புதன், 17 ஆகஸ்ட், 2016

ஜோதிர்லிங்க ஸ்லோகம்!

 
”செளராஷ்ட்ரே சோமனாதம்ஞ்ச ஸ்ரீஸைலே மல்லிகார்ஜூனம்
உஜ்ஜெய்ன்யாம் மஹாகாளம் ஓம்காராம் அமலேஸ்வரம்
ப்ரஜ்வஸ்யாம் வைத்யநாதாஞ்ச டாகின்யாம் பீமாஸங்கரம்
ஸேது பந்தேது ராமேஸம் நாகேஷம் தாருகாவனே
வாரணாஸ் யாந்து விஸ்வேஸம் த்ரயம்பகம் கெளதரீதே
ஹிமாலயேது கேதாரம் க்ருஸ் ணேஸம்ஞ்ச விஸாளகே”

 
ஜோதிர்லிங்க ஸ்லோக விளக்கம்!
புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே
அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும்
தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற
சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை
வணங்குகிறேன்.

நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும்
பொருட்டு வணங்குகிறேன்

நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர்  என்ற
 அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன்.

தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில்நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர்  என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய
பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.
 

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த  த்ரியம்பகேஸ்வரர்  என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும்  பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும்,மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய  விஸ்வநாதரைச்  சரணடைகிறேன்.
 
 

ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம்!

அடி முடி காணாமல் நாரணனும், நான்முகனும் ஈசனை துதிக்க,
ஈசன் ஜோதி வடிவில் அவர்களுக்குக் காட்சி தந்தார். அந்நாளே
கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. பாரெங்கும் பரமன்
பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு திருக்கோலங்களில்
அருளாட்சி புரிந்தாலும் குறிப்பாக 12 சிவத்தலங்கள் ஜோதிர்லிங்கத்
தலங்களாக போற்றப்படுகின்றன. கைலாயத்திலிருந்து ஐந்து
ஆத்மலிங்கங்களை ஈசனிடம் பெற்று வந்து சைவத்திற்கும்
சௌந்தர்யலஹரியைப் பெற்று வந்து சாக்தத்திற்கும் பேருதவி
செய்த ஆதிசங்கர பகவத்பாதாள், அந்த 12 ஜோதிர்லிங்கத்
தலங்களையும் தரிசித்து துதித்து அருளியுள்ளார். அந்தத் துதியை
கார்த்திகை தீபத்தன்று துதித்தால் அனைத்து நலன்களும்
கிட்டுவதோடு 12 ஜோதிர்லிங்கங்களை தரிசித்த மகத்தான
புண்ணியமும் சேரும்.

ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
பக்திப்ராதாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே

மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில்,
ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு
அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.

ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்

பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின்
உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம்
செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய
சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக
உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.

அவந்திகாயாம் விஹிதாமதாரம்
முக்திப்ரதாய ஸஜ்ஜநாநாம்
அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்

அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால
மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில்
ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை
 மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.

காவேரிகா நர்மதாயோ பவித்ரே
ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேக பீடே

காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு),
நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம்
என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான
ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.

பூர்வாத்தரே பாரவிகாபிதா நே
ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம்
ஸுராஸுராராதித பாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி

வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய
சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட
அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை
நமஸ்காரம் செய்கிறேன்.

ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே
விபூஷிதாங்கம் விவிதை: போகை
ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம்
ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே

தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான
நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு
விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக
மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான
நாகநாதனை வணங்குகிறேன்.

ஸாநந்தமாநந்தவநே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்
வாரணாஸி நாதமநாத நாதம்
ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே

ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால்
வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை
அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு
அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன
காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன்.

ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே
நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை:
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி

புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும்
இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால்
வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை
அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.

ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம்
கோதாவரீ பவித்ர தேசே
யந்தர்சனாத் பாதகஜாதநா:
ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே

ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக
சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும்
கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட
மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த
த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.

ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை:
ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை
கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே

ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு
 பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள்,
உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும்
ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை
நமஸ்கரிக்கிறேன்.

ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந்
ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம்
வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம்

ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில்
அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும்
போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத
குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை
வணங்குகிறேன்.

ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா
ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச
தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை:
ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி.

இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன்
தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக
செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று
இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்.
 
 
 

விக்ரமாதித்யன் - சில தகவல்கள்!

உஜ்ஜயினி!

 அயோத்யா, காசி,காஞ்சி, மாயா, மதுரா, அவந்தி, த்வாரகா என்ற சப்த மோட்ச புரிகளில் அவந்தி எனப்பட்ட ஊர்தான் இது.

த்வாதச ஜ்யோதிர்லிங்கங்களில் மகாகாளேஸ்வரும், 51 சக்தி பீடத்தில் முழங்கை விழுந்த தலமாக ஹர்ஸித்திமாதாவும் கோவில் கொண்டுள்ளனர். மிகப்பெரிய மகானாக விளங்கிய பர்த்ருஹரியும், விக்ரமாதித்யன் எனப்பட்ட சந்த்ரகுப்த மௌரியனும் , சாம்ராட் அசோகனும் ஆண்டபூமி. இப்போது 12 ஆண்டுகளுக்கொருமுறை நடக்கும் மகாகும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. உஜ்ஜயினியில் அதற்கு “ ஸிம்ஹித்மேளா“ என சிறப்பு பெயர்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் வெளிப்பட்டபோது இந்த்ரன் மகன் அதனை எடுத்துக்கொண்டு விரைய, அசுரர்கள் தொடர, 12 ஆண்டுகள் அமிர்த கலசத்திற்காக இழுபறி. அந்த நேரத்தில் கலசம் கீழே வைக்கப்பட்டு, எடுக்கப்பட்டு தளும்பிய இடங்கள் நான்கு. அவை ஹரித்வார், உஜ்ஜயினி, அலகாபாத், நாசிக். இந்த நாளை கணக்கிட்டு, இத்தலங்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது.


விக்ரமாதித்யன் உஜ்ஜயினியை திறம்பட ஆண்டு, இந்தியாவையும் தாண்டி, அவனது சாம்ராஜ்யம் விரிவடைந்தது. அவனது அவையில் “நவரத்ன” ங்களான – வரருசி, தன்வந்த்ரி, க்ஷிணமகர், காளிதாஸ், அமரசிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், வராஹமிஹிரர், கடகற்பர் – ஒவ்வொருவரும் விக்ரமாதித்யனின் நல்லாட்சிக்கு நற்றுணையாக விளங்கினர். 

விக்ரமாதித்யன் இன்னொரு சகோதரன் பட்டியை, மந்திரியாக கொண்டிருந்தார். பட்டி மிகுந்த மதிநுட்பம் மிகுந்தவர். இருவரும் காட்டில், காளியை நோக்கி தவம் செய்தபோது, காளி தோன்றி, ஒரு குளத்தில் செல்வம் மிகுந்திருப்பதை எடுக்க அதன் நீரை தொடாமல் ஒரு சூலத்தை தொடவேண்டும் என நிபந்தனை விதிக்க, பட்டி தன் மதிநுட்பத்தால் அதனை அடைய உபாயம் கூற, உடல் வலிமையால் விக்ரமாதித்யன் TARGETடை அடைய, இருவரும் காளியின் அருளால் அந்த மிகு செல்வத்தை பெற்று உஜ்ஜயினியை புதுக்கினர்.

ஜெகம் புகழும் மன்னனின் உதவி, இந்த்ரனுக்கும் ஒருநாள் தேவைப்பட்டது, தன் நடன மங்கைகள், ரம்பை, ஊர்வசி இருவரில் யாருடைய நாட்டியம் சிறந்தது என்பதனை கண்டறிய ! தேவருலகம் அடைந்த விக்ரமாதித்யன், அன்று இருவரின் நடனத்தை கண்டு, அடுத்தநாள் தனது தீர்ப்பை சொல்வதாக கூறிச்சென்றான். அடுத்தநாள் இருவருக்கும் ஒரு மாலையை கொடுத்து ஆடச் செய்தான். இறுதியில் ஊர்வசியின் நாட்டியமே சிறந்தது என தீர்ப்பளித்தான். அதற்காக இந்திரன் பரிசாக ஒரு சிம்மாசனத்தையும் 1000 ஆண்டுகள் சிறப்பாகஆட்சி புரியும் வரமும் தந்தான்.

 
அவன் ஊர்வசியை தேர்தெடுக்க ஒரு உபாயம் செய்தான். மறுநாள் மலர்மாலை வழங்கியபோது ஒவ்வொரு மாலையிலும் தேனீக்களை பூக்களில் விட்டு, அதை அணிந்து நடனமிட சொன்னான். ரம்பாவின் நடனத்தில் லயம் இல்லாததால், அந்த தேனீக்கள் சீண்டப்பட்டு மலர்களைவிட்டு வெளியே பறக்க, அதில் பயந்த அவளது நடனம் தாளத்திலும் தடம் புரண்டது. ஆனால், ஊர்வசியோ, தாள, லயத்துடன் ஒன்றி நயமாக ஆடியதால், ஒரு இடையூறுமின்றி, அவளது மாலையில் இருந்த தேனீக்கள், பூவில் இருந்த மதுவை குடித்து, மயங்கியே கிடந்தன. ஊர்வசியும் நிறைவான நாட்டியத்தை குறையிலாது வழங்க, சகலகலா வல்லானாகிய விக்ரமாதித்யனுக்கு தீர்ப்பு வழங்க, இதுவே போதுமானதாக இருந்தது.

 
இந்த்ரன் அளித்த சிம்மாசனத்தில் அமர்ந்து திறம்படி ஆட்சி செய்தவனுக்கு, பட்டிக்கும் 1000 ஆண்டு ஆயுள் கிடைத்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்றியது. பட்டியை காட்டில் இருந்த காளியை தரிசித்து வரம் வாங்கிவர அனுப்பினான். பட்டியின் தவத்தை மெச்சிய காளி, தனக்கு ஒரு உயிர்பலி கொடுத்தால், வேண்டும் வரம் தருவதாகக் கூறினாள். விக்ரமாதித்யனிடம் வந்து கூறி, கூடவே ஒரு உபாயமும் கூறினான். அதன்படி, காளிக்கு விக்ரமாதித்யனையே பட்டி உயிர்பலி கொடுத்தான். காளி, அவன் கேட்ட 200 வருட ஆயுளை அளித்தாள்.  வரம் பெற்ற பட்டி, காளியை பார்த்து, கிண்டலாக நகைத்தான். ஏன் என வினவிய காளியிடம், “இதோ உயிர் பலி கொடுக்கப்பட்டு, தலை இழந்து உன் காலடியில் கிடக்கும், இந்த விக்ரமாதித்யனுக்கு இந்த்ரன் 1000 வருட ஆயுள் வரம் அளித்தான். எனக்கு 200 வருட ஆயுள் வரம் நீ கொடுத்துள்ளாய். இனி, நான் எத்தனை நாளில் இறப்பேனோ” என கேலி செய்ய, கோபம் கொண்ட காளி, “ இந்த்ரனை விட எனது வரத்திற்கு வலிமை அதிகம், இதோ பார், விக்ரமாதித்யனுக்கு நான் உயிர் அளிக்கிறேன். இருவருக்கும் 2000 வருடம் அரசாள வரம் அளிக்கிறேன்” என, உயிர் பெற்ற நண்பனுடன், வரம் பெற்ற பட்டி, நாடு திரும்பி, அடுத்ததாக ஒரு  திட்டம் தீட்டினான் . . . !!

 
மதி நுட்பம் மிகக்கொண்ட பட்டி, காளி இருவருக்கும் அரசாளத்தானே வரம் தந்தாள், எனவே, விக்ரமாதித்யன் ஆறு மாதம் நாடாள வேண்டும், அந்த சமயம் பட்டி ஆறு மாதம் காட்டில் இருக்க வேண்டும், அடுத்த ஆறு மாதம் பட்டி நாடாள வேண்டும், அப்போது விக்ரமாதித்யன் ஆறு மாதம் காட்டில் இருக்க வேண்டும் என்று இருவரும் பேசி முடிவு கட்டியபடி காளி கொடுத்த வரத்தையே இருமடங்காக்கி இருவரும் சிறப்புற ஆட்சி செய்தனர் !!
 

அவரது சிம்மாசனம் பற்றியும் கேள்வி பட்டிருக்கிறோம். அதில் ஏறி அமர 32 படிகள், அகலமான படிகளில் சிலைகள். விக்ரமாதித்யனின் சிறப்பான ஆட்சிக்கு அவற்றின் மதிநுட்பமும் பங்கு வகித்தன. சாபம் பெற்ற ‘‘அப்சரஸ்‘‘களான அவர்களது பெயர்களும் எவ்வளவு அழகு !!
 
1.ரத்னமஞ்சரி     9.மதுமதி             17.வித்யாவதி          25.த்ரிநேத்ரி
2.சித்ரலேகா      10.ப்ரபாவதி          18.தாராவதி              26.ம்ருகயானி
3.சந்த்ரலேகா    11.த்ரிலோசனா   19.ரூப்ரேகா             27.மலயவதி
4.காமகந்தளா   12.பத்மாவதி         20.ஞானவதி             28.வைதேகி
5.லீலாவதி         13.கீர்த்திமதி         21.சந்த்ரஜோதி        29.மன்வதி
6.ரவிபாமா         14.சுநயனா             22.அருணஜோதி    30.ஜெயவக்ஷ்மி
7.குமுதா             15.சந்த்ரவதி           23.தருமவதி             31.கௌசல்யா
8.புஷ்பவதி         16.சத்யவதி            24.கருணாவதி        32.ராணிரூபவதி
 
தேவலோக விருந்துக்கு ஈடான தேன், கதலி, நெய், இஞ்சி, மிளகு சேர்த்து சமைத்து , பூலோகவிருந்தாக பருப்பும், அன்னமும், காய்கறியும், தயிரும், மோரும் பரிந்து பரிமாற வேண்டும்!
 
மன்னன் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் இருந்தபோது
அவர்  தவறாது ஹரிசித்தி ஆலயத்துக்கு வந்து பூஜைகளை
செய்வாராம். விக்ரமாதித்தனின் 32 பதுமைகளுடன் கூடிய
சிம்மாசன ஆலயம் ஹரிசித்தி ஆலயத்தில் இருந்து பத்து மீட்டர்
தள்ளி உள்ளது. அந்த காலத்திலேயே மனிதராக வாழ்ந்து
வந்திருந்த ஒரு மன்னனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு
இருப்பது விந்தைதான்.  ஆனால் அவர் மனிதரல்ல
விக்ரமாதித்தியன் மனித உருவில் வந்த ஒரு தேவ கணம்
என்பதாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்கிறார்கள்.
விக்ரமாதித்தியன் தேவலோக அதிபதியான இந்திரனின் மகனான
கந்தர்வசேனனின் மகன் ஆவாராம். அவர் தனது ஐந்தாவது
வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்துள்ளார்.
அவருடைய வம்சத்தினர் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில்
இருப்பார்கள் என்ற வரத்துடன் பூமியில் வந்துள்ளார்.

 
விக்ரமாதித்தியன் இரண்டு கதைகளுடன் சம்மந்தப்பட்டவர்.
 'விக்ரம் மற்றும் வேதாளம்' எனும்  கதைகள் பிரபலமானவை.
அது போலவே அவர் அமர்ந்த முப்பத்தி இரண்டு தங்கப்
பதுமைகளைக் கொண்ட சிம்மாசனமும் பெரும் புகழ் பெற்ற
கதையை பின்னணியாகக் கொண்டவை. விக்ரமாதித்தியன்
நேர்மையான ஆட்சியை தந்தவர். இந்த சிம்மாசனத்தில்
அமர்ந்து கொண்டுதான் அவர் அனைத்து முக்கிய முடிவுகளையும்
எடுப்பாராம். அது மட்டும் அல்ல குற்றங்களையும் அதில்
அமர்ந்து கொண்டுதான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவாராம்.
உஜ்ஜயினியில் சனி பகவானுக்கு ஆலயம் எழுப்பியவர் மற்றும்
தமது அரச சபையில் காளிதாசனையும் சேர்த்து ஒன்பது
நவரத்தினங்கள் எனப்படும் கவிஞர்களை வைத்திருந்தவர்.

 
அவர் பூமிக்கு வந்தபோது அவருக்கு இந்த சிம்மாசனத்தை
இந்திரன் கொடுத்தாராம். அதில் இருந்த தங்கப் பதுமைகள்
தேவ லோகத்தில் இருந்த அப்சரஸ்கள். ஒருமுறை அவர்கள்
பார்வதியின் சாபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்கு வந்து அந்த
சிம்மாசனத்தில் தங்கப் பதுமைகளாக அமர்ந்து கொள்ள வேண்டி
 இருந்தது. அவர்களுக்கு சாப விமோசனம் விக்ரமாதித்தியன்
பரம்பரையில் வரும் போஜராஜன் எனும் மன்னன் மூலமே
கிடைக்கும் என்பது விதியாக இருந்தது.


விக்ரமாதித்ய மன்னர்


இந்த நிலையில் போஜராஜன் அரியணை ஏறிய பின்னர் அவர்
ஒரு இடத்தில் புதைந்து இருந்த அந்த சிம்மாசனத்தை கண்டெடுத்து
அதை தனது அரச சபைக்கு எடுத்துச் சென்று அதில் அமர முயற்சி
செய்தபோது அந்த தங்கப் பதுமைகள் அவரிடம் சில கேள்விகளைக்
கேட்டு விட்டு சாப விமோசனம் பெற்று தேவலோகத்துக்குச் சென்று விட்டன.

 
அந்த சிம்மாசனமே இந்த ஆலயத்தில் உள்ள சிம்மாசனம்
என்கிறார்கள். இங்குள்ளது அதன் மாதிரி சிம்மாசனமே என்றும்,
ஆனால் பண்டையக் காலத்தில்  வனப்பிரதேசமாக இருந்த இந்த
ஆலயம் உள்ள இடத்தின் அடியில்தான் போஜராஜ மன்னனால்                     
அந்த சிம்மாசனம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும், அதுவே இந்த
ஆலயம் அமைந்ததின் பின்னணி என்றும் கூறுகிறார்கள்.
இதை விக்ரமாதித்தனும் முப்பத்தி இரண்டு பதுமைகளும் என்கின்ற
 ஆலயமாக கருதி வழிபடுகிறார்கள்