புதன், 9 நவம்பர், 2016

வல்லமை அருளும் வாராஹி!


வாராஹி மாலை

இரு குழை கோமளம் தாள் புஷ்பராகம்  இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே! 

வாராஹி துதி

இடி மின்னல் பூகம்பம் எதுவரினும் என்னவுன்
இருபத மெனைக் காக்குமே!
கடிய விட தேள்பாம்பு மிருகங்கள் யாவுமுன்
கண்களுக்கே அஞ்சுமே!

கடிதான துன்பங்கள் காலபயம் என்றாலும்
காதவழிதான் ஓடுமே!
மடியுமுன் என் மடமை நீக்குமொரு ஞானமே
மாதேவி வாராஹியே!
 
 
வாராஹி காயத்ரி:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

ஓம் மஹிஷத்வஜாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.
 
லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி. ‘ஜகத் கல்யாண காரிண்ய’ எனும்படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் சப்த மாதர்களில் தலையானவள் இந்த வாராஹி. மகாகாளி, தாருகாசுரனோடு போர் புரிந்தபோது அவளுக்குத் துணை நின்றவள். யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி. சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். சிங்கமதை வாகனமாய்க் கொண்டு மூவுலகங்களையும் ஆளும் லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாய் விளங்குபவள், இந்த அம்பிகை. லலிதையின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி எனும் பொறுப்பில் தண்டினீ  என  இவள் பக்தர்களால் போற்றப்படுகிறாள்.
 

ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு, சக்கரம், கதை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தியின் அம்சமான வாராஹியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.

திருமாலின் ஒப்புயர்வற்ற யக்ஞ வராஹ வடிவத்தை எடுத்துக் கொண்ட சக்தி எவளோ, அவளே அங்கு வாராஹி வடிவம் தாங்கி வந்து சேர்ந்தாள் என தேவி மஹாத்மியம்(19/458) எட்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வராஹமூர்த்தியின் அம்சமே வாராஹியாவாள்.
 
இந்த வாராஹி, லலிதா தேவியின் ஸ்ரீபுரத்தின் 16வது பிராகாரமான மரகதமணியால் ஆன பிராகாரத்தில் வசிப்பவள். மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்த பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்காரங்களுடன் அருள்பவள் இத்தேவி.

வடகிழக்குப் பகுதி என்பது ஆராதனைக்குரியது. அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றை தருவது. அப்படி வளம் கொடுக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாள் வாராஹி. அதனால் தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள். நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும் அவளின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன.

தந்திரராஜ தந்த்ரம் எனும் நூல் இவளை லலிதையின் தந்தை என்றே குறிப்பிடுகிறது. பெண் தெய்வமாக இருப்பினும் காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே அது இத்தேவியை வர்ணிக்கிறது. இதே கருத்தை பாவனோபநிஷத், ‘வாராஹி பித்ரு ரூபா’ என ஆமோதிக்கிறது.

இத்தேவியை பஞ்சமி தினத்தன்று வழிபடுதல் விசேஷம். ‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியைப் போற்றுகின்றார்.

காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள். என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். வாராஹி காவல் தெய்வம். காலம் எனும் கடலில் நீந்தும் நம்மை கரை சேர்க்கும் கப்பல் அவள்.
 
 
இத்தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது, தன் பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற அனந்த கல்யாண குணங்கள் கொண்ட மனைவியாய் இவள் திகழ்வதை உணர்த்துகிறது. வலக்கரம் அபய முத்திரை காட்டி அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குகிறது. இவள் ஏந்தியுள்ள கலப்பை நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, இரண்டாவதாக ஆழமாக உழுது, மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, கடைசியில் அதில் பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படிச் செய்கிறது.

அதுபோல, நாம் உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி திசுக்கள் வளர உதவி செய்கிறது. நம் ஐம்புலன்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவிலா புத்தியையும் மிருதுவாக்கி, மென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும் தெளிவடையும் புத்தியில் இறையுணர்வு வளரவும் வழி வகுக்கிறது.

மேலும் பல பிறவிகளின் கர்மவினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை, பூமியில் புதைந்துள்ள கிழங்கை கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு வருவதைப் போல், ஞானக் கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கின்றது.
 
 
தான் ஈன்ற கன்றினை தன் நாக்கால் நக்கி பசு சுத்தப்படுத்துவதுபோல தன் தாயன்போடு  தன்னை அண்டுவோரின் தோஷங்களை எல்லாம் போக்கிப் புனிதமாக்கி, பயம், பந்தம், துன்பங்களிலிருந்து மீட்டு, முக்திக்கு அருள் செய்கிறாள்.

பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்ரன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தவள் இந்த வாராஹி என லலிதோபாக்யானம் இவளை புகழ்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் ‘விஷூக்ரப் ப்ராணஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா’ எனும் நாமங்கள் இவளைக் குறிக்கின்றன.

இவள் ஆரோகணித்து வரும் ரதம், கிரி சக்ர ரதம் என்றும் இவளின் யந்திரம் கிரியந்த்ரம் என்றும் போற்றப்படுகிறது. (கிரிபன்றி). காட்டுப் பன்றிகளால் இழுக்கப்படுவதால் அந்த ரதத்திற்கு அப்பெயர். பராபட்டாரிகையான லலிதையின் மனக் குறிப்பறிந்து ரதத்தைச் செலுத்துவதால் ‘ஸங்கேதா’ என இவள் போற்றப்படுகிறாள்.

மகாவாராஹி யந்த்ரம் பெரிய தொழிலகங்களில் நிறுவப்படுமாயின் தொழில் வளம் சிறக்க உதவும். ஒரு நாட்டின் தலைநகரத்தில் மஹாவாராஹி யந்த்ரமும் மூர்த்தமும் நிறுவப்படுவது மிகமிக அவசியம். பிற நாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இன்னல்களையும் தவிர்க்கும் ஆற்றல் உடையது கிரி சக்ரம் என்கிற வாராஹி யந்த்ரம்.

இத்தேவி ஆரோகணித்து வரும் சிம்மம் வஜ்ரகோஷம் என வணங்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு இத்தேவி எருமை மீதும் ஏறி வருவாள். சில சமயங்களில் நாகவாகனத்திலும் அமர்ந்தருள்வாள் என தேவி பாகவதம் கூறுகிறது. இந்த வாராஹி குதிரை மீதேறி வரும்போது அஷ்வாரூடா வாராஹி என போற்றப்படுகிறாள். குதிரைக்காரி என சித்தர்கள் போற்றும் தேவி இவள். ஜனவசியம், ராஜவசியம் போன்றவற்றை அருள்பவள். அரசியலில் வெற்றி பெற இத்தேவி நிச்சயம் அருள்பவள்.

மகாவாராஹி எனும் ஆதிவாராஹி, பிருஹத் வாராஹி, லகு வாராஹி, பஞ்சமி வாராஹி, அஷ்வாரூடா வாராஹி, சுத்த வாராஹி, தண்டநாதா வாராஹி, தும்ர வாராஹி, ஸ்வப்ன வாராஹி, வார்த்தாளி என வாராஹியின் வடிவங்கள் பலப்பல.
 
 
உன்மத்த பைரவி, ஸ்வப்னேசி, திரஸ்கரணி, கிரிபதா ஆகியோர் இந்த அம்பிகையின் பரிவார தேவதைகளாக அருள்கின்றனர். இந்த தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப் பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை சுண்டல் மற்றும் தேனும் இடம் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வெண்தாமரையும் செந்தாமரையும் இந்த அன்னையின் பூஜைக்கு உரியவை. இரவு நேர பூஜையே இந்த தேவிக்கு உரியது.   வாராஹியைக் குறித்த வாராஹி மாலை எனும் தமிழ் துதியும் நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் எனும் வடமொழி துதிகளும் புகழ் பெற்றவை.

‘கோலாம்பா’ என்றும் வாராஹி தேவியை அழைத்து வழிபடுவோர் உண்டு. பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி, வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார். அறுபது கோடி வாராஹி கன்னிகைகள் இவள் பரிவார தேவதைகளாக ஏவல் புரிவதை  ‘தேவிஸ்ரீசஷ்டி கோடி பிர்வ்ருதா’ எனும் திருநாமம் உணர்த்துகிறது.

அதீத வீர்யம் கொண்டவள் என்பதை ‘வீர்யவதி’ என்ற நாமம் குறிக்கிறது. வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் உதவும்.

எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும் பித்தமும் ஏற்படும். மயில் தோகை விசிறியால் விசிறி, பிரார்த்தனை செய்து முறுக்கும் வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்ற, கேட்ட வரங்களைத் தப்பாமல் பெறலாம். ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி எனும் பெயரில் வாராஹி நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது.

ஒப்பற்ற சக்தியாக உலகத்திற்கு மங்களங்கள் அருளும் வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி, வழிபட நம் துயர்கள் தூசாய்ப் பறக்கும்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. இரவு அர்த்தஜாம பூஜையின் போது அகிலாண்டேஸ்வரியின் திருமுகம் வாராஹியைப் போல் தோற்றமளிப்பதாக பக்தர்கள் கூறுவதுண்டு.  அஷ்டோத்ரம், ஸஹஸ்ரநாமாவளி போன்ற பல்வேறு துதிகளால் அன்னையை வழிபடலாம். ஒப்பற்ற தேவியின் பாத கமலங்களைப் பற்றி நம் பாதக மலங்களை ஒழித்து நிர்மலமான தூயவாழ்வு பெறுவோம்.

வாராஹி அருளும் ஆலயங்கள்!

காசித்ரிபுரபைரவி காட் அருகில் முன்பு பாதாள பைரவி என்று வணங்கப்பட்ட வாராஹி, காஞ்சி காமாட்சியம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சை பெரிய கோயில் வாராஹி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களேஸ்வரர் ஆலயம் அருகில் அருளும் வாராஹி, திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலய வாராஹி, சென்னைமயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலய வாராஹி, ஆந்திரா பிரொடத்தூர் ராமலிங்கேஸ்வரர் ஆலய வாராஹி, பூரி ஜகன்நாதர் ஆலயம் அருகில் வாராஹி தெருவில் வீற்றிருக்கும் வாராஹி என நாடு நெடுக கோயில் கொண்டு அன்னை வாராஹி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறாள்.

பாவனோபநிஷத் குறிப்பிடும் லலிதையின் தாயாக குறிப்பிடப்படும் குருகுல்லாவிற்கும், தந்தையாக குறிப்பிடும் வாராஹிக்கும்  புவனேஸ்வருக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள கொரகொரா எனும் சிற்றூரில் தனிக் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



 
 
 

வேண்டும் வரமருளும் வைஷ்ணவி!

 
த்யானம்!
 
சக்ரம் கண்டாம் கபாலம் ச சங்கம்ச தந்திகண:
தமால ச்யாமளோ த்யேயோ வைஷ்ணவீ விப்ர மோஜ்வலை
ஏக வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
வரதாபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரம்ச தாரிணீம்
நவயௌவன ஸம்பன்னாம் மத் கருடவாஹனாம்
சர்வ லக்ஷண ஸம்பன்னாம் வைஷ்ணவீம் தேவிகாம் பஜே:

ஒரு முகம் இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், அபய-வரத முத்திரை, சங்கம், சக்ரம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவளும்,  பால்ய வயதைக் கடந்து யௌவன வயதை அடைந்திருப்பவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளுமான வைஷ்ணவி தேவியை வணங்குகிறேன்.
 
 
மந்த்ரம்
 
ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி காயத்ரி!
 
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.

 
ஓம் தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
 
வலிமையான கருடனைக் கொடியில் கொண்டவளும்,  சக்ரத்தை ஏந்தியவளும் ஆகிய வைஷ்ணவி தேவியைத் த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி, வேண்டிய வரங்களைத் தருவாளாக.
 
 
தேவி மஹாத்மியத்தில் வைஷ்ணவி:
 
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே.

வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் (வில்) ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.


வைஷ்ணவி தேவி, விஷ்ணுவின் சக்தியாகப் பொலிபவள்.  தேவி புராணம், ‘சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததா ஹரிஹரவிஷ்ணு ரூபா த்வா தேவி வைஷ்ணவி தேவி தேந கீயதே’ என்று இவள் புகழ் பாடுகிறது. திருமாலைப் போல சங்கு, சக்ரம், கதை ஆகியவற்றைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவி என்று பெயர் பெற்றாள் என்றும் கூறுகிறது.


தேவியே திருமால். திருமாலே தேவி. கோபிகைகளை மோகத்தில் ஆழ்த்திய கிருஷ்ணன் புருஷ வடிவம் என்பதை ‘மமைவ பௌஷம் ரூபம் கோபிகா ஜன மோகனம்’ என்று லலிதோபாக்யானத்தில் லலிதையே கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.


அந்த லலிதோபாக்யானத்திலேயே திருமால் வீரபத்திரரிடம் ஆதி சக்தியே போக வடிவில் பவானியாகவும், யுத்தத்தின் போது துர்க்காம்பிகையாகவும், கோபத்தில் காளியாகவும், புருஷ வடிவில் விஷ்ணுவாகவும் நான்கு வடிவங்களில் அருள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

நம்மைக் காத்து நம் மனோரதங்களை பூர்த்தி செய்யும் தேவி இவள். இவளது வாகனமான கருடனே பெரிய திருவடியாக திருமாலுக்கு விளங்குகிறது. அழுக்கற்ற சுத்த ஸ்படிகம் போல பளபளப்பாக உள்ள நீலநிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால்.


சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்
களைக் காக்கும் திருமாலுக்கு உதவும் சக்தி வைஷ்ணவி எனப் போற்றப்படுகிறாள்.ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, சங்கு, சக்ரம், வில், அம்பு, வாள், கதை, அபயம், வரதம் தரித்தவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். திருப்தியளிப்பவள். ச்ருங்காரம் ததும்பும் வண்ணப் பொலிவு கொண்ட பேரழகு. திருமாலின் போக சக்தி.

சீழுக்கு அதிதேவதையான இவள் சினமுற்றால் விஷக்கடிகள் பெருகும். தென்னை ஓலை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால் நிவாரணம் பெறலாம். திருமகளின் பெருமைகளை ஸுக்தம் அருமையாகப் பேசுகிறது.

இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை ‘கந்தத்வாராம்’ எனும் மந்திரம் கூறுகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை துராதர்ஷாம் என்ற நாமம் குறிப்பிடுகிறது.இவள் அருட்பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்தை பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கையை வனப்பும் வாளிப்புமாக மாற்றி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.

நம் வீட்டில் திருமகள் அருள்புரியவேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். பசுவின் பாகங்களில் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள்.

கோமாதாவிடம் ‘எனக்கும் உன் பவித்ரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’ எனக் கேட்டாள். யாரும் இடம் பெறாத பகுதி, தன் பிருஷ்டபாகம் . அதை எப்படி  தேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி தேவி ‘உன் தேகம் முழுவதுமே பவித்ரம். அதனால் உன் பின்பக்கமாகிய ப்ருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்,’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள்.

அதனால் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமானவையாகின்றன. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணீம்’ எனும் சொல் குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘‘ஈம்’’ பீஜம் குறிக்கிறது.


திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மிணி யாகவும், சீனிவாசனாய் வந்தபோது பத்மாவதி யாகவும் அவதரித்தவள் திருமகளே.

வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்யலட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்தி லட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தக லட்சுமியாகவும், வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே.

வேதங்கள் போற்றும் திருமகளின் மற்றொரு வடிவம் பூமாதேவி. இவள் தாமரை மலரில் தன் சிவந்த பாதங்களைப் பதித்துள்ளாள். கருநிறமுடையவள். கிளி தீண்டும் சம்பாக் கதிர்களைக் கையில் தாங்குபவள். மற்றொரு கரம் குவளை மலர் தாங்கியிருக்கும். வர்ணமயமான ஆடை கொண்டவள். ரத்ன க்ரீடம் சுமந்த திருமுடியுடையவள். அந்த பூமாதேவி நம் விருப்பங்களை நிறைவேற்றட்டும்.

கேரளாவிலும் கன்னடத்து கரையோரங்களிலும் காணப்படும் அனைத்து பகவதி ஆலயங்களும் வைஷ்ணவி தேவியின் ஆலயங்களே என்பது ஒரு கருத்து. பக்தர்கள் ‘அம்மே நாராயணா’ என தேவியை அழைப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது.  இவ்வாறு லட்சுமி, பூமி தேவி போன்றோர் விஷ்ணு அம்சங்கள் தாங்கி நாரணனின் நாயகியராய் உலகிற்கு ஐஸ்வர்யங்கள், பூமி லாபம் போன்றவற்றை அருளும் வைஷ்ணவி வாழ்வாங்கு நம்மை வாழ வைப்பாளாக!
 
 

வெற்றிகளை குவிக்கும் கௌமாரி!


தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர், குமாரர் என வணங்கப்படுகிறார். அகங்காரத்திற்கு தேவதையாக இவர் கூறப்படுகிறார். ‘புருஷோ விஷ்ணுரித் யுக்த: சிவோ வா நாம நாமத: அவ்யக்தம் து உமாதேவிர்வா பத்ம நிபேஷணா யத் ஸமயோகாத் ஹம்கார:

ஸ்ச ஸேநாபதிர் குஹ:” எனும் வராஹ புராண ஸ்லோகப்படி சிவன் புருஷனென்றும், உமாதேவி ஞானம் என்றும் அவ்விருவரின் சேர்க்கையால் உண்டான அகங்காரமானது சேனாதிபதியான குகன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அகங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’ என்று வழிபடுகிறோம். வீரத்தை இவளே அருள வேண்டும்.


இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம், போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள்.இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள்.

அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.



ரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்ய, நலம் பெறலாம்.

சிங்கமுகன், சூரபத்மன், தாரகன் போன்றோரை அடக்க நந்தி கணங்களோடும், வேத மந்திர ஒலிகளோடும் வீற்றிருக்கும் பரமன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தான். அதன் வீர்யத்தைத் தாங்காத தேவர்களால் அது சரவணப் பொய்கையில் இடப்பட்ட ஆறு தாமரை மலர்களில் அதியற்புதமாக ஆறு குழந்தைகளாக, அன்னை பார்வதி அனைவரையும் ஓருருவாய், ஆறுமுகமாக்கினாள். அழகின் மொத்த உருவாய் தோற்றம் கொண்ட குமரனின் அறிவும், பொலிவும் ஆச்சரியமானது.



ஞான குருவாய் ஓம் எனும் பிரணவத்தை உபதேசித்து ஒப்பிலாத் தெய்வமானான். மாதா பார்வதி தேவியின் திருக்கரத்திலிருந்து சக்தி வேலை வாங்கி அதைக் கொண்டு சூரனை இரு கூறாக்கியவன்.இந்த தமிழ்க் கடவுளின் சக்தியே கௌமாரி எனப்படும் சஷ்டி தேவியாவாள். பரம்பொருள், மாயா சம்பந்தமாக தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள். இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி, கங்கையாகவும்;

திருமாலுக்கு தேவி, பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி, சரஸ்வதி எனவும், விநாயகனுக்கு சித்தி, புத்தியாகவும் அருள்வது போல் குமரனுக்கு தேவஸேனா, வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது. முன்பொரு சமயம் நாரதர் கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க அவர் தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அரியிடம் வரம் கேட்டனர்.

அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம் புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன் அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திர லோகத்தில் தேவஸேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும் தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும் வாக்குறுதி அளித்தான்.

 காலம் கனிந்தது. சூரர்களிடம் இருந்து தேவலோகத்தைக் காத்து தேவஸேனாவை மணம் புரிந்து தேவஸேனாதிபதியானான் முருகப்பெருமான். எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய வள்ளிமானையும் மணந்தான்.



தேவஸேனா தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை, போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். வள்ளி, தாமரை மலர் ஏந்தி அலங்கார ரூபிணியாக மாணிக்க மகுடங்கள் துலங்க இடப்புறம் வீற்றிருப்பவள். ஆகமங்கள் இவர்களை கஜா, கஜாவல்லி என்றும் வித்யா, மேதா என்றும் போற்றுகின்றன.

ஸ்வயம்புமனுவின் புதல்வன் நிஷிதன் என்பவனுக்குப் பிறந்த குழந்தைகள் உடனே இறந்தன. அவனை இந்த சஷ்டிதேவி என வழங்கப்படும் கௌமாரி உபாஸனை காப்பாற்றியது. இவள் குழந்தைகளைப் பிழைக்க வைத்து அவனிடம் கொடுத்தருளினாள்.

அப்போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையையும், வறுமையில் உழல்பவர்களுக்கு செல்வத்தையும். தன் கர்மாக்களை சரியாகச் செய்வார்க்கு அதன் பலன்களையும் தான் அளிப்பதாகவும் கௌமாரிதேவி உறுதியளித்ததாக புராணம் கூறுகிறது.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் எனும் பழமொழி கூட சஷ்டிவிரதம் இருந்தால் கருப்பையில் மழலைவரம் வரும் என்பதைக் குறிக்கும் என்பர். அவ்வாறான முருகனுக்கு உறுதுணையாய் இருக்கும் சஷ்டி தேவியான தேவஸேனாவை முருகனுடன் சேர்ந்து வழிபட நீண்ட ஆயுள், ஆரோக்ய முடன் சத்புத்ர ப்ராப்தியும் கிடைக்கும்.

நீலச்சிகண்டியில் ஆரோகணித்து குமரவேலுடன் கோலக்குறத்தியாய் பக்தர்களைக் காக்க வருபவள் வள்ளியம்மை. ஞானமும், தவமும் அறியாத வேடுவர் குல நங்கையைத் தானே வலியச் சென்று மணம் செய்த முருகனின் பரந்த நோக்கை அருணகிரியார் பரக்கப் பேசுகிறார்.‘முனினாமுதா’ எனும் சுப்ரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் கூட ‘‘குண்டலினி, நவவிதபக்தி செய்து தன்னை வழிபடும் அடியவர்க்கு அருள்புரியும் அநேக தெய்வங்கள் உண்டு; ஆனால், எதுவுமே அறியாத எளியோருக்கும் விரும்புவதைத் தரும் தெய்வமான முருகனின் பேரருளை வியக்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்.

காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு, அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன், 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூலரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாய்க் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்திராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும்.

அதே காலம் ஒரு நாளாய் உருவகம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதையே முருகனின் வடிவமாக எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனா. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் திருவடிவம். முருகப்பெருமானை காலரூபமாகவும் காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம்.

முருகனை படைப்புத் தொழில் புரியும் பிரம்மசாத்தனாகவும், காத்தல் தொழில்புரியும் முகுந்த முருகனாகவும், தீயவற்றை அழித்து நல்லோரைக் காக்கும் உருத்திர குமாரனாகவும் போற்றி வழிபட்டதைப் போலவே அவனது அம்சமான கௌமாரியையும் மூன்று நிலைகளில் வழிபட்டனர் என கருதுகின்றனர்.

த்யானம் !

அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காம தாயினீ
பந்தூக வர்ணாம் கிரிஜாம் சிவாயா
மயூர வாஹனாம்து குஹஸ்ய சக்தீம்
ஸம்பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ
கட்வாங்கரா சௌ சரணம் ப்ரபத்யே!

ஷட்வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம் நீலவர்ணாம் ஸுயௌவனாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்தீம்     ச தாரிணீம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் கௌமாரீ தாம்விபாவயேத்.

மந்த்ரம்:

ஓம் கௌம் கௌமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நம:

கௌமாரி காயத்ரி:

ஓம் சிகி வாஹனாய
 வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
.
ஓம் சிகித்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய  தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.

மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங் களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என் முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.


தேவி மாஹாத்மியத்தில் கௌமாரி!

மயூர குக்குட வ்ருதே மஹா சக்தி தரேனகே
கௌமாரீ ரூப ஸம்ஸ்தானே நாராயணீ நமோஸ்துதே.

மயில் வாகனம் மீது கோழிக்கொடி சூழ, மகாசக்தி ஆயுதத்தைத் தாங்கி
பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.
 

இவ்வளவு மகிமை வாய்ந்த புத்திரப்பேற்றை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தி கௌமாரிதேவி பக்தர்களுக்காக எதைத்தான் செய்யமாட்டாள்?

இந்த கௌமாரியை வழிபட பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மனதில் புத்துணர்வும் தெம்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அறிவு பிரகாசிக்கும்.


 

சர்வ மங்களம் அருளும் மாகேஸ்வரி!


சப்தகன்னியரில் இரண்டாவதாக இருப்பவள் மாகேஸ்வரி. மகேஸ்வரனான பரமசிவனின் பத்தினியானதால் மாகேஸ்வரி என்றானாள்.

இத்தேவி சர்வ மங்களத்தையும் அருள்பவள். இவள் வாகனம் எருது. தர்மத்தின் உருவம். உழைப்பிற்குப் பெயர் பெற்றது. சகலவிதமான ஞானம், வற்றாத ஆற்றல், அளப்பரிய சக்தி போன்றவற்றின் மொத்த உருவமே மகேஸ்வரன். அந்த மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி. சிவபிரானைப் போன்றே முக்கண் ஐந்து திருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள்.

பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், கொடிய விஷங்கள் கொண்ட நாகங்களை தன் கைகளில் வளையல்களாகவும், கங்கணங்களாகவும் பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். வெள்ளை நிறமுடையவள். தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள்.

உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும்-போகமும் அருள்பவள்!
 
 
 
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் உலகில் செய்வதற்கு அரிதான சம்ஹாரம் எனும் தொழிலைச் செய்கிறார். வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள் என தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றில் கூறப்பட்டுள்ளது.

மகம் என்றால் வேள்வி என்றும் ஒரு பொருள் உண்டு. யாகங்களைக் காப்பவளாக இத்தேவி விளங்குகிறாள். யாகங்கள் முறையாக நடைபெற்றால்தான் நாட்டில் மழை பொழியும். வேளாண்மை பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதனால் வேள்விகள் முறையாக நடைபெறவும், நடைபெறும் வேள்விகளால் உலகமக்கள் பயனடையச் செய்பவளாகவும் இத்தேவி விளங்குகிறாள்.
 
 
லிங்கோத்பவ மூர்த்தி முதல் கங்காதர மூர்த்தி வரை ஈசன் பல்வேறு வடிவங்களில் உலகைக் காத்தருள்கிறான். அந்த அனைத்து வடிவங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் சக்தியாய் திகழ்பவள் இந்த தேவி. மகேஸ்வரரின் மனைவியாய் உள்ளதாலும், மகான்களின் மனக் குகையிலும் உறைவதாலும் மாகேஸ்வரி எனப்படுகிறாள் என்கிறது தேவிபாகவதம்.

இத்தேவி கயிலையங்கிரியில் வாசம் புரிவதில் விருப்பமுள்ளவள். கயிலாசம் என்றால் ஸப்தம் வாசம் செய்யும் இடம் எனப் பொருள்படும். முனிவர்களின் வேத கோஷத்தாலும், சிவ கணங்களின் நாத கோஷத்தாலும் இவள் வாசம் புரியும் இடம் கைலாயமாயிற்று.

நம் உடலில் கொழுப்புக்குத் தலைவியான இத்தேவி சினம் கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும். குறுவேர் விசிறியினால் விசிறி, குங்குமார்ச்சனை செய்து, சுண்டலும், நீர்மோரும் எளியவர்க்கு விநியோகம் செய்தால் அன்னை மகிழ்வாள்.

இந்த அம்பிகையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர். இவள் கையில் உள்ள சூலாயுதம் சிறப்பு பெற்றது.. இத்தேவி கோபம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், ஆச்சரியம் என்ற தீய குணங்களின் குரோதத்தைப் போக்கி அருள்கிறாள்.


ஒரு சமயம் ஹாலாஹலர் என்ற அசுரர்கள் பிரம்மதேவனிடம் மூவுலகையும் வெல்லும் வரம் பெற்று தேவர்களுக்கு தொல்லை கொடுத்தனர். திருமாலும், பரமனும் அவர்களுடன் நெடுங்காலம் போரிட்டு, அவர்களை வென்று தன் பவனம் எனும் இடத்திற்கு வந்தனர். தங்களுக்கு கிடைத்த வெற்றி பராசக்தியினால்தான் என்பதை உணர்ந்தும், தங்கள் வீர சூர பராக்கிரமங்களால் தான் வெற்றி கிட்டியது எனத் தற்பெருமை பேசிய அரியையும், அயனையும் விட்டு அவர்கள் சக்திகள் அகன்றன. சக்தி அகன்றதால் இருவரும் செயல்பட முடியாதபடி சோர்ந்தனர்.
 
அதைக்கண்டு பதறிய நான்முகன் தன் புதல்வர்களான மனு, சனகர் போன்றவர்களையும், தட்சனையும் அழைத்து தவம் புரிந்து மீண்டும் இருவருக்கும் பராசக்தியை அவரவர் சக்திகளாக இருக்கும்படி வரம் வாங்கிவரப் பணித்தார். அதன்படி அவர்கள் தவம் புரிய அவர்கள் தவத்தை மெச்சிய பராசக்தியும் அவர்கள் விரும்பிய படியே வரங்களை அளித்தாள்.

அப்போது தட்சன் தேவியைத் தன் புதல்வியாகப் பிறந்து வளர வரம் வேண்டினார். அதை ஏற்று அவன் மகளாய்ப் பிறந்த பராசக்தி தக்க சமயத்தில் பரமனை மணந்தாள். பின் தட்சன் தான் செய்த வேள்வியில் சிவனை அவமரியாதை செய்ததுடன், நிந்தனையும் செய்ததால் கோபத்தால் கோபம் கொண்ட தாட்சாயணி தன் உயிரை விட்டதாக தந்த்ர சாஸ்திரம் கூறுகிறது. அவள் பிரிவைத் தாங்கமுடியாத பரமனும் கலங்கினான். சிவனின்றி சக்தியும் சக்தியின்றி சிவனும் இல்லை எனினும், சொல்லும், பொருளும், வானும் நிலவும் போல் ஒன்றியுள்ள அவர்கள் உலகத்தோர் உய்யவே இருவர்போல் தோற்றமளிக்கின்றனர்.


 
பரம்பொருள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் எனத் திகழும்போது மாயையான பராசக்தி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்றாகிறாள் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். சக்தியின்றி மும்மூர்த்திகளும் ஏதும் செய்ய இயலாது என்பது சாக்த வழிபாட்டின் திண்ணமான கருத்தாகும்.தாட்சாயணியின் சித்கலா ரூபமான உடலை சுமந்து கொண்டு எங்கும் திரிந்த பரமனிடம் திருமால் நான் இந்த கலைகளைப் பிரித்து பாரதத்தில் ஆங்காங்கே சக்தி பீடமாக்குகிறேன் என்று கூறி அந்தக் கலைகளை புவியெங்கும் ஸ்தாபித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் அருளாட்சி புரிந்து சக்தி பீடங்களாகத் திகழ்ந்து வணங்குவோர் வாழ்வில் வளம் தந்து அருளும் மாகேஸ்வரியைத் துதிப்போம்.

யோ வேதா தௌ ஸ்வர: ப்ரோக்தா: வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ் ய: பரஸ் ஸ மஹேஸ்வர:

எனும் ஸ்ருதி வாக்யத்தில் குறிக்கப்பட்ட மகேஸ்வரன் த்ரிகுணாதீதமாதும் நிர்குணமானதுமான வடிவமுடையர். அப்பேர்ப்பட்டவரின் ஈஸ்வரியும் அவரைப்போலவேதான் இருப்பாள். மஹதீ என்றால் அளவிட முடியாத பெருஞ் சரீரத்தையுடையவள் என்று அர்த்தம்.

ப்ருஹதஸ்ய சரீரம்யத் அப்ரமேயம் ப்ரமாணத:
தாதுர் மேஹதி பூஜயாம் மஹாதேவி தத: ஸ்ம்ருதா என்கிறது தேவி புராணம்.

மாகேஸ்வரி தியான ஸ்லோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ  ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மாகேஸ்வரி மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
ஓம் -ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

மாகேஸ்வரி காயத்ரி மந்திரங்கள்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

 
தியான ஸ்லோகம்

ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சுசோபிதாம்;
 
வரதா பய ஹஸ்தாம்
தாம் ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

ஒரு முகம், முக்கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறமாக இருப்பவளும், மிகவும் அழகாகப் பிரகாசிப்பவளும், அபய முத்திரையைக் கொண்டவளும், மான், மழு இவைகளை ஏந்தியவளும், ரிஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும் மகாதேவியுமான மாகேஸ்வரியை வணங்குகின்றேன்.
அவள் எனக்கு மங்களங்களை அருள்வாளாக.

தேவி மஹாத்மியத்தில் மாகேஸ்வரி துதி:

த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
நாராயணி நமோஸ்துதே.

மாகேஸ்வரி வடிவம் கொண்டு திருசூலமும், பிறைமதியும், அரவமும் தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நாராயணியே உனக்கு நமஸ்காரம்.

இந்த அம்பிகையை மனமாற வழிபடும் யாவரும் மங்களங்கள் பெருகி இன்பமாய் வாழ்வர்.




 

படைப்பாற்றலை பெருக்குவாள் பிராம்ஹி!


சரஸ்வதியின் அம்சமாக ப்ராம்ஹி எனும் திருப்பெயரில் அருள்புரியும் அம்பிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பிராம்ஹி பிரம்ம தேவனின் முதல் எழுத்தாகிய ‘ப்ராம்’ என்பதே இவளின் பீஜாட்சரமாகத் துலங்குகிறது. மது, கைடப வதத்திற்குப் பின் பிரம்ம தேவனுக்கு உலகை உருவாக்கும்படி பராசக்தி கட்டளையிட, பிரம்மா தன் பணியைத் திறம்பட புரிய துணையாக அவருக்கு அவளருளால் தரப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராம்ஹி எனப் போற்றப்படுகிறாள்.


ஓர் சமயம் நான்முகன் தம் நாயகியரான காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி போன்ற தம் சக்திகளுடன் காசிக்கு வந்தார். அங்கு ‘பிதாமகேஸ்வரம்’ எனும் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். உலக நலனுக்காக பத்து அஸ்வமேதயாகங்களை அங்கே செய்து முடித்தார் படைப்புக் கடவுள்.

யாகங்கள் முடிந்ததும் ‘அவப்ருத எனும் ஸ்நானம் செய்ய வேண்டி கங்கையை நோக்கி காயத்ரி, சாவித்ரி போன்ற இரு தேவியருடன் சென்றார் பிரம்மா. யாக சாலையில் கந்தர்வர்களின் இனிய இசையில் சங்கீதத்திற்கு தேவதையான சரஸ்வதியே ஆழ்ந்திருந்தாள். ஆகையால், பிரம்மன் நீராடச் சென்றதை அவள் அறியவில்லை. சரஸ்வதிக்காக கங்கையின் கரையில் காத்திருந்த நான்முகன் நேரம் கடந்துவிட்டதால் மற்ற இருவருடன் அவப்ருத ஸ்நானம் செய்து முடித்தார்.

காலம் கடந்து கங்கையை அடைந்த கலைவாணி ‘‘தாங்கள் என்னை விட்டு எப்படி நீராடலாம்?’’ என வெகுண்டாள். அதனால் கோபம் கொண்ட பிரம்மா, ‘‘தேவி! நீ சரியான நேரத்தில் வராதது மட்டுமன்றி என்னிடமும் கோபம் கொண்டாய். எனவே, நீ பூமியில் நாற்பத்தெட்டு முறை பிறவி எடுத்து பின் எம்மை அடைவாய்,’’ என சாபமிட்டார்.



அதற்கு சரஸ்வதி, ‘‘நான்முகனே! நாற்பத்தெட்டு முறை நான் பூமியில் பிறவாமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்,’’ என வரம் கேட்டாள். ‘‘பூவுலகில் உனது உருவாய்த் திகழும் 48 அட்சரங்களும் 48 தமிழ்ப் புலவர்களாய்ப் பிறந்து ஒரே சமயத்தில் வாழ்வர். அவர்களுக்கு ‘ஹ’காரத்தின் உருவமாய் பரமனே அந்தத் தமிழ்ப் புலவர்களுக்குத் தலைவனாய் இருந்து அவர்களைப் போற்றுவார்,’’ எனக் கூறினார் பிரம்மன். அவர்களே கீரன், கபிலர், பரணர் முதலான முதற்சங்க தமிழ்ப்புலவர்களானர். சுந்தரேசப் பெருமானே அவர்களுக்குத் தலைவனாய், கவிநாயகனாய் அவர்கள் தலைவனாய் உதித்து தாமிரபரணிக் கரையோரம் வாழ்ந்த அவர்களை மதுரையம்பதிக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் பொறுப்பில் அவர்களை விட்டுச் சென்றார்.

இந்த சரஸ்வதி தேவியின் அம்சமான 48 மாத்ருகா அட்சரங்களே 48 சங்கப் புலவர்களாகத் திகழ்ந்தனர். பொருட்சுவையும், சொற்சுவையும் நிறைந்த இனிமையான பற்பல பாடல்களை இயற்றி, சொல்லும் பொருளுமாய், மலரும் மணமுமாய் உள்ள மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை போன்றவற்றைச் செய்து பாரினில் தமிழ் மணம் பரப்பியதை திருவிளையாடற் புராணம் பேசுகிறது.



இத்தேவி சொல்லின் உருவமானவள். வாக்தேவதை, வர்ணமாத்ருகா, வாக்வாதினி, சரஸ்வதி என மந்திர சாஸ்திரங்களால் வர்ணிக்கப்படுபவள். அ முதல் ஃ வரையிலுள்ள உயிர் எழுத்து களை முகமாகவும், கண், காது, மூக்கு போன்றனவாகவும் விளங்குகின்றன. வடமொழியின் கவர்கம், சவர்கம் போன்ற பத்து எழுத்துகள் தேவியின் கரங்களாகவும், ட-வர்கமும் த- வர்கமும் ஆகிய பத்து எழுத்துகள் ப-வர்க்கம் வயிறாகவும், ய-விலிருந்து ஹ வரை எட்டு எழுத்துகளும் தோல், ரத்தம், சதை, எலும்பு, மஞ்ஜை, சுக்லம் போன்ற தாதுகளாகவும் இவளின் திவ்ய தேகத்தில் அமைந்துள்ளன.

சங்கீதமும் ஸாகித்யமும் இரு ஸ்தானங்களாகத் திகழ்கின்றன. தன் ஆறு கரங்களிலும் வரதம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், சருவம், அபயம் போன்றவற்றைத் தரித்தவள். பாலிலிருந்து நீரைப் பிரிக்கும் அன்னத்தை வாகனமாய்க் கொண்டதை நம் வேண்டாத குணங்களையும் பிரித்துக் காப்பதை உணர்த்துவதுபோல் உள்ளது.



மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த நிறத்தை உடையவள். மான் தோலை ஆடையாகத் தரித்தவள். இவள் பாலை எனும் குழந்தை வடிவமும் கொண்டவள் என துர்க்கா பூஜா கல்பம் எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது. இத்தேவி அதிகாலையில் துதிக்கப்படும் சந்தியா தேவதையாகவும், பிரம்ம சக்தி எனும் கிராம தேவதையாகவும் வேள்விகளைக் காக்கும் யாக தேவதையாகவும், அஷ்ட பைரவர்களில் முதல்வனான அஸிதாங்க பைரவரின் தேவியாகவும் பல நிலைகளில் இருந்து பக்தர்களுக்கு திருவருட்பாலிக்கிறாள்.

இவளே கலாதேவி. சகல கல்வி கேள்விகளில் சிறந்தவராக இவள் கடைக்கண் பார்வை கட்டாயம் தேவை. இந்த தேவியின் வாகனமான அன்னமும் சத்வ குணத்திற்குப் பெயர் பெற்ற பறவையாகும்.
இந்த அன்னையை தியானித்து வழிபட்டால் கற்ற கலைகள் மறந்து போகாமல் மனதினில் நிலைத்திருக்கும்.

போர்க்கோலம் கொள்ளும்போது ஆயுதங்களோடும், ஞானத்தை அளிக்கும்போது வாக்தேவியாக, வீணா புஸ்தக தாரிணியாக, சரஸ்வதியாக அருள்பவளும் இவளே. தோலிற்குத் தலைவியான இவள் கோபம் கொண்டால் சொறி நோய் ஏற்படும். வெட்டிவேர் விசிறியால் விசிறி, விபூதி அணிந்து, புட்டும், சர்க்கரைப் பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளித்தால் அன்னை சாந்தமடைந்து நம்மை ஆசீர்வதிப்பாள். தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

ப்ராம்ஹி த்யான ஸ்லோகங்கள்!

அக்ஷஸ்ரக் சுபகுண்டி கேச தததீம் ஹஸ்தைர் வரம் சாபயம்
தேவீ ஸௌம்ய முகோத்பவாம் ஸ்மித முகீம்
ஹம்ஸேஸ்திதாம் வாஹனே ப்ரம்மாணீம்ஜகதாம் சுபம்
விதததீம் ஆத்யாமஹம் மாதரம்வந்தே ஸ்வர்ணஸமான
காந்திருதிராம் சக்திம் ப்ராம் ப்ராஹ்மணீ:

தண்டம் கமண்டலூம் கச்சாத் அக்ஷஸூத்ரமதாபயம்
பிப்ரதி ககச்யா ப்ராஹ்மீ க்ருஷ்ணாஜினோஜ்வலா.
சதுர்புஜாம் சதுர்வக்த்ராம் பீதமால்யாம் பரோஜ்வலாம்
வரதாபய ஹஸ்தாம் ச ஸாக்ஷமாலாம் ஸகண்டிகாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம்ஹம்ஸவாகனஸுஸ்திதாம்
ஸர்வாபரண ஸம்யுக்தாம் ப்ராஹ்மீம் த்யாத்வார பூஜயேத்.

நான்கு முகங்களையும், நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிறமான ஆடை, மாலை இவைகளால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், வரதம், அபயம் எனும் முத்திரைகளைக் கையில் பெற்றிருப்பவளும் (ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவளும், அன்னவாகனத்தில் பவனிவருபவளும் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமான பிராஹ்மி தேவியை தியானிக்கிறேன்.

ப்ராஹ்மி காயத்ரி!

ஓம் ஹம்ஸத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ ப்ராஹ்மி ப்ரசோதயாத்:

அன்னத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை உடையவளும், தர்ப்பைப் புற்களால் ஆன கூர்ச்சத்தை ஏந்திய கரங்கள் கொண்டவளுமான ப்ராஹ்மி எனும் தேவியை த்யானம் செய்கிறேன். அவள் என் முன்வந்து என் அறிவை மேம்படுத்தி ப்ரகாசிக்கச் செய்வாளாக.

மந்த்ரம்

ஓம் ப்ராம் ப்ராஹ்ம்யை நமஹ.

தேவி மஹாமித்யத்தில் ப்ராஹ்மி!

ஹம்ஸயுக்த விமானஸ்தே பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரிசாம்ப க்ஷூரிகே தேவி நாராயணி நமோஸ்துதே.

ப்ராஹ்மி வடிவம் எடுத்து ஹம்ஸங்கள் பூட்டிய விமானத்தில் வீற்றிருந்து தர்பைப்புல்லால் நீரைத் தெளிக்கும் தேவி நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

 தேவரும், முனிவரும், மனிதரும் வழிபடும் திருவடித் தாமரையினாலும் பிரம்மனின் சக்தியான ப்ராம்ஹி எப்போதும் தம்மைக் காக்கட்டும்.

 
 

செவ்வாய், 8 நவம்பர், 2016

விருப்பம் நிறைவேற்றும் பிரிஞ்சி இலை !



கிரகங்களில் சூரியனின் ஆகர்ஷன சக்தியை பெற்றது 'பே லீவ்ஸ்' எனப்படும் பிரிஞ்சி இலை.

இதை பொடித்து நீரில் கரைத்து நாம் வசிக்கும் வீடு/ தொழில் இடங்களில் தெளித்து வர எதிர் மறை சக்திகள் விலகும்.

மேலும் இந்த இலையில் நம் விருப்பம் ஏதேனும் ஒன்றை எழுதி சூரியனை தியானித்து விளக்கு ஒளியில் காட்டி எரிக்க விரைவில் விருப்பம் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.







 

சம்பத்து தாரை-பரம மைத்ர தாரை ரகசியம்!

அவரவர் நட்சத்திரத்திற்கு 2-11-20 வது நட்சத்திரங்கள் சம்பத்து தாரை எனப்படும்.

அவரவர் நட்சத்திரத்திற்கு 9-18-27 வது நட்சத்திரங்கள் பரம மைத்ர தாரை எனப்படும்.

அதாவது முதல் நபருடைய நட்சத்திரத்திற்கு இரண்டாமவர் நட்சத்திரம் சம்பத்து தாரையாக அமைந்தால், இரண்டாமவர் நட்சத்திரத்திற்கு முதல் நபர் நட்சத்திரம் பரம மைத்திர தாரையாக அமையும்.

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவக்கூடிய அமைப்பு இந்த சம்பத்து தாரை-பரம மைத்திர தாரைகளுக்கு மட்டுமே உள்ளது.

இரு நண்பர்களுடைய நட்சத்திரங்கள் சம்பத்து தாரை-பரம மைத்திர தாரைகளாக அமைந்தால் அவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள்.

வேறு எந்த இரு தாரைகளும் இவ்வாறு அமையாது. ஒன்று உதவினால் மற்றது உதவாது.
 

 

விசிறி ரகசியம்
==================

கலியுக சித்தர் "யோகிராம் சுரத்குமார்" அவர்களின் ஜென்ம நட்சத்திரம் "ஸ்வாதி".

ஸ்வாதி நட்சத்திரத்தின் சம்பத்து நட்சத்திரம் "விசாகம்". விசாகத்தில் வடிவம் "விசிறி", முறம்,தோரணம் மற்றும் குயவன் சக்கரம்.

விசிறி என்ற உபகரணத்தை அடிக்கடி கையாண்டு வந்தார் எனவே இவரது பெயரே விசிறி சாமியார் என்றானது. நட்சத்திர ஜோதிடப்படி இந்த விசிறி இவரது ஆன்மீகத்தில் உச்சம் பெற உதவியது எனலாம்.