வியாழன், 1 டிசம்பர், 2016

கண்ணாகக் காக்கும் கடுக்காய்!

அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள் :

பிஞ்சு கடுக்காய்,

கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை  விஜயன், அரோகினி, பிருதிவி, அமிர்தமரிதகி, த்ருவிருத்தி என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”  என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய் :

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய் :


கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள் :

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.

 
 

ஆடி 18ம் பெருக்கு!


ஆடிப்பெருக்கு என்று சொன்ன மாத்திரத்திலேயே ஆடிக்காற்றில் புது வெள்ளத்தை அள்ளிக்கொண்டு வரும் காவிரி தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். அன்றைய தினம் காவிரி பாயும் இடங்களில் எல்லாம் ஒரே திருவிழா மயமாகத்தான் இருக்கும்.


அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

அந்த புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு.


நதி உருவானது எப்படி என்பதற்கும் புராணக்கதை ஒன்று உள்ளது.

அந்த கதை!

சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள்.

அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார். அகத்தியர் தென்னகம் நோக்கி
 வரும்போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது.

கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச்சென்று தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணி ஆனது என்கிறது அந்த கதை.

பொதுவாக ஆடி மாதத்தை அசுப மாதம் என்பார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து, அதில் விளக்கேற்றி பூஜைக்குரிய பொருட்களை வைத்து புது மஞ்சள், கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுகிறார்கள்.

வயது முதிர்ந்த பெண் ஒருவர் சுமங்கலி பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பர்.அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலிச்சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக்கொள்வார்கள்.

அப்படி செய்வதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாலைகளை (பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்) அந்த புதுமணத் தம்பதியரே ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களது இல்லறம் செழிக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார்.

அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்’ கிடைக்கும் என்பது ஐதீகம்.


ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை’ என்று பெயர்.

அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும்.

மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர்.

இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும்.


 

தொலைந்து போனதை திரும்ப கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்!



கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்

உங்கள் இழந்து போன உடமைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டு தரவல்ல , அதி அற்புதமான மந்திரம் - இந்த கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.


உங்கள் வீட்டில் தொலைந்து போன பொருட்கள்,


நீண்ட , நெடு நாட்களாக உயிருக்குயிராக பழகிய நண்பர், சந்தர்ப்ப சூழ்நிலை / விதி வசத்தால்,  இழந்து போன நட்பு ,

அவருடனான நட்பைப் புதுப்பிப்பதின் மூலம் , உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் / வாழ்வில் மீண்டும் ஒளி கிடைக்கலாம். .

எதேச்சையா , தன்னாலே நடக்கற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டா? அந்த அதிசயம் செய்வது தான் இந்த மந்திரம்..!


கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண { ----------}
கதம் நஷ்டம்ச லப்யதே..


{ -----------------} - இந்த இடத்தில் , நீங்கள் சந்திக்க விரும்பும் உங்கள் நண்பர் பெயரை / தொலைந்து போன பொருளை சொல்லவும்.


மேலே சொன்ன மந்திரம் தான் , கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.


விரும்பும் நபரை சந்திக்க வேண்டும் என்று ஆன்மார்த்தமாக மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டு - தினம் 1008 முறை , மேலே சொல்லிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 108 நாட்கள் - தொடர்ந்து ஜெபித்து வர , உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..


உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளின் மதிப்பை , உலகத்தில் உங்களை விட யாராலும் கணிக்க முடியாது.. 108 x 1008 முறை ஜெபம் பண்ணும் அளவுக்கு, அது மதிப்புள்ளதா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.. !


நிறைய வளங்களும், அனுகூலங்களும் தர இறைவனை அருள் புரியட்டும்.


 

புதன், 30 நவம்பர், 2016

சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி‬



"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!..
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!."


அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.


சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி
(தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.

சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்க தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.


பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.


மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.


சதுர்த்தியின் மகிமை:


சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.


 பார்வதி இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.

முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச் சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.

இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால்  மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.









 

நலம் நல்கும் நாக பஞ்சமி!


 
கருட பஞ்சமி!

பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும்.

முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான்.

அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும்.


நலம் நல்கும் நாக பஞ்சமி!

பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட.

அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது.

அதனால் நாக பஞ்சமி அன்று வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்.
 
உன்னதமான வாழ்க்கை அமையும்.
 
 
 
 

செவ்வாய், 29 நவம்பர், 2016

திந்திரிணி கெளரி வ்ரதம்!

திந்திரிணி கெளரி வ்ரதம்:– மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை!

திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.

கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.
 விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.

புதன், 23 நவம்பர், 2016

நட்சத்திரங்களின் வடிவம்!

அஸ்வினி                 - குதிரைத்தலை
பரணி                       - யோனி, அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை               - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை
ரோஹிணி               - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம்             - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை             - மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம்                 - வில்
பூசம்                           - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம்                 - சர்ப்பம், அம்மி
மகம்                          - வீடுபல்லக்கு, நுகம்
பூரம்                          - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம்                   - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை
ஹஸ்தம்                   - கை
சித்திரை                   - முத்து, புலிக்கண்
ஸ்வாதி                     - பவளம், தீபம்
விசாகம்                    - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுசம்                     - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை                   - குடை, குண்டலம், ஈட்டி
மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம்                     - கட்டில்கால்
உத்திராடம்              - கட்டில்கால்
திருவோணம்            - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம்                 - மிருதங்கம், உடுக்கை
சதயம்                        - பூங்கொத்து, மூலிகைகொத்து
பூரட்டாதி                  - கட்டில்கால்
உத்திரட்டாதி          - கட்டில்கால்
ரேவதி                       - மீன், படகு