திங்கள், 27 பிப்ரவரி, 2017

ஹரிபலம் (நெல்லி)!

நெல்லிமரம் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. ஹரிபலம் என்றும் இதற்குப் பெயருண்டு. வீட்டில் நெல்லி மரம் வைத்தால் லட்சுமியின் அருள் உண்டாகும் என்பது ஐதீகம். இதனால் வீட்டில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் கிடைப்பதுடன், புண்ணியமும் சேரும். ஆனால், இதனை இரவு நேரத்தில் உண்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.

நெல்லி மரத்தின் நிழலில் அன்னதானம் செய்வது சிறப்பு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாளான துவாதசியன்று நெல்லிக்காயை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வர்.

நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லது. தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து துவையலும் அரைக்கலாம். ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான்.

சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம்.

அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.

ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள்!

ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:

"ஓம் வாக்தேவ்யை நம"

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியை புத ஜனன்னியை ஸ்வாஹா!


கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :

ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌!


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்!


சொந்த வீடு அருளும் திருப்புகழ்!

புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ் ஒன்றை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அளித்துள்ளார்.

"அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே

அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக

மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
மஞ்சினும் அயனாரும் எதிர்காண

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்துமயிலுடனாடி வரவேணும்

புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
புந்திநிறை அறிவாள! உயர்தோளா

பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா

தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
தண்தமிழின் மிகுநேய முருகேசா

சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே''

இத்திருப்புகழினை மனமுருகிப் பாராயணம் செய்து புதிய சொந்தவீடு வேண்டுவோர் பலருக்குத் தவறாமல் முருகன் வரம் அளித்துள்ளான்.

`அண்டர்பதி' என்று துவங்கும் பாடல் தன்னை பாடல் தன்னை பாடுவதால் சொந்தவீடு கிட்டுவதோடு இன்பம் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

காத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை!



முருகப் பெருமானின் மனைவியே வள்ளி தேவி.

அவளே காத்தாயி அம்மன் என்ற பெயரிலும்  கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயத்தில் கம்பீரமாக வீற்று உள்ளாள். ஒவ்வொரு கடவுளும் பல ரூபங்களில் பல இடங்களில் அவதரிக்கின்றார்கள். ரூபம் மட்டுமே மாறுபட்டு இருந்தாலும், அந்த கடவுள் ஒருவரே என இருந்தாலும் அந்தந்த ரூபங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடங்களில் தர வேண்டும் என்பதும் முக்கியம்.



காத்தாயியை  குலதெய்வமாகக் கொண்டவர்கள் காத்தாயிதானே வள்ளி தேவி என  வள்ளி மலைக்கு சென்று வள்ளியை வணங்கி விட்டு செல்வதும், வள்ளி மலையை  குல தெய்வமாகக் கொண்டவர்கள் சித்தாடிக்குச் சென்று  காத்தாயியை வணங்கி விட்டு இருந்து விடக் கூடாது.  எந்த உருவில் நம் முன்னோர்கள் ஒரு கடவுளை குல தெய்வமாக வணங்கினார்களோ அந்த உரு உள்ள இடத்துக்குச் சென்று குல தெய்வத்தை வணங்காவிடில் ஒருவருக்கு நன்மைகள் கிடைக்காது.  என்னதான் இருந்தாலும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்  குலத்தைக் காப்பது குல தெய்வம் மட்டுமே.



வள்ளிக்கு தனி ஆலயங்கள் இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை. அவற்றில் ஒன்று சித்தாடி மற்றும் இரண்டாவது வள்ளி மலை. மற்ற இடங்கள் அனைத்திலும் வள்ளிக்கு தனி சன்னதிகள் முருகன் ஆலயங்களில் உள்ளன.

அதற்குக் காரணம்  முருகப் பெருமானின் இரண்டு மனைவிகளில் தெய்வயானை  இந்திர லோகத்தில் தேவர்களில் பிறந்து முருகனை மணந்தவள். வள்ளி தேவியோ பூமியிலே மனித உருவில் பிறந்து முருகனை மணந்தவள். ஆனால் இருவரில் சக்தி அதிகம் பெற்றவள் வள்ளி தேவியே.  வள்ளி தேவியைப் பற்றிக் கதைகளும் நிறையவே உண்டு, தெய்வயானயை பற்றிய தனிக் கதைகள் குறைவு என்பதைவிட இல்லை என்றே கூறலாம்.  அதனால்தான் வள்ளி தேவி, தனித் தேவி என்பார்கள்.

வள்ளி தேவிக்கு வேலூருக்கு அருகில் வாலாஜாபேட் எனும் இடத்தில் உள்ள மலை மீது  ஆலயம் உள்ளது. அவளை அங்கு வள்ளிமலை வள்ளி அல்லது பொங்கு தேவி என்றும் அழைக்கின்றார்கள்.

இந்த வள்ளிமலை வள்ளி தேவியைப் பற்றியக் கதை இது.

பகவான் விஷ்ணுவிற்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் சுந்தரவல்லி மற்றும் கஜவல்லி என்பவர்கள். அவர்களுக்கு நல்ல கணவனை அவர் தேடிக் கொண்டு இருந்தபோது அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தாம் தம் மீது கோபமே கொள்ளாத ஒரு கணவனையே மணப்போம் என்று தந்தையிடம் கூறியபோது அங்கு தற்செயலாக முருகன் வந்தார். அவரைக் கண்ட இருவரும் அவரையே தமது கணவனாக அடைய விரும்பினார்கள். ஆகவே அவர்களை தாம் மணப்பதாக உறுதி கூறிய முருகப் பெருமான் அவர்களை வேறு பெண்களாகப் பிறந்து சில காலம் இருந்தால் தான் வந்து மணப்பதாகக் கூறினார்.



கஜவல்லி இந்திரனின் மகளாக தெய்வயானை என்ற பெயரில் பிறந்தாள். அப்போது சூரபத்மனினால் தேவ லோகத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை நீக்க முருகன் சூரபத்மனுடன் சண்டை இட்டு அவனை அழிக்க, அதைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் தனது மகளான தெய்வயானையை அவருக்கு மணம் முடித்தார். இப்படியாக தெய்வயானையின் ஆசை நிறைவேறியது.



அவர்கள் இருவரில் சுந்தரவல்லி பூமியில் வள்ளி என்ற பெயரில்  வேடவரின் மகளாகப் பிறந்த வள்ளியோ வேடர்களில் ஒருவளாக வாழ்ந்து வந்தாள். அவளும் முருகனின் பெருமையைப் பற்றி கேட்டு அறிந்து இருந்தாள். ஆனால் அவளுக்கு தன்னைப் பற்றிய பூர்வ  ஜென்மத்தின் கதை தெரியாது. ஆகவே அவள் மனதில் முருகப் பெருமான் பெரிய வீரர் என்ற எண்ணம் ஏற்பட அவரையே மணக்க ஆசை கொண்டாள். ஆனால் வேடவனின் மகளான அவள் எப்படி அவரை மணக்க முடியும்?

அப்போது வயலில் வேலை செய்து வந்தவள் யதேற்சையாக அங்கு மனித ரூபத்தில் திரிந்து கொண்டு இருந்த நாரதரை சந்தித்தாள். அவருடன் பேசிக் கொண்டு இருந்தவள் அவரை ஒரு மனிதர் என்று நம்பி அவரிடம் தான் முருகப் பெருமானை மணக்க ஆசைக் கொண்டு உள்ளதாகக் கூறினாள். நாரதரும் உடனே முருகப் பெருமானிடம் சென்று அவள் காதலைப் பற்றிக் கூறினார். ஆகவே இதுவே நல்ல தருணம் என எண்ணிய முருகப் பெருமானும் அந்த வயல் பகுதிக்கு வந்து ஒரு வேடன் போல தன்னைக் காட்டிக் கொண்டு அவளைக் காதலித்தார். இருவரும் பல ஆண்டுகள் ஓடி ஆடித் திரிந்து காதல் வயப்பட்டனர். ஒருவரை ஒருவர் மணக்க முடிவு செய்து கொண்டவுடன் அதற்கு வள்ளியின் வளர்ப்பு பெற்றோர் தடை போட்டார்கள்.

ஆகவே முருகனின் சகோதரரான விநாயகர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, முருகனின் வீரத்தையும், சக்தியையும் அந்த மலையில் காட்ட வைக்க இருவரின் குடும்ப சம்மதத்துடன் முருகப் பெருமான் வள்ளியை மணக்க வள்ளி தேவியின் பூர்வ ஜென்ம ஆசையும் நிறைவேறியது. அந்த மலை மீது முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் குடி கொண்டார்.



இந்த வள்ளிமலைப் பகுதியை சித்தபூமி என்கிறார்கள். அதன் காரணம் அங்கு பல சித்தர்கள்  வாழ்ந்து உள்ளார்கள். அவர்களில் வள்ளிமலை ஸ்வாமிகளான சச்சிதானந்தா ஸ்வாமிகள் என்பவர் மிகவும் பிரபலமான சித்தர். அவர் வள்ளி அம்மாவை நேரிலே சந்தித்து உள்ளார் என்பது இங்கு கூறப்படும் உண்மைக் கதை. அவரே வள்ளி தேவியை பொங்கி தேவி என அழைத்தார் என்று கூறுவார்கள். அந்த மலைக்  கோவிலுக்குச் செல்ல 300 க்கும் அதிக  படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும்.

ஆலயம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். சென்னையில் இருந்து நேரடியாக வேலூருக்குச் சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளி மலை ஆலயத்துக்கு செல்லலாம்.

ஆக வள்ளியின் பக்தர்கள்  சித்தாடிக்குச் சென்று காத்தாயி ரூபத்தில் உள்ள வள்ளியையும்  அல்லது வள்ளி மலைக்குச் சென்று வள்ளி ரூபத்தில் உள்ள காத்தாயியையும்   வணங்கி  அவள் அருளைப் பெற்றிடலாம்.




அம்பாஜி கோவில்!


அம்பாஜி – 51 சக்தி பீடங்களில் ஒன்று:

தட்சனுடைய யாகத்தில், பார்வதி உயிரை விட்டதால், அவரது உடலை சிவன் எடுத்துக் கொண்டு உக்கிரத்துடன் இருந்தார். உடலின் பகுதிகள் பல இடங்களில் விழ, அவ்விடங்கள் சக்தி பீடங்களாகின. 51 பாகங்கள் விழுந்த இடங்களை மொத்தம் 51-சக்தி பீடங்களாக பாவிக்கப் பட்டு, வழிபட்டு வரப்படுகின்றது. இங்கு இதயம் விழுந்ததால், சிறப்பான, அதிக சக்தி வாய்ந்த ஸ்தலமாகக் கருதப் படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப் படும் இக்கோவிலில் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. சக்தி உபாசகர்கள் குறிப்பாக வந்து செல்கின்றனர். பௌர்ணமியில் அதிகமான கூட்டம் வருகின்றது. 


Ambaji chakra

விக்கிரகம் இல்லாத யந்திரம் பிரதானமாக உள்ள கோவில்:

அரசூரி அம்பாஜி என்றழைக்கப்படும் இங்கு விக்கிரகம் எதுவும் கிடையாது. இங்குள்ள ஶ்ரீ விசா யந்திரம் வழிபாட்டிற்குரியதாக உள்ளது. இது தாமிரத் தகட்டில் “ஶ்ரீ யந்திரம்” போல வரையப்பட்டுள்ளது என்றும், அதன் மீது “ஶ்ரீ” என்று எழுதப்படுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனை இது வரை யாரும் புகைப்படம் எடுத்ததுக் கிடையாது, எடுக்கவும் முடியாது. ஆமையின் முதுகைப் போன்ற வளைவுடன் உள்ள பரப்பின் மீது 51 பீஜ எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. 



அம்பாஜி – கோவில் வாசலில் இருக்கும் விக்கிரகம்!

சக்தி வழிபாடு “மந்திர-தந்திர-யந்திர” முறைகளுடன் இணைந்தது. மந்திரங்கள் சப்தங்களாக இருந்து, அவை உருவங்களாக மாறுகின்றன. அந்த உருவங்கள், உபயோகப் படக்கூடிய யந்திரங்களாக மாறுகின்றன. உருவமற்ற சக்தி, உருவத்துடன் கூடிய பொருளாக மாறும் தத்துவம் இதில் அடங்கியுள்ளது. இதனை பூஜிப்பவர்கள் தங்களது கண்களைக் கட்டிக் கொண்டு தான் செய்கிறார்கள். மூலவழிபாட்டு ஸ்தலம் அருகில் உள்ள கப்பர் மலை மீதுள்ளது என்கிறார்கள். அங்கு செல்வதற்கு “ரோப் கார்” வசதியும் செய்யப்பட்டுள்ளது.


அம்பாஜி கோவில் இருப்பிடம்: பனஸ்கந்தா [Banaskantha District] என்ற மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவில் [अम्बाजी] பலன்புரியிலிருந்து 65 கி.மீ, அபு மலையிலிருந்து 45 கி.மீ, அஹமதாபாதிலிருந்து 185 கி.மீ, கடியாட்ராவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ளது. அபு மலைக்குக் கீழே உள்ளது. 

வடகிழக்கில் உதய்பூர் உள்ளது. தென்மேற்கில் பலன்பூர் (ரெயில்வே ஸ்டேஷன்) உள்ளது. பனஸ்கந்த மாவட்டத்தில் உள்ளது. வேதகாலத்திற்கு முன்பிருந்தே, இந்த கடவுள் வழிபடப்பட்டு வருகிறது. 

சரஸ்வதி நதி தோன்றிய இடத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. நகர் பிராமணர்களால் இக்கோவில் கட்டப்பட்டது. ஆராசூரி என்ற மலைக்கு அருகில் இருப்பதனால், அராசூர் அம்பாஜி என்றே அழைக்கப்படுகிறது. 



அம்பாஜி – மலைமீது இருக்கும் கோவில்.

17ம் நூற்றாண்டிற்கு முன்னர் சரித்திர விவரங்கள் இல்லாதது வியப்பாக இருக்கிறது. இக்கோவில் பழமையானது என்றாலும், 17ம் நூற்றண்டிற்கு முன்னால் எந்த கல்வெட்டும் கிடைக்கவில்லை. இதனால், அதன் தொன்மையினை நிறுவ முடியவில்லை. பரோடாவில் சக்தி வழிபாடு அதிகமாக இருந்ததால், உள்ள மக்கள் காளிகா, அம்பாஜி, கொடியார் போன்ற பலவித அம்மன்களை வழிபட்டு வந்தனர். திடீரென்று சக்தி வழிபாடு உருவானதா, அல்லது இருந்தது புதுப்பிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. 17ம்நூற்றண்டு வரை சரித்திர ஆதாரங்கள் இல்லாமல், திடீரென்று அக்கோவில் முளைத்திருக்க முடியாது. சுற்றி கிருஷ்ண வழிபாடு அதிகமாக இருக்கும் போது, சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து, அதற்கான காரணத்தை அறிய வேண்டியுள்ளது. 



மலைமீதிருக்கும் அம்பாஜி கோவிலுக்குப் பக்கத்தில், ஒரு சிறிய குன்றுள்ளது. அங்குதான், குழந்தை கிருஷ்ணருக்கு, முதன்முதலில் முடியிறக்கப் / மொட்டையடிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆகவே, கிருஷ்ண வழிப்பாட்டுடன், சக்தி வழிப்பாட்டை இணைக்கும் முயற்சியும் நடக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதிகள் உள்ளகியுள்ளதா என்பது பற்றியும் அமைதியாகவே உள்ளது. அதாவது, சரித்திர ஆதாரங்கள் இல்லை. அப்படியென்றால், எப்படி இப்பகுதிகள் தப்பித்தன என்ற வியப்பும் ஏற்படுகின்றது.



கோவில் புனர்நிர்மானன் செய்யப்பட்ட விவரங்கள்:

அரசாங்கத்திற்கும், டந்தா அரச வம்சத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கிற்குப் பிறகு, ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் 1960ல் உருவாக்கப்பட்டது. இதனால், இக்கோவில் முழு நிர்வாகமும் பனஸ்கந்த கலெக்டர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1971ல் அம்பாஜி வளர்ச்சி கமெட்டி அமைக்கப்பட்டு, இகோவிலை புதுப்பிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, 1975லிருந்து, இக்கோவிலை புதுப்பிக்கும் மற்றும் மாற்றியமைக்கும் வேலைகள் மூன்று நிலைகளில் நடைப்பெற்று வருகின்றது. 

இதன்படி 1975 முதல் 1988 வரை “நீஜ் மந்திர்” எனப்படுகின்ற, முன்னிருந்த கோவில், இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம், தூண்கள், சீர்பங்கள் கொண்ட இப்பொழுயதைய மண்டபம், கோவில் கட்டபட்டது. பழைய கோக் மற்றும் யந்திரம் அப்படியே வைக்கப்பட்டன. 1986 முதல் 1989 வரை, 103 அடி உய்ரம் கொண்ட பிரதான கோவில், தங்கத்தகடு வேயப்பட்ட கோபுரம் [Suwarn Kalash Shikhar] முதலியவை கட்டி முடிக்கப்பட்டன. இந்த புனர்நிர்மானம் மற்றும் மற்றியமைக்கும் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மற்றும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, பல சரித்திர ஆதாரங்கள் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அவை பற்றிய விவரங்கள் கிடைப்பதாக இல்லை.



அக்ஷயதாம் தாக்குதல், குஜராத்தில் நிலவிவரும் நிலை முதலியவற்றால் கோவிலுக்குள் செல்ல கடுமையான பாதுகாப்பு, சோதனை முதலியவை உள்ளன. கோவிலுக்குள் எதையும் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. இக்கோவிலுக்கு போகும் போது குன்றின் மீது அம்மன் கோவில் இருந்தது. அங்கும் பக்தர்கள் ஏராளமாக செல்கின்றனர். தினமும் லட்சகணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி போன்ற நாட்களில் கூட்டம் சொல்ல மாளாது. யாத்திரிகர்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் தங்க, உணவு உண்ண உட்பட செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ அரசூரி அம்பாஜி மாதா டிரஸ்ட் [ Shri. Arasuri Ambaji Mata Devasthan Trus] அனைத்தையும் நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில் 20-25 லட்சம் மக்கள் பங்கு கொள்கிறார்கள்.


உன்னத வாழ்வருளும் தென்காசி உலகம்மன்!


சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.

அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.

தலவிருட்சம் : செண்பக மரம்.

தீர்த்தம் : 

சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

தலச்சிறப்பு : 

இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.  நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.  

சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.  திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

காசிக்குப் போய் கங்கையில் புனித நீராடினால்தான் ஒவ்வொரு பக்தனின் கடமையும் பூர்த்தியாவதாக ஆன்மிக நூல்கள் சொல்கின்றன.


காசி வடக்கே அமைந்திருப்பதால், தெற்கே வசிக்கின்ற எல்லோரும் காசிக்குச் செல்வது சிரமம்தான். பொருளாதார வசதி, உடல் நிலை எனப் பல காரணங்களை முன்னிட்டுப் பலராலும் பயணிக்க முடியாமல் போவது இயல்பு.



அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது தென்காசி.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் குற்றாலச் சாரலின் குளுமையோடு அமைந்துள்ள அழகான ஊர் தென்காசி.


காசியில் குடி கொண்டுள்ள காசி விஸ்வநாதர், தானே விருப்பப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார் என்பது நம்பிக்கை. எனவே, அங்கே போய் வணங்க முடியாதவர்கள், தென்காசி வந்து வணங்கினாலே காசிக்குச் சென்ற பலன் முழு அளவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.


காசி விஸ்வநாதர் கோயில் தென்காசியில் அமையக் காரணமாக இருந்தவன் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னன். கி.பி. 1442-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவன் பராக்கிரம பாண்டியன். கல்வி, வீரம், புலமை, மொழியறிவு, பக்தி என்று எல்லாவற்றிலும் சிறந்து காணப்பட்டான்.


கனவில் வந்த விஸ்வநாதர்

பாண்டியன் சிறந்த சிவ பக்தன். தினமும் ஈசனை வழிபடாமல் உணவு அருந்த மாட்டான். வருடம் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்து வருவது அவனது வழக்கம். ஒரு நாள் இரவு பாண்டியன் கனவில் காசி விஸ்வநாதர் வந்தார். ‘நீ வசிக்கும் ஊரிலேயே எனக்கு ஒரு கோயில் எழுப்பு. நானே அங்கே வந்து குடி கொள்கிறேன். வருடா வருடம் என்னைத் தேடி வடக்கே நீ வர வேண்டாம்’ என்று கூறினாராம்.


பராக்கிரமனுக்கு சந்தோஷம். ‘இறைவா, உனக்கு ஆலயம் கட்டுகின்ற பெரும் பேற்றை எனக்கு வழங்கி உள்ளாய். மகிழ்ச்சி. ஆனால், எந்த இடத்தில் ஆலயம் கட்ட வேண்டும் என்கிற தகவலையும் சொன்னால் நன்றாக இருக்குமே?’ என்று கேட்டானாம்.


அதற்கு காசி விஸ்வநாதர், ‘விடிந்ததும் கண் விழித்துப் பார். தரையில் எறும்புகள் சாரி சாரியாக உன் கண்களில் படும். அவற்றைப் பின்தொடர்ந்து செல். அந்த எறும்புகள் எந்த இடத்தில் போய் நிற்கின்றனவோ, அங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அருளினாராம்.


அதிகாலையில் கண்விழித்தான் பராக்கிரமன். தரையை நோக்கினால், ஈசன் அருளியபடி, இவன் காலடிக்குக் கீழே எறும்புகள். இந்த எறும்புக் கூட்டம் எதுவரை செல்கிறது என்று பின்தொடர்ந்து பார்த்தான். சித்ரா நதி (சிற்றாறு) அருகே செண்பக வனத்தில் வந்து எறும்புகள் நின்றன.


அங்கே புதர் மண்டிக் கிடந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆணையிட்டான். அற்புதமான சிவலிங்கம் ஒன்று அங்கே இருக்கக் கண்டான். ஈசனை வணங்கி, ஆலயம் அமைக்கும் பணியைத் துவங்கினான். மிகப் பிரமாண்டமாக இந்த ஆலயத்தைக் கட்டி முடித்து குடமுழுக்கும் நடத்தினான். இன்றைக்கும் ஆலயத்தில் எந்த ஒரு திருவிழா என்றாலும், முதல் மரியாதையைப் பராக்கிரம பாண்டியன் திருவடிவத்துக்குத்தான் அளிக்கிறார்கள்.

பராக்கிரமன் கட்டிய ஆலயம்தான் இன்றைக்கும் உள்ள தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். 


இங்கே உமையின் திருநாமம் உலகாம்பிகை.

காசியில் விசாலாட்சியைத் தரிசித்தால் கிடைக்கும் பலன், உலகாம்பிகையைத் தரிசித்தால் கிடைத்து விடும் என்கிறார்கள்.


பொங்கி எழுந்த கங்கை!

ஆலயம் கட்டி முடித்த பின், கங்கை நீர் கொண்டு தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான் பராக்கிரமன். இவனது எண்ணத்தை அறிந்துகொண்ட இறைவன், இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் கங்கையைப் பொங்கச் செய்தார். காசி விஸ்வநாதரைத் தொடர்ந்து கங்கையும் தென்காசிக்கு வந்தது கண்டு சந்தோஷப்பட்ட பராக்கிரமன், கங்கை பொங்கிய இடத்தில் ஒரு கிணறு கட்டினான்.


பராக்கிரமன் அமைத்த இந்தக் கிணறு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் காணப்படுகிறது. ‘காசி கங்கைக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். தினமும் இறைவனுக்கு இந்த நீர் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.


இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.


கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம். ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.



விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு. ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது. இன்னொன்று பராசக்தி பீடம்.

திருவிழாக்கள் :

மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,
புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,
ஐப்பசி திருக்கல்யாணமும்,
ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,
தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.


கோயில் முகவரி :

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
தென்காசி - 627 811, திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04633 - 222 373






ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள்!



ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி அவர்களால், பெருமாளின் கட்டளைப் படி நிர்மாணிக்கப் பட்டது இக்கோயில். இத்தலம் அக்காலத்தில், விரஜாபுரி எனப் புகழ் பெற்றிருந்தது.

ஸ்ரீ சுகப்பிரம்மம் நிர்மாணித்த திருக்கோயில் என்பதால் இன்றும் இக்கோயிலில் பச்சைக் கிளிகள் அதிகம் காணப் படுகிறது.



தல மூர்த்தி : ஸ்ரீ ரெங்கநாதர் (வேதநாதர்)
தாயார் : ஸ்ரீ வேதநாயகி.
தல தீர்த்தம் : நாரதர் தீர்த்தம்
சன்னதிகள் : ஸ்ரீ ரெங்கநாதர், வேதநாயகி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.



இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரெங்கநாதர், சயன திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார்.

விண்ணுலகம், மண்ணுலகம் என அளந்துவிட்டு மூன்றாவது அடியாக மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையின் மீது தன் அடியை வைத்து அளந்ததற்கு அடையாளமாக தனது மூன்று விரல்களைக் காட்டியவாறு, ஆதிசேஷன் மீது சயனித்தபடி, தலைக்கு மரக்கால் வைத்து, தனது திருவடியை தாமரை மலர் மீது வைத்து தரிசனம் தரும் அழகே அழகு. அருகே பூதேவி - அமிர்தவல்லியாகவும், ஸ்ரீதேவி - ஸ்ரீ வேதவல்லியாகவும் காட்சி தருகின்றனர்.

பிரகலாதன், சுகபிரம்ம மகரிஷி ஆகியோரும் காட்சி தருகின்றனர். இங்கு எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த பெருமானாகும். ஸ்ரீ வேதநாயகித் தாயார் பக்தர்களுக்கு கருணையுடன் அருள் பாலிக்கிறார்.



திருமால்பாடி திருத்தலத்திற்கு சென்று வழிபட, வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை ஸ்ரீ ரெங்கநாதர் தீர்த்து வைப்பார். இதனாலேயே இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு, டிரான்ஸ்ஃபர் பெருமாள் (Transfer Perumal) என்றே பெயர் வந்தது.


கோயில் அமைவிடம்:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூர் என்னும் சிறிய கிராமத்தின் அருகே உள்ளது இந்த அழகிய, மிகப் புராதனமான திருமால்பாடி திருத்தலம். வேலூரில் இருந்து சுமார் 90 km தொலைவில் உள்ளது இத்திருத்தலம். வேலூரில் இருந்து ஆரணி, வந்தவாசி, தேசூர் வழியாக இக்கோயிலை அடையலாம்.



ஒரு சிறிய குன்றின் மேல் 106 படிகள் ஏறிச் சென்று தெய்வ தரிசனம் பெறலாம். பல ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிறது இக்கோயில்.

கி.பி. 1136-ம் ஆண்டு பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது இத்திருக்கோயில். கி.பி. 1140, கி.பி. 1135, கி.பி. 1529 போன்ற பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் இக்கோயில் பலமுறை சீரமைக்கப் பட்டுள்ளதை அங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

வளமான வாழ்வையும், அஷ்ட லக்ஷ்மி அம்சங்களான அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் திருத்தலம் இந்த திருமால்பாடி திருத்தலம்.