வியாழன், 19 ஜனவரி, 2017

உன்னத வாழ்வும், வரமும் அருளும் விச்வே தேவர்கள்!

 
த்திராட நட்சத்திரக் காரர்களுக்கு உன்னத வாழ்வும், வரமும் அருளும் விச்வே தேவர்கள்!
 
த்திராடம் நட்சத்திரத்தை 'உத்திராஷாடம்’ என்கிறது வேதம். இதன் தேவதை  விச்வே தேவர்கள். 'எனது வேண்டுகோளை காது கொடுத்துக் கேட்கவேண்டும். நான் செய்யும் வேள்வியில் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். வேள்வித் தலைவன் வேண்டும். பசுக்களை அளிக்கவேண்டும். எனது பயிர்த்தொழிலை வளமாக்க அவ்வப்போது மழை பொழிந்து உதவ வேண்டும். பயிரும் பயிரைக் காக்க மழையும் தந்து எனது வாழ்க்கையை வளமாக்க வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு.
(தன்னோவிச்வே உபச்ருண்வந்து தேவா:..).
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது சூரிய தசை. அது 6 வருடங்கள் நீடிக்கும். கிருத்திகை மற்றும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். சூரியனுக்கு ஆன்மகாரகன் என்ற பெயர் உண்டு. கிரக நாயகன் சூரியன். அவன் ஆரம்ப தசையாக இருப்பது சிறப்பு. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆரோக்கியம், செல்வாக்கு போன்றவற்றை இந்த நட்சத்திரக்காரர்கள் எளிதில் பெற்றுவிடுவார்கள். ஆண்மையும், ஆளுமையும், தன்னம்பிக்கையும் தசாநாதனின் சேர்க்கையில் வலுப்பெற்றுவிடும்.
 
சூரிய கிரணங்கள் தண்ணீரை ஈர்த்து மேகமாக்கி, மழை பொழிந்து பயிர் வளரக் காரணமாகின்றன. நாட்டின் செழிப்புக்கு ஆதாரமான மழையைத் தந்து உதவும் சூரியனின் தசையில், நட்சத்திரத்தோடு இணைந்த விச்வே தேவர்களின் ஒத்துழைப்பால், வாழ்வின் அடித்தளம் நிலைபெற்று விளங்கும் தகுதியைப் பெறுவார்கள், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
 
தனுர் ராசியில் ஒரு பாதமும் மகரத்தில் மூன்று பாதமுமாகப் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம். குருவும் சனியும் இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக இருப்பதால், இருவரது இயல்பும் அவர்களிடம் தென்படும். முதல் பாதத்துக்கு அதிபதி குரு; மற்ற இரண்டு பாதங்களுக்கு சனி; கடைசி பாதத்துக்கு குரு. எனவே, குருவும் சனியும் தமது பங்கை சரிபாதியாக அளிப்பர். ராசி புருஷனின் பாக்யம், கர்மம், லாபம், வியயம் (அதாவது எதிர்பாராத வரவு, செயல்பாடு, சேமிப்பு, இழப்பு) ஆகிய நான்கிலும் இந்த நட்சத்திரத்தின் தொடர்பு உண்டு. கால புருஷனின் தொடைகளிலும் மூட்டுகளிலும் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம், அந்த அங்கங்களின் செழிப்பை வரையறுக்கும்.
 
உத்திராடத்தில் பிறந்தவனிடம் இயல்பாகவே அடக்கமும் பணிவும் இருக்கும். அறத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம், நண்பர்களுடன் பழகுவதில் மென்மை, உதவியை மறவாமல் உதவியவரை அணைத்துக் கொள்ளும் பாங்கு,  எல்லோரிடமும் பாகுபாடின்றி பிரியமாகப் பழகும் பக்குவம் ஆகிய அத்தனையும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர்.
 
க்ஷேத்திராடனம், தோட்டம் துறவுகள் அமைத்துப் பராமரித்தல், சிற்பம் போன்ற கலைகளை ஆர்வத்துடன் வளர்த்து மகிழ்தல், இன்சொல்லால் மக்களை ஈர்த்து தனது பெருமையை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர். முதல் பாதத்தில் பிறந்தவன் மக்கள் தலைவனாகத் திகழ்வான். 2-வதில் துஷ்ட சகவாசம் அவனை அலட்டும். 3-ல் தற்பெருமையில் கவனம் செலுத்துவான். 4-ல் அறநெறியுடன் வாழ்வான் என்கிறது பிரஹத் ஸம்ஹிதை.

இது த்ருவ நட்சத்திரத்தில் (நிலையானது) அடங்கும். அரசர்களின் சாம்ராஜ்ய பட்டாபி ஷேகம், உலகை நடுங்கவைக்கும் உத்பாதங்களை அழிக்க செயல்படும் சாந்தி... அதாவது நில நடுக்கம், பெருவெள்ளம், புயல், எரிமலை, கொள்ளி மீன் போன்ற அழிவிலிருந்து விடுபட செய்யப்படும் சாந்திகர்மா, செடி- கொடிகளை நட்டு வளர்த்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களை உருவாக்குதல், விதை விதைத்தல், அறிநெறியை வளர்க்கும் செயல்கள் ஆகிய அனைத்திலும் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு செழிப்பை அளிக்கும் என்கிறார் பராசரர்.
 
இரண்டு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். இதில் செய்யப்படும் அன்னப்ராசனம் வாழ்க்கை முழுதும் உணவு தட்டுப்பாடு இல்லாமல் செய்துவிடும் என்கிறது ஜோதிடம். முதல் பாதத்தில் பிறந்தவன் தர்ம சாஸ்திரத்தை அறிந்து செயல்படுபவன், கொடையாளியாகவும் அறிஞனாகவும் திகழ்வான். குரு, பிதா, பிதாமஹர் போன்ற பெரியோரை மதிப்பான். தேவ ஆராதனையில் பிடிப்பு இருக்கும். 2-வதில் சொல்வளம் பெற்றவன். தனது செயல்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டான். ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவான். 3-ல் கட்டான உடல் அமைப்பு, மறைமுகமாக தவறிழைப்பான், ஆசுகோபி, இரக்கமற்றவனாகவும் இருப்பான். 4-ல் அறவழியில் ஆர்வம், உண்மை பேசுபவன். லோகாயத வாழ்வில் பிடிப்பு, குறிப்பிட்ட துறையில் விசேஷ அறிவு பெற்றவன்... இப்படி நான்கு பாதங்களுக்கு பலன் சொல்லும் பலசாரசமுச்சயம்.
 
முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் பரவியிருக்கும் நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இரண்டு ராசிகளின் பலனும் இதில் தென்படும். இரண்டும் கலந்த கூட்டு பலனாக அனுபவத்துக்கு வரும். கிருத்திகைக்கும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவையும் முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் இணைந்தாலும் வேறுபாடு உண்டு. அதாவது கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தை எடுத்துக்கொண்டால்... முதல் ராசியில் முதல் பாதம்; இரண்டாவது ராசியில் மூன்று பாதங்கள்.
 
நற்பலனை சுவைக்கவும் கெடுதலை அறவே அழிக்கவும் வழிபாடு உதவும். பரம் பொருளின் சைதன்யத்தில் நட்சத்திரம் ஒளிமயமாக விளங்குகிறது. நட்சத்திர வடிவில் பரம்பொருளின் பணிவிடையே நிகழ்கிறது. 'விம் விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்லி வணங்க வேண்டும்.
 
16 உபசாரங்களையும் முறையாகச் செய்ய வேண்டும்.'விச்வேப்யோ தேவேப்யோ நம: என்று சொல்லி அடிபணிந்து வணங்கலாம். 'ஸமந்ஜந்து விச்வேதேவா:...’ என்கிற மந்திரம் ஓதி வழிபடலாம். அல்லது 'ஆனோவிச்வே அஸ்க்ரா’ என்கிற மந்திரத்தைச் சொல்லி 12 நமஸ்காரங்களைச் செய்யலாம்.
 
கைகளில் புஷ்பங்களை அள்ளி அளித்து, 'உத்திராஷாட நஷத்திர தேவதாப்யோ நம:’ என்று அடிபணியலாம். 'விச்வான் தேவான் நமஸ்யாமி ஸர்வ காம பலப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம்’ - என்ற செய்யுளைச் சொல்லி வணங்கலாம்.
 
வணங்க முடியாத சூழலில், மனதில் அந்த செய்யுளை அசை போடலாம். ஏதாவது ஒரு முறையில் தேவதையின் தொடர்பு மனதில் இருக்க வேண்டும். மனம் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே வழிபாட்டின் பலன் இறுதி பெறும். செயல்பாடு மட்டுமே பயன்படாது. அதோடு மனம் நிச்சயம் இணைந்திருக்க வேண்டும்.
 
நெய் ஆயுளை வளர்ப்பதால் நெய்யை ஆயுள் என்று சொல்வோம். நாம மஹாத்மியத்தைச் சொல்ல வந்த ஹனுமான் ஸ்ரீராமனை விட அவரின் நாமா சகல பாக்கியங்களையும் அளிக்கும் வல்லமை பெற்றது என்பார் . இறைவனின் நினைவுடன் வெளி வரும் சொற்களுக்குத்தான் பெருமை உண்டு.
 
ஆகையால், விச்வே தேவரை மனதில் இருத்தி, விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்வது தகும்.

 
 

நட்சத்திர வழிபாடு!

அஸ்வினிஅஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அச்வினீ தேவர்கள் எனும் இரட்டையர்கள். இவ்விருவரும் ஒரு முகம், வெண்மைநிற தேகம் கொண்டு, அமுதகலசம் தாங்கிய இரு கைகளுடன், குதிரை வாகனத்தின்மீது இருப்பவர்களாக எண்ணித் துதிக்கப்படவேண்டும். சந்தனத்துடன் கருநெய்தல் எனும் நீலோத்பல மலரால் பூஜித்து, குங்குமப்பூவால் தூபமிட்டு, பசும்பாலும் லட்டுகளும் நிவேதித்து, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம் அளித்துச் செய்வது அஸ்வினி நட்சத்திரத்தின் சாந்திமுறையாகும். இவ்விதம் ஆவாகனம் முதலாக அன்னபலிவரை செய்வித்து, தானம், விப்ரபோஜனம் செய்விப்பதே சாந்தி வேள்வியின் விதிமுறை. இவ்விதம் மற்ற நட்சத்திரங்களுக்குரிய பொருட்களால், உரிய மந்திரங்களால் செய்யப்படுவதே நட்சத்திர சாந்தியாகும். அவற்றைப்பற்றி சுருங்கக் காண்போம்.

பரணிபரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமதர்மர். இவரை ஒருமுகம், இருகை, நீலநிற தேகம், பயங்கரமான உருவம் உடையவராக, இரு கைகளில் பாசக்கயிறையும் தர்மதண்டத்தையும் ஏந்தியவராக, எருமை வாகனத்தின்மீது அமர்ந்துள்ளவராக, பரணி நட்சத்திர தேவதையாக தியானித்து பூஜித்திடவேண்டும். இவருக்கு, காரகில், சந்தனத்துடன் கருநீலநிற வாசமுள்ள மலர்களும், கருங்குங்குலிய தூபமும், சர்க்கரைப்பொங்கல், வெல்ல அப்பம் நிவேதனமும், நெய், தேன்கலந்த எள் ஹோமத்திரவியமும், த்ரயம்பக மந்திரமும், எள் அன்னத்தால் பலி அளித்தலும் என சாந்தி செய்யவேண்டும்.

கிருத்திகைகிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதையான ஸ்ரீ அக்னிதேவரை, இருமுகமும், நாற்கரமும், நான்கு கொம்பும் உடையவராய் ஸ்ருக், ஸ்வரும், அபயம், வரதம் ஆகியவற்றை நாற்கரங்களில் ஏந்தியவராக- ஆட்டு வாகனத்தின்மீது அமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சிவப்பு சந்தனத்துடன் மல்லிகைப்பூவும், நெய்யின் தூபமும், நெய், எள் ஹோமத்திரவியமும், உளுந்துசாதம் நைவேத்யமும், பாயச அன்ன உளுந்து சாத பலியும் என சாந்தி செய்யவேண்டும்.

ரோகிணிரோகிணி நட்சத்திர தேவதையான பிரஜாபதியை, நான்முகமும், நாற்கரமும், வெண்ணிறமும் உள்ளவராய்- அட்சமாலை, கமண்டலம், அபயம், வரதம் உள்ளவராய் தியானித்து பூஜிக்கவேண்டும். தாமரைமலர், சரளமரத்தூளின் தூபமும், நெய், தானிய வகை ஹோமத்திரவியமும், பாலன்னம், சுத்தன்னம் நிவேதனமும், பாயசம், சர்க்கரைப் பொங்கல் அன்னத்தால் பலியும் செய்தல்வேண்டும்.

மிருகசீரிடம்மிருகசீரிட நட்சத்திரத்தின் தேவதையான சோமதேவர் (சந்திரன்), தனது இரு கைகளில் வரதமும் தண்டமும் ஏந்தியவராய், வெண்மை நிறத்தவராய், பத்து குதிரைகளைப் பூட்டிய தேரின் மீதுள்ளவராய் தியானித்து பூஜிக்கத்தக்கவர். பூஜைப் பொருட்கள்- குமுதம் (அல்லி), உத்பலம் (கருநெய்தல்) மலர்கள்; தசாங்க தூபம்; பாயசம், அதிரசம் நைவேத்யம்; பயறு, எள், பஞ்ச கவ்யம், தேன் ஹோமத் திரவியங்கள்; பயறு, எள்கலந்த அன்னத்தால் பலிதானம்.

திருவாதிரைதிருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ஸ்ரீ ருத்ரன் ஆவார். இவரை ஒருமுகமும் மூன்று கண்களும், வெண்ணிற மேனியும் கொண்டவராய்- வெண்ணிற மலர்மாலை சூடியவராய்- தனது நான்கு கைகளிலும் சூலம், கத்தி, அபயம், வரதம் ஏந்தியுள்ளவராய், வெள்ளைநிற எருதின்மீது அமர்ந்திருப்பவராக தியானித்து பூஜித்திடவேண்டும். நறுமணமுள்ள செந்நிறமலர்களுடன், பொன்னிற ஊமத்தம்பூ, மஞ்சள்நிற சரக்கொன்றை மலர், புலிநகக் கொன்றை, வில்வமலர் ஆகிய சிறப்பு மலர்களுடன், அகரு தூபம்; நெய், வெல்லம், பயற்றுப் பாயசம், தேன் நைவேத்யம்; நம சம்பவே எனும் வேதமந்திர ஜபம்; தேன், நெய் ஹோமத்திரவியம்; சர்க்கரைபொங்கல், பாயசான்னம் பலிதானம்.

புனர்பூசம்புனர்பூச நட்சத்திர தேவதை, தேவமாதாவாகிய அதிதிதேவி ஆவாள். தேவியை மஞ்சள் நிறத்தவளாகவும்; ஸ்ருக், ஸ்வரும் எனும் ஹோம சாதனத்தையும், தர்ப்பை அல்லது அட்சமாலை, கமண்டலத்தையும் தன் இருகைகளில் ஏந்தியவளாகவும்; நன்மை அளிப்பவளுமாக தியானித்து பூஜித்தல் முறை. மல்லிகைமலர்; மலயஜத்ரவ்ய தூபம்; மஞ்சள், குங்குமப்பூ கலந்த சந்தனச் சாந்து, மிளகு சீரக நெய்சாதம் நிவேதனம்; அதிதிர் த்யௌர் என்ற வேதமந்திரத்தால் ஜபம்; ஹோமம்; நெய் கலந்த அரிசி ஹோமத்திரவியம்; மஞ்சள், சந்தனத்துடன் கூடிய அன்னத்தால் பலிதானம்.

பூசம்பூச நட்சத்திர தேவதை வியாழ குருபகவானாகிய பிருஹஸ்பதி ஆவார். இவரை மனித உருவத்தில், சர்வாபரணங்களையும் அணிந்துள்ளவராய்- யோகதண்டம், கமண்டலம் அல்லது அபயம், வரத கைமுத்திரையுடன் விளங்குபவராய்- தேவர்களின் மந்திரியாகவும், குருவாகவும் விளங்குபவராக எண்ணி பூஜித்திடவேண்டும். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ கலந்த சந்தனம், மல்லிகைப்பூ, வெண்தாமரை மலர்கள்; வெண்குங்குலியத்தால் தூபம்; தாமரைநூல் தீபம்; தேன், சர்க்கரை கலந்த பொடித்த அரிசிக்கஞ்சி; சமித்து; நெய், அரிசி பாயசம் ஹோமத்திரயவம்; சந்தனம், மலர்களுடன் நெய்சாத பலிதானம்.


ஆயில்யம்ஆயில்ய நட்சத்திர தேவதை பாம்பரசரான நாகதேவர் ஆவார். இவரை அகன்ற படமெடுத்த பாம்புத்தலையுடன் கூடியவரும், சிவந்தமேனியும் மூன்று கண் கொண்டவரும், இரு கைகளில் கத்தி, கேடயப் பலகை எந்தியவரும், மஞ்சள்நிற ஆடை உடுத்தியவருமாக தியானித்து, பாம்புகளால் சூழ்ந்தவராகப் பூஜித்திடவேண்டும். காரகில் சந்தனம், நீலநிற அதஸீபுஷ்பம், தாழம்பூ,
அகத்தியப்பூ இவற்றுடன், நெய், குங்குலியம் கலந்த தூபம்; நெய்யரிசிக்கஞ்சி, வெல்லநெய் அப்பம் நைவேத்யம்; மதுவாதா எனும் மந்திரஜபம்; நெய், தயிர் கலந்த எள் அன்னத்தால் ஹோமம்; நாகதேவருக்கு, நாகங்களுக்கு நெய், வெல்லம், தயிர் கலந்த சாதத்தால் பலிதானம்.

மகம்மக நட்சத்திர தேவதை பித்ருக்கள் ஆவர். இவர்களை ஒருமுகமும், இரு கரமும், அன்ன பிண்டத்தை (இறந்தோர்க்கு அளிக்கப்பட்ட உணவு உருண்டை) வலது கையில் வைத்திருப்பவர்களாகவும், மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ள மனித உடல் கொண்டவர்களாகவும், புகை போன்ற கருநிறத்தவர்களாகவும் மிகவும் புனிதர்களாய் விளங்குபவர்களாகவும், நமக்கு நன்மை செய்பவர்களாகவும் எண்ணி பூஜித்திட வேண்டும். சந்தனம், செண்பகப்பூ; குங்குலியப் பொடித் தூபம்; நெய்விளக்கு; நெய், வெல்ல அப்பம் நைவேத்யம்; பிதும்நஸ்தோஷம் எனும் மந்திரஜபம்; நெய், தேன் கலந்த எள்; பச்சரிசி, ஆலமரத்துளிர், ஹோமத்திரவியங்கள்; கருப்பு எள் கலந்த அன்னத்தால் பலிதானம்.

பூரம்
பூர நட்சத்திர தேவதையான அர்யமா என்பவரை. ஒருமுகமும், இருகையும், புகைபோன்ற கருநிற தேகமும் கொண்டவராய் சக்தி ஆயுதத்தை கையில் ஏந்தி தேரின்மீது இருப்பவராக எண்ணிப் பூஜித்தல் வேண்டும். சந்தனம், மாலதி மல்லிகைப்பூ, பொரசம்பூ; வில்வக்காய் மரத்தூள் தூபம்; நெய்சாதம், அதிரசம், லட்டு, நிவேதனம்; அர்யமணம்னு தேவம் எனும் மந்திரத்தால் ஜபஹோமம்; நெய்கலந்த தினையரசி ஹோமத்திரவியம்; சந்தன மலர்களுடன் அர்யமா எனும் சூரியனுக்கு, சர்க்கரைப் பொங்கலால் பலிதானம்.


உத்திரம்உத்திர நட்சத்திர தேவதை பகதேவர். இருகைகளில் சங்கு, சக்ரம் ஏந்தி, சிறந்த தேர்மீதிருப்பவராகவும். அடியவர்களின் விருப்பப் பயனைத் தருபவராகவும் தியானித்து வழிபடத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய மகிழம்பூ, வெள்ளை நிற அலரிப்பூவால் பூஜித்தும்; வில்வப்பழம், குங்குலியம், இவற்றில் நெய்கலந்து தூபமிட்டும்; எள்சாதம் நிவேதனம் செய்தும்; ஆஸத்யே நேதி மந்திரத்தை ஜபித்தும்; எள், கடுகு, நெல் வகைகளை ஹோமத்திரவியமாய் ஆஹுதி செய்தும், சம்பா அரிசி அன்னத்தை பலியாக அளித்தும் சாந்தி செய்யப்படவேண்டும்.

அஸ்தம்அஸ்த நட்சத்திர தேவதையாகிய சவிதா என்பவரை (சூரியனை), ஏழு குதிரைகளையுடைய தேரில் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவராக- சாயாதேவியின் கணவராக தியானித்து பூஜித்திடவேண்டும். சந்தனத்துடன், தாமரை, சிவப்பு நிற அலரிப்பூவால் அர்ச்சித்து; சந்தனம், குங்குலியத்தால் தூபமிட்டு; நெய் பாயசம், வெல்ல அப்பம் நிவேதித்து; உதுத்யம் ஜாதவேதஸம் எனும் மந்திரத்தை ஜபித்து; தயிர், நெய், அரிசிகளால் ஹோமத்தில் ஆஹுதிகளை அளித்து; சந்தனப்பூ, இலுப்பைப்பூ, அறுகு, எள், நெய், வெல்லத்துடன் கூடிய (கேசரி) அன்னபலி அளித்து சாந்தி செய்யவேண்டும்.

சித்திரைசித்திரை நட்சத்திர தேவதையான த்வஷ்டா என்பவரை, கிரீடம்சூடி தேரில் அமர்ந்தவராக- சங்கு, சக்கரம் ஏந்திய இருகைகளுடன் கூடியவராக எண்ணி பூஜிக்கவும். இவரை சந்தனத்துடன் கூடிய பலநிற மலர்களாலும், செம்பருத்திப் பூவாலும், வில்வத்தாலும் பூஜித்து; தசாங்கப்பொடியால் தூபமிட்டு; வண்ணக்கலவை சாதம், மோதகம் நிவேதித்து; சித்ரம் தேவானாம் என்ற மந்திர ஜபத்துடன், நீர்கலந்த நெய்கலவை சாதத்தால் ஆஹுதி அளித்து, நெய்கலந்த பயறு அன்னத்தை பலிதானம் செய்யவேண்டும்.

சுவாதிஇந்த நட்சத்திர தேவதை வாயு தேவர். இவரை மான்மீது அமர்ந்தவரும், புகை போன்ற நிறத்தவரும், இரு கைகளில் கத்தி, கேடயம் ஏந்தியவருமாக எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவரை காரகில் சந்தனத்துடன், மரிக்கொழுந்தால் பூஜித்து, வெள்ளை அகில் மரத்தூளால் தூபமளித்து, தயிரன்னத்தை நிவேதித்து, "ஸனப்பிதா' எனும் மந்திரத்தை ஜெபித்து, நெய் கலந்த, யவை தானியம் மற்றும் பாயசன்னத்தால் ஹோமத்தில் ஆஹுதியும், சந்தமன மலருடன் கூடிய பாயசன்னத்தால் பலியும் அளித்து, சுவாதி நட்சத்திர சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

விசாகம் இந்த நட்சத்திர தேவதைகளான இந்திரன், அக்னி இருவரும் மங்களத்தை அளிப்பவர்களாய், அபய, வரத முத்திரைகளுடன் கூடிய இருகரங்களை உடையவர் களாய் தியானித்துப் பூஜிக்கத் தக்கவர்கள். இவ்விருவருக்கும் சந்தனத்துடன் கூடிய தாமரைப்பூ, பந்தூக மலர்களால் பூஜையும், தேவதாரு மரத்தூளால் தூபமும், நெய் கலந்த பாயசத்தால் நிவேதனத்தையும் செய்து, "சம்ந இந்த்ராக்னி' எனும் மந்திரத்தால் ஜெபமும், நெய் பாலன்ன ஆஹுதியும், கந்தபுஷ்பத்துடன் பால்சாத பலியும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.

அனுஷம்அனூராதா என்னும் அனுஷ நட்சத்திர தேவதையான மித்ரதேவரை, செந்நிறத் தவராய், இரு கைகளில் திரிசூலம், அங்குசம் ஏந்தியவராய், பத்மாசனத்தில் அமர்ந்துள்ளவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை வெண்தாமரை மலரால் அர்ச்சித்து, சந்தனத்தால் தூபமிட்டு, நெய்பாயசத்தை நிவேதித்து, "மித்ரஸ்ய சர்ஷணீத்ருத' எனும் மந்திரத்தால் ஜெபம், ஹோமம் செய்து, சூர்ணகந்தத்தால் சாந்தி செய்யப்பட வேண்டும்.

கேட்டைஜ்யேஷ்டா எனப்படும் கேட்டை நட்சத்திர தேவதையான இந்திரனை, ஐராவதமெனும் யானைமீது அமர்ந்தவரும், வஜ்ரம், பாசம், வரதம், அபயம் கொண்ட நாற்கரத்தவருமாக எண்ணிப் பூஜித்திடவும். இவரை சந்தனத் துடன் தாமரை மற்றும் படோலீ (பாதிரி) பூக்களால் பூஜித்து, பச்சைக் கற்பூரத்துடன் அகில் மரத்தூளால் தூபமிட்டு, சித்ரான்னம் நிவேதித்து "இந்த்ரம் வோ' எனும் மந்திரத்தால் ஜெபமும் ஹோமமும் செய்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர் இவற்றின் ஆஹுதியையும், சந்தன மலர்களுடன் கூடிய தயிரன்னத்தால் பலியையும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

மூலம்
மூல நட்சத்திர தேவதையான நிரு ருதிதேவரை, உக்ரமான வாயுடைய ஒரு முகத்த வரும், கருநீல நிறத்தவரும், ராட்சச குலத்தின் தலைவரும், மேல்நோக்கிய பரட்டை முடியை உடையவரும், சிவந்து உக்ரமான வட்ட விழிகளைக் கொண்டவருமாக எண்ணிப் பூஜிக்கவும். இவரை காரகில் (மற்றும் ஆட்டுக்கொம்புப் பொடி) தூபமும், காரகில் சந்தனத்துடன் கூடிய நீலநிற எருக்கம்பூ, சாமந்திப்பூ, சிவப்புநிற அசோகப்பூ, கருநெய்தல் பூ இவற்றால் பூஜித்து, உளுந்து சாதம், (மீன், மாமிசம், கள் முதலியவற்றை) நிவேதித்து "மோஷுண: பராபரா' என்ற மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, நிருருதிக்கு பலி தந்து சாந்தி செய்ய வேண்டும்.


பூராடம்பூர்வாஷாடா எனப்படும் பூராட நட்சத்திர தேவதையாகிய ஆபதேவர்களை (ஆப: நீர்) கடலின்மீதில் அலைவடிவாய் இருந்து அனைத்து ஜீவர்களைக் காப்பவர்களாயும், தினமும் மங்களம் அளிப்போராகவும் எண்ணிப் பூஜிக்கவும். இவர்களை கல்ஹாரமெனும் கருநெய்தல்பூவால் அர்ச்சித்து, மனோசிலை தாதுப்பொடியால் தூபமிட்டு, தயிர்கலந்த அரிசிக் கஞ்சியை நிவேதித்து, "ஆபோஹிஷ்டா' எனும் மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, செந்நெல் தானியத் தால் ஆஹுதியும், சீரகச்சாதம், பாயசன்னம் பலி தந்தும் சாந்தி செய்யவேண்டும்.

உத்திராடம்உத்தராஷாடா எனப்படும் உத்திர நட்சத்திரத்தின் தேவதை விச்வே தேவர்கள். அழகு, வளம், புகழ், அறிவு அளித்திடும் விச்வே தேவர்களை எல்லா பாவங்களையும் போக்குவதற்காக எண்ணி வணங்குவோம். இவர்களை ஐந்து மலர்களாலும், அரக்குடன் கூடிய அகருதூபத்தாலும், ஐவகை பட்சண நிவேதனத்துடன் பூஜித்து, "விச்வே தேவாஸ ஆகதே' எனும் மந்திர ஜெபமும், நெய்யுடன் கூடிய சல்ல துண்டுகளால் திரவியாஹுதியும், பாயசன்னத்தால் பலிதானமும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

அபிஜித்அபிஜித் நட்சத்திரத்தின் தேவதை, திரு மாலின் நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்டு அமர்ந்து வேதமோதும் பிரம்மதேவர். இவரை நான்கு முகமும் நான்கு கரமும் கொண்டு பத்மாசனத்தில் இருப்பவராக- தீர்த்த கண்டிகை, அட்சமாலை, வேதப் புத்தகம், தாமரைப்பூ இவற்றைத் தனது நாற்கரங்களில் ஏந்தியவராக தியானித்து முறைப்படி பூஜித்திட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் சாந்தியை தனியாகச் செய்யாமல், அடுத்ததான திருமாலின் திருவோண நட்சத் திரத்துடன் சேர்த்துப்பூஜித்து, ஹோமதானாதிகளுடன் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

திருவோணம்திருவோணம் எனப்படுகிற ச்ரோணா நட்சத்திரத்தின் தேவதையான விஷ்ணுவானவர், சாந்தமான தோற்றமும், தாமரைப்பூ இதழ் போன்ற அழகிய இருபெரும் கண்களும், சங்கு, சக்ரம், அபயம், வரதம் ஏந்திய நான்கு கைகளும், நீலநிறத் திருமேனியும் கொண்டு, கருட வாகனத்தில் இருப்பவராக தியானித் துப் பூஜிக்கத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய தாமரை மற்றும் ஜாதீபுஷ்பத்தாலும், தசாங்க திரவியப்பொடி தூபத்தாலும், நெய், பால், சர்க்கரைக்கஞ்சி அல்லது நெய் பாயசன்ன நிவேதனத்துடன் "அதோ தேவா' எனும் மந்திரத்தினால் ஜெபமும், சிவப்பு அரிசியால் திரவியாஹுதியும், முடிவில் சந்தமன மலருடன் விஷ்ணுவின் பொருட்டு அன்னபலி தானமும் செய்து சாந்தி செய்வது முறையாம்.

அவிட்டம்ச்ரவிஷ்டா எனும் அவிட்ட நட்சத்திர தேவதைகளான அஷ்டவஸுக்கள் எனும் எண்மரையும், மகுடம் தரித்து தேரின்மீது இருப்பவர்களாகவும், சங்கு, சக்கர உருவில் கைரேகை உள்ளவர்களாயும் எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவர்கள் எண்மரையும் நூறு இதழ் உள்ள தாமரைப்பூவால் பூஜையும், குங்குலியத்தால் தூபமும், பாயசம், நெய்போளி பலகாரம் இவற்றால் நிவேதனமும், அரசு, வில்வம், அத்தி ஆகிய சமித்துக் களால் ஆஹுதியும், "த்ராயந்தாமிஹ தேவா' எனும் மந்திரஜெப ஹோமத்துடன் நெய் கலந்த பயிறு சாத பலிதானமும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.

சதயம்
சதபிஷக் எனப்படும் சதய நட்சத்திர தேவதையான வருணதேவரை, தன் இரு கைகளில் அமுதகலசம், பாசம் இவற்றை ஏந்தியவராய், வெண்ணிறத்தவராய், தேவர்களால் வணங்கப்படுவராக எண்ணிப் பூஜித்தல் முறை. இவரை தாமரை முதலிய நீர்ப்பூவகையால் அர்ச்சித்து, தசாங்கத்தால் தூபமும், நெய்பாயசம் மற்றும் அரிசிக் கஞ்சி நிவேதனமும், "இமம் மே வருண' எனும் மந்திர ஜெபத்துடன், நீரில் தோன்றிக் கிடைக்கும் பொருள்களால் ஆஹுதியும் செய்து, பாயசன்னத்தால் பலியும் தந்து சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

பூரட்டாதிபூர்வப்ரோஷ்டபதா எனப்படும் பூரட்டாதி நட்சத்திர தேவதை அஜர். (மஹாப் பிரளய காலத்து பைரவர்). இவரை ஒரு கால் மட்டும் உடையவராகவும், தோன்றாத் தன்மையுடன் நித்யமாய் விளங்குபவரும், அனைத்து தேவர்களாலும் வணங்கப் படுபவரும், சம்ஹார காலத்திய ருத்ரமூர்த்தி யுமாக சிந்தித்துப் பூஜித்திட வேண்டும். இவரை எருக்கம்பூ, பெரம்புப் பூவால் அர்ச்சித்து, மூலிகைப் பொருளால் தூபமிட்டு, நெய், தேன் கலந்த தயிரன்னம் நிவேதித்து, நெய் தோய்த்த பூசணித் துண்டால் ஆஹுதி செய்து, நெய் சாதத்தால் பலிதானம் செய்து சாந்தி செய்யவேண்டும்.


உத்திரட்டாதிஉத்தராபாத்ரா எனப்படும் உத்திரட் டாதி நட்சத்திர தேவதையான அஹிர்புத்னியர் என்பவரை மகுடமணிந்தவராய், சங்கு, சக்கரம் ஏந்தியவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை கரஞ்சி (விஷ்ணுகிராந்தி) பத்ரத்தால் அர்ச்சித்து, நெய் தூபமிட்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, நெய்யுடன் உளுந்து, பயறு தானியங்களால் ஆஹுதி செய்து, நெய்வெல்ல சாதம் பலிதானம் செய்து சாந்தி செய்திடவேண்டும்.

ரேவதிரேவதி நட்சத்திரத்தின் தேவதை பூஷா என்பவர். இவர் ஒரு முகம், இரு கால்களுடன், இரு கைகளில் வரதமும், அபயமும் கொண்டு ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவராக தியானித்துப் பூஜிக்கத்தக்கவர். இவரை மந்தார மலரால் அர்ச்சித்து, செஞ்சந்தனத்துடன்  கூடிய குங்குலிய தூபமிட்டு, எள், அரிசி, வெல்லப்பொடியை நிவேதனம் செய்து, நெய்யுடன் கூடிய வாழைப்பழம் அல்லது மாம்பழம் இவற்றால் ஆஹுதியைச் செய்து, பாயசன்னத்தால் பலிதந்து சாந்தி செய்திட வேண்டும்.






வானவெளியில் நட்சத்திரங்களின் தோற்றம்!

அஸ்வினி என்பது மூன்று நட்சத்திரங்களாக, குதிரைமுகம் போன்ற உருவத்தில் விளங்குவதாகும். 

இவ்வாறே பரணியும் மூன்று நட்சத்
திரங்களாக (முக்கோணமாக) யோனி வடிவத்தில் தோன்றும்.

கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்களாக நாவிதனின் கத்தி வடிவத்திலும்; ரோகிணி என்பது ஐந்து நட்சத்திரங்களாக வண்டி உருவத்திலும்; மிருகசீரிடம் என்பது மூன்று நட்சத்திரங்களாக மானின் முகம் போன்ற உருவத்திலும்; திருவாதிரை ஒரே நட்சத்திரமாக ஓசைதரும் மணி உருவத்திலும்; புனர்பூசமானது. நான்கு நட்சத்திரங்களாக வீடு உருவத்திலும் காட்சிதரும்.

பூசம் என்பது மூன்று நட்சத்திரங்களாக அம்பு வடிவத்திலும்; ஆயில்யம் ஐந்து நட்சத்திரங்களாக சக்கர உருவத்திலும்; மகம் ஐந்து நட்சத்திரங்களாக வீடு உருவத்திலும்; பூரம் இரண்டு நட்சத்திரங்களாக கட்டில் உருவத்திலும்; உத்திரம் இரண்டு நட்சத்திரங்களாக படுக்கை உருவத்திலும்; ஹஸ்தம் ஐந்து நட்சத்திரங்களாக மனித உள்ளங்கை வடிவத்திலும்; சித்திரை என்பது ஒரு நட்சத்திரமாக முத்து உருவத்திலும்; சுவாதி ஒரு நட்சத்திரமாக பவழம் எனும் ரத்தின உருவத்திலும் தென்படும்.

விசாகம் என்பது நான்கு நட்சத்திரங்களாக நிலைவாயில் உருவத்திலும்; அனுஷம் நான்கு நட்சத்திரங்களாக அன்னபலி உருண்டை வடிவத்திலும்; கேட்டை மூன்று நட்சத்திரங்களாக வட்டமாக குண்டல உருவிலும்; மூலம் பதினோரு நட்சத்திரங்களாக சிங்கவால் வடிவில் அமைந்ததாயும்; பூராடம் இரு நட்சத்திரங்களாக யானையின் தந்த உருவத்திலும்; உத்திராடம் இரு நட்சத்திரங்களாக கட்டில் உருவத்திலும் இருக்கும்.

திருவோணம் மூன்று நட்சத்திரங்களாக விஷ்ணுவின் பாத உருவத்திலும்; அவிட்டம் நான்கு நட்சத்திரங்களாக மத்தள வடிவிலும்; சதயம் நூறு எண்ணிக்கையில், நட்சத்திரக்கூட்டமாய் வட்டவடிவிலும்; பூரட்டாதி இரு நட்சத்திரங்களாக கட்டில் உருவிலும்; உத்திரட்டாதி இரு நட்சத்திரங்களாக இரட்டை வடிவமாகவும்; ரேவதி முப்பத்திரண்டு நட்சத்திரக் கூட்டங்களாக மங்களவாத்திய உருவிலும் வானில் வெளிப்பட்டு விளங்கும்.

(உத்திராடம், திருவோணம் ஆகியவற்றுக்கு இடையிலுள்ளதாகச் சொல்லப் படும் அபிஜித் என்பது மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவம் கொண்டது).



புதன், 18 ஜனவரி, 2017

பெயர், புகழ், செல்வம் மேம்பட!

பெயர், புகழ், செல்வம் மேம்பட, திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய செயல்கள்!

நாம் பிறந்த நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில் சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும். ஆனால் நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் போன்றவை மேம்பட ஒருசில ரகசியங்களைக் கூறுகிறது.

இங்கு பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட ஒருவர் திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய சில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


ஞாயிறு

ஞாயிற்று கிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இப்படி ஒருவர் ஞாயிற்று கிழமையன்று செய்தால், அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும். 


திங்கள்

வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை, எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது.


செவ்வாய்

இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும். 


புதன்

புதன் கிழமைகளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மத ரீதியில், புதன்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.


வியாழன்

வியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இவற்றை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம், அன்றைய நாளில் நல்லதே நடக்கும்.


வெள்ளி

வெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.


சனி

இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் இஞ்சியில் ஒரு துண்டை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது தெரியுமா? எனவே சனிக்கிழமைகளில் இச்செயலை செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.


THANKS: tamil.oneindia



கூடாரவல்லி வைபவம்!



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!


எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் ‘கூடாரை வல்லி’ வைபவம் மார்கழி 27ஆம் நாள் கொண்டாடப்படும். 

ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தை முதல் தேதி கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளின் சிம்மாசனத்தில், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபெரிய பெருமாள் எழுந்தருள... அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார் ஆச்சார்யர்களும் எழுந்தருளி... ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா முதலான திருப்பாவைப் பாடல்கள் பாடப்படும்.

அப்போது, ‘அக்கார அடிசில்’ நைவேத்தியம் ஆகிய பிரசாதமாக தரப்படும். மறுநாள், தந்தையாகிய பெரியாழ்வார் சந்நிதியில் ஸ்ரீஆண்டாள் எழுந்தருளி, ‘கணு’ வைபவம் நடைபெறும்.


பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படும் போது, திருப்பாவையில் வரும் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் மகிழ்ச்சிகரமாகப் பாடப்படும்.


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் கண்ணன் ஆண்டாளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம்.


கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.

27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.



வரமும் வாழ்வும் அருளும் வைகுண்ட ஏகாதசி!


கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.  
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை.

என்கின்றன ஞான நூல்கள். ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது 'மோட்ச ஏகாதசி'. இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

புண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்பார்கள். நாமும் ஏகாதசி குறித்த சில திருக்கதைகளைப் படித்து  மகிழ்வோம்.



அசுரர்களுக்கு அருளிய ஏகாதசி!
ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.

கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.

ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார்.

அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.

அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.

''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.

''அப்படியே ஆகும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.

எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும்.  சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.

முன்னோருக்கும் அருளும் ஏகாதசி!
கம்பம் எனும் நகரை மன்னர் வைகானஸர் ஆண்டு வந்தார். குடிமக்களுக்குக் குறையேதும் இல்லாத ஆட்சி. ஆனால், மன்னருக்கு?ஒரு நாள் இரவு. மன்னர் ஒரு கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும் வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.

''உத்தமர்களே! நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில் விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, 'மகனே! நாங்கள் படும் துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க ஏதாவது வழி செய்ய மாட்டாயா?’ என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்'' என்று வேண்டினார் மன்னர்.

''மன்னா! பர்வதர் என்று ஒரு முனிசிரேஷ்டர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில் இருக்கிறார்கள்? அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவரிடம் போ!'' என்று வழி காட்டினார்கள் உத்தம வேதியர்கள்.

மன்னர் உடனே பர்வதரைத் தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, தன் வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார்.

உடன் கண்களை மூடி சிறிது நேரம் தியானித்த பர்வத முனிவர் பின் கண்களைத் திறந்து, எதிரில் கை கூப்பி நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்:

''வைகானஸா! உன் தந்தை, அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான். 'இல்லற தர்மத்தில் ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர வேண்டிய காலங்களில் சேர வேண்டும்’ என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான் அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.'

''நீ உன் மனைவி மக்களுடன், மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து, பரவாசுதேவனான பகவானை பூஜை செய்! அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்! அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்!'' என்று சொன்னார் பர்வதர்.

வைகானஸனும் மோட்ச ஏகாதசி விரதம் இருந்து, பலனை முன்னோர்களுக்கு அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெற்று, மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் வைகானஸன் மோட்ச ஏகாதசியைக் கடைப்பிடித்துச் சிறப்படைந்தார். ஆம், நமக்கும் நம் முன்னோர்களுக்கும் நற்கதி தரக் கூடிய ஏகாதசி இது.

ஏகாதசி விரத நியதிகள்!
தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளைதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும். ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஸ்வாமிக்குப் பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.

ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மஹாவிஷ்ணுவின் கதைகளைக் கேட் பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும். கோபம், கலகம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும். துவாதசி அன்று காலையில் ஸ்வாமியைப் பூஜை செய்து விட்டுப் பிறகே உண்ண வேண்டும். ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது. அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை உண்பது நல்லது.


WISH YOU A HAPPY PONGAL!

WISH YOU A HAPPY PONGAL!