புதன், 6 ஜூலை, 2016

திருலோக்கி அகிலாண்டேஸ்வரி!


காவிரியின் வடகரையில் அமைந்த ஏமநல்லூராகிய திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது சூரியனார் கோயில், துகிலி வழியாகவும்  இதனை அடையலாம். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஸ்வர  வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும்.



‘அணைத் தெழுந்த பிரானின் அழகுத் திருமேனி, நந்தியின் மேல் ஒரு பீடத்தில் சிவம் தழுவிய சக்தியாக அல்லது சக்தி தழுவிய சிவமாக காட்சியளிக்கும் அரிய திருமேனி. பின் இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரையுடனும் திகழ, இடது கரம் அம்பிகையை அணைத்த அழகு வடிவம். பெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். அம்பிகையினது வலது கரம் பெருமானது இடுப்பைப் பற்றிக் கொண்டும், இடது கரத்தில் மலர் ஏந்தியும், உலக நாயகனைப் பார்த்து ரசிக்கும் பூரிப்பில் அவர் முகம் பார்த்தபடி காட்சியளிக்கிறாள். இந்த உமாதேவியின் பெயர் ‘பார்யா ஸௌக்ய ப்ரதாயினி’ என்பதாகும்.



அம்பிகை வலது காலை சாய்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு இடது காலை மடக்கி உடம்பை வளைத்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். இருவரும் அமர்ந்திருக்கும் பீடத்தின் மேற்புறம் கந்தர்வர்கள் கானம் செய்கிறார்கள். கின்னரர் வாத்தியம் வாசிக்கிறார்கள்; நடன மங்கையர் ஆடுகின்றனர். இவை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமின்றி அவர்களைத் தமது முதுகில் தாங்கிக் கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கும் நந்தியெம் பெருமானின் மிடுக்கான தோற்றம் மிக அருமை. இந்த அழகுக் காட்சியைக் காணவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக் கொண்டு நவகிரக குரு பகவான் பக்தி பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதி!




 திருலோக்கியில் அகிலாண்டேஸ்வரியுடன் சுந்தரேசப் பெருமான் அருள்பாலிக்கிறார். இவரது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் கொன்றைமாலை அணிவித்து முல்லைப் பூவால் அர்ச்சனை செய்தார். பசு நெய்யால் விளக்கேற்றி தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார்.

அவரது அன்பான சிரத்தையான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் ‘ப்ருஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குருபலம்’ பெற்று மகிழ்ச்சியான இல்வாழ்க்கை பெற உமது பலம் பெருகட்டும்’ என்று அருளினார். குரு சுந்தரேசப் பெருமானிடம் அருள்பெற்ற இனிய  நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் திருநட்சத்திரம்) ஆகும்.



சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு.
ஆனால், இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிப்பது அவர் பெற்ற பேரானந்தத்தின் விளைவுதானே? இது மட்டுமா! இந்தப் பீடத்தின் பின்புறம் சிவலிங்க வடிவைக் காணும்போது நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. சிவலிங்க மூர்த்தியை குரு பூஜை செய்ததன் பலனாக. சிவபிரான் ரிஷப வாகனத்தில் உமாமகேஸ்வரராக தோன்றி அம்பிகையை ஆலிங்கனம் செய்த எழிற்கோலத்தில் காட்சியளித்தார். இம்மாதிரி ஓர் அற்புத வடிவை தமிழ்நாட்டில் வேறெங்கும் காண இயலாது. குரு பூஜித்து அருள்பெற்று தமது குருபலத்தை பூலோக மக்களுக்கு வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் திருலோக்கிதான் .

இந்த தெய்வீக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த் தேவர் சுந்தரன் சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்ய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவால்  பாடி மகிழ்கிறார்.

  ‘‘வேதங்களின் சாரமாகிய உபநிஷத் தேனை குடித்து அருந்தமிழ் மாலை சற்று சிவமணம் கமழப் பெற்ற காரணத்தினால் காந்தாரப் பண்ணில்  கருவூர்த் தேவர் இசைத்த இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான நல்லறம் பெற்று இன்புறுவார்’’ என்று போற்றுகிறார். 

கருவூர்த் தேவரது திருவுருவை இக்கோயிலின் வெளிமண்டபத் தூணில் காணலாம்.

இத்தலத்தில் கண்ணுக்கு விருந்தாகும் மற்றொரு அற்புத வடிவம் ரதி-மன்மதன் பேரெழில் காட்சியாகும்.



வலது கையில் புஷ்பம் ஏந்தியும், இடது கையால் ரதியின் தோளைத் தழுவியபடியும் மன்மதன்; ரதியின் வலது கரம் காமதேவனை அணைத்தும், இடது கையில் ஜடை மாலையும், தலையில் அலங்காரக் கொண்டையுடன் உடலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் அவளது பேரழகு வடிவம் வார்த்தைகளால் வருணிக்க இயலாது. அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர்.

திருவாசி (பிரபை)யுடன் ஐந்தடி உயரத்தில் மிகவும் மிருதுவான கல்லில் நேர்த்தியாக அமைந்த தெய்வீகக் சிலை. ஹொய்சாலர் காலத்து  கலைக் கருவூலமாகும்.

மூலஸ்தானத்தில் திரைலோகிய சுந்தரனான சுந்தரேசப் பெருமானை தரிசித்து வெளி மண்டபத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரியை வழிபட்டு வலம் வரும்போது தெற்கு பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

  இங்கே கிழக்கு நோக்கி புதிதாக அமைக்கப் பெற்ற சித்திர சபையில் உமாமகேஸ்வர மூர்த்தி ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் குருபகவான் கரங்கூப்பி அந்த அழகு காட்சியை ரசிக்கிறார். பின்புறம் கண்ணாடி பொருத்தப்பெற்று குரு பூசித்த சிவலிங்கத் திருமேனி காட்சியளிக்கிறது. அவருக்கு இடதுபுறம் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். மற்றும் விஸ்வநாதர், பைரவர் துர்க்கை, சண்டேசர் சந்நதிகளும அமைந்துள்ளன.

தலவரலாற்றுப்படி பிருகு முனிவர் வழிபட்டதும், தருமன் என்பவனது பேச்சுக் குறை நீங்கப் பெற்றதுமான பெருமையுடையது. இத்திருக்கோயில், கணித  சக்ரவர்த்தியால் கட்டப் பெற்றது என்பர்.

திருலோக்கியில் உமாமகேஸ்வரப்  பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து  குருவருளும் திருவருளும் பெறலாம்.


வியாழன், 30 ஜூன், 2016

சுகபோக வாழ்வருளும் சுந்தரகாமாட்சி!

இறைவன் சுயம்புலிங்க வடிவாய் அருளாட்சி புரிந்து வரும் திருத்தலம் சிறுகரும்பூர்.

 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில், சுந்தர காமாட்சி சமேதராக  திரிபுராந்தக ஈஸ்வரர் பேரருள் புரிந்து கொண்டிருக்கிறார். கஜபிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட இக்கோயில் சோழமன்னர் களால் 10ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது என்கின்றன இக்குள்ள கல்வெட்டுகள். அன்னியர்கள் படையெடுப்பின்போது இத்திருக்கோயிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள் இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் என்பவரால் ஆலயம் வெளிக்கொணரப்பட்டது.

அம்பிகை சுந்தரகாமாட்சி  பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய் அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். இத்தல நாயகி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர்.

அம்பிகை கோடி சூரியப் பிரகாசத்துடன் ஆனந்தமயமானவளாய், தன்னை நாடிவந்து தன் தாள்களைப் பணியும் அன்பர்களுக்கு சகல சம்பத்துக்களையும்  அள்ளித்தருகிறாள். தாயாய், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி  அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள்.

தேவியை விழி  இமைக்காமல் தரிசித்துகொண்டே இருக்க மனம் விரும்புகிறது. அம்பாளின் எதிரில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் உள்ளது.

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இக்கோயில். ஓச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தூரம்  அல்லது காவேரிப்பாக்கத்தில் இறங்கினால் மூன்று கி.மீ. தொலைவு. ஓச்சேரியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

 

திருச்செந்தூரின் நாழிக்கிணறு!

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு.



நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர... இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
See more








திருசெந்தூர் முருகன் பன்னீர் இலை விபூதி!


திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி.



பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலை விபூதியின் மகத்துவம் ; 

அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவரால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார்.

அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.பிரசாதத்தை உடலில் பூசி உட் கொண்டார்..சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது.

அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட  ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம்.

இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும்.முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும்.பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது. முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.


நல்வழி காட்டும் சாஸ்த்திரம்!

சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோல தான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும் போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.


கொடி மரத்தின் தெய்வ சக்தி


கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதேபோல ஆலயத்தில் இருக்கும் கொடிமரத்துக்கும் மகத்துவம் இருக்கிறது. நாம் சில நிமிடமாவது கொடிமரத்தின் அருகே நின்று நம் பிராத்தனைகளை மனதில் நினைத்தால் இறைவன் எங்கிருந்தாலும் நமது வேண்டுதலும், பிராத்தனைகளும் கடவுளிடம் தடையின்றி அடைகிறது. கோயிலுக்குள் மூல விக்கிரக தரிசனம் அவசியம் என்பதுபோல கொடிமர தரிசனமும் அவசியம். கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும். எப்படி விஞ்ஞானிகளுக்கு தகவல் தர சாட்டிலைட் உதவுகிறதோ அதுபோல இறைவனுடைய சாட்டிலைட் இந்த கொடிமரம். வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்துவைத்திருக்கும். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்களை நீக்கி இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெற்று தரும்.


தென்திசையை பார்த்து உட்காரலாமா?


தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும. சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது. எமதர்மராஜரின் அருட்பார்வை பார்க்கும்படி தென்திசையை நோக்கி உட்கார்ந்தால் உடல் மெலிந்து முகம் வசிகரம் இல்லாமல் இருக்கும். காமாச்சி அம்மன் படத்தை பார்க்க பார்க்க கலை இழந்த முகமும் கலையாக மாறும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தென்திசை பார்த்து உட்கார்ந்தால் முகத்தில் வசீகரதன்மை போய்விடும். அதனால் கிழக்கு,மேற்கு,வடக்கு திசைகளை நோக்கி உட்காருவது நன்மை தரும். ஆனால் தூங்கும் போது கிழக்கு, அல்லது தெற்கு திசையில் தலைவைத்து உறங்கலாம்.


வீட்டில் தங்க நகை சேர வேண்டுமா?


வீட்டில் தங்கநகையாக சேர வேண்டுமானால் அட்சய திதி வரைக்கும் காத்திருக்கவா முடியும்.? இதற்கு ஒரு வழி இருக்கிறது. பரணி, பூரம்,பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட அட்சய பாத்திரம் போல நகையாக வாங்கும் யோகம் வரும்.


அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரத்தோடு இந்த ஹோரையும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.


 இராஜயோகம் தரும் நெல்லிக்காய்


 இராஜயோகம் வரவேண்டும் என்றால் நெல்லிக்காயை தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின் உள்ளங்கையில் உருவானது. அதனால் நெல்லிவாசம் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்யும். பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிகாயை தேய்து குளித்தால் இராஜயோகம் வரும்.


புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?


புது துணியை அணியும் முன் அந்த துணியின் ஓரத்தில் மஞ்சளை தடவிய பிறகு அணியவேண்டும். எதனால் இதை செய்யவேண்டும் என்றால், கடைகளில் பலபேர் அந்த துணியை எடுத்து பார்த்து இருப்பார்கள். ஒருவேலை அந்த துணியை அணிந்தும் பார்த்து இருப்பார்கள். அவர்களின் தோஷம் அந்த புது டிரஸ் போடுபவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மஞ்சளை சின்னதாக தடவி அணிந்தால் தோஷங்கள் நீங்கும்.






திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்!


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.




நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.


ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.


அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.


கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.


காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.


ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).


சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.


மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.


உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.


அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.


மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.


கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.


பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.


 திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே  கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.


பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.


திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.


கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.


தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.


தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.


பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.


மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.


ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.


தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.


திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.


லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!


“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”









காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்!


ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

தல வரலாறு:

கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.

இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.

தலபெருமை:

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் - வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் :

ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது "திருமணகோலம்' என்கிறார்கள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்' (ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.
ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.

உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.

கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

திருவிழா:

பங்குனி உத்திரம் பெருவிழா - 13 நாட்கள் நடைபெறும் - வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

பொது தகவல்:

மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.
இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

பிரார்த்தனை

இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.