வியாழன், 17 நவம்பர், 2016

சர்வ மங்கள சஷ்டி தேவி!

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான்.

சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள்.

ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது.

சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள்.

சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் – ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள்.

பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர்.

சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற – உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலத்தை  நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள்.

குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள்.

இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும்

தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

 

குழந்தை வரம் அருளும் சஷ்டி தேவதை!

கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும்.

இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.

சஷ்டி என்பவள் ஒர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்ம தேவனின் மானசபுத்ரி.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியா கத் திகழ்ந்த (தேவ சேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள்.

அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது. சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாதப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை.

மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள். அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர்.

அப்போது இவளை சம்பத் ஸ்வரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம்.


ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது. ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள். உடனே அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது.

இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து அரசு புரிவான் என்று ஆசீர்வதித்தாள் பிறகு அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

சுவிரதன் என்றால் நன்கு விரதம் அஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.


 

திங்கள், 14 நவம்பர், 2016

மோட்சம் அளிக்கும் காசி விஸ்வநாதாஷ்டகம்!

வாகங்காதரங்கரமணீய ஜடாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

வாராணஸீ புர பதே ஸ்தவனம் ஶிவஸ்ய
வ்யாக்யாதம் அஷ்டகமிதம் படதே மனுஷ்ய
வித்யாம் ஶ்ரியம் விபுல ஸௌக்யமனம்த கீர்திம்
ஸம்ப்ராப்ய தேவ னிலயே லபதே மோக்ஷம் விஶ்வனாதாஷ்டகமிதம் புண்யம் யஃ படேஃ ஶிவ ஸன்னிதௌ
ஶிவலோகமவாப்னோதி ஶிவேனஸஹ மோததே
 
நாம் மேலே காண்பது ஆதிசங்கரர் இயற்றிய காசி விஸ்வநாதாஷ்டகம் ஆகும்.  இதனை தினமும் பாராயணம் செய்பவர்கள் 16 வகை பேறுகளையும் பெற்று கடைசியில் மோட்சத்தினை அடைவார்கள்.
 
 

ஞாயிறு, 13 நவம்பர், 2016

(புரட்டாசி) வாழ்வில் உயர்வு தரும் 9 விரதங்கள்!

விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே மற்ற தமிழ் மாதங்களுடன் ஒப்பிடுகையில் புரட்டாசி மாதத்தில்தான் நிறைய பேர் விரதம் மேற்கொள்வதுண்டு.

அதற்கு ஏற்ப புரட்டாசி மாதத்தில் 9 விதமான விரத வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அந்த 9 விதமான விரதங்கள் பற்றி காணலாம்.

கேதார கவுரி விரதம் :

அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரையுள்ள 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். சாஸ்திர நியமங்களின்படி இந்த விரதம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவது எனினும், தற்போது ஐப்பசி மாத அமாவாசையன்று மட்டும் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
திருக்கயிலையில் சபா மண்டபத்தில் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். தேவலோகத்தினர் இறைவனையும், தேவியையும் வணங்கிச் சென்றவண்ணமிருந்தனர்.

அப்போது பிருங்கி முனிவர், பிற முனிவர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தார். தம் வழக்கப்படி உமாதேவியைத் தவிர்த்துவிட்டு இறைவனை மட்டும் வலம்வந்து வணங்கினார்.

முனிவர் தன்னை வணங்காததால் கோபம்கொண்ட தேவி இறைவனை நோக்கி, “”திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் என்னை வணங்கும்போது பிருங்கி முனிவர் மட்டும் என்னை வணங்கு வதில்லையே’’ என்றாள்.

இறைவன், “”நாயகியே, உலகத்தில் காமியம், மோட்சம் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. காமியத்தை விரும்புபவர் உன்னையும் என்னையும் பூஜித்து உன்னருளால் போக போக்கியங்கள், அழகு, நிணம், குருதி, தசை முதலியவற்றைப் பெற்று உலக இன்பத்தை அனுபவித்து முடிவில் உனது பதவியையும் பெறுவர். மோட்சத்தை விரும்புபவர்கள் என்னை மட்டும் பூஜிப்பர். அத்தன்மையால் பிருங்கி முனிவர் என்னை மட்டும் வணங்குகிறார். நீ கோபம் கொள்ளாதே’’ என்றார்.

இதனைக்கேட்ட தேவி, “”எனது அம்சங்களை விட்டுவிட்டு அவர் மோட்சம் அடையட்டும்‘’ என்று கூறினாள். தேவி கூறியதைக் கேட்டு முனிவர் தன் தவ வலிமையால் தேவியின் அம்சங்களான தசை, குருதி, நிணம் முதலியவற்றை உதிர்த்து வெறும் எலும்புருவானார். சிவபெருமான் அவரது தவ வலிமைக்கிரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றையும், தேவை யான வலிமையையும் கொடுத்தருளினார்.

தன்னைத் துதிக்காத பிருங்கி முனிவரை இறைவன் ஆட்கொண்டதால் தேவியானவள் நாணி, கயிலாயத்தை விட்டிறங்கி பூவுலகிலுள்ள தண்டகாரண்யம் சென்றடைந்தாள். மழையின்மையால் வறண்டிருந்த தண்டகாரண்ய வனம் தேவியின் வருகையால் செழிப்புற்றது. வனத்தில் ஏற்பட்டிருந்த ரம்யமான மாற்றத்தைக் கண்டு, அங்கு தவம் செய்துகொண்டிருந்த கௌதம முனிவர் தேவியின் வருகையை உணர்ந்தார். தேவியை எதிர்கொண்டழைத்து வணங்கினார்.

கயிலையிலிருந்து தான் பூலோகம் வந்ததற்கான காரணத்தைக் கூறி தன் தவறை உணர்ந்தவளாய், “”என் நாயகரை இனி நான் எவ்வாறு அடையலாம்? அதற்கேற்ற விரதம் ஒன்றினைக் கூறுங்கள்’’ என்று முனிவரிடம் கேட்டாள். கௌதம முனிவர் கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறி, அவ்விரதத்தை அனுஷ்டித்தால் இறைவன் திருவருளைப் பெறலாம் என்று கூறினார்.

அதன்படி கௌரிதேவி கேதாரம் என்னும் தலத்தில் அந்தக் கரணங்களையும் ஐம்பொறிகளையும் அடக்கி விரதம் இருந்து “”ஐயனே, தங்கள் அடியார்க்கு யான் பேதமையால் செய்த குற்றத்தைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்‘’ என துதித்தாள். கௌரிதேவியின் பக்தியில் திருப்தியுற்ற இறைவன் தேவியை ஏற்றுத் தன் இடப்பாகத்தில் அமரச் செய்தார். தேவர்கள் கேதார கௌரி விரதத்தின் பெருமையை உணர்ந்து தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தனர்.

பார்வதிதேவி இவ்விரதத்தை அனுஷ்டித்து இறைவன் அருளால் இறைவனது இடப்பாகத்தைப் பெற்றாள் என்பதால், கணவன்- மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழவேண்டும் என்பதையே இவ்விரதம் உணர்த்தும் தத்துவமாகக் கொள்ளலாம். “கேதார கௌரி விரதத்தை மேற்கொள் பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்‘ என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர்.

சித்தி விநாயக விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.

சஷ்டி - லலிதா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்களங்களையும் அருளும்.

அமுக்தாபரண விரதம் :

புரட்டாசி வளர்பிறை சப்தமியில, உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க, அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பிடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம்புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மகாலட்சுமி விரதம் :

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்பெறும்.
 
மஹாலக்ஷ்மி நிலைத்திருக்க!
 
1. ஸ்ரீஸுக்தம் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீஸுக்தம் என்பது வேதம் என்னும் உத்யானத்தில் பாரிஜாத மரம் போன்றது. வாக்குகளுக்கு அப்பாற்பட்ட லட்சுமியின் பெருமைகளை உணர சாதுக்களுக்கு ஸ்ரீஜுக்தம் கண்களாக அமைந்திருக்கின்றது என்கிறார் மகாகவி வேங்கடாத்ரீ. ஸ்ரீஸுக்தத்தில் லட்சுமி தன்னிடம் வந்திருக்க வேண்டும் என்று வேண்டப் பெறுகிறது. இது வேள்வியின் மூலம் மகாலட்சுமியின் அருளைப்பெறும் வழியை காட்டுகிறது. இது செய்ய இயலாதவர்கள் பாராயணம் செய்யலாம்.

2. பாராயணம்: கனகதாரா தோத்திரம் ஸ்ரீஸ்துதி போன்ற திருவருளும் தேவியின் பெருமை பேசும் திருநூல்களை தினமும் பாராயணம் செய்து வரலாம். பாராயணம் செய்யவும் இயலாதவர்கள் ஜபம் செய்யலாம்.

3. ஜபம்: வில்ல மரத்தடியில் அமர்ந்து ஹக்ரீவ மந்திரத்தை ஜபித்தாலும் திருவருளைப் பெறலாம்.

4. விரதங்கள்: சில விரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருட்கண்ணோக்கம் பெறலாம். அவையாவன:

சம்பத் கவுரி விரதம் மங்ளகவுரி விரதம்
கஜ கவுரி விரதம் தனவிருத்தி கவுரி விரதம்
லலிதா கவுரி விரதம் துளசிகவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம்
சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம்
சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம்
மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம்.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு தரும்.

கபிலா சஷ்டி விரதம் :

புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.



 

திருக்கருகாவூர் பதிகம்!

பன்னிரு திருமுறைகளில், தித்திக்கும் அறநூல் தேவாரம் தந்த ஆசான் திரு நாவுக்கரசர் என்ற திருவருட் செல்வர் என்ற அப்பர் பெருமான், கருவுற்றிருக்கும் பெண்கள் கரு நல்ல வளர்ச்சியுடன் உருப்பெற்று வளமாக வளர்ந்து  குழந்தை பிறக்க, நாவுக்கரசர்அருளி இப்பதிகப் பாடல்களை பாடினால் நல்ல குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பது திண்ணம்.

இப்பதிகம் சிவ பெருமானின் வீரதீரச்செயல்களையும், அவன் புகழையும், எட்டு மூர்த்தியாகவும், அவன் வீரமும், கருணையும் திருமாலுக்கும், தனது உடம்பில் ஒரு பாகத்தை உமையம்மைக்கும் கொடுத்ததையும் விரித்துரைக்கிறார்.
 
மேலும் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் காலத்து இறைவனின் புகழை முழுமையாக எடுத்துச் சொல்லும் இப் பதிகத்தை தூய்மையான இடத்ததில் கிழக்கு முகமாக ஆசனம் இட்டு அதன் மேல் அமர்ந்து அருள்தரும் கர்ப்பரட்சி (கரும்பைனயாளம்மை) உடனாய அருள்மிக முல்லைவனேசுவரர் திருவடியை தியானித்து கர்ப்பகாலத்தில் , எனது கரு நல்ல வளர்ச்சியுடன் உரிய பருவத்தில் உருப்பெற்று சுகமான நல்ல ஞானக்குழந்தை தரவேண்டும் எனத் தியானித்து அனுதினமும் உணவுக்கு முன் காலை, மாலை, நன்பகல், ஆகிய மூன்று வேளை ஓதிவர கரு உருப்பெற்று வளமாக வளரும் என்பது திண்ணம்.

இத்தலத்து இறைவி ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு மருத்துவம் பார்த்து கருவை காத்தபடியால், கருகாவூர் என்னும் பெயர் உண்டாயிற்று. தற்ேபாது இவ்வூ்ர் திருக்களாவூர் என்று மருவியுள்ளது. இறைவன் திருமேனி மணலால் ஆக்கப் பெறறது. இறைவன்திருமேனியில் முல்லைக் ெகாடி சுற்றியிருக்கும் அடையாளம் இருப்பதால், முல்லைவனேசுவரர் என அழைக்கப்படுகிறார்.
 
தீர்த்தம், பாற்குளம், தலமரம் முல்லைக்கொடி, சந்திரன் வழிபட்ட தலம் . திருஞானசம்பந்தரும், ஒரு பதிகம் பாடப்பட்ட தலம். இனி இப்பதிகப் பாடல்களைக் காண்போம்.

பாடல் எண் : 1

குருகாம் வயிரமாங் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையாடியாம்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

பொழிப்புரை :

கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள் , ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில் பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன் .

பாடல் எண் : 2

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் . செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் .

பாடல் எண் : 3

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான்

பாடல் எண் : 4

இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்ல லறுப்பானுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும்
குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

கருகாவூர் எந்தை , இராப்பொழுதாகவும் , இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும் , என் உள்ளத்தில் உறைபவனாகவும் , பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும் , ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும் , இடபத்தை இவரும் தலைவனாகவும் , கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் .

பாடல் எண் : 5

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

உலகைப்படைத்த பிரமனும் , அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை , பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் .

பாடல் எண் : 6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய் , எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய் , என்றும் மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய் , மன்றங்களில் கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

பாடல் எண் : 7

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு , ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான் . அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

பாடல் எண் : 8

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும் , அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும் , நன்னெறியாகவும் , பாவத்தைப் போக்குபவனாகவும் , வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும் , உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய் , அவர்களை ஒறுப்பவனாகவும் , அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான் .

பாடல் எண் : 9

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய் , இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

பாடல் எண் : 10

பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் . தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

பாடல் எண் : 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
பொழிப்புரை :

கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

புதன், 9 நவம்பர், 2016

சகலமும் அருள்வாள் சாமுண்டி!


துர்க்கை மகிஷாசுரன் என்னும் அசுரனை  அழித்த கதையை மார்கண்டேய புராணம் கூறுகின்றது. அதோடு, லலிதா ஸஹஸ்ர நாமம் என்ற சக்தியின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி வழிபாடும் நடைபெற்றிருக்கிறது.

மகா பாரதத்தில் சக்திக்குரிய பல நாமங்களைக் குறிப்பிடும் துர்கா தோத்திரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தேவி உபநிடதம், தேவியின் பெருமையைச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.

 சும்பன், நிசும்பன் என்ற அசுரர் கள் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து அரிய பல வரங்களைப் பெற்று மூவுலகங்களுக்கும் தலைவர்களாக  விளங்கினர். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி, தேவேந்திரப் பட்டினத்தைப் பறித்துக்கொண்டு அவர்களை துரத்தினர். தேவர்கள் பராசக்தியை சரணடைந்தனர்.

அவர்களுக்கு அபயமளித்த தேவி இளமங்கையாக, ஸர்வ லட்சணங்களும் கொண்டு சும்ப-நிசும்பரின்  பட்டினத்திற்கு அருகிலிருந்த மலையின் மீது அமர்ந்து தவம் செய்தாள். தேவியின் தோற்றப் பொலிவில் மயங்கிய சும்ப-நிசும்பரின் ஒற்றர்கள் ஒரு  பெண் பேரழகுப் பெட்டகமாய் தனித்திருப்பதை அவர்களிடம் கூறினர்.

அதைக் கேட்டு மயங்கிய அசுரர்கள் தனது சேனாதிபதிகளான சண்ட-முண்டரிடம் அப்பெண்ணை அழைத்து வருமாறு பணித்தனர். அதன்படி அவர்கள்  அன்னையை இழுத்துச் செல்ல முற்பட, தேவியின் வலது தோளிலிருந்து அழகிய ஒரு பெண் கத்தி, கேடயத்துடன் தோன்றினாள். அவள் பார்வதியின்  கருத்தையறிந்து ஒரு நொடியில் சண்டன், முண்டனின் தலைகளைக் கொய்தாள். அதனால் மகிழ்ந்த அன்னை ‘இன்று முதல் உன் திருநாமம் ‘சாமுண்டி’. ஸப்தமாதர்களில் ஒருத்தியாக குவலயத்தோர் உன்னை வழிபடுவர்’ என்று  வரமருளினாள். இவள் ‘சிவகாளி’ என்றும் அழைக்கப்படுவாள்.

சிவந்த நிறத்தினள். அழகானவள். கோபம் கொண்ட முகத் தோற்றம் கொண்டவள். ரக்த  சாமுண்டி, பிரம்ம சாமுண்டி எனவும் போற்றித் துதிக்கப்படுபவள். தேவாதி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றி பெற அருள்பவள்  இந்த சாமுண்டி தேவி.

தாருகன் என்ற அசுரன் தாருமதியின் புதல்வனாய்ப் பிறந்தான். அவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்து தேவர்களால் மரணம் ஏற்படாத வரத்தையும்,  அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். அவன் துன்பம் தாங்காமல் தேவர்கள்  பிரம்மனிடம் முறையிட்டனர். சினம் கொண்ட பிரம்மா ‘நீ ஒரு பெண்ணால் மரணமடைவாய்’ என தாருகனை சபித்தார்.

மகாசக்தியான தேவி, ப்ரம்மாதி தேவர்களின் துதியால் கருணை கொண்டு ப்ராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, இந்த்ராணி, வாராஹி, கௌமாரி  ஆகியோரோடு போர் புரிந்தனர். அப்போது அவர்கள் உடலிலிருந்து பீறிட்டெழுந்த ரத்தத் துளிகளிலிருந்து எழுந்த அசுரர்கள் பரமனை எள்ளி நகையாடினர்.

அதனால் சினம் கொண்ட மகேஸ்வரன் ஸம்ஹார மூர்த்தியாய் மாறி நெற்றிக் கண்ணைத்  திறந்தார். அதிலிருந்து தோன்றினாள் பத்ரகாளி. மலை போன்ற கருத்த தேகம், ஆயிரம் முகங்கள், நெருப்பைக் கக்கும் ஒளி பொருந்திய கண்களுடன்  உலகை நடுங்க வைக்கும் பேரொலிச் சிரிப்புடன் தோன்றினாள்.

அவளுடைய உக்ர ரூபத்தைக் கண்ட பார்வதி அவளை சுய உருக்கொள்ள பணித்தாள். அவ்வாறு சுயஉரு அடைந்த அவளிடம் ‘ஷண்மாதாக்களோடு நீயும் சேர்ந்து எழுவராய், ஸப்தமாதாக்களாய் உலகை பரிபாலனம் செய்து வருவாய்,’ என  வாழ்த்தினாள்.

சப்த கன்னியரில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல தேவர்களுக்கும் வரங்களை அருளுபவள் இவளே! இவளை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாள்; நமக்குத் தேவையான சகல பலங்கள், சொத்து, சுகங்களைத் தருவாள். தேவகணங்கள் புடைசூழ மஹா வித்யா ரூபிணியாய் சாமுண்டி தேவி தாரகனுடன் போர்புரிந்து அவனை வதைத்தாள். இதை தேவி மஹாத்மியம் 700 துதிகளால் விளக்குகிறது.

இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும்  முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவள். பயங்கர தோற்றம் கொண்டவள். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவள். பாம்புகளை உடலில்  அணிந்திருப்பாள். ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண் களைக் கொண்டிருப்பாள். விரித்த சடையில் கபாலம் தரித்தவள். மூன்று கண்கள், கோரைப்பற்கள் கொண்ட வாய், மண்டை யோட்டு மாலை  அணிந்தவள். திருக்கரங்களில் சூலாயுதமும், கபாலமும் ஏந்தி இருப்பாள். இத்தேவி பிடாரி (பீடா=துயரம், ஹாரி=நீக்குபவள்) என்று பண்டை நாளில்  வணங்கப்
பட்டாள்.

 உடலுக்கும், ஆன்மாவுக்கும் ஏற்படும் துயரங்களை நீக்கும் அதிதேவதையாக சாமுண்டா தேவி போற்றப்பட்டாள். அக்னி கிரீடத்துடன் கூடிய இவ்வம்மையே மாரியம்மன் உள்பட  பல்வேறு கிராம தேவதையாக உள்ளாள். தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கள்ளர் பசுபதிகோயிலில் சாமுண்டா தேவிக்கு, சோழர் காலத்தில் மிகப்பெரிய தனித்த ஆலயம் இருந்திருக்கிறது.

 மனித குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும் தாய்மையின் உருவமாக  கொண்டாடப்பட்டதே சப்த மாதர் என்ற சப்த மங்கையர் என்ற சப்த கன்னியர் வழிபாடாகும். சப்தமாதர் வழிபாடு இன்றும் கிராமப்புறங்கள் மட்டுமின்றி  நகர்புறங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.

த்யானம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டிதாத்யேயே சாமுண்டா ரக்தவிக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ   ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்னா சுபா!
ரக்தாபா கல சணட முண்ட தமணீ தேவி லலா போத்பவா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ராணா சோத்யதா

மந்த்ரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி
ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ:  சாமுண்டா ப்ரசோதயாத்

தேவி மஹாத்மியத்தில் சாமுண்டா!

தம்ஷ்ட்ரா கரால வதனே சிரோமாலா விபூஷணே
சாமுண்டே முண்ட மதனே நாராயணீ நமோஸ் துதே.

தெற்றிப்பல் திருவாயும், முண்டமாலையை அணிந்தவளும், முண்டனைக் கொன்றவளுமான நாராயணீ உனக்கு நமஸ்காரம். இவள் மிகுந்த கோபம்  கொண்டவள். சண்டா என்று சங்கு புஷ்பத்திற்குப் பெயர். அந்த புஷ்பத்தில் பிரியமுள்ளவள்.

இவள் சீற்றம் கொண்டால் ஊரில் கலகம் உண்டாகும். காளியின் கதையைக் கேட்டும், கவரிமான் விசிறியால் அன்னைக்கு விசிறியும், தயிர்  அபிஷேகம் செய்தும் அவல், சேமியா திண்பண்டத்தை நிவேதனம் செய்து எளியோர்க்கு அளித்துத் துதித்தால் தேவி மனம் குளிர்வாள்.

இவளை வணங்குவோர் வாழ்வில் எத்தகைய துன்பமும் எளிதில் தீரும்.



 

இல்லத்தில் மகிழ்ச்சி ஒளியேற்றும் இந்த்ராணீ !


இந்த்ராணீ இந்திரனின் சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவதம் எனும் வெள்ளை யானையே இந்த தேவியின் வாகனம்.  தேவலோக ராஜ்யபாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிக்கைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்ற ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம், கைலாசம்  இவற்றைக் குறிக்கும்.
 

அரச சம்பத்துகள் எல்லாம் இந்த சக்தியின் அனுகிரஹத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும் கீழ்க்கண்ட ஸ்லோகம்:

ஜாதோ ப்யல்ப பரிச்சதே க்ஷிதிபுஜாம்
 ஸாமாந்ய
மாத்ரே குலேநி: க்ஷோவனி சக்ரவர்த்தி
பதவீம் லப்த்வா ப்ரதா போன்னத:
யத் வித்யாதர ப்ருந்த வந்தித பத: வத்ஸ
 ராஜோ பவேத்
தேவி த்வச் ச்சரணாம்புஜ ப்ரண நிஜ
 ஸோயம் ப்ரஸாதோதய:

இந்திர பதவியை அடைய வேண்டும் என்றால் ஒருவன் ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவன் தேவேந்திரன். அவனது சக்தியே ஐந்த்ரீ எனும் இந்த்ராணீ. நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் எனும் வெண்ணிற யானையைத் தன் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டவள் இவள். அங்குசம், பாசம், வஜ்ராயுதம், தாமரைமலர், வரதம், அபயம் தரித்தவள். இந்திர நீலக் கல்லைப் போன்ற நீல நிறத் திருமேனி உடையவள். சகலவிதமான செல்வச் செழிப்புகளோடும், பூரண ஐஸ்வர்யங்களோடும் பொலிபவள்.

பச்சைநிறப் பட்டாடை அணிந்து பயிர்கள் நன்கு செழிக்க மழை பெய்விக்க வருணனுக்கு ஆணையிடுபவள். கற்பக விருட்சத்தின் நிழலில் ஐராவதமும், காமதேனுவும் சூழ வீற்றருள்பவள். கணிகையர்கள் எனும் ஆடற்பெண்டிர், ஆலயங்களில் சப்தமாதர்களில் இந்த்ராணீயை நடுவில் வைத்து வழிபட்டதாக பண்டைய நூல்கள் உரைக்கின்றன. இவளைச் சுற்றி அனவரதமும் அழகான தேவ மங்கையர்கள் வீற்றிருப்பர். தன்னை வணங்கும் பெண்களுக்கு மனோதைரியம், அழகு, வளமான வாழ்வு போன்றவற்றை தந்தருளும் தேவி இவள்.



ஆயிரம் தூண்கள் கொண்ட கற்பக விருட்சங்கள் நிறைந்த தேவலோக வனத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிம்மாசனத்தின் மீதுள்ள தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலம். இந்திரனைப் போன்றே ஆயிரம் கண்கள் கொண்ட தேவி இவள். இந்திரன் த்வஷ்டாவின் புத்திரர்களான விச்வரூபன், விருத்திரன் போன்றோரை ஒரு போரில் கொன்றான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பெற்று பலம், வீரம், தேஜஸை இழந்தான். மேலும் பீடைகள் பிடிக்காமல் இருக்க மானஸஸரஸ் என்ற இடத்தை அடைந்த இந்திரன் அங்கு தாமரைத் தண்டில் மறைந்து இருந்தான். இந்திரன் தலைமறைவானதால் வெற்றிடமான தேவேந்திர பதவிக்கு தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து, நஹுஷனை தலைவனாக்க முடிவு செய்து தேவலோகத்துக்கு அதிபதியாக்கினர். தற்காலிக இந்திர பதவியை அடைந்த இந்திரன், நிரந்தர இந்த்ராணீயின் அழகில் மயங்கி அவளை அடைய எண்ணினான்.

இந்த்ராணீ குரு பகவானைச் சரணடைந்து தனக்கு நேர்ந்த துன்பத்திலிருந்து மீள உதவும்படி கேட்டாள். நஹுஷனை அழைத்த குரு பகவான், ‘இந்திரன் இருக்கும்போது நீ அவன் மனைவியை அடைய நினைப்பது பாதகமான பாவச்செயல்,’ என அறிவுரை கூறியும் அவன் அதனை அலட்சியம் செய்தான். குரு பகவான் இந்த்ராணீயிடம், ‘நீ பராசக்தியைத் துதித்து வணங்கு. அவள் திருவருளால் உனக்கு இந்திரனும் கிடைப்பான். நஹுஷனும் அழிவான்,’ என்று கூற இந்த்ராணீயும் தேவியைத் துதிக்க தேவியும் அகமகிழ்ந்தாள். ‘இந்திரனின் மனைவியே நீ உடனடியாக மானஸஸரஸுக்குச் செல்வாயாக. அங்கு உபஸ்ருதி எனும் வித்தையை உபாஸிப்பாயாக உன் எண்ணங்களும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்,’ எனக் கூறி மறைந்தாள்.

அதன்படியே இந்த்ராணீயும் செய்ய அங்கு தடாகத்தில் ஒரு தாமரைப்பூ தண்டில் மறைந்திருந்த இந்திரனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று பழையபடி பலம், வீரம், வீர்யத்துடன் இந்த்ராணீ தேவியுடன் சேர்ந்தான். பராசக்தியின் தனிப்பெரும் கருணையால் மங்களகரமான வாழ்வு கிடைக்கப்பெற்றாள் இந்த்ராணீ.


தம்மைத் துதிக்கும் பக்தர்களுக்கும் சர்வ மங்களங்கள் உண்டாக அருள்பவள் இத்தேவி. வியாசர் பாரதத்தில் திரௌபதி, இந்த்ராணீயின் அம்சம் எனவும், பாண்ட வர்கள் இந்திரனின் அம்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சதையின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பூசி, பலாச்சுளையை நிவேதித்து தானமளித்தால் நலம் உண்டாகும்.

த்யானம்

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம்  பிரதீகரை:
இந்திர நீல நிபேந்த்ராணி த்யேயா ஸர்வ ஸம்ருத்திதா

மந்த்ரம்

ஓம் ஈம் இந்த்ராண்யை நம:
ஓம் ஐம் சாம் இந்த்ராணீ கன்யகாயை நம:

காயத்ரி

ஓம் ச்யாமவர்ணாயைவித்மஹே
வஜ்ர  ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்த்ராணீ ப்ரசோதயாத்.

ஓம்! வெண்ணிற யானை ஓவியம் வரையப்பட்ட கொடியை ஏந்தி, கரத்தில் வஜ்ராயுதம் தரித்த இந்த்ராணீ என்னும் தேவியை த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி அளவற்ற செல்வங்களையும் மேலான சுகங்களையும் மனதில் மகிழ்ச்சியையும் அருள்வாளாக.

பூரண த்யானம்

அம்பாயா ஸ்தன மண்டலாத் ஸ்முதிதாம்
சுவேதே த்வீபே ஸுஸ்திதாம்
ஹஸ்தை: அங்குச தோமரே சதத்தீம்
பாசாம்ச வஜ்ராயுதாம்

மாஹேந்த்ரோபல தேஹகாந்தி ருசிராம்
மாஹேந்த்ர சக்திம் பராம்
இந்த்ராணீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்
ஸதபாதகு ஸௌபாக்யதாம்.

பூரண த்யானம்!

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ  ஸமன்விதாம்
ஸரத்ன மகுடோ பேதாம் ஹேம வர்ண ஸ்வரூபிணீம்

வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே கஜ வாஹன ஸம்ஸ்திதாம்.

ஒருமுகம், இரண்டு கண்கள், நான்கு கரங்களையுடையவளும், ரத்னங்கள் இழைக்கப்பெற்ற மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிறமான மேனியை உடையவளும், வரதம், அபயம், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான இந்த்ராணீ தேவியை வணங்குகிறேன்.

தேவி மஹாத்மியத்தில்,

‘இந்த்ராணீ கிரீடினி மஹா வஜ்ரே ஸஹஸ்ரநயனே  ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரீ நாராயணீ  நமோஸ்துதே,’

என்று வருகிறது.


கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே, விருத்தாசுரன் பிராணனைப் போக்கியவளே, உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

அதி சௌந்தர்யரூபம், எந்நேரமும் சிவ பூஜையில் ஈடுபாடு போன்ற பல வரங்களைப் பெற்றுத் திகழ்பவள் இந்த்ராணீ. தன்னை வழிபடும் மங்கையர்க்கு அவர்கள் விரும்பிய வரனுக்கு மாலையிட அருள்வாள்.