கி வந்தால், எதிர்பாராத தருணத்திலெல்லாம் வாழ்வில் வளங்களை அள்ளிக் கொடுப்பாள்.

செல்வ வளத்துக்கும் பண வரவுக்கும் ஒரு குறைவும் வராது. இவளை வணங்குவதால் ஆகர்ஷண, வச்ய, ஆவேச சித்திகள் அனாயாசமாக உண்டாகும். செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பது போல, எங்கும் இவர்கள் பேச்சுக்கே மதிப்பு இருக்கும். பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் தலைமைப் பொறுப்பேற்கவும், அனைவரையும் தன் சொல்படி கேட்க வைக்கவும் ஜ்வாலா மாலினியின் அருளால் முடியும். இந்த தேவியை பக்தியோடும் முறையான வழியிலும் வணங்குவோர்க்கு சகல சித்திகளும் உண்டாகும்.

‘‘பரமசிவனுடன் பிரியாதிருக்கும் ச்ருங்கார வடிவினள். ஹயக்ரீவர், அகத்தியர் முதலியவர்களால் துதிக்கப்பட்டவள்; காமேச்வரி முதலான பதினைந்து நித்யா தேவிகளால் சேவிக்கப்படுபவள்; இவளுக்கு நமஸ்காரம்’’ என்கிறது ஸௌந்தர்யலஹரி. தன்னை உபாசிப்பவர்களை எவ்வித துன்பமும் அணுகாமல் காக்கும் தேவி இவள். ஒரு நொடியில் உலகை அழிக்கும் சக்தி உடையவள்.

தேவ தேவியர்களையும் மற்றும் முனிவர் முதலான பலரையும் காத்தருளும் இவ்வன்னை பல அசுரர் களை மாய்த்திருக்கிறாள். இத்தேவியின் செயல்கள் துஷ்டர்களுக்கு பயத்தையும், பீதியையும் தருபவை. ஆனால், சாதுக்களுக்கும், ஞானியர்களுக்கும், அவளை மனமுருகி வழிபடுவோர்க்கும் அவளுடைய செயல்கள் நன்மையளிக்கக் கூடியவை.

பண்டாசுர வதத்தின் பின் காமனைப் பிரிந்த ரதிதேவியின் அவலநிலைக்கு மனமிரங்கி தாயுள்ளத்துடன் அருள் புரிய பரமனை தேவி வேண்டினாள். அவரது பெருங்கருணை கடாட்சத்தினால் உயிர் பெற்று ரதி தேவியுடன் இணைந்தான். உலகிற்கு அவன் உருவம் தெரியாதென்றும், ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் புலப்படுவான் என்று திருவாய் மலர்ந்தருளினார் ஈசன்.

அம்பிகை தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகளினால் துன்பம் ஏற்படாமலிருக்க ஜ்வாலா மாலினி க்ஷிப்த வஹ்னி ப்ரகார மண்டலா எனும் திருப்பெயரோடு பக்தர்களை அக்னி ஜ்வாலை என்ற அரணாக இருந்து காப்பாற்றுகிறாள். ஜ்வாலா துர்க்கா நெருப்பு மயமான பாணம், வில், அம்பு, சங்கு, சக்ரம், வாள், கேடயம், சூலம், தர்ஜனி முதலானவற்றைத் தன் திருக்கரங்களில் கொண்டிருப்பவள். மூன்று கண்களை உடையவள்.

சிம்மத்தை வாகனமாகக் கொண்டவள். திரிபுரசம்ஹாரம் செய்த பரமசிவ பத்தினியின் திருப்பாதங்களில் ஒலிக்கும் இரண்டு சதங்கைகளும் அதன் ஒலியால் நம்மை ‘அஞ்சேல் நான் உனை ரக்ஷிக்கிறேன்’ என்று நமக்கு அபய வாக்கு தருவது போல் உள்ளது. தேவியின் தாமரைப் பாதங்கள் சிவந்து ஒளிர்ந்து இருளை நீக்குகின்றன! நகதீதிதி ஸஞ்ஜன்ன தமஞ்ஜன தமோகுணா எனும் லலிதா ஸஹஸ்ரநாமாவும் தேவியின் பாதங்களை வணங்குபவர்களின் தமோகுணத்தை தேவி நீக்கியருள்கிறாள் என்று கூறுகிறது.

ஒளிபட்டவுடன் இருள் ஓட வேண்டியதுதானே! மேன்மையும், அழகும் நிறைந்த அந்த பாதங்களை மூகர் தன் பாதாரவிந்த சதகத்தில் வேண்டுவது போல நாமும் தேவியிடம் ‘அம்மா நொடிப்பொழுதேனும் உன் திருவடிகளை என் தலைமீது வைத்து அதைப் பரிசுத்தமாக்குவாய் தாயே’! என வேண்டிடுவோம்.

அவ்வாறு தொடர்ந்து வேண்டி வந்தால் தேவியின் காற்சதங்கைகளின் ஓசையை ஒரு நாள் கட்டாயம் நம் காதுகள் கேட்கும் என கூறப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உடனே திருவருள் புரியும் இத்தேவியைப் பணிந்து வாழ்வில் நலங்கள் பல பெறுவோம். நம் உடலினுள் தினம் தினம் யாகம் நடக்கிறது. நாம் உண்ணும் உணவை நம் உடலில் ஜீரண சக்தியாக ஜீரணாக்னியாக இருந்து தினமும் ஏற்றுக்கொண்டு நம்மை சக்தியோடு வைத்திருக்கிறாள் தேவி. நம்முள் நடக்கும் நித்ய யாகத்திற்கு நாம் தரும் ஹவிஸ்ஸே நாம் உண்ணும் உணவு. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளை தீர்ப்பவள் இந்த அம்பிகை.

த்ரிதியை திதியில் பொங்கலிட்டு அதில் தேன் கலந்து இவளுக்கு நிவேதிக்க மாத விடாய்க்கோளாறுகள் நீங்கும். இத்தேவியின் திருவருள் கிட்டிட நின்று போன கட்டிட வேலைகள் முடியும். சொத்து பிரச்னைகள் தீரும்.

கடன்கள் தீரும். சூலை நோய், மூலம், வயிற்று நோய், வெண்குஷ்டம் போன்ற நோய்கள் மறையும். மாணவர்கள் தினமும் இவளை அடிபணிந்து வணங்க ஞாபக சக்தி பெருகி மறதி அகலும். திருவிளக்கின் ஜ்வாலையில் ஜொலிக்கும் இத்தேவி, தனது ஜ்வாலையால் பக்தர்களின் பாவங்களைப் பொசுக்குபவள். கர்மவினையினால் ஏற்படும் நோய் களை நீக்கியருள்பவள்.

ஜ்வாலாத் துர்க்கா த்யானம்!

ஜ்வாலாமாலா வலீடா ஜ்வலந சரதனு
சங்க சக்ராஸி கேடான்
சூலம் ஸந்தர்ஜநீம்யா கரஸரஸிருஹை
ஸந்ததானா த்ரிநேத்ரா
ஔர்வக்னிம் ஸ்ங்கிரந்தீ ரணபுலி திதிஜான்
நாசயந்தீபராஸா
துர்கா ஜாஜ்வல்யமானா பவது மமஸதா
ஸிம்ஹஸம்ஸ்தா புரஸ்தாத்

ஜ்வாலாத் துர்க்கா காயத்ரி!

ஓம் அக்னி துர்க்காயை வித்மஹே
ஸிம்ம வாஹின்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

வளம் தரும் மரம்!

மகிழமரம்:
இதை ஞானமரம் என்று புகழ்வார்கள். இதற்கு திருவண்ணாமலை மரம் என்ற வேறொரு பெயரும் உண்டு. வியாழக்கிழமை இந்த மரத்தைக் குருவாக எண்ணி பூஜை செய்து வருவோர்க்கு அறிவு தெளிவாக கிடைக்கும்.

கொன்றை மரம்: 
 இதைப் பிரணவ மரம் என்று சொல்வார்கள். இதை முருகனை நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்திட துஷ்ட சக்திகள் நம்மிடம் நெருங்காது. இந்த மரம் திருவெண்காடு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

 
குறுந்த மரம்: 
 இதை மாணிக்கவாசகர் மரம் என்று சொல்வதுண்டு. வாஸ்து பரிகார மரமாகிய இம்மரத்தை வாஸ்துக்குறையுள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.

 
வெள்ளை மன்தாரை: 
குருவாயூர் கோவில் மரம் என்றும் அழைக்கலாம். இதை வீட்டுத் தோட்டத்தில் வைத்து பூஜை செய்து வந்தால் நினைத்ததைக் கொடுக்கும் தன்மை கொண்டது. மந்தாரையில் மஞ்சள் வகையும் உள்ளது. இதை முறையோடு பூஜை செய்தல் வேண்டும்.

 
சம்தானக மரம்: 
 நந்தி விருட்சம் என்று அழைக்கப்படும் இம்மரத்தை வீட்டில் உரிய திக்கில் வளர்த்து பூஜித்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்நிலையைப் பெறுவார்கள்.

 
பும்சிக மரம்: சந்தான பாக்கியத்தைத் தரக்கூடிய இந்த விசேட தெய்வ விருட்சத்தைப் பூஜை செய்தால் மலடியும் குழந்தை பெறுவாள் என்று கூறப்படுகிறது. பும்சிகம் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில்தான் உண்டு. இதை ஆராதனைகள் செய்து இதன்கீழ் யாகம் நடத்தி வழிபட வாரிசு ஒன்றை நிச்சயம் பெறலாம்.

 
அரிசந்தன மரம்: இந்த விருட்சத்தை தோட்டத்தில் வளர்ப்போ ருக்கு தீமைகள் நெருங்கி வந்தாலும், அருகில் வந்தபின் மறைந்துவிடும்.

 
பன்னீர்பூ மரம்: இந்த மரத்தை வீட்டில் வணங்குவோருக்கு வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும். இதை திருச்செந்தூர் கோவில் மரம் என்றும் அழைப்பார்கள்.

 
பெருந்தும்பை: தனலட்சுமி செடி என்ற பெயர் இதற்கு உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள் தீயசெயல்கள் அகலும்.

 
ஜலம்தரா மரம்: தொட்டால் சிணுங்கி செடிக்கு இப்பெயர் உண்டு. இதையும் தனலட்சுமி செடி என்பர். இச்செடி வளரும் இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்ட அந்த இடம் வளம்பெற்று திகழும்.

 
குடும்பநலச்செடி: 
 வீட்டுத் துளசி மாடத்தரு கில் துளசிச் செடியும், ஜலந்தரா என்ற தொட்டால் சிணுங்கி செடியையும் ஒரே அளவில் வைத்துத் தனித் தொட்டியில் வளர்க்க வேண்டும். இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும்  
 
 
அகண்ட வில்வம்: காளஹஸ்தி கோவில் மரம் என்ற பெயர் உள்ள இதற்கு அதிர்ஷ்ட மரம் என்றும் பெயர் உண்டு. இம்மரத்தைச் செடி பருவத்தில் திங்களன்று பூஜை செய்துவந்தால் வீடு அதிர்ஷ்டகரமாக விளங்கும். சகல சௌகர்யங்களும் கிடைக்கும். பூஜை ஆகமவிதியோடு செய்தால் பலன் கிட்டும்.


விடாத்ழை மரம்:- ஆரோக்யமாக வாழவும், நோய்கள் விலகி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வரவேண்டும். இதற்குச் சனீஸ்வர மரம் என்ற பெயரும் இருக்கிறது. சனீஸ்வரனின் 7 1/2 பிடி அர்த்தாட்டம சனி காலத்தில் இவ்விருட்ச பூஜை பலன்தரும்.


திருமண மரம்: பின்னை மரம்தான் திருமணப் பேற்றைத் தரும் தெய்வ விருட்சமாக விளங்குகிறது. திருமணம் தடைபடும் ஆண்- பெண்கள் இம்மரத்திற்கு சுபநாளில் பூஜை செய்து அதன்கீழ் மங்கள பூஜைகள் செய்தால் உடனே திருமணக்காலம் வரும்.


கதம்ப மரம்: மதுரை மீனாட்சியம்மன் கோவில் மரம் என்றழைக்கப் படும் இந்த விருட்சம் தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது. வெள்ளிக் கிழமைகளில் இந்த மரம் பூஜிக்கத் தகுந்தது.


செல்வ மரம்: கருநெல்லி மரத்தைத்தான் செல்வமரம் என்பார்கள்.


இதை லட்சுமி மரம், (ப்ராஸ் பொடி) என்றும் சொல்வது வழக்கத்தில் உள்ளது. இம்மரத்தை இல்லத்தில் வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெருகும்.


சௌபாக்ய மரம்: சண்பக மரத்தைத்தான் சௌபாக்ய விருட்சம் என்று அழைக்கிறோம். வெள்ளிக்கிழமை, அஷ்டமி தினங்களில் சௌபாக்ய அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டு பிரார்த்திக்க குடும்பத்தில் சௌபாக்கிய நிலை உண்டாகும்.


பிராய் மரம்: மின்னலைத்தடுக்கும் மரம் என்று இதை அழைப்பார்கள். இந்த வகை மரங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் முன்பு இருந்ததால் ஊரின் பெயர் அப்படி வந்தது.
 
 

அனந்த பத்மநாப சுவாமி விரதம்!

னந்த பத்மநாப சுவாமி விரதம்! இவ்விரதம் கேரள மக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று.

இந்த அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் இழந்த செல்வங்களையும் சக்தி களையும் மீண்டும் பெறுவதுடன், சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என்பது திண்ணம். இந்த விரதத்தை அனந்தவிரதம் என்றும் சொல்வார்கள்.


பூஜை செய்யும் முறை

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுமங்கலிப் பெண்கள், அனந்த பத்மநாப சுவாமி படத்தை கிழக்கு பார்த்து வைத்து மலர் அலங்காரம் செய்ய வேண்டும். சுவாமி சம்பந்தப்பட்ட பக்திப் பாடல்களையும், ஆழ்வார் பாடல்களையும் பாட வேண்டும். உங்களுக்கு விருப்பமான இனிப்புகளை அவருக்கு சமர்ப்பித்து, தூப- தீப- நிவேதனம் செய்ய வேண்டும். இதுபோல 13 ஆண்டுகள் தொடர்ந்து செய்ய வேண்டும். சுவாமி அருளால் எல்லா செல்வங்களும் பாக்கியங்களும் கிட்டும். கன்னிப் பெண்களும் இதில் கலந்து கொள்ளலாம்.


ஓம் அனந்தனே போற்றி!
ஓம் ஆதிசேடனே போற்றி!
ஓம் கால வடிவே போற்றி!
ஓம் விஸ்வரூபனே போற்றி!
ஓம் உலக நாயகா போற்றி!
ஓம் அருள்வதில் எளியோய் போற்றி!
ஓம் தேவியின் அன்பனே போற்றி!
ஓம் சக்கரம் ஏந்தியவரே போற்றி!
ஓம் உருவத்தில் உயர்ந்தவரே போற்றி!
ஓம் கேசவா போற்றி!
ஓம் நாராயணா போற்றி!
ஓம் மாதவனே போற்றி!
ஓம் கோவிந்தனே போற்றி!
ஓம் விஷ்ணுவே போற்றி!
ஓம் மதுசூதனனே போற்றி!
ஓம் ஆனந்த வடிவே போற்றி!
ஓம் அனந்த பத்ம தாபரே போற்றி! போற்றி!

பிறகு, எளிய வகையில் பிரசாதங்களை எடுத்து பகல் உணவுடன் சாப்பிட்டுத் தனியாக சுத்தமான இடத்தில் அமர்ந்து மேற்சொன்ன அனந்த விரத மகிமைக் கதையைப் படிக்க வேண்டும்.

அனந்த விரத மகிமைக்கதை:
வசிஷ்டரின் வம்சத்தில் வந்த சுமந்து முனிவருக்கும், பிருகு முனிவரின் மகள் தீஷாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சீலா என்ற பெண் குழந்தை பிறந்ததும் தாய் தீஷா மரணமடைந்தாள்.

பிறகு சுமந்து முனிவர் கர்க்சா என்ற பெண்ணை இரண்டாந்தாரமாக மணந்தார்.

முதல் மனைவிக்குப் பிறந்த சீலா திருமண வயதை அடைந்ததும் அவளை கவுண்டிய ரிஷிக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

அப்போது சீலாவுக்கு தாய்வீட்டுச் சீதனமாக ஏதும் கொடுக்காமல், வீட்டில் இருந்த சத்துமாவைக் கொஞ்சம் கட்டிக் கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பினாள் சித்தி கர்க்சா.

இதை நினைத்து வருந்தியபடி கணவருடன் சென்று கொண்டிருந்த சீலா, போகும் வழியில் பெண்கள் கூட்டமாகக் கூடி ஏதோ பூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களிடம் அது பற்றிய விவரம் கேட்டாள்.அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் என்று அப்பெண்கள் கூற, சீலாவும் அவர் களோடு சேர்ந்து தன்னிடம் இருந்த சத்துமாவை சுவாமிக்கு பக்தியுடன் படைத்து வணங்கினாள்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதையில் சொன்ன, "உன்னிடம் உள்ளதை உள்ளன்புடன் எனக்கு சமர்ப்பித்தால் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறேன்' என்ற வாக்கியத்திற்கிணங்க, அனந்த பத்மநாப சுவாமியும் சீலாவுக்கு அருள்புரிந்தார்.

பூஜையில் வைத்த பட்டுக் கயிறை எடுத்து தன் கையில் கட்டிக்கொண்டு கணவருடன் அவர் வீடு வந்து சேர்ந்தாள் சீலா.

அவள் செய்த விரத மகிமையால் கவுண்டி யருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஏழ்மை அகன்றது. ஆனால் போதாத காலம்- அவர் ஒருநாள் ஏதோ கோபத்தில் மனைவி கையில் கட்டியிருந்த பட்டுக் கயிறைப் பறித்து அக்னியில் எறிந்தார். உடனே சீலா ஓடிச்சென்று அது எரிவதற்குள் வெளியில் எடுத்து பாலில் நனைத்தாள்.

அன்று முதல் செல்வம் நீங்கி அவர்களை வறுமை வாட்டத் தொடங்கியது. அதன்பின் தான் செய்த தவறை உணர்ந்த கவுண்டியர்,  முனிவர்களின் ஆலோசனைப்படி ஆதிசேஷன் அருள் பெற காட்டுக்குச் சென்று கடும் தவமிருந்தார்.அப்போது காட்டில் முதிய வேதியர் ஒருவர் கவுண்டியர்முன் தோன்றி, அவரை தற்போதைய திருவனந்தபுரம் கோட்டையில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு அழைத்து சென்றார்.
அதனுள் சென்றதும் பலவிமான பொன்மணிகள் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ரத்தின சிம்மாசனத்தில் கருட வாகனத்தின் மேல் சங்கு சக்கரம் ஏந்தியபடி அனந்தன் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அவர் காலடியில் விழுந்து வணங்கினார்.

பகவான் அனந்தன் அவரை வாழ்த்தி முதலில் தர்மசிந்தனை ஏராளமான பொருட்செல்வம், வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று பெரிய வரங்களைக் கொடுத்தார்.

இதைக்கேட்ட கௌண்டின்யர் இப்பிறவியில் தங்கள் தரிசனம் கிடைத்த நான் பாக்கியசாலி ஆவேன் என்று வணங்கி தன் வாழ்நாள் முழுவதும் மனைவி சீலாவுடன் சேர்ந்து அனந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பட்டுக் கயிறைக் கட்டிக் கொண்டார்.
 
பின்னர் இந்த தம்பதிகள் அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ்டித்து பல பாக்கியங்கள் பெற்று நலமாக வாழ்ந்தனர்.

மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட் டில் துன்புற்றபோது, ஸ்ரீகிருஷ்ண பகவான் தர்மரிடம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே விரதம் இருந்து மீண்டும் நாட்டையும் நலன்களையும் பெற்றனர்.

இந்த அனந்த பத்மநாப விரதத்தை அனுஷ் டிப்பவர்கள் இழந்த செல்வங்களையும் சக்தி களையும் மீண்டும் பெறுவதுடன், சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என்பது திண்ணம். இந்த விரதத்தை அனந்தவிரதம் என்றும் சொல்வார்கள்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டையில் ஆதிசேஷன்மீது சயனித்துக் காட்சி தரும் அனந்த பத்மநாப சுவாமி கோவில் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.

 
 

சகல சம்பத்துகளையும் அருளும் செளபாக்ய கெளரி!



திபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதி களையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் ‘கெளரி’ என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).

ஸ்ரீகெளரிதேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற் குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.

அவளருளால் உலகில் மழை பொழிகிறது. மண் செழிக்கிறது. கள்வர், விலங்குகள், தீ முதலியவற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

வழிபாட்டு நியதிகள்

ஸ்ரீகெளரி வழிபாடு இல்லறத்தை செழிக்கச்  செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

உலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களையும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட சகல சம்பத்துகளும் உண்டாகும்.

திருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்குகளை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர்.
 
காசியில் மகாமங்கள கெளரி அன்னபூரணியாக விளங்குகிறாள் என்பர். ஆக, அன்னையின் வழிபாட்டில் அன்னதானமும் பிரதானம் ஆகும்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே
    சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
    பிக்ஷாம் தேஹிச பார்வதி! - ஆதிசங்கரர்!
 
பெண்கள் இல்லங்களில் தனித்தனியாக விரதமிருந்து இந்த பூஜையைச் செய்தாலும், பூஜை முடிந்தபிறகு அருகிலுள்ள பெண்களை அழைத்து தேங்காய், ஆடைகள், பழம், தாம்பூலம், குங்குமம் முதலான செளபாக்கியத் திரவியங்களை அளித்து அவர் களை வணங்கி ஆசிபெற வேண்டும். அவர்கள் கூறும் நல்லாசி மொழிகள் மூலம் கெளரிதேவி வரமளிப்பதாக எண்ண வேண்டும்.

தேவர்கள் சோடச கெளரி பூஜை செய்து சூரபத்மன் முதலிய அசுரர்களால் விளைந்த துன்பங்களைப் போக்கிக் கொண்டனர்.

தேவேந்திரனும் இந்திராணியும் பூஜை செய்து இழந்த இந்திர லோகத்தை முருகன் மூலமாக மீண்டும் அடைந்தனர். அரம்பையர் இவ்வழிபாட்டைச் செய்து வரம் பல பெற்றுள் ளனர் எனப் புராணங்கள் விவரிக்கின்றன.

சகல சம்பத்துகளையும் அருளும் செளபாக்ய கெளரி

கெளரி தேவி பதினாறு வடிவங்களில் திகழ்வது போன்று, அவளுக்கு உரிய விரதங்களும் பல விதங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவற்றில் பங்குனி மாதம் வளர்பிறை திருதியையில் கடைப்பிடிக்கப்படுவது, ஸ்ரீசெளபாக்கிய கெளரி விரதம்.

ஸ்ரீசெளபாக்கிய கெளரிதேவியை ஸ்ரீசம்பத் கெளரி என்றும் அழைப்பர். வாழ்வில் வளம்பெற உணவு, உடை, அணிமணிகள் உறைவிடம் முதலியவை அவசியமாகும். இவையே சம்பத்துக்கள் எனப்படும்.
ஆதிநாளில் பசுக்களே உயர்ந்த செல்வமாகக் கருதப்பட்டன. நல்ல உணவைப் பெறவும், கால்நடைகள் பெருகவும், வயல் நன்கு விளையவும் அன்னையின் அருள் அவசியமா கிறது. பசுக் கூட்டங்களின் நடுவில் வீற்றிருந்து அவற்றைக் காத்து விருத்தி செய்யும் அம்பிகையை ‘சம்பத் கெளரி’ என்று கொண்டாடுகின்றனர்.
காசி நகரில் வீற்றிருக்கும் அன்னபூரணியையும் மகாமங்கள கெளரி, சம்பத் கெளரி என்று அழைக்கின்றனர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி என்ற பெயரில்  விநாயகர் வீற்றிருக்கிறார்.

இந்த தேவியின் அருளால் வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகமடைகிறார்கள்.

பங்குனி மாதம் வளர்பிறை திருதியை அன்று வீட்டைச் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, பூஜையறையில் கலசம் ஸ்தாபித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து, தூப- தீப ஆராதனையுடன் எளிய முறையில் அம்பிகையை வழிபடலாம். அத்துடன், கீழ்க்காணும் மந்திரத்தையும் சொல்லி வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும்.

ஸ்ரீகெளரி காயத்ரீ மந்திரம்:

ஓம் ஸுபதாயை வித்மஹே காம மாலின்யை தீமஹி;
தன்னோ கெளரீ: ப்ரசோதயாத்:


கருத்து: சுபத்தைத் தருபவளும், ஆசைகளை நிறைவேற்றுபவளுமான மகாகெளரி தேவியைத் தியானிக்கிறேன்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும். சகல செளபாக்கியங்களையும் பெற்று இனிதாக வாழ்வர்.
 
 

ப்ரஹதி கெளரி விரதம்!

பாத்ரபத (புரட்டாசி) மாத க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி. ப்ரஹதி கெளரி வ்ரதம்.

ப்ருஹதி என்றால் கண்டங்கத்ரிக்காய்.




இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பூஜை செய்யலாம் அல்லது கண்டங்கத்ரிக்காய் அம்மனுக்கு அருகில் வைத்து பூஜிக்கவும்.

கத்திரிக்காய் சாதம் நிவேத்யம் செய்யவும்..

இதனால் நாம் விரும்பும் அளவை விட மிக பெரிய அளவில் நாம் எதிர் பாராத நேரத்தில் நன்மைகள் வருகிறது.