சனி, 28 ஜனவரி, 2017

தை கிருத்திகை!


தை கிருத்திகை!
உ த்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக் கிருத்திகையைப் போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தி யையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித் திருக்கிறார்.


வீரபத்திர விரதம்!
ம ங்கலவாரம் எனப் படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது நல்லது. வீரபத்திரரைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீக்கும்.

பைரவ விரதம்!                             
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க் கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
 

                        
 

தைப்பூசம்!


சி வபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது.
தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளி னார்.

வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
                        
‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

                        
சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட் சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெற லாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!
                        
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூரில் தைப்பூசம் விசேஷம். இங்கு கோயிலில் உள்ள சித்த தீர்த்தத்தில் மூழ்கி, வில்வ மரத்தை வலம் வந்து இடை மருதீசனைத் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
                        
திருநெல்வேலியில்- அம் பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூரில் தைப் பூசத்தன்று தாமிரபரணியில் நீராடி திருப்புடைமருதூர் ஈசனைத் தரிசிப்பது விசேஷம். அளவிட முடியாத புண்ணியம் கிடைக்கும். மிகவும் அமைதியான தலம் இது. அமைதியைத் தரும் தலமும் இது.
                        
தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். இது ஏன் என்பதற்கு ஒரு தகவல்:
                        
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத் தில் துடித்தார்கள். அவர் களின் துயரங்களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார்.

குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.

தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.
                        
இன்னொரு தகவலும் உண்டு. அது:

பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயணம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத் திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.


வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச 
ஸுகதாய பிரஸன்னாய ஸூப்ரீதாய மஹாத்மனே!

பொருள்:
எம் பிறப்புக்கு காரணமான முன்னோர்களே!
தெய்வீக சக்தி பெற்றவர்களே!
உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உண்டாகட்டும்!
நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகின்றேன்!   
 


ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற  அமாவாசையில்,  இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு 

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.
 
கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

தை அமாவாசை நாளில், அந்தப் புண்ணிய தினத்தில், நம் முன்னோருக்குச் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்வோம்.

நம் குலம் தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன் வாழ்வோம்!

 
 

ரத சப்தமி விரதம்!


ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.

அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.

யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

பிரம்மதேவர், இந்திரன் முதலா னோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.

சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’.

அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண் டாடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத் தைத் தொடங்குவது இந்த நாளில் தான்.


ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜை யையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை:

ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.

ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.

ரத சப்தமி ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சம மானது.
ஆரோக்கியம், செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம்,  வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. 
 



பஞ்சாயுத ஸ்தோத்திரம்!



ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்

ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்

ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:

சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!



ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென

சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்

பகைவரை அழித்து நிற்கும் பெருமான்

கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்!
 


 

            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய

          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:

          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்

          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே!



கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்

கோவைச் செவ்வாய் காற்றொலியால்

தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு

பாஞ்சஜன்யத்தை வணங்கி சரணடைவோம்!



            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்

          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்

          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்

          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!



பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட

தைத்யர் தன் குலம் அழித்து நின்று

வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை

கௌமோதகீயை வணங்கி  சரணடைவோம்!



          ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட

          சேத க்ஷர சோணித திக்த தாராம்

          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்

          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!

 

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய

ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்

உதிரத்தில் குளித்த செவ்வாளாம்

நந்தகம் தன்னை வணங்கி சரணடைவோம்!



யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்

சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:

பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ

ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!

 

மின்னலாய் பயஇருள் போக்கி நின்றுபகைவர்

பின்னமாய் இடிந்திநாணொலிக்க

சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்

சாரங்கத்தை என்றும் வணங்கி சரணடைவோம்!



இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்

ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே

ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:

பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி!



காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத

மாலையிதை ஓதி நின்றால்

துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு நித்ய

தூயன் அருளில் துய்த்திடலாம்!

 

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே

யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு

இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா

ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:



போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட

பேரிடர் பொழுதின் பயங்களிலும்

தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்

மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்!
 
 
 
 

வியாழன், 26 ஜனவரி, 2017

24 ஏகாதசி விரத பலன்கள்!

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.

  * மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி" எனப்படும். பகையை வெல்ல உதவும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.

* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனி" எனப்படும். பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜலா " என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.


ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.


வெள்ளி, 20 ஜனவரி, 2017

தை மாத வளர்பிறை புத்ரதா ஏகாதசி!

தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ எனப்படும்.

அதன் மகிமை: பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். கலையாத கல்வி, குறை யாத வயது, ஒரு கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனது, அன்பு அகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், ஒரு துன்பமும் இல்லாத வாழ்வு, தெய்வபக்தி- என்னும் இந்தப் பதினாறு பேறுகளில் ஒன்பதாவதான ‘புத்திரப்பேறு’ மட்டும், சுகேதுமானுக்கும் சம்ப காவுக்கும் வாய்க்கவில்லை. ‘பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்ற சாஸ்திரத்தை உணர்ந்த மன்னர் வருந்தினார்.

இதன் காரணமாக மன வருத்தத்துடன் மன்னர் செய் யும் சிராத்தத்தை அவரின் முன்னோர்கள், துன்பத்துடன் ஏற்றார்கள். இதுவும் மன்னரின் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்தது.

‘‘போன பிறவியில் நாம் செய்த தீவினைதான் இந்தப் பிறவியில் இவ்வாறு நம்மைப் படுத்துகிறது’’ என்று புலம்பிய மன்னர், அதை நீக்குவதற்காக யாகம்- ஹோமம் முதலானவற்றைச் செய்தார். பலன் இல்லை. மன்னர் மனம் கலங்கியது. பைத்தியம் பிடித்தவரைப் போலக் குதிரை மீது ஏறி விரைந்தார். ‘எங்கு போகிறோம்? எதற்காகப் போகிறோம்?’ என்பதெல்லாம் மன்னருக்குத் தெரியவில்லை.

பாய்ந்து ஓடிய குதிரை காட் டுக்குள் நுழைந்து அழகான ஒரு குளத்தின் அருகில் நின்றது. குதி ரையை விட்டுக் கீழே இறங்கினார் மன்னர். குளமும் அதைச் சுற்றியிருந்த ஆசிரமங்களும் அலைபாய்ந்த மன்னரின் மனதை அமைதிப்படுத்தின.

ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந் தார் அரசர். சூரியனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர்களை வணங்கினார். ‘‘முனிவர்களே! தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்.

‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போவதை முன்னிட்டு, இங்கே நீராட வந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்று சொன்னார்கள் முனிவர்கள்.

அந்த பதிலிலேயே தன் மனக் கவலைக்கான மருந்து இருப்பதை மன்னர் உணர்ந்தார். முனிவர்களுடன் சேர்ந்து தானும் நீராடினார். உபவாசம் இருந்தார். முனிவர்களை வணங்கி நாடு திரும்பினார்.

ஏகாதசி விரதத்தின் பலனாக மன்னரின் மனைவிக்கு மணி வயிறு வாய்த்தது. பத்தாவது மாதத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். மன்னர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு இணங்க, ‘‘இந்த நாட்டிலுள்ள அனைவரும் இந்த (புத்ரதா) ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டார் மன்னர். ‘‘என்னைப் போலவே என் மக் களும், குறை இல்லாமல் இருக்க வேண்டும்!’’ என்றும் கூறினார்.

நல்ல பிள்ளையை அளிக் கக் கூடிய விரதம் இது.