சனி, 16 ஜூலை, 2016

வெற்றிகளை குவிக்கும் கௌமாரி!


தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர், குமாரர் என வணங்கப்படுகிறார். அகங்காரத்திற்கு தேவதையாக இவர் கூறப்படுகிறார். ‘புருஷோ விஷ்ணுரித் யுக்த: சிவோ வா நாம நாமத: அவ்யக்தம் து உமாதேவிர்வா பத்ம நிபேஷணா யத் ஸமயோகாத் ஹம்கார:

ஸ்ச ஸேநாபதிர் குஹ:” எனும் வராஹ புராண ஸ்லோகப்படி சிவன் புருஷனென்றும், உமாதேவி ஞானம் என்றும் அவ்விருவரின் சேர்க்கையால் உண்டான அகங்காரமானது சேனாதிபதியான குகன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அகங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’ என்று வழிபடுகிறோம். வீரத்தை இவளே அருள வேண்டும்.

இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம், போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள்.இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள்.

அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்ய, நலம் பெறலாம்.

சிங்கமுகன், சூரபத்மன், தாரகன் போன்றோரை அடக்க நந்தி கணங்களோடும், வேத மந்திர ஒலிகளோடும் வீற்றிருக்கும் பரமன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தான். அதன் வீர்யத்தைத் தாங்காத தேவர்களால் அது சரவணப் பொய்கையில் இடப்பட்ட ஆறு தாமரை மலர்களில் அதியற்புதமாக ஆறு குழந்தைகளாக, அன்னை பார்வதி அனைவரையும் ஓருருவாய், ஆறுமுகமாக்கினாள். அழகின் மொத்த உருவாய் தோற்றம் கொண்ட குமரனின் அறிவும், பொலிவும் ஆச்சரியமானது.

ஞான குருவாய் ஓம் எனும் பிரணவத்தை உபதேசித்து ஒப்பிலாத் தெய்வமானான். மாதா பார்வதி தேவியின் திருக்கரத்திலிருந்து சக்தி வேலை வாங்கி அதைக் கொண்டு சூரனை இரு கூறாக்கியவன்.இந்த தமிழ்க் கடவுளின் சக்தியே கௌமாரி எனப்படும் சஷ்டி தேவியாவாள். பரம்பொருள், மாயா சம்பந்தமாக தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள். இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி, கங்கையாகவும்;

திருமாலுக்கு தேவி, பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி, சரஸ்வதி எனவும், விநாயகனுக்கு சித்தி, புத்தியாகவும் அருள்வது போல் குமரனுக்கு தேவஸேனா, வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது. முன்பொரு சமயம் நாரதர் கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க அவர் தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அரியிடம் வரம் கேட்டனர்.

அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம் புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன் அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திர லோகத்தில் தேவஸேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும் தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும் வாக்குறுதி அளித்தான்.

 காலம் கனிந்தது. சூரர்களிடம் இருந்து தேவலோகத்தைக் காத்து தேவஸேனாவை மணம் புரிந்து தேவஸேனாதிபதியானான் முருகப்பெருமான். எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய வள்ளிமானையும் மணந்தான்.

தேவஸேனா தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை, போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். வள்ளி, தாமரை மலர் ஏந்தி அலங்கார ரூபிணியாக மாணிக்க மகுடங்கள் துலங்க இடப்புறம் வீற்றிருப்பவள். ஆகமங்கள் இவர்களை கஜா, கஜாவல்லி என்றும் வித்யா, மேதா என்றும் போற்றுகின்றன.

ஸ்வயம்புமனுவின் புதல்வன் நிஷிதன் என்பவனுக்குப் பிறந்த குழந்தைகள் உடனே இறந்தன. அவனை இந்த சஷ்டிதேவி என வழங்கப்படும் கௌமாரி உபாஸனை காப்பாற்றியது. இவள் குழந்தைகளைப் பிழைக்க வைத்து அவனிடம் கொடுத்தருளினாள்.

அப்போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையையும், வறுமையில் உழல்பவர்களுக்கு செல்வத்தையும். தன் கர்மாக்களை சரியாகச் செய்வார்க்கு அதன் பலன்களையும் தான் அளிப்பதாகவும் கௌமாரிதேவி உறுதியளித்ததாக புராணம் கூறுகிறது.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் எனும் பழமொழி கூட சஷ்டிவிரதம் இருந்தால் கருப்பையில் மழலைவரம் வரும் என்பதைக் குறிக்கும் என்பர். அவ்வாறான முருகனுக்கு உறுதுணையாய் இருக்கும் சஷ்டி தேவியான தேவஸேனாவை முருகனுடன் சேர்ந்து வழிபட நீண்ட ஆயுள், ஆரோக்ய முடன் சத்புத்ர ப்ராப்தியும் கிடைக்கும்.

நீலச்சிகண்டியில் ஆரோகணித்து குமரவேலுடன் கோலக்குறத்தியாய் பக்தர்களைக் காக்க வருபவள் வள்ளியம்மை. ஞானமும், தவமும் அறியாத வேடுவர் குல நங்கையைத் தானே வலியச் சென்று மணம் செய்த முருகனின் பரந்த நோக்கை அருணகிரியார் பரக்கப் பேசுகிறார்.‘முனினாமுதா’ எனும் சுப்ரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் கூட ‘‘குண்டலினி, நவவிதபக்தி செய்து தன்னை வழிபடும் அடியவர்க்கு அருள்புரியும் அநேக தெய்வங்கள் உண்டு; ஆனால், எதுவுமே அறியாத எளியோருக்கும் விரும்புவதைத் தரும் தெய்வமான முருகனின் பேரருளை வியக்கிறேன்,’’ என்று கூறியுள்ளார்.

காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு, அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன், 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூலரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாய்க் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்திராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும்.

அதே காலம் ஒரு நாளாய் உருவகம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதையே முருகனின் வடிவமாக எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனா. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் திருவடிவம். முருகப்பெருமானை காலரூபமாகவும் காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம்.

முருகனை படைப்புத் தொழில் புரியும் பிரம்மசாத்தனாகவும், காத்தல் தொழில்புரியும் முகுந்த முருகனாகவும், தீயவற்றை அழித்து நல்லோரைக் காக்கும் உருத்திர குமாரனாகவும் போற்றி வழிபட்டதைப் போலவே அவனது அம்சமான கௌமாரியையும் மூன்று நிலைகளில் வழிபட்டனர் என கருதுகின்றனர்.

இவ்வளவு மகிமை வாய்ந்த புத்திரப்பேற்றை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தி கௌமாரிதேவி பக்தர்களுக்காக எதைத்தான் செய்யமாட்டாள்? இந்த கௌமாரியை வழிபட பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மனதில் புத்துணர்வும் தெம்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அறிவு பிரகாசிக்கும்.

த்யானம்
அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காம தாயினீ
பந்தூக வர்ணாம் கிரிஜாம் சிவாயா
மயூர வாஹனாம்து குஹஸ்ய சக்தீம்
ஸம்பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ
கட்வாங்கரா சௌ சரணம் ப்ரபத்யே!

ஷட்வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம் நீலவர்ணாம் ஸுயௌவனாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்தீம்     ச தாரிணீம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் கௌமாரீ தாம்விபாவயேத்.

மந்த்ரம்:

ஓம் கௌம் கௌமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நம:

கௌமாரி காயத்ரி:

ஓம் சிகி வாஹனாய
 வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்
.
ஓம் சிகித்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய  தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.

மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங் களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என் முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.

தேவி மாஹாத்மியத்தில் கௌமாரி!

மயூர குக்குட வ்ருதே மஹா சக்தி தரேனகே
கௌமாரீ ரூப ஸம்ஸ்தானே நாராயணீ நமோஸ்துதே.

மயில் வாகனம் மீது கோழிக்கொடி சூழ, மகாசக்தி ஆயுதத்தைத் தாங்கி
பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்!

 அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன. 

ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம்.

முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு. அம்பிகைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட சஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. லலிதா, புவனேஸ்வரி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, பாலா போன்றவை அவை.

லலிதா சஹஸ்ரநாமம்

 அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா. அந்த வடிவத்துக்குரியதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

இந்து சமயத்தில் பதினெட்டுப் புராணங்கள் உள்ளன. இவை பெருங்கதைகள். இந்தப் புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதன் பின்பகுதியில் இருக்கும் உத்தரகாண்டத்தில் லலிதா உபாக்கியானம் என்னும் அத்தியாயத்தில் லலிதா சஹஸ்ர நாமம் விளங்குகிறது.

தோன்றிய விதம்

 பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி லலிதாவாக வருகிறாள். அவளுடைய வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள்.
ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லாத் தேவதைகளும் சூழ லலிதாதேவி கொலுவிருக்கையில் வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர்.

“என் கட்டளையாலேயே இந்த ஒப்புயர்வற்ற தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். இதை நீங்கள் எப்போதும் என்னுடைய பிரீதியின் வளர்ச்சிக்காகப் படிப்பதுடன் என் பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த சஹஸ்ரநாமத்தை எனது பிரீதிக்காக எப்போதும் பாராயணம் செய்யவேண்டும்”, என்று ஸ்ரீ மாதாவாகிய ஸ்ரீலலிதா தேவி
ஆசி கூறினாள்.
அவ்வாறு பாடப்பட்டதுதான் லலிதா சஹஸ்ரநாமம்.

ஆயிரம் மந்திரங்கள்

 இந்த ஆயிரம் மந்திரங்களும் அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமானவை. இவற்றை யார் கூறுகிறார்களோ அவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள். இதனை சஹஸ்ரநாமத்தின் ‘பல சுருதி’ என்னும் பகுதி கூறுகிறது.

ஆகையினால்தான் தீவிரமான சாக்தராக விளங்கி அம்பிகையின் பேரருளுக்குப் பாத்திரமாக விளங்கவேண்டும் என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூறவேண்டியது அவசியமாகிறது. சக்தியின் ஆலயங்களிலெல்லாம் இது சொல்லப் படவேண்டும்.

இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஜாதியோ மரபோ சக்தி வழிபாட்டில் தடையாக விளங்குவதில்லை. போதிய பயிற்சி இருந்தால் இருபதே நிமிடங்களில் இதனைச் சொல்லி விடலாம்.
ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பிகையின் கோயிலிலும் இதனைச் சொல்லலாம். எந்த வகையான அம்பிகைக்கும் அர்ச்சனையாக இதன் நாமாவளியைச் சொல்லலாம். எந்த அம்பிகைக்கும் இந்த சஹஸ்ரநாமம் ஏற்றதே. எந்த அம்பிகையாக இருந்தாலும் இதனால் மிகவும் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள்.

ஸ்ரீசக்ரம் அல்லது அம்பிகையின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றின் முன்னிலையில் சஹஸ்ரநாமத்தைச் செய்யலாம்.

அல்லது சும்மா அமர்ந்து கொண்டு வெறும் பாராயணமாகவும் கூட செய்யலாம். சற்றுப் பயிற்சி வந்த பிறகு எந்த நேரத்திலும் மனதிற்குள் அந்த மந்திரங்களை ஓடவிடலாம். வேறு ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதுகூட அந்த மந்திரங்களில் சிலவற்றையாவது தோன்றுகிற இடத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கலாம்.

செவ்வாய், வெள்ளி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய நாட்களில் செய்வது சிறப்பு.
வில்வ இலை, துளசிப் பூங்கொத்து, செம்பரத்தம்பூ, நந்தியாவட்டை மல்லிகை, சம்பகம், அரணி முதலிய மலர்கள் சிறப்பு. வேறெந்த மலரையும் வைத்துச் செய்யலாம். சரஸ்வதி பூஜையன்று செய்வதும் நல்லது.

அம்பிகையின் பக்தர்களுக்கு அம்பிகையே ஏதாவது வகையில் குருவாய் வருவாள். வழியையும் காட்டுவாள். அல்லது தகுந்த குருவை அடைய வழி செய்வாள்.

பயன்படுத்தும் விதம்

 லலிதா சஹஸ்ரநாமத்தை இருவிதமாகப் பயன் படுத்தலாம்.
ஆயிரம் மந்திரங்களையும் தனித்தனியாக தொடர்ந்து கூறிவரலாம். ஒவ்வொரு மந்திரத்துக்கும் முன்னால் பிரணவத்தைச் சொல்லி மந்திரத்தையும் சொல்லி, பின்னால் நமஹ என்று கூறுகிறோம். இது நாமாவளி சொல்லும் முறை. அர்ச்சனையின்போது இவ்வாறு செய்கிறோம்.

உதாரணம்:
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
ஓம் ஸ்ரீ மஹா ராஜ்ஞை நமஹ
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை நமஹ

 இன்னொரு முறையில் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் மந்திரங்களையும் வரிசையாக ஒன்றாக இணைத்துக் கூறுகிறோம். ஆயிரம் மந்திரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்து ஒரு பெரிய மந்திரமாக அமைத்துச் சொல்கிறோம். இது ஒரு பெரிய பாடலின் அமைப்பில் விளங்கும். அனுஷ்டுப் சந்தஸ் எனப்படும் தாள அமைப்பில் இது விளங்கும். இந்தப் பாடல் வடிவைத் தோத்திரம் என்று கூறுகிறோம். இந்தத் தோத்திரத்தில் நூற்று எண்பத்து மூன்று சுலோகங்களாக ஆயிரம் மந்திரங்களும் இணைந்திருக்கின்றன. ஆனால் அமைப்பில் இது ஒரே மந்திரந்தான். பல மந்திரங்கள் இணைந்து ஒரு பெரிய மந்திரமாக உருவாகமுடியும். அவ்வாறான இணைப்பால் உருவாகிய பெரிய மந்திரத்தை மாலா மந்திரம் என்று கூறுகிறோம்.

பல மலர்கள் இணைத்துக் கோர்க்கப்பட்டு ஒரு மாலை உருவாவதைப் போலவே இருப்பதால்தான் இதனை மாலா மந்திரம் என்று கூறுகிறார்கள்.

இம்முறையில் இது ‘ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம ஸ்தோத்திர மாலா மஹா மந்திரம்’ என்று அழைக்கப் படுகிறது.

இம்முறையில் பாராயணம் செய்யப்படும்போது அதன் முன்னரும் பின்னரும் சொல்லிச் செய்யவேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
நியாசம் என்று இவற்றைச் சொல்வார்கள். ஆரம்ப நிலையில் இருந்து படித்து நன்றாகச் செய்து பழக விரும்புகிறவர்கள் நியாசத்தை மெதுவாகக் கற்றுக் கொள்வதுண்டு. இருப்பினும் நியாசத்துடன் செய்வது இன்னும் சிறப்பு.

மாலா மந்திர அமைப்பு

 ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராஜ்ஞி ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேஸ்வரீ

 மொத்தத்தில் சொல்லப்போனால் அம்பிகையுடன் நெருங்கிய நேரடித் தொடர்பு கொள்ளப் பயன்படும். மிகச் சிறந்த மந்திர சாதனமாக லலிதா சஹஸ்ரநாமம் விளங்குகின்றது.

ஏனெனில் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையின் வடிவம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம் மந்திரம், தத்துவம், பரிவார தேவதைகள், வழிபாட்டு முறை, வழிபடுபவருக்கான தகுதி, அவளுடைய அருளால் பெறக்கூடிய மேன்மைகள், தேவியைப் பற்றிய நூதனமான பலவிபரங்களும் அந்தந்த மந்திரங்களால் விளக்கப்பட்டு விடுகின்றன.

பிரசாதம் இனிப்பாக இருக்க வேண்டும். பொங்கல், பால் பாயாசம், பால், தேன் முதலியவை நல்லது. இவை கிடைக்காத சமயத்தில் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவற்றுடன் வெறும் தண்ணீரைக் கூட நைவேத்தியமாக வைக்கலாம். புதிதாகச் சமைத்த சாதத்தை யாரும் உண்பதற்கு முன்னதாகக் கூட அம்பிகைக்குப் படைக்கலாம்.

 அவளை நம் உள்ளத்துக்குள் தேடி ஆராதிக்க வேண்டும். வெளிப்புறத்தில் அகப்பட அரிதானவள்.
பெண்கள் ஸஹஸ்ரநாம பூஜை செய்வதை அம்பிகை மிகவும் அதிகமாக விரும்புவாள்.



 

சவுபாக்கியம் தரும் மஞ்சள் கிழங்கு!

சுமங்கலிகள் தினமும் மந்திரம் சொல்லி மஞ்சள் பூசுங்க !

சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ,

""ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ!
அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!''


என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூச வேண்டும்.

இதனால் சவுபாக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

மஞ்சள் சருமநோயைப் போக்கி, முகப்பொலிவையும் தருகிறது.

பௌர்ணமி அபிஷேகம்!

ஒவ்வொரு பௌர்ணமியிலும் அபிஷேகம் செய்வதின் பலன்கள் என்ன?
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.

ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை,


 சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்

 வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்

 ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை - கேட்ட வரம் கிட்டும்

 ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்

 ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்

 புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்

 ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்

 கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி

 மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்

 தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்

 மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்
பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி

 அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ் திருமுறைகள் போற்றும் - சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.

 

வெள்ளி, 15 ஜூலை, 2016

சிறுதானிய ஸ்நாக்ஸ்!

கேழ்வரகு முறுக்கு
தேவையானவை: கேழ்வரகு மாவு  அரை கிலோ, அரிசி மாவு  50 கிராம், சீரகம்  சிறிதளவு, உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும், கேழ்வரகு மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் கலந்து, தண்ணீர் சேர்த்து, நல்ல பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகப் பிழிய வேண்டும். பிறகு, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அருமையான கேழ்வரகு முறுக்கு தயார்.
பலன்கள்: உடலுக்கு வலிமை தரும், உஷ்ணத்தைக் குறைக்கும். இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.
எள் உருண்டை
தேவையானவை: எள், நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, பச்சரிசி  50 கிராம்.
செய்முறை: பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்துக்கொள்ளவும். எள்ளை தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோல் நீங்க லேசாக இடித்து, வெயிலில் சிறிது நேரம் உலரவைக்கவும். பிறகு, பச்சரிசி, வெல்லம், எள் மூன்றையும் ஒன்றாக இடித்த பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும் (உரல் இருந்தால் அதில் போட்டு இடிக்கலாம். சுவை கூடுதலாக இருக்கும்). இந்தக் கலவையை எலுமிச்சம் பழ அளவில் உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.
பலன்கள்: வெல்லம், எள்ளில் இரும்புச் சத்து அதிகம். ரத்த சோகை வராமல் தடுக்கும். இளைத்து இருப்பவர்கள் எள் சாப்பிட்டால், உடல் நலம் நன்றாகத் தேறும். தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம்.
கேழ்வரகுத் தட்டுவடை
தேவையானவை: கேழ்வரகு  அரை கிலோ, வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு  தலா 50 கிராம், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து, ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
பலன்கள்:  கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள்வைக்கும். குடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.
கம்பு உருண்டை
தேவையானவை: நாட்டு கம்பு, நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, வறுத்த வேர்க்கடலை  50 கிராம்.
செய்முறை: கம்பை நன்றாக இடித்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.  வெல்லத்துடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து, வெல்லப்பாகினை சேர்த்து, எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: வெல்லப்பாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், வெல்லப்பாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. வெல்லப்பாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.
பலன்கள்: புரதச்சத்து நிறைந்தது. பீட்டாகரோட்டின் அதிகம் உள்ளதால், பார்வைத் திறன் மேம்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.  உடல் சூட்டைத் தணிக்கும். சருமத்தைப் பொலிவாக்கும்.
வரகு அரிசி சீவல்
தேவையானவை: வரகு அரிசி மாவு  ஒரு கிலோ, கடலை மாவு  100 கிராம், உப்பு, மிளகாய்த் தூள்,எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசையவும். பிறகு, இந்த சீவல் போடும் பெரிய அளவிலான ஓட்டை உடைய கரண்டியில் மாவைவைத்து, கைகளால் தேய்த்துக் காயும் எண்ணெயில் போட்டு, பொன் நிறமாக எடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால், பொரித்த சீவலின் மேல், மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.
பலன்கள்: கோதுமையைவிட இதில் நார்ச்சத்து அதிகம். தானியங்களுடன் ஒப்பிடுகையில், இது அதிகச் சத்துக்கள் நிறைந்தது. மாவுச்சத்தும் குறைவாகக் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. எளிதில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகு அரிசி அதிரசம்
தேவையானவை:  வரகு அரிசி  ஒரு கிலோ, நாட்டு வெல்லம்  முக்கால் கிலோ, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடையால் சலித்துக்கொள்ளவும். நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். (வெல்லப்பாகினை பாத்திரத்தில் விட்டால் நகராத அளவுக்கு கெட்டி பதம்). வெல்லப்பாகினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வரகு அரிசி மாவினை சேர்த்துச் சற்று கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். (தட்டி எண்ணெயில் போடும் அளவுக்கு) இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரிக்கவும். அதிரசம் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும்.
பலன்கள்: எளிதில் செரிமானம் ஆகும். மாவுச்சத்துக் குறைவாக இருப்பதால், அதிக எடை இருப்பவர்களும் சாப்பிடலாம்.

g0b15.wordpress.com


சிறுதானிய குழிப்பணியாரம்!

சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)
தேவையானவை: இட்லி அரிசி  – 1/4 கிலோ, சாமை – 150 கிராம், குதிரைவாலி – 100 கிராம், உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1,  கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்யும் தட்டில் மாவை ஊற்றி, வார்த்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.
வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை – தலா 50 கிராம், பச்சைமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை  ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.
பலன்கள்: கடலைப்  பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்  பருப்பு, முந்திரி   அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
திரிகடுகம் காபி
தேவையானவை: மிளகு – 30 கிராம், சுக்கு – 50 கிராம், திப்பிலி – 5 கிராம், கருப்பட்டி, காபி தூள் – தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.
பலன்கள்: சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக்காலத்தில் காலை – மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.
பச்சைப் பயறு கட்லட்
தேவையானவை: பச்சைப் பயறு – 1/4 கிலோ, கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம், மஞ்சள் தூள் – சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) – சிறிதளவு, வெங்காயம் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான  அளவு, காய்ந்த பிரெட் தூள் – சிறிதளவு.
செய்முறை: பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.
பலன்கள்: மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.


தினைப் பாயசம்!



தினைப் பாயசம்
தேவையானவை:
தினை அரிசி – 1 கப்
பனை வெல்லம் – 3/4   கப்
பால் – 1 கப்
முந்திரிப் பருப்பு – 5
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
உலர்ந்த திராட்சை – 5
நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச்  சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது,  ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
கலவை தானியக் கூழ்
தேவையானவை:
கம்பு – 1 கப்
கேழ்வரகு – 1 கப்
மோர் – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கம்பு, கேழ்வரகை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கரண்டி மாவை தண்ணீர்விட்டு கரைத்து, கொதிக்க வைக்கவும், நன்கு வெந்த பின் இறக்கி, ஆற விடவும். மோர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி, கூழ் ஆக பரிமாறவும்.