வெள்ளி, 21 அக்டோபர், 2016

அஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்!


அஷ்ட கணபதிக்கும் ஒரே மந்திரம்!
அகத்தியர் தனது “அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
 
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதி கணபதி தானொன்று
உறுதியுள்ள மகா கணபதி தானொன்று
தாமப்பா நடன கணபதிதானொன்று
சங்கையுள்ள சக்தி கணபதி தானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வால கணபதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிர கணபதிதானொன்று
நன்றான மூல கணபதிதானொன்று
நாட்டமுட அஷ்டகணபதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே!
 
ஆதி கணபதி,
மகா கணபதி,
நடன கணபதி,
சக்தி கணபதி,
பால கணபதி,
உச்சிட்ட கணபதி,
உக்கிர கணபதி,
மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற்சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதி கேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
 
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
 
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம்.
 
இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
 
 


செல்வம் பெருக்கும் செந்தாமரை மலர்!

நமது சாஸ்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்கு மலர்களை மிக முக்கியமான அம்சமாக கருதுகிறது.

கண்டிப்பாக மலர்களை பூஜையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை மலர்களில் உள்ள மெல்லிய இதழ்கள் நமது பார்வைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் அதனுள் நுணுக்கமான பல சக்திகள் மறைந்து கிடக்கிறது.

மிக குறிப்பாக சொல்வது என்றால் மனிதர்களின் எண்ண ஓட்டங்களை கிரகித்து பிரபஞ்ச வெளியில் பரப்பும் சக்தி அதற்கு உண்டு அதாவது நமது பிராத்தனைகளை இறைவனிடத்தில் நேரடியாக சேர்க்கும் ஆற்றல் அக்னிக்கு இருப்பது போல மலர்களுக்கும் உண்டு.

அந்தவகையில் செவ்வந்தி பூவை கொண்டு பூஜை செய்தால் ஜாதகத்தில் கெட்டு போன குருபகவானின் அருள் பூரணமாக கிடைக்கும்.


சிவப்பு அரளி பூவை கொண்டு பூஜை செய்பவர்களின் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் விலகி அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்.

நீலநிறத்தில் உள்ள சங்கு பூவை கொண்டு பூஜை செய்யும் போது சனி கிரகத்தால் ஏற்படும் தொல்லைகளும் பீடைகளும் விலகும்.

வெண்தாமரை மலர்கொண்டு பூஜிப்பதினால் மன நிம்மதி ஏற்படும்,


 செந்தாமரை மலரை பூஜையில் பயன்படுத்தினால் செல்வம் பெருக் கும்.

பொன்னிறமாக உள்ள அரளி பூ திருமண தடையை விலக்கும்,

ரோஜா மலர் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

பாரிஜாதக மலர் மகாலக்ஷ்மியின் அருளை வாரி வழங்ககும்.

மல்லிகை மலர் கண் சம்மந்தமான நோய்களை விரைவில் தீர்க்கும்.

 அதை போலவே மஞ்சள் அரளி கடன் சுமையை கண்டிப்பாக குறைக்கும்.

"ஓம்" இதுவே தாரக மந்திரம் என்பதாகும். இந்த தாரக மந்திரம் எங்கே ஒலிக்கிறதோ எவன் மனதில் இடையறாது ரீங்காரம் இடுகிறதோ அங்கே ஆசை இருக்காது. மோகம் இருக்காது. கோபம் இருக்காது. லோபம் இருக்காது. அமைதியும், சாந்தமும், சகோதரத்துவமும் எப்போதும் விலகாது நிலையாக இருக்கும். சாந்தம் தவழுகின்ற மனதே பேரானந்தம் நிலவுகின்ற இடமாகும்.


 

குபேர சம்பத்துடன் வாழ சங்கு ஸ்தாபண பூஜை!

குபேர சம்பத்துடன் வாழ சங்கு ஸ்தாபன முறை முக்கியமான விஷயம். ஒரு மனையில் சாபதோஷம்,பட்சி தோஷம், முனி தோஷம், சந்யாச தோஷம், சல்லிய தோஷங்கள் விலகி விட முற்கால கிரஹ சாஸ்திர விதிப்படி-

வீட்டில் ஆயாதநிலை பார்த்து ஓட்டு மொத்தப் பணிகளைச் செய்வதற்கு சங்கு ஸ்தாபணம் என்று சொல்வது வழக்கச்சொல். இவை தவிர சங்கு ஸ்தாபண பூஜை என்று ஒரு விதி இருக்கிறது.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலம் அல்லது சுப தினங்களில் வாசற்படி அருகே கலச பூஜையில் வாஸ்து பகவானை வழிபட்டு அதன் எதிரெ வடக்கு(அ) கிழக்கு முகமாக அரிசியில் வலம்புரிசங்கு ஒன்றை வைத்து அதற்கு உபசாரங்கள் செய்து.

தபினீ கலா முதல்... பூர்ணா கலா வரை 18 கலைகளை சங்கீன் மேல் வர்ணித்து நிலைவாசம் மேல் மையக்குறியீடு செய்து அதில் சங்கு அளவு பார்த்து சுழிமுனை உள்ளே வரும்படி பிரதிட்டை செய்தல் வேண்டும் சங்கினுள் நவரத்திம் பஞ்ச லோகம், லட்சுமிகாசு வைத்து ஆலய குடமுக்கில் யாகத்தில் இட்ட காசு ஒன்றையும் வைத்து இரண்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும்.

நவதான்யம்,பூமிகிழங்கு, பூமிசமூலம் என்ற கலவை ஆகிய வற்றால் நிலை வாசல் அருகே உட்பகுதியில் வாஸ்து கிருஹலட்சுமி மூல மந்திரத்தால் சிறிதளவு(ஹோமம்) யக்ஞ வழிபாடு செய்து விடல் வேண்டும். சங்கு ஸ்தாபனம் பூஜை செய்து வலம்புரிச்சங்கு பதித்து பிரதிட்டா பணம் செய்யும் வீட்டில் பொருளாதார வசதி, ஏற்பட்டு பணம் காசுகள் சேர்ந்து கொண்டிருக்கும் குபேர சம்பத்துக்குக் குறைவு இருக்காது.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லிம் வாஸ்து க்குஹ லட்சுமியை குபேர ஸ்காயை ஐஸ்வர்ய நிலயாயை,சௌபாக்ய கராயைக்ரஹ பீடா கரணாயை
ஸ்ரீம் க்லீம் சுலாகா என்ற மூலமந்திரத்தால் அரசங்குச்சி நவதான்யத்தால் ஓம் செய்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் வாஸ்து தேவியே போற்றி
ஓம் கிருஹ லட்சுமியே போற்றி
ஓம்வளமூலமே போற்றி
ஓம்யோக சக்தியே போற்றி
ஓம் இல்லத்தின் செழிப்பேபோற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் கலசம் ஏந்திய போற்றி
ஓம் கற்பக விருட்சம் போற்றி
ஓம்சங்கு மூலமே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் தானியத் திருமகனே போற்றி
ஓம் கலைகள் உமையோப் போற்றி
வாஸ்து கிருஹ லட்சுமியே போற்றி
 
 

புதன், 12 அக்டோபர், 2016

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு!

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

 

நன்மைகள் பலதரும் நவ துர்க்கைகள்!

நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர்.

நவராத்திரி வழிபாட்டில் மிக முக்கியமானது துர்கையின் வழிபாடு. நவராத்திரி வழிபாட்டின் முதல் மூன்று நாள் வழிபாட்டிற்குரிய தெய்வமான துர்க்கையை வடமாநிலங்களில் ஒன்பது நாளும் ஒன்பது துர்க்கையாக வழிபடுகின்றனர். பல்வேறு வேதங்களும், வராஹ புராணமும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுகின்றன. நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகமாக களபிரம்மதேவரால் வராஹ புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.நவராத்திரி நாட்களில் இந்த ஒன்பது துர்க்கைகளையும் முறையாக செய்வதால் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.

நவதுர்க்கைளின் பெயர்கள்:-

சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, களைராத்திரி, மகா கெளரி, சித்தி தாத்ரி என்றவாறு நவதுர்க்கைகள் அழைக்கப்படுகின்றனர், நவதுர்க்கைகளும் தங்களுக்கென தனி சிறப்பு உருவமும், ஆயுதமும், வாகனங்களையும் கொண்டு அருள் புரிகின்றனர்.

பார்வதியாய் சிவனை மணந்த சைலபத்ரி:-

அன்னையின் முதல் வடிவம் சைலபுத்ரி, மலைமகள், பார்வதி, ஹேமாவதி, தாட்சாயிணி என்றும் இவறை அழைப்பர்.

நம் உடலில் உள்ள ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமான (காளை) வாகனமாக வைத்து கொண்டு ஒரு கையில் சூலமும், ஒரு கையில் தாமரையும் கொண்டு அருள் புரிகிறார்கள்.

தவம் புரியும் பிரம்மசாரிணி:-

நவராத்திரி இரண்டாம் நாள் வழிபட வேண்டியவள் பிரம்மசாரிணி எப்பொழுதும் தவத்திலேயே வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் கமண்டலமும் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவளுக்கென தனிப்பட்ட வாகனம் இல்லை அறிவு, ஞானம், நன்றி போன்றவற்றின் வடிவாய் திகழ்கிறாள் பிரம்மசாரிணி ஸ்வாதிடானத்தில் இருப்பவள்.

வீரத்தை அருளும் சந்திரகாண்டர்:-

சந்திர பிறையை தன் நெற்றியில் மணிபோல் அணிந்திருப்பதால் இவள் சந்திரகாண்டா. பத்து கரங்களுடன் மூன்று கண்களுடன் சிங்க வாகனத்தில் காட்சி தருபவர். 4 மணி மணிமுதுரக சக்ரத்தில் இருப்பவள். வணங்குபவருக்கு வீரத்தை வழங்குபவள்.

இன்பத்தை தருபவள் கூஷ்மாண்டா:-

படைத்தல் உருவமாய் காட்சி தருபவள் கூஷ்மாண்டா. சூரிய மண்டவத்தில் இருப்பவள். எட்டு கரத்துடன் சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவள், எட்டாவது கரத்தில் கலசததுடன் காட்சி தருகிறாள் அந்த கலசத்தின் மூலம் அஷ்ட சித்தியும், நவததியையும் பக்தர்களுக்கு தருபவள். அனாஹத சக்ரத்திற்கான கூஷ்மாண்டாதேவியை வணங்கினால் பாவம் நீங்கி இன்பம் பெறலாம்.

தூய்மையின் வடிவாய் மனதிற்கு அமைதி தருபவள் ஸ்கந்தமாதா

ஸ்கந்த என்றால் கந்தன், மாதா என்றால் தாய் கந்தன் தாயாக காட்சி தருபவள் ஸ்கந்த மாதா. தன் மடியில் ஆறுமுகத்துடன் கந்தனை அமர்ந்தபடி சிங்க வாகனத்தில் காட்சி தருகிறாள். இவளை வணங்குபவர் மனமும், ஆதாமாவும் அமைதி பெறும். விசுத்தி சக்ரத்தின் தெய்வமாக திகழ்கிறான்.

உலகை காத்த காத்யாயினி:-

நவராத்திரியின் ஆறாம் நாள் வழிபட வேண்டியவள் காத்யாயினி, இவளே மகஷாசுர மர்த்தினியும் ஆவாள் கையில் வாளுடன் சிம்மம் அமர்ந்திருப்பவள். ஆக்கினை சக்கரத்தின் இறைவியாக திகழ்கிறாள்.

அஞ்ஞானம் நீக்கும் காளராத்திரி:-

நவ துர்க்கைகளில் பயங்கரமான தோற்றம் கொண்டவர். நவராத்திரியின் ஏழாம் நாளில் வழிபட வேண்டிய காளராத்திரியை சுபங்கிரி என்றும் அழைக்கின்றனர்.

கழுதை மீது ஏறி அமர்ந்து, நான்கு கரத்துடன், கருமை நிரத்தில் இருப்பவள் காளராத்திரி.

வெண்மை ரூபத்தில் மகாகெளரி:-

பார்வதி சிவனை நோக்கி தவம் புரிந்த போது அவள் மன்மூடி கருமை நிறமானது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தருமணம் செய்யும் முன் பார்வதியை கங்கை நீரால் நீராட்டினார். அதன் காரணமாய் தேவியின் உடல் பால் போல் வெண்மையாய் மாறியதாம் அவளே மகா கெளரி துர்க்காஷ்டமி நாளில் துர்க்கையை மகா கெளரி என வழிபடுகிறோம், இவரின் வாகனமும் வெள்ளை காளை.

சக்தி தரும் சித்திதாத்தி:-

தாமறை மலரில் நான்கு கரத்துடன் அமர்ந்திருப்பவள் பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் அருள கூடியவள். பரமசிவனே இவளை வழிபட்டு அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்த நாரீஸ்வரர் ஆனார் நவராத்திரியின் கடைசிநாளான மகா நவமிக்குரிய துர்க்கைகளே.

 

திங்கள், 3 அக்டோபர், 2016

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம்!

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம். 
புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக போற்றப்படுகிறார். ‘வேங்’ என்றால் ‘பாவம்’ ‘கடா’ என்றால் ‘தீர்த்து வைக்கும் சக்தி’ என்று பொருள். ஆதலால் திருப்பதிக்கு ‘வேங்கடாச்சலம்’ என்ற பெயர் வந்தது. 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
 
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம்!
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
 
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
 
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும். 
 
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
 
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். 

ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.
 
ஒருமுறை முனிவர்கள் எல்லோரும் கூடி கங்கை நதி கரையில் யாகம் ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அப்போது அங்கே நாரதர் தோன்றி ‘மும்மூர்த்திகளில் யார் பெரியவர்’? யாருக்கு ‘அவிர்பாகம்’ கொடுப்பீர்கள்? என்று கேட்டார். இது முனிவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிருகு முனிவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டனர். பிருகு முனிவர் மும்மூர்த்திகளை தேடிச் சென்றார்.
 
முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு பிரம்மா வேதத்தை ஓதி கொண்டிருந்தார். இன்னொரு வாயினால் நாராயண நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருந்தார். பிருகு முனிவரை கவனிக்கவில்லை.  அடுத்ததாக கயிலாயத்துக்கு சிவனை காணச்சென்றார் பிருகு முனிவர். அங்கு சிவன் தியானத்தில் இருந்தார். பிருகு முனிவரை கவனிக்க முடியாமல் போய்விட்டது. 
 
ஆகவே முனிவர் வைகுண்டத்தை நோக்கி சென்றார். அங்கு மகாவிஷ்ணு திருமகளுடன் இருந்தார். பிருகு முனிவரை வரவேற்கவில்லை. ஆத்திரம் அடைந்த பிருகு முனிவர், விஷ்ணுவின் மார்பு மீது தன் காலால் உதைத்து விட்டார். விஷ்ணு கோபப்படவில்லை. மாறாக வாஞ்சையுடன் பிருகு முனிவரின் காலை வருடினார். 
 
பிருகு முனிவரின் செயலால் ஆத்திரமடைந்த திருமகள், திருமாலின் செய்கையால் மேலும் ஆவேசமடைந்து அவரை பிரிந்து வைகுண்டத்தை விட்டு பூலோகம் வந்து விட்டாள். திருமகளை விட்டு பிரிந்து இருக்க முடியாத மகா விஷ்ணுவும், வைகுண்டத்தை விட்டு கீழே இறங்கி சேஷசலத்தை (திருமலை) தன் இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது விஷ்யோத்தர மஹாத்மியத்தில் உள்ள கதையாகும்.
 
 
 
 

தங்கம் கலந்த மருந்து பிரசாதம்!

அருள்மிகு நெல்லிக்காட்டு பகவதி அம்மன் (பத்ரகாளி) கோயில்!


நீங்கள் கோயிலுக்குப் போனால் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் இன்னும் சிலவற்றை நைவேத்யமாக படைத்திருப்பீர்கள். ஆனால், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம்,கூத்தாட்டுக் குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயிலில்,நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் தினமும் அம்மனுக்கு மருந்து நைவேத்யமும் செய்கிறார்கள்.



மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது இங்கு சிறப்பு!

நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்த மருந்து பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லிக்காட்டு இல்ல பரம்பரை நம்பூதிரிகள் வைத்தியம் செய்து வந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரின் கனவில் நோய் தீர்க்கும் தெய்வமான, தன்வந்திரி தோன்றி, “தளிக்குந்நு” என்ற இடத்தில் பலர் நோயால் அவதிப்படுகின்றனர். நீங்கள் சென்று காப்பாற்றுங்கள். அங்கு நிரந்தரமாக தங்குங்கள். மேற்கு நோக்கிய சிவன் கோயில் அங்கு இருக்கும்,” என்றார்.
 
பெரியவர் நம்பூதிரி, இந்த விஷயத்தைக் குடும்பத்தினருக்கு தெரிவிக்க நெல்லிக்காட்டு குடும்பம் தளிக்குந்நு நோக்கி புறப்பட்டது. கூடவே தங்கள் குடும்பக் கடவுளான அம்மன் விக்ரகத்தையும் எடுத்துச் சென்றனர். வழியில் ஒரு முனிவர் குறுக்கிட்டு வழிகாட்டினார்.அவர்கள் தளிக்குந்நு சிவன் கோயில் அருகில் கூத்தாட்டுகுளம் என்ற இடத்தில் தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். அந்த நம்பூதிரி குடும்பம் விஷக் கடிக்கு சிகிச்சை செய்வதில் பிரபலமானது. எனவே பாம்பு கடித்து ஒருவர் சிகிச்சைக்கு வந்த போது, புதிய இடத்தில் சிகிச்சை தரச் சற்று தயங்கிய நம்பூதிரி பின்னர் சிகிச்சை அளித்தார். வந்தவர் குணமடைந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அங்குள்ள கால்நடைகள் எல்லாம் இறந்தன. இதனால் தலைமை நம்பூதிரி மனம் உடைந்து தொடர் பஜனை பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஏற்கனவே சந்தித்த முனிவர் வந்து, இனி விஷக்கடிக்கு சிகிச்சை தர வேண்டாம், கண் சிகிச்சை செய்யுங்கள்” என்று கூறி கண் மருத்துவத்திற்கான ஓலைச் சுவடிகளை அவரிடம் தந்தார். முனிவரது கட்டளைப்படி தங்களோடு எடுத்து வந்த பகவதி (பத்ரகாளி) அம்மன் விக்ரகத்தை கூத்தாட்டு குளத்தில் பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.
 
“இந்த அம்மனின் ஆசியோடு ஆயுர்வேத முறைப்படி கண்சிகிச்சையை நடத்துங்கள். மருந்தை தேவிக்கு நைவேத்தியம் செய்த பின்பு நோயாளிகளுக்கு தாருங்கள்” என்று கூறி விட்டு முனிவர் மாயமானார். முனிவராக வந்தது தன்வந்திரிதான் என எண்ணி, தன்வந்திரி விக்ரகமும் அங்கு பிரதிட்டை செய்யப்பட்டது. அந்த நம்பூதிரி குடும்பத்தின் வாரிசுகள் டாக்டர். என்.பி.பி. நம்பூதிரி, என்.பி. நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இந்தக் கோயிலை இப்போது நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முறைப்படி ஆயுர்வேதம் படித்து டாக்டர்களாகி “சூஷ்ரீதரீயம்” என்ற கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைக் கோயில் அருகிலேயே நடத்தி வருகின்றனர்.
 
இந்த மருத்துவமனையில், பிற மாநில மக்கள், குறிப்பாக தமிழகத்தினர், வெளிநாட்டினர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நவீன மருத்துவ கருவிகளுடன் பாரம்பரிய ஆயுர்வேத கண்சிகிச்சை அளிப்பதால் இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் புகழ் பெற்று விட்டது.பரம்பரை வழக்கமாக, இங்கு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தை அதிகாலையில் அம்மனுக்கு நைவேத்யம் செய்கிறார்கள். அதே போன்று நோயாளிகள் வீட்டிற்கு வாங்கி செல்லும் மருந்து களையும் அம்மன் முன்பு வைத்து சிறப்பு பூசை செய்கின்றனர்.மருத்துவமனைக்கு வருபவர்கள் தவறாமல் கோயிலுக்கு சென்று அம்மனை வழிபடுகின்றனர். கண்ணொளி கிடைக்க வேண்டுகிறார்கள்.
 
சாதி, மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இந்த கோயில், கேரள பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பூசைகள் மிக பக்தியுடைய நம்பூதிரிகளால் நடத்தப்படுகிறது.
 
ஆண்டு தோறும் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேறி, 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. அப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசம்.
 
கோட்டயம்: கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் பத்ரகாளி கோயிலில், "மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி' ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதி துவங்குகிறது.
 
கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ., தூரத்தில், கூத்தாட்டுகுளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது இக்கோயில். நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. 600 ஆண்டு பழமையானது. வழிபடும் பக்தர்களுக்கு, மருந்தை பிரசாதமாக தருவது, இக்கோயிலின் தனிச்சிறப்பு. 

ஆயுர்வேத ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நோய் தீர்க்கும் மூலப்பொருட்களை சேர்த்து மருந்து தயாரித்து, மந்திரங்கள் கூறி, அம்மன் முன் படையல் செய்யப்படுகிறது. பின்னர் அது பக்தர்களுக்கு வழங்கப்படும். விரதம் இருந்து, இந்த மருந்தை 41 நாட்கள் எடுத்துக் கொண்டால், தீராத நோய்கள் நீங்கும்; முன்ஜென்ம பாவம் தீரும் என்பது பக்தர்களின் அனுபவம்.
 
இங்குள்ள அம்மன் "கண்ணொளி தரும் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார்.

"மருத்துவத்திற்கான கடவுள்' தன்வந்திரி சுவாமிக்கு, இங்கு தனிக்கோயில் உள்ளது.
 
ஆடி மாத முதல் தேதி முதல் ஒரு மாதம்  மருந்து பிரசாதம் வழங்கப்படும். தினமும் காலை 5 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஆடி மாதத்தில், "நாலம்பல தரிசனம்" (நான்கு கோயில் தரிசனம்) செய்வது கேரளாவில் வழக்கம். கூத்தாட்டுக்குளத்திற்கு 10 கி.மீ., சுற்றுப்புறத்தில் ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன் கோயில்கள் உள்ளன. இங்கு தரிசித்து விட்டு, அந்த இடங்களுக்கும் பக்தர்கள் சென்றுவரலாம்.

 
ஜூலை 31 ல் "மருந்து பொங்கல்' இடும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் சன்னதியில், மருந்து பிரசாதம் சேர்த்து பொங்கலிடும் நிகழ்ச்சி, நாட்டிலேயே தனித்தன்மை வாய்ந்தது. நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர். முதியோர்கள், நோயாளிகளுக்கு தனி ஏற்பாடுகள் செய்யப்படும்.
 
சென்னை, கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியும், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து, கோட்டயம் வழியும் கூத்தாட்டுகுளம் செல்லலாம்.


வழிகாட்டி:
 
எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ.,தூரத்திலும், கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ.,தூரத்திலும் உள்ளது. கோட்டயம்- அங்கமாலி சாலையில் கூத்தாட்டுகுளம் ஜங்ஷனில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
 
 
மேலும் விபரங்களுக்கு 094478 75067, 094961 34500 ல் தொடர்பு கொள்ளலாம்
 
அருள்மிகு நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில், கூத்தாட்டு குளம், எர்ணாகுளம் மாவட்டம்
 
காலை 5- 9 மணி, மாலை 5.30 – இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.