புதன், 3 ஆகஸ்ட், 2016

சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்!

 
தலவரலாறு : 
 
அசுர மன்னனுக்கும், எருமை அரசிற்கும் பிறந்தவன் மகிஷன்.  பல காலம் செய்த  தன் தவங்களினால் கிடைத்த வரங்கள் அவனுக்குச் செருக்கை உண்டாக்கின.  எனவே அவன்  தேவர் மீது படையெடுத்து அவர்களை வென்றான்.  ஏழு உலகமும் அவன் பெயர் கேட்டு நடுங்கின.  தேவர் துயர் நீக்க துர்கை கடும் தவம் புரிந்தாள் ஒன்பது நாட்கள் மஹிஷனுடன் கடும் போரிட்டு,  தசமி அன்று மஹிஷனைக் கொன்று மஹிஷாசுர மர்த்தினி எனப் பெயர் பெற்றார்.
 
மஹிஷனுடன் போரிட்ட சினம் தணியவும், தன்னுடைய கொடிய தோற்றம் மாறவும் தவம் புரிய என்னினாள் தேவி.  தேவி உக்ர சொருபத்துடன் வந்து சேர்ந்த இடம் திருவரங்கம்.  கோவிலில் ஆராதனை செய்யும் பட்டர்கள் வைஷ்ணவியின் உக்கிரம் தங்காமல், அவளை மக்கள் அதிகமாக  செல்லாத வேப்பமரம் சென்று தவம் செய்யுமாறு வேண்டினர்.  தவத்திற்கு ஏற்ற இடமாக  அமைந்தது காவேரி கரையில் உள்ள சமயபுரத்தில் இருந்த வேப்பங்காடு .
 
கௌமாரி என்னும் பெயருடன் தவம் புரிய வந்த செவ்வந்தி நிறத்துடையாள் மஞ்சள் நிற ஆடை அணிந்தாள்.  மென்மையான மலர்களால் தன்னை மூடிக்கொண்டாள்.  உண்ணா நோம்புடன் கடும் தவம் புரிந்தாள்.  தவம் பலித்தது.  துர்கையின் கோபம் தீர்ந்தது.  அந்த இடத்தில் வாழ்ந்த மக்களும்  அம்மனுக்கு ஒரு ஆலாயம் எழுப்பி வழிபட்டு வந்தார்கள்.  அன்று முதல் மாரியம்மனாக மக்கள்  மனக் குறைய தீர்க்க அன்னை அங்கேயே கோவில் கொண்டு உறைகிறாள் .
 
சுவாமி :  மாரியம்மன்.
தலவிருட்சம் :  வேம்பு மரம்.
 
தலச்சிறப்பு : சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பக்தர்களின்  கஷ்டங்களை தக்க சமயத்தில் காப்பதாக ஐதீகம்.

"பச்சை பட்டினி விரதம்"!
மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, உலக  நன்மைக்காக அம்பாளே விரதம் மேற்கொள்கிறார்.  அந்த விரதம் இனிதே நிறை வேற பக்தர்கள்  பூக்களை அம்பாளின் மீது அபிஷேகம் செய்வதே "பூச்சொரிதல்" என கூறப்படுகிறது.  
 

அம்பாள்  மேற்கொண்டிருக்கும் இந்த விரதத்தை "பச்சை பட்டினி விரதம்" என்பர்.  

 

பூச்சொரிதல் நாள் முதல்  28 நாட்களுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது.  இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு,  நீர்மோர் மட்டுமே அம்பாளுக்கு கொடுக்கப்படுகிறது.
 
 
கோவிலின் கட்டடக்கலை :   
 
விஜய நகர மன்னர் ஒருவர் தென்னாட்டு படையெடுப்பின் போது மாரியம்மனை தொழுது அவள் ஆசியுடன் வெற்றி பெற்றார்.  தன் வேண்டுதளை நிறை வேற்றும்  விதமாக கௌரிக்குப் பெரிய மதில்களுடன் ஆலயம் எழுப்பி.  அதில் பரிவார பரிவர்த்தனைகள்  தேவதைகளாக விநாயகரையும், கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்தார்.
 
 
கோவிலின் வழிபாடு நேரம் :  காலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை.
 
பூஜை விவரம் : ஆறு கால பூஜைகள்!
 
உசாத் காலம் - காலை 6.00 மணி.
கால சாந்தி - காலை 8.00 மணி.
உச்சி காலம் - பிற்பகல் 12.00 மணி.
சாய ரட்சை - மாலை 6.00 மணி.
இரண்டாம் காலம் - இரவு 8.00 மணி.
அர்த்த ஜாமம் - இரவு 9.00 மணி.
தங்க தேர் - இரவு 7.00 மணி.
 
 
முகவரி : 
 
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
சமயபுரம் - 621 112, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 0431 - 2670460.
 
 

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்!




எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன்!
தாரகாசுரனை அழிக்க பிரம்மன் சொல்லியபடி எறும்பு வடிவில் தேவர்கள் அசுரர்களுக்குத் தெரியாமல் சிவ லிங்கத்தின் மேல் ஏற முயன்றனர். ஆனால் எண்ணெய்ப் பசையின் காரணமாக ஏற முடியாமல் கஷடப்பட்டனர். அதனால் சிவபிரான் புற்றாக மாறி, சொசொரப்புத் திருமேனி கொண்டார். நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் செவிசாய்த்துக் கேட்டுக் கொள்வது போல சிவலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் காணப்படும். எறும்புகள் ஊர்ந்து சென்ற தடம் சிவலிங்கத்தின் மேல் தெரியும்.



திரு எறும்பீஸ்வரர் திருக்கோயில் பழமையான கோயில்களைப் பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோயில். தமிழகத்தில் உள்ள 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124-வது ஸ்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இது சோழர் காலக் கோயில். இக்கோயில் 120 அடி உயர மலையின் மேல் 125 படிகள் ஏறிச் சென்று காணும் வகையில் அமைந்துள்ளது.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ( படும தீர்த்தம்)



கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.



தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.

சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.

கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

சிவன் சன்னதியின் இடப்புறம் நவக்ரகங்கள் சன்னதியும், சிவன் சன்னதிக்கு வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன.



அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.



தல வரலாறு :

தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் "தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப் பெருமானை வழிபடுவாயாக, அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்" என்று வழி கூறினார். அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்புகள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவனை கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர்.

எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்குத் திருவருள் செய்தார். இதே போல, சிவசருமன் என்ற சிறுவனுக்காக விரிஞ்சிபுரத்திலும், தாடகைக்காகத் திருப்பனந்தாளிலும் முடி சாய்த்து காட்சி தந்தது இங்கே நினைவு கூறத்தக்கது.

வழிபட்டோர் : முருகன், பிரம்மன், திருமகள், ரதி, இந்திரன், அக்னி, அகத்தியர், நைமிச முனிவர் மற்றும் கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கிப் பேறுபெற்றுள்ளனர்.



கோவில் சிறப்பு :

1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது இது 70 வது தேவாரத்தலம் ஆகும் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வழிபட்ட தலம் நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார்.

இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம்.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.



நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

வைகாசியில் பிரம்மோற்சவம்,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
மகா சிவராத்திரி பௌர்ணமி கிரிவலம்,
பிரதோஷம் என சிவாலய விழாக்கள் அனைத்துமே நடைபெறுகின்றன.


திரு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே

கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்

கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை

புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!

நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை

மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்

துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!

கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்

திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!

மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்

திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!

இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு

துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!

கண்நி றைந்த கனபவ ளத்திரள்

விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!

நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்

நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!
 
கோயில் முகவரி :
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில்,
திருவெறும்பூர் - 620 013, திருச்சி மாவட்டம்.
Ph:0431 - 6574 738, 98429 - 57568.



திருப்பொன்னூசல்!

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330

முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334

உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335

கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337

திருச்சிற்றம்பலம்


 

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!

குழந்தை பிறந்த உடன் சரியான நேரத்தையும் ஆண்டு, மாதம், தியதி, நட்சத்திரம், ஊர் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ், ஆங்கில தேதி இரண்டையும் குறித்துக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் கணீக்க வேண்டும் .
 
குழந்தை பிறந்ததினத்திலிருந்து , வீடு கூடுவதற்கு 16ம் நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம்.அல்லது அடுத்து வரும் நல்ல சுபதின்த்தில் குருக்களைய்யாவை அழைத்து கிரகசுத்தி சடங்கை செய்யவும். அன்றைய தின்மே சுபவேளையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது நல்லது. அன்று முடியாவிட்டால் 3 மாதத்துக்குள் நடத்துவது நல்லது.
 
குழத்தைக்கு புது ஆடை அணிவித்து தாயாரின் மடியில் இருக்கும் குழந்தையை,
தாயும், தந்தையும் 3 முறை மாற்றிக்கொண்டபின் தகப்பனார் மடியில் வைத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத்தில் புழுங்கலரிசியை நிரப்பி,அரிசியில் முனை பழுதுபடாத விரலி ம்ஞ்சள் கொண்டு, குழந்தைக்கு சூட்டப்பட உள்ள பெயரை தகப்பனார் 3 முறை எழுதவேண்டும்.
 
பின் குழந்தையின் வலது காதில் தகப்பனார் மெல்லிய குரலில் 3 முறை உச்சரிக்கவேண்டும். பின் சபை அறிய 3 முறை உரத்த குரலில் சொல்லவேண்டும். குழந்தையின் அத்தை ( குழந்தையின் தகப்பனாரின் சகோதரி ) குழந்தைக்கு (காப்பிடுவது ) வளையல் அணிவிப்பது, தண்டை அணிவிப்பதும்ரபு.குழந்தையின் தாயின் வ்ழியிலிருந்து அரைக்கு சலங்கையும், தந்தைவழியில் கழுத்துக்கு சங்கிலியும் அணிவிப்பதும்ரபு.அதன்பின் ம்ற்றோர் குழந்தையை ஆசீர்வதிப்பது வழக்கம். வந்திருப்பவர்களுக்கு பூந்தி,காப்பரிசி கொடுக்கவெண்டும்.
 
காப்பரிசி - களைந்து அரித்த பச்சரிசியுடன் வ்றுத்த சிறுபருப்பும், எள்ளும் சேர்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரைப்பாகில் கலந்து கொடுப்பது.
 
குழந்தை பிறந்த 6 வது மாதத்தில் ஒரு சுபதினத்தில் முதல்முறையாக சர்க்கரை பாயாசம் ஊட்ட வேண்டும்.குழந்தைக்கு திருவமுது ஊட்டும் இந்த சடங்கினை ஆலயங்களில் வைத்தும் செய்வதும் உண்டு. அதன்பிறகு குழந்தைக்கு எல்லவித உணவுகளும் கொடுக்கலாம்.
 
குழந்தைக்கு திருவமுது ஊட்டுவதற்குரிய பொருட்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டுவருவார்கள்.


முதல் பிறந்த நாள் !
குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரத்தில் விழாவக கொண்டடுவது உண்டு.பிறந்த நாள் அன்று வீட்டில் கணபதி ஹோமம், ஆயுசு ஹோமம் செய்வித்தல் நல்லது.
 
பிறந்த நாள் அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து நட்சததிரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்வித்து வழிபாடு நடத்தவும்.
 
பிறந்த நாள் விழாவின் மறுதினம், குழந்தையை தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு முடி இறக்கி காது குத்த வேண்டும்( தேவைப்படும் பொருட்கள் தாயின் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள்). இந்த சடங்கை ஏதாவது ஒரு கோவில் சன்னதியில் வைத்து செய்யவேண்டும்.
 
ஏதாவது பிரார்த்தனை ( நேர்த்திக்கடன் ) செய்திருந்தால் அந்த ஆலயத்தில் வைத்து இந்த சடங்குகளை செய்திட வேண்டும்.
 
வித்யாரம்பம் - ஏடு தொடங்குதல்!
குழந்தைக்கு 3 வயதுக்குள் ஒரு நல்ல தினத்தில் ஒரு குருவை வைத்து ஏடு தொடங்கவேண்டும். ( எழுத படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்).
 
வழக்கமாக விஜயதசமி அன்று ஏடு தொடங்கவேண்டும். திருவிளக்கின் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி , குழந்தையின் கையில் விரலி ம்ஞ்சளை கொடுத்து , குரு குழந்தையின் விரலை பிடித்து - வித்யா மந்திரத்தை 3 முறை எழுதி - எழுத்து ஆரம்பித்து வைக்கவேண்டும்.

 
 
ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா!
பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும்.
 
(முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
 
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
 
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம். தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
 
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .
 
அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்.

திருமண சடங்குகள்!
 
குலதெய்வம் , இஷ்ட தெய்வங்கட்குக் காணிக்கை!
 
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது  மரபு .

இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம்!
 
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன், இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, பூ, இவற்றுடன் வைத்து, அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.

அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்!

முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்த பின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு மஞ்சள் தடவிய தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்பு கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
 
குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி மஞ்சள் , குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மல்லிகைசரம், கல்கண்டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.
 
 
முகூர்த்தக்கால் நாட்டல்!

முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .

அரசு, மா, பலா, மரத்தின் கம்பு 5 அடி  நீளத்தில் செம்மண், சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .

மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிறால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும். கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால், நவதானியம், சந்தனம், பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
 
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார், நிறை நாழி, மாவிலையுடன் நிறைகுடம், திருவிளக்கு, தேங்காய், பழங்கள், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து  பந்தல்காரருக்கு திருநீறு, சந்தனம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு  ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .
 
 
 
  
 

சனி, 30 ஜூலை, 2016

சூடிக்கொடுத்த சுடர்கொடிக்கு ஆடிப்பூரத் திருவிழா!


தான் சூடிய மாலையை எம்பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்து சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் என அழைக்கப்பட்ட ஆண்டாள், மகாலட்சுமியின் அம்சமாக துளசி மடத்தின் கீழே அவதரித்தவள். புதன், சுக்கிரன், செவ்வாய், சனி, வியாழன் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் துலாம் லக்னத்தில் அந்த அவதாரம் நிகழ்ந்தது.  பெரியாழ்வாரின் மகளாக வளர்க்கப்பட்ட ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு கண்ணனுக்காக, திருப்பாவை 30 பாடல்கள், நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் என உளம் நெகிழ்ந்து பாடியுள்ளாள்.  ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.  திருமகளின் அம்சமாகப் பிறந்த ஆண்டாள், பங்குனி உத்திரத்தில் வாரணம் ஆயிரம் புடை சூழ பெருமாளை மணந்தாள். அந்த  ஆண்டாள்-ரங்கமன்னாரின் திருமண வைபவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் பிறந்த நாள் விழா ஸ்ரீவில்லிப்புத்தூர் நாச்சியார்(ஆண்டாள்) கோயிலில் 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 1ம் தேதி வேத, மந்திரங்கள் ஒலிக்க அடியார்கள் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் பாட, கொடிமரத்தில் காலை 8:30 மணியில் இருந்து 9:30 மணிக்குள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு விழா துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. ஆண்டாளும் ரங்கமன்னாரும் பிரத்யேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அன்று இரவு அவ்விருவரும் அலங்கரிக்கப்பட்ட பதினாறு வண்டிச் சப்பரத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வருவர். விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, இரவு வீதியுலா நடைபெறும்.

வீதியுலாவின் போது திரளான பக்தர்கள் தொடர்ந்து செல்வர்.

இரண்டாம் நாள் காலை 8:30 மணிக்கு ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் சந்திர பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா வருவர். 



மூன்றாம் நாள் விழாவில் காலை 8:30 மணிக்கு முந்தைய நாள் போலவே ஆண்டாளும், ரங்கமன்னாரும் வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் தங்கப் பரங்கியிலும் ரங்கமன்னார் அனுமார் வாகனத்திலும் வலம் வருவர்.

நான்காம் நாளன்றும் காலை 8:30 மணிக்கு அதேபோல வீதியுலா. ஆடிப்பூரத்தின் ஒவ்வொரு நாளும் வீதியுலாவின் போது அந்த ஊரே விழாக்கோலத்தில் காட்சியளிக்கும். இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ரங்கமன்னார் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருவர். ஒவ்வொரு நாளின் வீதியுலாவின் போதும் ஆண்டாள்-ரங்கமன்னாரைத் தொடர்ந்து நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஐந்தாம் நாள் காலை 9 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருஆடிப்பூர பந்தலுக்கு பெரியாழ்வார் எழுந்தருளி பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களாசாசனம் நடைபெறுவதாக ஐதீகம். இந்த வைபத்தைக் காண திரளான பக்தர்கள் வந்து பக்தி பரவசம் அடைவர். அன்று இரவு 10 மணிக்கு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி. அப்போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்கமன்னார் பெரிய பெருமாள் வாகனத்திலும் சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கால் அப்பன் பெரியா திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வீதியுலா வருவர். ஐந்தாம் நாள் வாகன வீதியுலாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். பெண்கள் ஒன்று கூடி கண்ணன் பாடல்களை பாடிக் கொண்டு கோலாட்டம் ஆடி மகிழ்வர். 

ஆறாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரங்கமன்னார் யானை வானகத்திலும் எழுந்தருளி வலம் வருவர்.

ஏழாம் நாள் ஆண்டாள்-ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியான் அலங்காரத்தில் வீதி விடையாத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவர். இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு 8 முதல் 11 மணி வரை கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலத்தில் காட்சியளிப்பார். இந்த அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.  

எட்டாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் வீதியுலா வருவர்.  இரவு ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும் ரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர். இரவு 11:30 மணியில் இருந்து 12:30 மணிவரை திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெறுகிறது.

 ஒன்பதாம் நாள் காலை பெருமாளுக்கும் தேவிக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். காலை 5 முதல் 6 மணிக்குள் கடக லக்னத்தில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுவர். தமிழகத்திலேயே திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தேர் இது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8:05 மணிக்கு பக்தர்கள் ‘‘கோவிந்தா! கோவிந்தா!’’ என்று விண்ணைத் தொடும் கோஷத்துடன் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெறும். தேர் சக்கரங்கள் பூமியில் பதிந்து விடாதபடி அது செல்லும் வழியில் இரும்பு தகடுகள் போடப்பட்டிருக்கும்.
 
தேரில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் சேர்ந்து வரும் காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். திரளான பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் கூட்டம், கூட்டமாக வந்து ஆண்டாள்-ரங்கமன்னாரை தரிசனம் செய்வர்.



பத்தாம் நாள் மாலை 5 மணிக்கு இரட்டைத்தோளுக்கினியானில் ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அவதாரம் பட்டர்களால் வாசிக்கப்படும்.
பதினொன்றாம் நாள் காலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் புறப்பாடாகி நான்கு ரத வீதிகளில் உலா வருவர். இரவு மூலஸ்தானத்தில் சேர்த்தியாவர்.

பனிரண்டாம் நாள் காலை உற்சவ சாந்தியோடு விழா நிறைவடையும். மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரங்கமன்னார் தம்பதிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். விழாவின் ஒவ்வொரு நாளும் நாலாயிர திவ்ய பிரபந்தம் அடியார்களால் பாடப்பெறும்.
 
 

ஆடிப்பெருக்கு!


ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.



மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைத் தேர்வு செய்து கொள்வார்கள்.

அந்த இடத்தை சுத்தம் செய்து, பசுஞ் சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுவத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலை அருளுமாறு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இதனால் நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் வெள்ளமாய்ப் பெருகும் என்ற நம்பிக்கை கொள்கிறார்கள்.



தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைப் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று தயாரித்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உண்பார்கள். ஆடி பதினெட்டாம் நாள் காவிரிப் பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரிக் கரையில் வைத்து நோன்பு நோற்பதும் உண்டு.



காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலைவரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள்.



காவிரித் தாய்க்கு சிறப்பு பூஜை செய்தபின் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ளும் பெண்கள்.



காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.

காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அந்த சமயம், கர்ப்பவதியாக இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய் பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள். வருடம் வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந் நாராயணன்!

ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு. “இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.

தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்

ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவதாக புராணம் சொல்கிறது. அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள். அதை பெருமாள் முன் வைத்து, “உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள்.” என்று காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள். இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

 பூஜை செய்யும் முறை

இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சல், காதோலை கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பழம், பூ, அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சல் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சல் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை

காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறை குடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணியத் தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியை நாளைப்போலவே ஆடிப்பெருக்கு நந்நாளிலும் மக்கள் புது பொன் நகை வாங்குகிறார்கள். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால் புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடி மாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்று சொல்வார்கள். ஆனால், ஆடிப்பெருக்கு நாள் மட்டும் விதிவிலக்காகிறது.

 

செவ்வாய், 26 ஜூலை, 2016

கோட்டை கோயில் கல்யாண காமாட்சி!



இறைவர் திருப்பெயர் : மல்லிகார்ச்சுனர். இறைவியார் திருப்பெயர் : கல்யாண காமாட்சி!
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
மாவட்டம் : தர்மபுரி
 
 
தருமர் வழிபட்டதால் இந்த ஸ்தலத்திற்கே தருமபுரி என்று பெயர். மேலும் இக்கோயிலுக்கு மாத்ரு மந்திர் என்றும் பெயர். உலகில் தாய் வழிபாட்டின் பெருமையை விளக்க கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ அன்னை ஜெய ஜெய காமாட்சி, கல்யாண காமாட்சி, ஐக்ய நிலையில் சிவ சக்தி ஐக்ய சொரூபமாக, பஞ்ச பிரம் மாசானத்தில், பிரம்மா விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் நான்கு கால்களாக சதாசிவர் மேற் பலகையாக, மேல் நின்று அன்னை அனுக்ரஹிக்கும் நிலையில் நாம் தரிசிக்கும் ஒரே தலம், 18 படிகளுக்கு மேல் அன்னையின் திருக்கோயில் கருவறை அமைந்துள்ளது.
 
 
பிரதோஷ புண்ணிய காலத்தில் உமையோடு கூடி தம்மை தாமே வலம் வருகையில் சிவசக்தி ஐக்கிய நிலையை உணர்த்தி 18ம் படி அருகே அன்னை கல்யாண காமாட்சி ஆலயத்தை வலம் வந்து திருக்காட்சியை அளிப்பது காணக் கிடைக்காத அபூர்வ தரிசன காட்சியாகும்.
 


தினசரி பக்தர்கள் திருப்படிக்கும் குடம் குடமாக நீர் சொரிந்து மலரிட்டு வழிபடுகிறார்கள்.

அமாவாசை தினத்தில் பெண்களே கலந்து திருப்படி பூஜை செய்கிறார்கள்.
 


 
அன்னை ஆதி காமாட்சியை திருக்கோயில் வலம்வர திருப்பாதம் தாங்கி வருபவரும் பெண்களே, குடை எடுப்பதும் பெண்களே. தாய்மையின் பெருமையைக் குறித்த ஆலய அமைப்பும், பூஜை முடிவுகளும் அம்பிகைக்கே முதலிடம் ஆதலால் தாய் மண், தாய்மொழி போல் தாய்க்கோயில் மாத்ரு மந்திர் என போற்ப்படுகிறது. மற்றுமொரு விசேஷம் இந்த காமாட்சி தருமபுரி கல்யாண காமாஷி என்று அழைக்கப்படுகிறாள்.
 
திருவிழா:   

நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, சண்டி யாகம், அஷ்டமி


சிறப்பம்சம்:
 
தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதும், அம்மன் 18 படிகளுக்கு மேல் நின்று அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பு. 
 

ஆடி 2-ம் செவ்வாய்,
"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. வெள்ளி கவச அலங்காரம்.

ஸ்ரீ தருமபுரி கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் கல்யாண காமாட்சி கோயிலில், தருமர் முதலானோர் வழிபட்ட சூலினி ராஜதுர்கை தரிசிக்க வேண்டியவள். மகிஷனை வதம் செய்யும் நிலையில் சூரன் மனித உடலும், எருமைத்தலையும் கொண்டு, கத்தி கேடயம் ஏந்தி கீழே விழுந்த நிலையில் மூன்று வகை சூலங்களைக் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள். இது தமிழகத்தில் சூலினிக்கான ஒரே கோயிலாகும்.   



"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. சந்தன காப்பு அலங்காரம்.


 
வருடத்தில் ஆடிமாதம் மூன்றாவது செவ்வாய் மட்டுமே மாலை 4.30 முதல் 9.00 வரை தரிசிக்க முடியும். ஏனைய நாட்களில் முகம் மட்டுமே தரிசிக்கலாம். திருமுகம் தவிர ஏனைய பாகங்களை தரிசிப்பது நடைமுறையில் இல்லை. தினசரி பூஜைகள் திரையிட்டே செய்கிறார்கள்.    

 
நேர்த்திக்கடன்:   

இங்குள்ள அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

 
திறக்கும் நேரம்:   

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில் தருமபுரி-636 702.