வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சூரிய சதகம்! துதி!

சூரிய சதகம்!
 
oதேவர்கள் தமது சித்தாந்த முறைப்படி சூரியனை வழிபடுவர். சாரணர்கள் சொற்களாலும், கந்தர்கள் கானமிசைத்தும் துதிப்பர். நாகர்கள் அடிபணிந்து வணங்குவர். பைசாசர் மனதை அடக்கி வழிபடுவர். சாக்கியர் தமது ஆகம விதிப்படி பூஜிப்பர். மகரிஷிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதால் துதிப்பர். யோகியர் ஆத்ம சொரூபமே சூரியன் என உணர்ந்து அன்புடன் கும்பிடுவார்கள். விடியற்காலையில் எல்லோராலும் இவ்வாறு நமஸ்கரிக்கப்படும் பகலவன் எங்களைப் பாதுகாப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஆகாயவீதியில் செல்லும் சூரியன், ஆகாயகங்கை வற்றிவிடாதபடி தன் வெப்ப ஒளியை மென்மையாக்கிக் கொண்டான். அதனால் அது மலர்ந்த தங்கத் தாமரையோடு பொலிவு பெற்றது. சோலைகள் அழகு குன்றாமல், மணமிக்க பிரதேசமாயின. பனிபடர்ந்த மேருமலையின் பொற்சிகரங்கள் உருகாமல் தூய்மை பெற்றன. ஜடப் பொருட்களான அவை மீதும் கூட இத்தகைய அருள் கொண்ட சூரியன், எப்போதும் எம்மைக் காப்பானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் இருளை மட்டுமின்றி பாபங்களையும் அழிக்கின்றான். உயர்வான தாமரைகளை மட்டும் மலரச் செய்வதில்லை. சிறிய குன்றின் அருகிலுள்ள தாவரங்களையும் செழிக்கச்செய்து அவற்றையும் மலரச் செய்கின்றான். சரணமென்று சொல்பவர்களுக்கு தனது சத்ய சொரூபத்தைக் காட்டுவதோடு முக்தியையும் அளிக்கின்றான். சூரியன் எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றிடும் ஆற்றல் மிக்கவன். வல்லமை மிக்க பகலவன் எங்களைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகங்களை ஒவ்வொன்றாகத் தாண்டிச் செல்லும் மாறி மாறிச் செல்லும் சஞ்சல சுபாவம் உள்ளவர் சூரியன். ஆனால் தான் தாண்டி செல்லும் அத்தனை உலகங்களுக்கும் உதவி நன்மை செய்வதையே அசைக்க முடியாத கொள்கையாகக் கொண்டவன். மனிதர்கள் பார்வையைத் தன் ஒளியால் கூசச் செய்யக்கூடியவன். ஆனால் அப்படிக் கூசச் செய்வதன் மூலம் அந்தப் பார்வையைத் தெளிவாக்குபவன். தீட்சண்யமாக்குபவன். மனிதர்களுக்கு நன்மையே செய்யும் எண்ணமுள்ளவன். அனைத்தையும் எரிக்கும் இயல்புடையவன் சூரியன். யோகியர்க்கு முக்தியை வழங்குபவனாக இருப்பவன் அவனே. சூரியன் சகல உலகிறக்கும் செல்வமெல்லாம் அருள்பவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகத்திலும் பருவங்கள் ஒழுங்காக வந்து போகின்றன. முரண்பாடுகள் இல்லை. தானியங்கள் செழுமையாக விளைகின்றன. செடியும் கொடியும் மரமும் நன்றாகப் பழம் தரவும், மழைக்காலத்தில் நன்றாக மழை பொழியவும், தெய்வ காரியங்கள் நன்கு நடைபெறவும், அதனால் எல்லோருடைய மனமும் மகிழ்ந்து காற்று நன்கு வீசவும், நட்சத்திரங்கள் பிரகாசிக்கவும், எல்லா திக்குகளுக்கும் மகிழ்ச்சி பரவவும், கடல் தன் எல்லையை கடக்காதிருக்கவும் சூரியன் தான் காரணம். அத்தகைய சூரியன் அனைத்து செல்வங்களையும் அருள்வாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oகைலாயத்தில் மான் தோலணிந்த சிவன், அம்பிகையை தன் உடலில் பாதியாக இணைத்துக் கொண்டுள்ளார். பரந்தாமனாகிய பத்மநாபன், சேஷசயனராக பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். பிரமன் யோக நிஷ்டையில் சிந்தைகொண்டு சிருஷ்டியைச் செய்கிறார். இவை அத்தனைக்கும் காரணம் சூரியன். மூவுலகிற்கும் தலைவனாக எப்போதும் மூவுலகையும் பற்றிய சிந்தனையுடனேயே பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மும்மூர்த்திகளும் ஒரே சிந்தையோடு அவரவர் பணியைப் புரிந்துகொண்டு இருக்கக் காரணம், சூரியன் மூவுலகையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதுதான்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியமண்டலம் வேதங்கள் அறிந்த அனைவரையும் தன்னகத்தே கொண்டது. சூரிய மண்டலமே ரிக்வேதம். சூரிய ஒளிக்கதிர்கள் சாமவேதம். யோகத்தால் மட்டுமே காணக்கூடிய புருஷன் யஜுர்வேதம். மூன்று வேதத்தின் உருவமாகவும் உள்ளவர் சூரியன். அவன் விகாரமற்றவன், வேதங்களால் அறியத்தக்கவன். அந்தச் சூரியன் செல்வமெல்லாம் வழங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oதேவமாதா  எனப்பெயர் பெற்ற அதிதிக்கு இந்திரன் முதலான தேவர்கள் மக்களாகப் பிறந்திருந்தாலும் தாயின் பெயரால் ஆதித்யன் என்ற பெயரோடு திகழ்பவன் சூரியன் ஒருவரே! சூரியன் மட்டுமே தேவர்களின் பகைவர்களை அடக்கும் ஆற்றல் பெற்றவன் என்று மூவுலகத்தோரும் போற்றி மகிழ்கின்றனர். இத்தகைய பெருமை கொண்ட சூரியன் எல்லா நலமும் தருவானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியனையும் பரமசிவனைப் போல் அஷ்டமூர்த்தியென்பர். அதாவது எட்டு வடிவங்களை எடுப்பவன். பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், தலைவன், திங்கள், சூரியன் ஆகிய எட்டு மூர்த்தங்களைக் கொண்டவன். ஒளிக்கு இருப்பிடம்-பூமி, மழை நீர், தூய்மையான காற்று, எரிப்பதால் நெருப்பு, ஆகாய வீதியில் பவனி வருவதால் ஆகாயம், அன்றாட பிரத்யக்ஷ தெய்வம்-தலைவன், அமாவாசையன்று திங்களுடன் இணைவதால் சந்திரன், தனி உருவம் கொண்டதால் சூரியனும் அஷ்டமூர்த்தி-பரமசிவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்

oசெந்தாமரையாளின் கைகளால் வருடப்பெறும் மகாவிஷ்னுவின் திருவடியில் தோன்றும் ஒளிக்கதிர் போல சூரியனின் கதிர்கள் உள்ளன. விநதையின் புத்திரனான கருடன் மேல் ஏறிக் கொண்டு விண்ணில் ஏழு உலகையும் கடந்து உலகைக் காக்கின்றான் பரந்தாமன். அதேபோல சூரியனும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், அருணன் சாரதியாகப் பணியாற்ற வலம் வந்து மேற்கு திக்கின் எல்லையைக் காண்கின்றார். மகாவிஷ்னுவைப்போல விளங்கும் சூரியநாராயணன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

o சூரியனை முன்னிரு ஸ்லோகங்களில் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒப்பிட்டது போல, பிரம்மாவுடன் ஒப்பிடப்படுகிறார். பிரம்மா நீரைப் படைத்ததுபோல, சூரியனும் இருகூறு கொண்டு முதலில் நீரைப்படைத்தார். பிரம்மா குலமகளுக்கு சிருஷ்டியின்போது பெருமை சேர்ப்பது போல, சூரியனும் மேருமலைக்கு உதயகிரி எனப் பெருமை சேர்த்தார். பிரம்மா பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், என மூவுலகுக்கும் எட்டாத மேனியுடையவர். சூரியனும் மூவுலகுக்கும் மேலான பிரகாசமான ஒளியோடு விளங்குகின்றார். நாற்றிசைக்கும் நான்முகன் பெருமைசேர்க்க சூரியன் நாலா திசையிலும் ஒளிபரப்புகிறார். இவ்வாறாக பிரமனைப்போல் விளங்கும் சூரியன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் மறைந்தபிறகு நீர்நிலைகள், குளங்கள், தடாகங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நீராடிய பலன் கிடைக்காது. ஆதவன் அஸ்தமித்த பிறகு கடலில் நீராடினாலும்சரி, தேவகங்கையில் நீராடினாலும் சரி, பாவங்கள் போகாது. அனைத்து நீர் நிலைகளையும் புண்ணிய தீர்த்தமாக விளங்கச்செய்யும் பகலைத்தரும் சூரியன் நம்மைக் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகத்தில் கிழக்கு திசை, காலை வேளை ஆகியவை நன்மை பயப்பனவாகக் கருதப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை சூரியனின் ஆதிக்கத்திலிருப்பதுதான். ஒரு தீவுக்கு அல்லது கண்டத்திற்கு மாலை வேளையாகவும், இரவுக்காலமாகவும் விளங்குவது, எதிர்த் தீவில் விடியற்காலமாகவோ நண்பகலாகவொ விளங்கும். இப்படி உதயம், அஸ்தமனம், பகல், இரவு என்பவை மாறி, மாறி உண்டாகக் காரணமாக இருந்து காலச்சக்கரத்தை சுழலச் செய்யும் சூரியன் எக்காலத்திலும் நம்மைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஎட்டு வகையான சித்திகளைப் பெற்ற அருட்சித்தர்கள் வழிபடும் ஆதித்யனின் ஒளிக்கற்றைகள், அழியச்செய்யும் கொடிய பெரு நோய் உள்ளிட்ட எல்லாவித நோய்களையும் போக்கக் கூடியவை. உயிர்களின் துன்பத்தையும், பாபத்தையும் முற்றிலும் போக்க வல்லது. நோய் உள்ளவர்கள் தினம் பராயணம் செய்தால் சூரியபகவான் அருள்பெற்று நோயிலிருந்து விடுபடுவர்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியஒளி, கண்ணொளி யிலிருந்து மாறுபடுகிறது. தாமரை போன்றது கண். பரிதியின் ஒளியைப் பெற்று தாமரை பிரகாசிக்கும். ஆனால் சூரியஒளி, தாமரையின் ஓலியைத் தான்பெறாது, அந்த தாமரையின் ஒளியை மேலும் பிரகாசமாக்குகிறது. கண், கருவிழியால் பெருமை பெறுகிறது. ஆனால் சூரியனோ விண்ணின் கண்ணான விண்மீன்களின் ஒளியைப் பறித்து விடுகின்றது. கண் இமைத்தால் ஒரு நொடி. சூரியன் ஒரு நாளையே உருவாக்கிறது. இவ்வாறு கண்ணினும் சிறந்து விளங்கும் சூரியனின் ஒளி எங்கள் பாவத்தைப் போக்கட்டும். இதை தொடர்ந்து படிப்பதனால் கண் நோய்கள் நீங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலக நன்மைக்காக, மயூரகவியினால் செய்யப்பட்ட இந்த சூரிய சதகத்தின் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், அனைத்து பாவங்கள், பழிகளிலிருந்தும் விடுபடுவர். உடல்நலம், கவிபுனைதல், நல்லபுத்தி, ஆற்றல், ஒப்பற்றபலம், ஒளிமயமான வாழ்வு, நீண்ட ஆயுள், கல்வி, பொருள், நன்மக்கட்பேறு போன்ற சகல நலன்களையும் சூரியன் அருளால் பெறுவர் என்பது திண்ணம்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!
 

சூரியன் துதி!
 
o சூரியனால் தான் காலமும் நேரமும் பகுக்கப்படுகின்றன! ஐம்பூத இயக்கங்களுக்கும் மூலகாரணமாக விளங்குபவரே! சூரியனே! வேதங்களின் சாரமாகத் திகழ்பவரே! ஒளி பரவாத இடமே இல்லாதவரே! சூரிய ஒளியைக் கண்டதுமே பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், குடும்ப சோதனைகள் இவை மீதான பயம் விலகிவிடுகின்றது. உதய காலத்தில் பிரம்மா, மதிய காலத்தில் ஈசன், அஸ்தமன காலத்தில் திருமால் என மும்மூர்த்திகளின் வடிவங்களாகத் தோன்றும் சூரியனை நான் வணங்குகின்றேன்.
 
o செம்பருத்திப் பூ போல ஒளிர்பவரும், காஸ்யப பிரஜாபதியின் குமாரரும், மிகுந்த ஓளியினையுடையவரும், இருட்டின் எதிரியும், சகல பாவங்களையும் போக்குபவருமான திவாகரனை, பகலை உருவாக்கும் பகலவனை வணங்குகின்றேன்.
 
ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ! பாஸ்கராய நமஹ!
ரவியே நமஹ! தினகராய நமஹ!
திரைலோக்ய சூடாமணியே நமஹ! திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ! ஜோதிஸ்வரூபாய நமஹ!
அருணாயை நமஹ! வரத ஹஸ்தாய நமஹ!
சூரிய நாராயண சுவாமியே நமஹ!

 
o தாமரை மீது வீற்றிருக்கும் ஆதவனே, தேவர்களுக்கெல்லாம் முதன்மையான சூரிய பகவானே, பானுமூர்த்தி எனப் போற்றப்படும் தங்களை வணங்குகின்றேன். தர்மம், கருனை வடிவாகவும், அனைத்து தத்துவ வடிவினராகவும் ஒளிரும் தினகரனே, தங்களை வனங்குகின்றேன். க்ஷயம் எனும் காசநோய், அபஸ்மரம் எனும் வலிப்பு நோய், குன்மம் எனும் வயிற்று நோய் போன்ற கொடிய நோய்களையும், எல்லாவகை தோஷங்களையும் நீக்கி நலம் அளிக்கும் கதிரவனே உனக்கு எனது வணக்கங்கள். எனக்கு அருள் புரிவாய்!

 
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
விரியா போற்றி வினைகள் களைவாய்



ஐஸ்வரியம் அருளும் சஷ்டி விரதம்!



சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.

சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு.

சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.

சுப மங்கள வரமருளும் வரலக்ஷ்மி விரதம்!




வரலட்சுமி விரதத்தை கன்னிப்பெண்களும், ஆண்களும் கூட கொண்டாடலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. திருமணமான பெண்கள் தலைநோன்பு நோற்பது மிகவும் விசேஷமாகும்.

 இந்த விரதத்திற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஸ்ரீபரமேஸ்வரனும், பார்வதி தேவியும், கயிலை மலையில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது ஆட்டத்திற்கு நடுவராக சித்திரநேமி என்பவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவன் நியதி தவறி பரமேசுவரன் பக்கமாகவே பேசினான். நடுநிலை தவறிய சித்திரநேமியின் செயல் தேவிக்கு கோபத்தை உண்டாக்கியது. சங்கரி சினங்கொண்டாள். சித்ரநேமியை சபித்தாள். அவன் தேவியின் சாபத்தால் பெருநோய் பிடிக்கப்பட்டான்.
சித்ரேநாமி, வரலட்சுமி விரதம் அனுஷ்டித்து நோய் நீங்கியது கண்டு சங்கரி மகிழ்ச்சியடந்தாள். ஒருநாள் சிவனும் பார்வதியும் நவரத்தின மணி பீடத்தில் தேவாதி தேவர்கள், நாரதாதி மகரிஷிகள், குபேரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள், பூதகணங்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தனர். வரலட்சுமி விரத மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி, பார்வதி பரமேசுவரனிடம், “சுவாமி! வரலட்சுமி மகிமை அனைவரும் அறியும் வண்ணம் தேவரீர் திருவாள் மலர்ந்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.
சர்வேசுவரனான சிவபெருமான், வரலட்சுமி விரத மகிமையை அனைவருக்கும் விளக்கமாக கூறினார். இங்ஙனம் சிவனருளால் சங்கரியும் மற்ற தேவர்களும் கேட்டு மகிழ்ந்த வரலட்சுமி விரத வைபவத்தை எல்லோரும்  கடைபிடித்து நற்பலன் அடைந்தனர்.

விரதங்களுள் உத்தமமான வரலட்சுமி விரதம் சகல சௌபாக்கியங்களையும் தருவது. புத்ர பௌத்ராதி அபிவிருத்திகளை ஏற்படுத்தும்படியான மகா சிரேஷ்டமான விரதம்.

இந்த விரதத்தை கடைபிடித்து சாபம் நிவர்த்தி பெற்ற சித்ரநேமியைப் போல் சாருமதி என்ற மற்றொரு பெண்ணும் வரலட்சுமி விரத மகிமையால் சகல சௌபாக்கியங்களையும் பெற்றாள். முன்னாளில் குண்டினி புரம் என்ற ஊரில் சாருமதி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள். இவள் கற்புகடம் பூண்டு ஒழுகி வந்தாள். கணவனையே கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தாள்.

கடவுள் பக்தியும், பெரியோர்களிடம் பணிவும் கொண்ட சாருமதி, எல்லோராலும் பாராட்டப்பட்டாள். இப்பேர்ப்பட்ட நற்குண நங்கையான சாருமதிக்கு சர்வேசுவரனின் கிருபாகடாட்சம் கிடைத்தது. ஒருநாள் இரவு  சாருமதியின் கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.. “சாருமதி! சர்வ மங்களம் உண்டாகட்டும். ஆடி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளியில் என்னை பூஜிப்பாயாக! நாள் உனக்கு சகல வரங்களையும் தந்தது அருளுவேன்” திருமகள், சாருமதிக்கு விரதம் கடை பிடிக்கும் முறையையும் அருளினார்கள்.

சாருமதி கனவு கலைந்து எழுந்தாள். திருமகளின் திருவாய் அமுதத்தை எண்ணி சுகானுபவம் கொண்டாள். சாருமதி தேவி திருமகளைச் சிந்தையிலே கொண்டு தோத்திரம் செய்தாள்.

“நமஸ்தே சர்வலோகா நாம் ஜகந்யை புண்யமுர்தயே
சரண்யே த்ரிஜகத் வந்த்யே விஷ்ணு வட்சதலாலய
“ஓம் ஸ்ரீ வரலட்சுமிதேவியே!
தாங்கள் சகல உலகங்களுக்கும் தாயாக எழுந்தருளிரட்சித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சர்வ ஜனங்களாலும் ஆராதிக்கப்படுகிறீர்கள். ஸ்ரீமந் நாராயணனுடைய வாஸ்து தலத்தில்  வாசம் செய்கிறீர்கள். அப்பேர்ப்பட்ட ஸ்ரீ லட்சுமி தேவியே! தங்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன்.”

சாருமதி தேவியின் அருள்வாக்கின்படி ஆடியில் தவமிருந்தாள். தோத்திரங்களால் திருமகளின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்தாள்.  ஆயிரத்து எட்டு நாமாக்களால் அலங்காரம் செய்தாள்.
வரலட்சுமி பிரத்யலட்மாகி சாருமதிக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கினார். சாருமதி வரலட்சுமி விரத மகிமையை மற்றவர்களுக்கும் சொன்னாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தனர்.

அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி, கலசம் வைத்து கலசத்துள் ஸ்ரீ லட்சுமி தேவியை ஆவாஹனம் செய்து பூஜையைத் தொடங்கினார்.
சாருமதியும் தோழியர்களும் ஸ்ரீலட்சுமி தேவியை பூஜித்தார்கள். வரலட்சுமி தேவியின் பேர் அருளால் அனைவரும் பெரும் பேறு பெற்றனர். வரலட்சுமி விரதத்தை ஆரம்பித்து வைத்த சாருமதியை புகழ்ந்து போற்றினர். இந்த விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார். விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்றனர்.


ஸ்ரீலட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம். அருகம்புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் “நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்” என்பது சான்றோர் வாக்கு! செல்வத்திற்கு அதிதேவதையாக விளங்கும் பிராட்டியாரை சுபலட்சுமி என்றும் ஸ்ரீதேவி என்னும் போற்றி வணங்குவார்.

வரலட்சுமி விரதத்தை அப்பண்டிகை தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட வேண்டும். விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும். கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும்.

கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும். அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.
பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான்.
நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்ட லட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.


ஆண் வாரிசு கிடைக்க விரதம்!

நவக்கிரகங்களின் சேர்க்கை தான் கரு உருவாக காரணமாக அமைகிறது. சுக்ரன், சுக்கில சுரோனிதங்களை இணைக்கிறார். இணைந்த சுக்கில சுரோனிதங்களை கருவாக மாற்றுகிறது செவ்வாய், உடல் உறுப்புகள் உருவாக குரு துணைபுரிகிறார். பூந்தசை தோல் போன்றவற்றை சந்திரன் உருவாக்குகிறார். 

நகம், முடி, கழிவுப்பகுதி உற்பத்திக்கு சனியும், அறிவுக்கு புதனும் காரணமாகிறார். நமது முன்னோர்கள் கிரகங்களின் தன்மையை அறிந்தே புதுமணத் தம்பதியரை முதல் இரவில் கூட வைத்தனர். அதன் பிறகும் வரும் நாட்களில் சுப நாட்களை கணித்தே தம்பதியர் கூடினர். 

அதனால் தான் ஒழுக்கமான, நோய் நொடிகள் இல்லாத, தோஷம் இல்லாத, உடல் ஊனம் இல்லாத குழந்தைகள் பிறந்தனர். ஆனால் இந்த கலிகாலத்தில் இந்த ஜோதிட முறைகளை பின்பற்றுவது குறைந்துள்ளதால், குழந்தை உருவாகுவதிலும், பிறந்த குழந்தையை பராமரிப்பதிலும் மருத்துவரை நாட வேண்டிய நிலையில் இன்றைய சமுதாயம் உள்ளது. 

ஒரு சிலருக்கு பெண் குழந்தைகள் பிறந்திருக்கும். எனவே, ஆண் குழந்தைக்காக தவமிருப்பர். அவர்கள் ஆடிப் பூரத்தன்று முறையாக விரதமிருந்து, அம்பிகையை வழிபாடு செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரமன்று திருக்கோவில்கள் அனைத்திலும் உற்சவங்கள் நடைபெறும். 

ஆடிப் பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சைப் பயிறை தண்ணீரில் நனைய வைக்க வேண்டும். அது நன்கு முளைவிட்டிருக்கும். அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். 

பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் விரதமிருந்து இதை நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் வாரிசு கிடைக்க வாய்ப்பு உருவாகும். தொட்டிலில் பிள்ளை தவழ துணையிருப் பாள் அம்பிகை.



கோ மாதா! எங்கள் குலமாதா !

உலகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு. முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர். கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.


ராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது புராணம். சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி வேதனையில் ஆழ்ந்திருந்தான். அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார். அதன்படியே தினமும் அதனை நீராட்டி, தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன். அவ்வாறு அதனைப் பேணி வளர்த்துவந்ததன்  பயனாக திலீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.


வருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத் திருமணம் நடத்தி வைத்தான். ஒரு வருடத்திலேயே தந்தையானான்  ரகு. திலீபன் தன் பேரனுக்கு “அஜன்’ என்று பெயர் சூட்டி விழா எடுத்தான். கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய அஜனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடந்தது. அவனுக்குப் பிறந்த மகன்தான் தசரதன். தசரத சக்கரவர்த்தி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்திய யாகப் பயனால் ராமாவதாரம் நிகழ்ந்தது.


திலீபன் பல வருடங்களுக்குமுன் கோபூஜை செய்த பயனால் மகாவிஷ்ணுவே பூவுலகில் அவதரித்தார்.
பசு குறித்து இன்னொரு புராணத் தகவலும் உண்டு. பிரம்மதேவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் உடலிலுள்ள சக்தி விரைவில் தீர்ந்துபோவதை அறிந்து, அதனை சமன் செய்யும் வழியை அறியவேண்டுமென்று திட்டமிட்டார்கள். அவர்கள் ரிஷிகளையும் முனிவர்களையும் சந்தித்து அதற்கு வழிகூறுமாறு வேண்டினர். அவர்கள் பிரம்ம தேவனை அணுகி மனிதர்களின் கோரிக்கையைத் தெரிவிக்க, பிரம்மா யோசித்தார். தேவலோக அமிர்தத்தை மானிடர்களால் ஜீரணிக்கமுடியாது என்பதால் தானே சிறிது அமிர்தத்தை உண்டு, அதனை மனிதர்களுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொண்டார். பின்னர் அவர் ஒரு பசுவாக உருவெடுத்து பாலைச் சொரிந்தார். அந்தப் பாலே வழிவழியாக மனிதர்களுக்கு சக்தியூட்டுவதாக விளங்கிவருகிறது.


எனவே பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கிப் போற்றுபவன் பிரம்மதேவனையும், தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான்.

பசுவைப் பாதுகாப்பவன் தனது பெற்றோரை, அவர்களின் முதிய காலத்தில் காப்பாற்றுவான் என்று சாஸ்திரம் கூறுகிறது.


பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும்; காதுகளில் அஸ்வினி குமாரர்களும்; கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு- கேதுவும்; இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும்; மூக்கின் மேல்பகுதியில் விநாயகரும் முருகனும்; முன்னிரண்டு கால்களில் பைரவரும் அனுமனும்; முகப்பகுதியில் சிவபெருமானும்; கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும்; வால் பகுதியில் நாகராஜனும்; முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சல பர்வதங்களும்; பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும்; மடியில் அமிர்தசுரபி கலசமும்; பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிற தேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம்.


இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் முக்கிய பொருளாக பால், தயிர், நெய் ஆகியவை இருக்கின்றன. பால், தயிர், நெய், கோமயம், கோசலம் ஆகிய ஐந்தையும் ஐம்பூதங்களாக பாவித்து, ஒன்றாகக் கலந்து, பூஜைசெய்யும் இடத்தையும் யாகம் செய்யும் இடத்தையும் தூய்மை செய்வர்.


பொதுவாக, யாகங்களுக்கு நெய் மிக அவசியம். பசு நெய்யில் தீ வளர்த்து, அதில் பால் ஊற்றி நெருப்பை அவிக்கும்போது அதிலிருந்து உண்டாகும் புகையானது விஷ வாயுக்களைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.


சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிக சிறப்பிக்கப்படுகிறது.
ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நட்சத்திரத்திலும் கோ தானம் செய்வதும், கோ பூஜை செய்வதும் மேன்மை தரும். பசுதானம் செய்பவர்களுக்கு கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.


கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும் அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.


பசு தானம் செய்பவர் தன் பூவுலக வாழ்வை நீத்தபின், பசுவின் ஒவ்வொரு உரோமத்திலும் ஒவ்வொரு ஆண்டுவீதம், கோலோகத்தில் கண்ண பரமாத்மாவுடன் பல்லாயிரம் ஆண்டுகள் வசிக்கும் பேறு பெறுவர்.


பசு தானத்தால் ஒருவர் தனது முன்னேழு, பின்னேழு தலைமுறையினரை மோட்சம் பெற வழிசெய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகும்.


கோபூஜை போலவே கோதுளி நீராடலும் சிறந்த பலனைத்தருவது. அதாவது பசு நடந்து செல்லும்பொழுது, அதன் கால்கள் பதிந்த இடத்திலுள்ள மண்ணை எடுத்து உடல்முழுவதும் பூசிக்கொண்டு நீராடினால், கங்கை நதியில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்கின்றன வேதநூல்கள்.


ஒரு காரியமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது பசு எதிரே வந்தால் சுபசகுனமாகும். பசுக்களை கூட்டமாகப் பார்த்தால் இன்னும் சிறப்பு. தினமும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும்போது, ஒரு கைப்பிடி பசும்புல் அல்லது வாழைப்பழம் அதற்குக் கொடுக்கவேண்டும். தினமும் இப்படி செய்ய இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் வழிபட்டாலும் சுகமான வாழ்வு கிட்டும்; முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.


இவ்வாறு செய்ய இயலாதவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப்பொங்கல் திருநாளிலாவது பசுவை வணங்குதல் நன்று. பசுவை மட்டுமின்றி காளையையும் வழிபடவேண்டும்.
விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளைகளை நீராட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம்தீட்டி, மலர் மாலை சூட்டி, சர்க்கரைப் பொங்கல், கரும்பு தந்து வழிபடுவதை கிராமப்புறங்களில் காணலாம்.
சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள்தான் காளைகள். நந்தி, நன்மைகளின் சொரூபம். வம்சவிருத்தியின் அடையாளம்.


பசு இருக்குமிடத்தில் தீயசக்திகள் அண்டாது. நமக்கு கெடுதல் செய்யும் மனம் கொண்டவர்கள் நம் இல்லம்தேடி வந்தால், முன்கூட்டியே பசு குரல் கொடுத்து தெரிவிக்குமாம். தற்போதைய சூழலில் நகரங்களில் பசு வளர்ப்பதற்கு முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் மாட்டுப் பொங்கலன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று, நந்தி பகவானுக்கு பூஜை செய்யலாம். அன்று மாலை வேளையில் பசு வைத்திருப்பவர்கள், கோவிலுக்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது, அவர்களிடம் அனுமதி பெற்று கோவில் குருக்கள் மேற்பார்வையில் கோபூஜை செய்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். கோசாலை இருந்தால் அங்கும் பூஜிக்கலாம்.


மாட்டுப் பொங்கல் நாளில் சிவலிங்கத்திற்கு எதிரிலுள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அறுகம்புல் மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல், நிலக்கடலை, கரும்பு படைப்பார்கள். அந்த வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டால் வம்சம் நல்ல முறையில் வளரும்.


இவ்வாறு மாட்டுப் பொங்கல் திருநாளில் வழிபட்டு மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் அருளுடன் சிவபெருமானின் அருளையும் பெறலாம்.





வாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்!



பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, உயர்ந்த பல விஷயங்கள் உதித்தன. அந்தத் தருணத்தில் தோன்றியவளே ஸ்ரீமகாலட்சுமி. வாழ்வில், மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள் அவள். ஆகவே, பாற்கடலில் இருந்து ஸ்ரீமகாலட்சுமி உதித்ததில் வியப்பொன்றும் இல்லை!


அவள் உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.
வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய வெள்ளிக் கிழமை அன்று, ஸ்ரீவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனில், இரண்டு வெள்ளிக்கிழமைகள் வருமே என்கிறீர்களா?! பௌர்ணமிக்கு அருகில், அதாவது பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையை, வரலட்சுமி பூஜைக்குரிய நாளாகக் கொள்ளவேண்டும்.


 லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஸ்ரீலட்சுமிதேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத் தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி!
சரி... ஸ்ரீமகாலட்சுமியை வணங்கும் முறை எவ்விதம்?
தூய்மையின் பிறப்பிடம் அவள். எனவே, வீட்டையும் நம்முடைய மனத்தையும் தூய்மையாக்கிக் கொள்வது சிறப்பு. தூய்மையான ஆடை உடுத்தி, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிறைந்த மனமும் மகிழ்ச்சியும் மேலிட, அவளை ஆராதிப்பது மிகுந்த பலனைத் தரும்! வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீமகாலட்சுமியின் திருவுருவத்தை வரைந்து வழிபடுவார்கள், சிலர். கலசத்தில் அவளின் திருமுகத்தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைத்து, 'அம்மா மகாலட்சுமி தாயே! எங்கள் வீட்டுக்கு வாம்மா! எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வாதம் செய்யம்மா!’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் துவக்குங்கள். இந்த வேளையில், ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து பூஜிப்பது சிலரின் வழக்கம்.

ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்தால், சட்டென்று திரும்பிப் பார்க்கிறார்; பதில் சொல்கிறார் அல்லவா?! அதேபோல், அதீத பக்தியுடனும் அளவற்ற நம்பிக்கையுடனும் ஸ்ரீமகாலட்சுமியை அழைத்தால், குழந்தையின் குரல் கேட்டு ஓடி வருகிற தாயைப் போல், நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள், ஸ்ரீமகாலட்சுமி. நாம் கேட்பனவற்றையெல்லாம் தட்டாமல் தந்தருள்வாள். அப்போது, நமக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி, பாடல்கள் பாடி உபசரித்து, ஸ்ரீமகாலட்சுமியை பூஜிப்பது விசேஷம்.
   'ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’
என்பது ஸ்ரீமகாலட்சுமியின் காயத்ரி. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அவளை ஆராதித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.
பூஜையில் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் ஆகிய இனிப்புகளைப் படைத்து, தாமரை, துளசி, வில்வம் ஆகியவற்றால் அவளை அர்ச்சித்து வழிபடலாம். இவற்றால், அகம் மகிழ்வாள் ஸ்ரீமகாலட்சுமி!
'ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, என்ன கொடுக்கிறோமோ, அதையே பெறுகிறோம். கனிவும் கருணையும் கொண்ட நம்முடைய தாய் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள்.
இந்த பூஜையில், வெண்மையான சில இழைகள் கொண்ட நூலில், மங்கலங்களை அள்ளித் தருகிற மஞ்சளைத் தடவி, நவசக்தி களின் வடிவமாக, ஒன்பது முடிச்சுகளை அதில் இட்டு, நடுவில் ஒரு பூவையும் வைத்து, தேவியின் அம்சமாகவே திகழ்கிற கலசத்தின் மீது சாற்றி, பிறகு பூஜை முடிந்ததும், வீட்டில் உள்ள பெரியோர் முதலில் கையில் கட்டிக் கொள்ளவேண்டும். அடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது, ஸ்ரீவர லட்சுமி பூஜையை நிறைவு செய்ததையும் ஒளிமயமான வாழ்வின் துவக்கத்தையும் குறிக்கிறது.
'ஓம் வரோத்பவாயை நம’ என்பார்கள் சான்றோர்கள். அதாவது, 'வரங்களைத் தருவதற்காகவே தோன்றியவள்’ என ஸ்ரீமகாலட்சுமியைப் போற்றுகின்றனர்.
அன்றாட வாழ்வில், நமக்குத் தேவையான பொருட்செல்வத்தை மட்டுமின்றி, கல்விச் செல்வம், மக்கட் செல்வம் என சகல செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவள் ஸ்ரீமகாலட்சுமி. அவள் உதித்த நாளில், அவளை ஆராதித்து வணங்கினால், விரதத்தை அனுஷ்டித்தால், அனைத்துச் செல்வங்களையும் வாரி வழங்கி அருள்வாள் தேவி!
பராசக்தியின் வடிவம், தர்மத்தை வழி நடத்திச் செல்லும் சக்தி படைத்தவர்கள் எனப் பெண்களைப் போற்றுகிறது உலகம். அப்பேர்ப்பட்ட பெண்கள், ஸ்ரீமகாதேவியை பூஜித்து வணங்கிட, அவர்களின் இல்லங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகத் திகழும்! வரங்கள் அனைத்தும் தந்தருளும் ஸ்ரீவரலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்று, வணங்குவோம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று வளமாக வாழ்வோம்!

சங்கடஹர சதுர்த்தி!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். ‘ஹர’ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை ‘மகா சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கின்றனர்.
விரதம் இருக்கும் முறை
சங்கடஹர சதுர்த்தி யன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்’

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
விரதத்தின் பலன்கள்
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.