வெள்ளி, 10 மார்ச், 2017

நோயை குணமாக்கும் தேவதைகள்!

ஒவ்வொரு நட்சத்திரப்படியும், அவரவரது ஆறாவது நட்சத்திரதிற்குண்டான அதி தேவதைகளை வாங்கும்போதும், அவர்களது தானியங்களை உபயோகப்படுத்தும் போதும், நோய் குணமாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

அசுவினி, மகம், மூலம் - துர்க்கா தேவி, உளுந்து வடை  

பரணி, பூரம், பூராடம் - சிவன் - சுண்டல்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சாஸ்தா, ஆஞ்சநேயர் - புளியோதரை 

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - பெருமாள், மிளகு பொங்கல்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - விநாயகர், பெரும் பயறு

திருவாதிரை, சதயம், ஸ்வாதி - ஸ்ரீ மஹாலக்ஷ்மி, சர்க்கரை பொங்கல் 

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - சிவன், தேன்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - வாராகி, மாதுளை

ஆயில்யம், கேட்டை, ரேவதி - முருகன், பால் 


திங்கள், 27 பிப்ரவரி, 2017

நல்லன எல்லாம் அருளும் நாச்சியார் கோவில்!



ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.

கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. இதை திருமங்கையாழ்வார் பாடிய, ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற பாடல் மூலம் அறியலாம். கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.

நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.

தல வரலாறு :

சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.

பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.

கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.

ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின் போது ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது கல்கருட உற்சவரை சன்னிதியில் இருந்து தூக்கும்போது நான்கு பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும் போது, 4 என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்று தூக்குவோரின் எண்ணிக்கை உயரும். வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்து, உற்சவரை சன்னிதியில் வைக்கும் போது தொடக்கத்தில் இருந்த நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.

இந்த வைபவத்திற்கு தலவரலாறு ரீதியாக ஒரு விளக்கமும் அளிக்கிறார்கள். அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ஒரு வரம் அளித்தார். அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார் என்பதே அந்த வரம். தாயார் இந்த சன்னிதியில் அன்ன வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.

இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். 

இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது. அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. 


சக்கரபாணி கோவில் - கும்பகோணம்!

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.



உத்திர கோச மங்கை மங்கள நாயகி!


உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. 


ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.

அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப-விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது. 

பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின் முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. 


ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.


 இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.



அம்பிகையின் சக்தி பீடங்கள்!

அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள்!


1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம் 5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம் 6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு


11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உத்திர பிரதேசம்51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்





உஜ்ஜைன் மகா காளி ஆலயம் (கடகாலிகா )!

காளிதாசன் அருள் பெற்ற - உஜ்ஜைன் மகா காளி ஆலயம் (கடகாலிகா ) அதிசய தகவல்கள்!

 
உஜ்ஜைன்/அவந்திகா என்று சொல்லப்படும் இந்த நகரம் பூலோகத்தின் நாபிதேசம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மஹாராஜா விக்கிரமாதித்தியன் அரசாட்சி காலத்தில் உஜ்ஜைன் பாரதத்தின் தலைநகரமாக இருந்தது. பாரதீய ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் தேசாந்தரத்தின் சூன்யரேகா உஜ்ஜைனி லிருந்து தான் ஆரம்பிக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம். முக்தி தரும் ஏழு புரிகளில் இது ஒன்றாகும்.

உஜ்ஜைன் மிக வைபவம் பொருந்திய நகரமாக விளங்கியது. துவாபர யகத்தில் கிருஷ்ணனும், பலராமனும் ஸாந்தீபநி ஆசிரமத்தில், சாந்தீபநி முனிவரிடம் அத்யயனம் செய்து (கல்வி பயின்று) வந்தனர். இக்காலத்தில் இது மிக முக்கிய சிவஸ்தலமாக உள்ளது.


12 ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றான மஹாகால லிங்கம் இங்கு தரிசனம் அளிக்கிறார். 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். சதியினுடைய முழங்கை முழங்கால் இங்கு விழுந்ததாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது. ருத்ரஸாகர் ஸரோவர் பக்கத்தில் ஹரஸித்தி தேவி கோயிலில் சக்தி பீடம் இருக்கிறது. இங்கு மூர்த்திக்குப் பதிலாக முழங்கைக்குப் பூஜை நடை பெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குரு சிம்மராசியில் மேலும் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிற சமயம் இங்கு கும்பமேளா (ஸிம்ஹஸ்த மகாகும்பம்) நடைபெறுகிறது. ஆறு ஆண்டு களுக்குப்பின் அர்த்த கும்ப மேளா நடைபெறுகிறது.

இது கிருஷ்ண பகவானின் பாத தூளிகள் படிந்த புனிதமான இடம். புராதன காலத்தில் முனிவர்களின் தபோ பூமியாக இருந்தது.

1. மகாகால மந்திர், 2. ஹரஸித்தி தேவி, 3. படே கணேஷ், 4. கோபால மந்திர், 5. கட காலிகா, 6. பர்த்ருஹரி குகை, 7. கால பைரவர், 8. ஸாந்தீபநி ஆச்ரமம் (அங்கபாத்), 9. ஸித்தவட், 10. மங்களநாத், 11. வேதசாலா (வான மண்டல பரிசோதனை சாலை), 12. க்ஷிப்ரா நதி. 


ப்ராநதீ: உஜ்ஜைன் நகரத்தில் ஓடும்  ப்ராநதி மிகவும் புனிதமானதாகும். விஷ்ணு பகவானின் இருதயத்திலிருந்து க்ஷிப்ரா நதி உண்டானது என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பெயர் மீன கங்கா. உஜ்ஜைன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

1. நரஸிம்ஹ காட், 2. ராம காட், 3. பிசாச மோசன் தீர்த்தம்,  4. சத்ரீ காட், 5. வாமன தீர்த்தம், 6. கந்தர்வ தீர்த்தம் ஆகியவை பிரசித்தமான படித்துறைகள். ஒவ்வொரு படித்துறையிலும் கோயில்கள் உள்ளன. கங்கா தசஹரா, கார்த்திக் பூர்ணிமா, வைகாசி பூர்ணிமா பருவங்களில் இங்கு மேளா நடைபெறுகிறது.

குரு சிம்மராசியில் சஞ்சரிக்கும் சமயம் ப்ராநதியில் ஸ்நானம் செய்வது, மகத்துவம் பொருந்தியது. ‡ப்ரா நதி கந்தர்வ தீர்த்தத்தின் அப்பாலுள்ள பாலத்தின் வழியாக அக்கரை சென்றால் அங்கு தத்தவின் அகாடா, கேதாரேச்வரர், மேலும் ரணஜீத் ஹநுமான் கோயில் இருக்கின்றன. அங்கு உள்ள மயானத்திற்கு அப்பால் வீர துர்கா தாஸ் ராடௌரின் “சத்ரீ” மேடை உள்ளது. இன்னும் தள்ளி ருணமுக்த மகாதேவர் கோயில் உள்ளது.

மஹாகால மந்திர் : உஜ்ஜைன் (புண்ய) தீர்த்த க்ஷேத்திரத்தில் - பிரதானமான மேலும் விசாலமான மகா கால மந்திர், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் வளாகம், பூமி மட்டத்திலிருந்து கொஞ்சம் கீழே உள்ளது. வளாகத்தின் மத்தியில் உள்ள இந்தக் கோயிலில் இரண்டு  பகுதிகள் உள்ளன. பூமி மட்டத்தில் உள்ள பகுதியில் கோயிலின் மேல்பாகம் உள்ளது. இங்கு சங்கரின் லிங்கமூர்த்தி ஓங்காரேச்வரர் கோயில் கொண்டுள்ளார். இதற்கு நேர் கீழே உள்ள பகுதியில் (கோயில்) மகாகால லிங்கமூர்த்தி தரிசனம் அளிக்கிறார்.

விசாலமான மஹாகாளேச்வரரின் (லிங்கமூர்த்தி) “ஜலஹரி” அதாவது சிவலிங்கத்திற்கு மேலே தொங்கவிடப்பட்டிருக்கும், ஜலம் நிரம்பிய, அடிபாகத்தில் துளை உள்ள, குடத்தின் மேல் பாகத்தில் நாகப் பிரதிமை அதை வளைத்துச் சுற்றியுள்ளதைக் காணலாம். ஒரு பக்கம் கணேசரும், மற்றொரு பக்கத்தில் பார்வதியும், மூன்றாவது பக்கத்தில் கார்த்திகேயரையும் காணலாம். ஸந்நிதியில் ஒரு நெய் தீபம், மேலும் ஒரு எண்ணெய் தீபம் (அகண்ட தீபம்) விடாமல் ஜ்வலித்துக் கொண்டு இருக்கும்.

கோயிலின் மேல்பகுதி சுற்றுக்கட்டு வெளிப்பக்கத்தில் (முற்றம்) பல சன்னிதிகள் உள்ளன. அதில் அனாதிகாளேச்வர், மேலும் விருத்த காளேச்வர் ஸந்நிதிகள் விசாலமானவை. மஹா கால கோவில்/சன்னிதிக்குப் பக்கத்தில்-கீழே சபா மண்டபமும், அதற்குக் கீழே கோடி தீர்த்த ஸரோவரும் உள்ளது.

மஹாகாளேச்வர் சபா மண்டபத்தில் ஸ்ரீராமர் கோயிலும், ராமருக்குப் பின்னால் அவந்திகாபுரியின் அதிஷ்டாத்ரி தேவி -அவந்திகா தேவி காட்சியளிக்கிறாள்.

படே (பெரிய) கணேசர் : மஹாகால மந்திர் பக்கத்தில் பெரிய கணேசர் கோயிலும், அதன் அருகில் பஞ்சமுக ஹனுமார் கோயிலும் உள்ளன. இந்தக் கோவிலில் பல தேவமூர்த்திகளை சேவிக்கலாம்.

ஹரஸித்தி தேவி : ருத்ர ஸரோவருக்குப் பக்கத்தில் மதில் சுவர்களால் சூழப்பட்டுள்ள ஹரஸித்தி தேவியின் சிறந்த கோயில்= அவந்தியின் சக்தி பீடம் உள்ளது. மஹாராஜா விக்கிரமாதித்திய னால் - ஆராதிக்கப்பட்ட பவானி தேவி-குலதெய்வம் இங்கு தரிசனம் அளிக்கிறாள். ஹரஸித்தி தேவியின் ஒரு கோயில் ஸௌராஷ்ட்ராவில் மூல துவாரகாவிற்கு அப்பால் சமுத்திரத்தின் வளைகுடாவின் ஒரு குன்றில் இருக்கிறது. மஹாராஜா விக்கிரமாதித்தியன் அங்கு தேவியை பக்தியுடன் ஆராதித்து-தனது பக்திமூலம் தேவியைத் திருப்தி செய்து அவந்திக்கு எழுந்தருளச் செய்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. மேற்படி இரண்டு இடத்திலும் மூர்த்திகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. கோயிலில் தேவியின் மூர்த்தியின் முக்கிய பீடத்தில் “ஸ்ரீயந்திரம்” தான் உள்ளது. அதற்குப் பின்புறம் அன்னபூர்ணாவைக் காணலாம். இன்றும் மூல துவாரகாவின் கோயிலிலும் அந்தத் தேவியின் ஒரு அம்சம் உள்ளது. கிழக்கு வாசலை ஒட்டி ஸப்தசாகர் ஸரோவர் உள்ளது. ஹரஸித்தி தேவி கோவிலின் பின்புறம் அகஸ்தியேச்வர் ஸ்தானம் உள்ளது.

24. கம்பங்கள் : மஹாகால் கோயிலிலிருந்து கடைவீதிக்குச் செல்லும் வழியில் 24 கம்பங்கள் உள்ளன. முன்பு புராதனமான நுழைவாயில் இருந்த இடம். இது பத்திரகாளியின் ஸ்தானம்.

கோபால மந்திர் : நகரத்தின் கடை வீதியில் கோபால மந்திரில் ராதாகிருஷ்ணன் மேலும் சங்கர் மூர்த்திகளைச் சேவிக்கலாம்.

அங்கபாதம் (ஸாந்தீபநி ஆச்ரமம்) கோபால மந்திரிலிருந்து மங்களேச்வர் செல்லும் மார்க்கத்தில், 3 கி.மீ தூரத்தில் ஸாந்தீபநி ஆசிரமம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன், சுதாமா ஆகியோர் இங்கு ஸாந்தீபநி முனிவரிடம் குருகுலவாசம் செய்து அத்யயனம் செய்தனர், கல்வி பயின்றனர். இங்கு கோமதி ஸரோவர், மேலும் ஒரு நந்தவனம் உள்ளது. மஹரிஷி ஸாந்தீபநி, அவரின் குமாரன், கிருஷ்ணன், பலராமன், மேலும் சுதாமாவின் மூர்த்திகள் உள்ளன. இங்கு ஸ்ரீவல்லபாசார்யரின் பீடம் இருக்கிறது. அருகில் விஷ்ணு ஸாகர், புருஷோத்தம ஸாகர், சித்ர குப்தனின் இடம் பார்க்கலாம். அங்கபாதத்திலிருத்து மேற்கே உள்ள ஜனார்தன் மந்திர் செல்லலாம்.

கடகாலிகா : கடகாலிகா கோயிலுக்குக் கோபால் மந்திர் வழியாக (சுமார் 2 கி.மீ.) செல்ல வேண்டும். கவி காளிதாசர் கடகாலிகா தேவியை பூஜை செய்துதான், காளி தேவியின் அனுக்கிரகத்தால் மஹாகவியாக விளங்கினார். பக்கத்தில் உள்ள ஹநுமான் கோயிலுக்கும், கணேசர் கோவிலுக்கும் செல்லலாம். அங்கு அழகான விஷ்ணு பகவானை சேவிக்கலாம். பக்கத்தில் ‡ப்ரா நதியின் படித்துறையில் ஸதிகளின் நினைவுச் சின்னம் பார்க்கலாம்.



பர்த்ருஹரி குகை : காலிகா மந்திரின் வடதிசையில் அரை கி.மீ. தூரத்தில் பர்த்ருஹரி குகையும்-சமாதியும் உள்ளது.


காலபைரவ் : நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ‡ப்ரா நதிக் கரையில் ஒரு குன்றின் மேல் காலபைரவ் கோயில் காணலாம்.

ஸித்தவட் : கால பைரவ் கோயிலுக்குக் கிழக்கே ஸிப்ரா நதியின் அக்கரையில் ஸித்தவடத்தில் உள்ள ஆல விருக்ஷத்தின் கீழே நாகபலி, நாராயண பலி முதலியவை அளிப்பது மகிமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

மங்களநாத் : அங்கபாதத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு குன்றில் மங்களநாத் கோயில் உள்ளது. பூமி புத்திரன் மங்கள க்ரஹம் இங்கு உண்டானதாகச் சொல்லப்படுகிறது.

வேதசாலா : வான மண்டல பரிசோதனைச் சாலை. வேத சாலையை இங்கு மக்கள் யந்த்ர மஹல்” என்று சொல்லுகிறார்கள். இது உஜ்ஜைன் தென்பாகத்தில் ப்ரா நதியில் தென்கரையில் இருக்கிறது. தற்சமயம் சிதிலமடைந்துள்ளது. இங்கு முன்பு ஆகாய மார்க்கத்தில் கிரஹ-நக்ஷத்திரங்களின் கதியை/சஞ்சாரத்தை அறிய சிறந்த இயந்திரங்கள் இருந்தன. தற்சமயத்திலும் சில இயந்திரங்கள் இருக்கின்றன.

அவந்தியில் பஞ்சகோ‚ (ஐந்து கோஸ்), யாத்திரை- பிரதக்ஷிணத்தில்-பிங்களேச்வர், காயா வரோஹ ணேச்வர், பில்வேச்வர், துர்தரேச்வர் மேலும் நீலகண்டேச்வர் கோவில்கள்  அடங்கியுள்ளன. இதைத் தவிர பக்தர்கள் பின்கண்ட யாத்திரைகள் (ப்ரதக்ஷிணம்) மேற்கொள்கின்றனர்.

1.    ப்ரா நதிக்கரையில் 28 தீர்த்த யாத்திரை.
2.    மகாகால் யாத்ரா : ருத்ர ஸாகரிலிருந்து ஆரம்பிக்கும் இந்த யாத்திரையில் 24 தேவதைகளைத் தரிசிக்கலாம்.

க்ஷேத்திர யாத்ரா : சங்கோத்தார் க்ஷேத்ரம் - அங்கபாத் க்ஷேத்திர யாத்திரையில்  4 தீர்த்தங்கள் அடங்கியுள்ளன.

நகர பிரதக்ஷிணம் : நகர்வலம் இந்த நகர வலத்தில் நகரத்தின் 5 முக்கிய அதிஷ்டாத்ரி தேவிகளைச் சேவிக்கலாம்.

1. பத்மாவதி, 2. ஸ்வர்ணச்ருங்கா, 3. அவந்திகா, 4. அமராவதி, 5. உஜ்ஜைநீ
நித்ய யாத்ரா : ப்ரா ஸ்நாநம் செய்த உடன், கோடேச்வர், மஹாகால், அவந்திகா தேவி, ஹரஸித்தி தேவீ மேலும் அகஸ்த் யேச்வரைத்  தரிசனம் செய்கிறார்கள்.

துவாதச யாத்ரா : துவாதச யாத்ராவில், பிசாச மோசன் தீர்த்தத்திலிருந்து ஆரம்பித்து 12 தேவ மூர்த்திகளை வணங்கு கிறார்கள்.

ஸப்த ஸாகர் யாத்ரா : ஸப்த ஸாகர் யாத்திரையில் 7 தீர்த்தங்கள் அடங்கும்.
அஷ்ட மஹாபைரவ்: எட்டு மஹா பைரவர்கள், ஏகாதச ருத்ரர்கள், மேலும் தேவீ ஸ்தான் (13).

இங்கு 13 தேவீ ஸ்தானங்கள் மஹிமையுடன் விளங்கு கின்றன. அவந்திகா க்ஷேத்திரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அனேக சிவலிங்கங்களில் 84 முக்கியமானவையாகும்.

விஷ்ணு பகவானின் மஹிமை. உஜ்ஜைன் நகரின் சரித்திரத் திலும், பூகோளத்திலும், கதைகளிலும் மேலும் தத்துவத்திலும் காணக் கிடைக்கிறது. ஸாந்தீபநி ஆச்ரமம், மேலும் கிருஷ்ண பகவானின் விவரம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.

சமுத்திர மந்தன் சமயம் மோஹினீ ரூபத்தில் அமுதம் வினியோகிக்கும் ஸமயம் இங்குதான் ராகு/கேது தலையைத் துண்டித்ததாகவும், லக்ஷ்மீ தேவியுடன் பத்மா தேவி எழுந்தருளி யதால் இந்த இடம் பத்மாவதிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மஹாராஜ் இந்திரத்யும்னனுக்கு இங்குதான் விஷ்ணு பகவானின் அருள் கிடைத்தது. அதன்படி உள்ளுணர்வு தூண்டுதலால் ஆயிரக் கணக்கான மைல்கள் யாத்திரை செய்து நீலாஞ்சலில் (கிழக்கு சமுத்திரக் கரை) விஷ்ணு பகவானைத் தரிசித்தார். அவருடைய நியமனப்படி புரீயில் கோயில் கட்டி ஜகன்னாத பகவானை பிரதிஷ்டை செய்தார்.

பகவான் மஹாவிஷ்ணு இங்கு மிகுந்த வைபவத்துடன் விளங்குகிறார். பிரம்மாவும் சிவனும் இங்கு புனித சுவர்ண சிகரத்தின்கீழ் அமர்ந்து, அருள் பாலிக்கும் விஷ்ணு பகவானைத் தரிசிக்க வந்தனர். அது சமயம் மஹாவிஷ்ணு அவர்களின் விருப்பப்படி உஜ்ஜைன் நகரத்தின் வடதிசையில் பிரம்மாவையும், மகாதேவனைத் தெற்கேயும் எழுந்தருளச் செய்தார். அதனால் இந்த இடம் “கனக ச்ருங்கா” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த க்ஷேத்திரத்தில் விஷ்ணு தத்துவம், சிவ தத்துவம் இரண்டும் சமமாக வளர்வதைக் காண்கிறோம். வைகுண்ட சதுர்தசி தினம் (கார்த்திக் சுக்ல பக்ஷம்) மஹாகாளேச்வர், கோபால மந்திருக்குப் புறப்பாடு கண்டு அருளும் சமயம், அங்கு கிருஷ்ண பகவானுக்கு வில்வ பத்ரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்துடன் பஸ்ம-விபூதி பூஜை சமயம் கோபால பகவான் மஹா காளேச்வர் கோயிலுக்கு புறப்பாடு கண்டருளி அங்கு துளசி சமர்ப்பிக்கப்படுகிறது. உஜ்ஜைன் நகரத்தில், விஷ்ணு பகவானுக்கும், சிவனுக்கும் பேதம் பாராட்டுவ தில்லை. இந்த ஒற்றுமை, சமன்வயம் ஆதர்சமாக-சீரிய முன்மாதிரி யாக விளங்குகிறது.   பரஸ்பர வைபவங்கள்  அநேகம் உண்டு




மன மகிழ்வைத் தரும் ஆற்றுக்கால் பகவதி கோவில்!


பரசுராமரால் உருவாக்கப்பட்ட பகுதியே இன்றைய கேரளம் என்கிறது புராணத் தகவல்கள். இதன் காரணமாக கேரளத்தை இறைவனின் ஊர் என்று அழைக்கிறார்கள். கேரளத்தை உருவாக்கிய போது, பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள எல்லா அம்மன்களுமே பகவதி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள்.

இவற்றில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகச் சிறந்த ஆலயமாக விளங்குகிறது. 

சிறுமியாக வந்த அம்மன் :

கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலம் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதன் காரணமாக தெரிவிக்கப்படும் மற்றொரு தகவலை இங்கு காணலாம்.

பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி ஒருத்தி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, ‘என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா?’ என்று கேட்டாள்.

ஆனால் சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார்.

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, ‘தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்’ என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பெரியவர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவிலே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீ சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப் பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

பொங்கல் திருநாள் :

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின் போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு ‘பண்டார அடுப்பு’ என்று பெயர். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, ‘பண்டார அடுப்பு’ பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலிலே அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. ஏனெனில் இந்தப் பொங்கல் திருவிழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். அது ‘கின்னஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இதே போல் 2009-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதி நடந்த பொங்கல் விழாவின் போது 25 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்ததாக முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.