திங்கள், 13 ஜூன், 2016

ஏலக்காயும் அதன் குணங்களும்!

"ஏலக்காயை பாயசம் பிரியாணிக்கு எதற்காக சேர்க்கிறீர்கள்?" எனக் கேட்டால், பெரும்பாலோனோர் வாசனைக்காக என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் அற்புதமானது எனக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி சில குறிப்புகள் ..கொஞ்சம் படியுங்கள்.


ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியாதான். இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. வாசனைப் பொருட்களின் ராணியாக திகழ்கிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு.ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இப்போது அதன் மருத்துவ குணங்களை பார்ப்போம்.


அஜீரணம், வாய்வு :
ஜீரண பிரச்சனைகளுக்கு, வாய்வு, ஏப்பம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் என சகல உணவுக் குடல் மற்றும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு ஏலக்காய் பலன் தரும்.


சிறுநீரக மண்டலம் செயல்பட :
ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், நச்சுக்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும்.


மன அழுத்தம் :
ஏலக்காய் கலந்த தேநீர் குடிப்பதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபடலாம் என்று மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


புற்று நோயை தடுக்கும் :
ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும் போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப் படுகிறது.


இரத்த உறைதல் ;
இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.


தலைசுற்றல் :
வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு சில ஏலக்காய்களை தட்டி, அரை டம்ளர் நீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சவும். அதில் சிறிது பனை வெல்லம் போட்டு வெதுவெதுப்பாக குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.


வாய்வுத் தொல்லை :
ஏலக்காய் இயற்கையான ஆன்டாசிட் ஆக செயல்படுகிறது. 3 ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, உணவு உண்பதற்கு முன் குடித்தால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.


விக்கல் நிற்க :
விக்கல் நிற்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.


மூக்கடைப்பு குணமாக :
ஜலதோஷத்தால் மூகடைப்பு ஏற்பட்டால் குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது, நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


ஏலக்காயின் பலன்கள் இன்னும் ஏராளம். சிலதான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் பாலில் கலந்தோ, அல்லது தேநீரிலோ, உணவிலோ சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படட்டும்.







இதயம் காக்கும் உணவுகள் !



இந்நாட்களில் சரியான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு அதிகரிக்க, அதிகரிக்க, இதயத்தின் நலன் தொய்வடைந்து போகிறது. இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.எனவே, உங்கள் இதயத்தின் மீது நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கண்டிப்பாக இதற்கு எந்தவொரு ஆங்கில மருந்தும் நிரந்தர தீர்வளிக்காது. எனவே, இயற்கையான, ஆயுர்வேத முறைகளை பின்பற்றி இதயத்தின் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மேலோங்க செய்யுங்கள். இதய நலனை அதிகரிக்க செய்யும் எளிய  வழிமுறைகள்!


தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயத்தின் வலிமை அதிகரிக்கும்.

அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் வலுவிழந்த இதயம் ஆரோக்கியமடையும்.

பேரிக்காய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய வலிமையை அதிகரித்தும் இதயத்தின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
 48 நாட்கள் வெந்நீரில் தேன் மற்றும் துளசி இலை சாற்றை கலந்து குடித்து வந்தால், இதயம் வலிமை பெரும்.

செம்பருத்தி பூவின் இலையை உலர்த்தி காயவைத்து பொடியாக்கி, அதனுடன் மருதம்பட்டை தூள் சேர்த்து, இவை இரண்டையும், சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகி வந்தால் இதயம் வலிமையடையும்.
தூதுவளை காயை மோரில் ஊற வைத்து, பிறகு அதை வறுத்து உட்கொண்டு வந்தால், இதயத்தின் வலுவின்மை நீங்கி, நல்ல ஆரோக்கியம் அடையும்.




ஞாயிறு, 12 ஜூன், 2016

முளைக்கொட்டு உற்சவம்!

TN 110805111100000000meenakshi.jpg


ஆடி பிறந்தால் அழைத்து வரும் என வழக்குச் சொல் அல்லது சொலவடை உண்டு. ஆடிமாதம் பிறந்ததுமே ஒவ்வொரு பண்டிகையாக அது அழைத்துவரும் என்பதையே அவ்வாறு கூறுகின்றனர். ஆடி மாதம் முதல் மூன்று தினங்கள் நதிகள் அனைத்துக்குமே மாதவிலக்கு ஏற்படும் எனவும் அந்த முதல் மூன்று நாட்கள் நதிகளில் குளிக்கக் கூடாது எனவும் சொல்வார்கள். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மலைகளில் விழும் மழை நீர் வெள்ளப் பெருக்காகப் புது வெள்ளம் வரும் அல்லவா? அந்தப்புது வெள்ளத்தில் குளிக்க வேண்டாம் என்பதற்காகவும் இருக்கலாம். அடுத்து வரும் தினங்களில் ஆடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகையில் எல்லாக் கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம்

Indexஅbangles.jpg

நடை பெறும். சில கோயில்களில் ஆடிப்பூர நக்ஷத்திரத்தன்று நடத்துவார்கள். சில கோயில்களில் ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும். சிலர் சாகம்பரியாக அன்னையைக் காய், கனிகளால் அலங்கரிப்பார்கள். சிலர் முளைப்பாரி என்னும் முளைக்கொட்டால் அம்மனை வழிபடுவார்கள். மதுரையின் முளைக்கொட்டு உற்சவம் குறித்து இப்போது பார்ப்போம்..


மதுரை மீனாக்ஷி கோவிலில் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அங்கே ஒவ்வொரு மாதமும் அன்னைக்கு விழாதான். என்றாலும் இப்போது நாம் பார்க்கப்போவது முளைப்பாரி உற்சவம் பற்றி மட்டுமே. மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றுவார்கள் இந்த உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் படுகிறது. அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம். மதுரை எப்போதுமே ஒரு பெரிய கிராமம் என்றே பெயர் பெற்றது. ஆகையால் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு அவளுக்கு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.

IndexmuLaipari.jpg

ஆனால் இதற்கான ஏற்பாடுகள் கிராமங்களில் எல்லாம் பங்குனி, சித்திரை மாதங்களிலேயே ஆரம்பிப்பார்கள். சிலர் நோன்பும் இருப்பது உண்டு. முளைப்பாரி அல்லது முளைக்கொட்டு போடுவதற்கு வயதுக்கு வந்த, வராத சிறுபெண்களில் இருந்து குழந்தைப்பேறு இழக்கும் தகுதியை அடைவதற்கு முன்னர் உள்ள பெண்கள் வரை போடலாம் என்று சிலர் கூற்று. ஆனால் பொதுவாக எல்லாப் பெண்களுமே முளைப்பாரி போட்டு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதற்கென விரதம் இருப்பதால் சுத்தம், ஆசாரம் கடைப்பிடிக்கப்படும்.

முளைப்பாரியைச் சில கிராமங்களில் அனைத்து வீட்டினருக்கும் பொதுவாகவும் போடுவார்கள். அப்போது பிள்ளையார் கோயில், பஜனை மடம் போன்ற பொது இடங்களில் எல்லாப் பெண்களும் கூடி முளைப்பாரி போடுவதுண்டு. ஆனால் நகரங்களில் அவரவர் வீடுகளில் போட்டு ஆடிப் பெருக்கன்றோ அல்லது முளைப்பாரி உற்சவம் முடிவு நாளன்றோ ஆற்றில் விட்டுக் கரைப்பார்கள். மதுரையில் நாங்கள் வீட்டிலேயே முளைப்பாரி போடுவோம். முளைப்பாரி போடும் நாளன்று விடிகாலையிலிருந்தே சிறு பெண்கள், சிறுமிகள் போன்றோர் சிறு பானையை எடுத்துக்கொண்டு பல வீடுகளிலும் முளைப்பாரிக்கான தானியங்களைச் சேகரிப்பதும் உண்டு. இன்று பெரும்பான்மையாக அம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்கவே முடிவதில்லை.

Imagesopoojaimualaipari.jpg

முளைப்பாரி போடும் விதம்:

இதற்கெனத் தனி மண் குடம், அல்லது பானை இருத்தல் நல்லது. பானை அல்லது குடத்தின் அடிப்பகுதியைக் கவனமாக உடைத்து எடுத்துவிட்டு அடியில் கம்பால் சதுரமாய்க் கட்டி அல்லது ஓலைப் பாயைப் போட்டுவிட்டு, வாய்ப்பகுதி தரையில் இருக்குமாறு வைப்பார்கள். இப்போதெல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் எவர்சில்வர் குடங்கள், பானைகளில் போடுவதாய்க் கேள்விப் படுகிறோம். ஆனால் நான் இன்னமும் நேரில் பார்க்கவில்லை. முதலில் பானையில் கரம்பை எனப்படும் மண்ணை நிரப்புவார்கள். அதன் மேல் இயற்கை உரங்களான சாணி, சாம்பல், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றைப் போடுவார்கள். இல்லாதவர்கள் ஆர்கானிக் உரம் எனக் கிடைப்பதைப் போடலாம். இதன் பின்னர் விதைகளைத் தூவ வேண்டும்.

பொதுவாகப் பச்சைப்பயிறே பெரும்பாலானவர்கள் முளைப்பாரிக்கு விடுவார்கள். என்றாலும் தட்டைப் பயிறு, சிறு பயிறு, சோளம்,கம்பு போன்றவையும் சில கிராமங்களில் போடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். ஊரின் செழிப்பைப் பொறுத்தும் சில கிராமங்களில் முளைக்கொட்டு அமையும். அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. படரும் கொடிகளின் விதைகளை எப்போதுமே போட்டுப் பார்த்ததில்லை. விதைகளைப் போட்டதும் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவ வேண்டும். இதை முளைக்கொட்டு அல்லது முளைப்பாரி என்பார்கள்.


முளைப்பாரி அல்லது முளைக்கொட்டுப் பானைக்குக் காலை, மாலை இருவேளையும் வீட்டுப் பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். அந்நிய மனிதர்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் வர முடியும். இப்போல்லாம் தெரியாது. தினமும் பாடல், ஆடல், கோலாட்டம், கும்மி என முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுப் பெண்கள் கூடிப் பாடி ஆடுவார்கள். இதிலே போட்டியும் நடக்கும். யார் வீட்டு முளைக்கொட்டு நல்ல உயரமாக வளர்கிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். சிலர் முளைப்பாரி உயரமாக வந்தால் நினைத்தது நடக்கும் என வேண்டிக்கொள்வதும் உண்டு. ஆனாலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால் தான் அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பது பொதுவானதொரு நம்பிக்கை. ஊர் செழித்தால் தான் நாம் செழிப்பாக இருப்போம் என்பதால் பொதுவானதொரு இடத்தில் முளைப்பாரி போட்டுக் கடைசி நாளன்று ஊர் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை எடுத்துச் சென்றுப் பொதுக்கிணற்றிலோ, அல்லது ஆற்றிலோ கரைப்பதும் உண்டு.
 

முன்பெல்லாம் முளைப்பாரி ஊர்வலம் மிகப் பெரியதாக இருக்கும். கூச்சமில்லாமல் பெண்கள் தங்கள் தலையில் முளைப்பாரியைத் தூக்கி வருவார்கள். இப்போதெல்லாம் பார்க்க முடிகிறதில்லை. இந்த உற்சவம் மதுரையில் ஆரம்பிக்கையில் அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றுவார்கள். ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப் படும். பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் முடியும்.


தீபம் ஏற்றுவோம்!



கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, திருக் கார்த்திகை - தீபத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.



கார்த்திகை மாதம் என்பது - நவம்பர் - டிசம்பர் மாதத்தில் வரும். காலண்டரைப் பார்த்து, கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்தே, தினமும் மாலையில் விளக்கேற்றியதும், ஒன்று அல்லது இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி, வாசல் நிலைப்படியில் ஒரு பக்கமாக அல்லது இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். 

சிலர் மாதப் பிறப்புக்கு முதல் நாளிலிருந்தே வாசலில் ஒரு விளக்கு தினமும் ஏற்றி வைப்பார்கள்.

கார்த்திகைப் பண்டிகைக்கு முதல் நாள் பரணி தீபம் என்று கொண்டாட வேண்டும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பரணி தீபம் அன்று, தினமும் வாசலில் வைக்கும் தீபங்களுடன் கூடுதலாக சில தீபங்கள் ஏற்றி, வாசலில் கோலம் போட்டு, அதன் மேல் அழகாக வைக்கலாம்.

பரணி தீபத்தை மோட்ச தீபம் என்றும் சொல்வார்கள். சில வீடுகளில், வீட்டில் இருக்கும் வயதானவர்கள், தினம் ஒரு திரி என்ற கணக்கில், 365 திரிகள் திரித்து வைத்து, அதை ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, 365 திரிகளைப் போட்டு ஏற்றி வைப்பார்கள்.

கார்த்திகை தீபத்தன்று, காலையில் சீக்கிரம் எழுந்து, வீட்டில் இருக்கும் பெரிய விளக்குகள், அகல் விளக்குகள் எல்லாவற்றையும் கழுவி, காய வைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

பெரிய விளக்கு - 4 அல்லது 5 முகம் கொண்ட விளக்குகளில் - எல்லாப் பக்கமும் திரிகள் போட வேண்டும்.

எல்லா விளக்குகளுக்குமே - இரண்டு திரிகள் போட வேண்டும்.

பூஜை அறையில் - சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். 

பூஜை அறையின் கதவில் அல்லது வீட்டு வாசல் கதவில் - கரைத்த பச்சரிசி மாவில் கையை நனைத்து, அச்சுப் பதிப்பது உண்டு.

அதே போல, பூஜை அறையிலும் - அலமாரியின் முன்னால், பாதங்கள் வரைவது உண்டு.

மஹாபலி அரசர் கார்த்திகை அன்று, வீட்டுக்கு வருவதாக, பெரியவர்கள் சொல்வார்கள். அதன் அடையாளமாக இப்படி கோலமிடுவது வழக்கம்.





பூஜைக்கான பொருட்கள் - சந்தனம், குங்குமம், விபூதி, பூ, தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சூடன், சாம்பிராணி, தசாங்கம், எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

பூஜைக்கான நைவேத்தியங்கள்:

பொரி உருண்டை, அப்பம், மாவிளக்கு, பச்சரிசி மாவு விளக்கும் அடையும் மற்றும் கொழுக்கட்டையும்.

அப்பம் செய்முறை:
கோதுமை மாவு, வெல்லம் கரைத்து, பணியார சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.

பச்சரிசி மாவு கொழுக்கட்டை:
மேலே உள்ள குறிப்பில் சொல்லியிருப்பது போல, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும். சின்ன சின்னதாக, விரல் நீளத்தில் கொழுக்கட்டைகள் செய்து கொள்ளவும்.

எலுமிச்சம்பழ அளவில் 30 உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும்.

12 உருண்டைகளை, தட்டு போல செய்து கொள்ளவும்.

இன்னும் 12 உருண்டைகள் எடுத்து,  அகல் விளக்கு போல(சிறிது குழியாக - 2 அல்லது 1 ஸ்பூன் நெய் கொள்ளும் அளவுக்கு) செய்து கொள்ளவும்.

கொழுக்கட்டைகள், தட்டு(அடை), விளக்குகள் இவற்றை - கொஞ்சம் கொஞ்சமாக, இட்லித் தட்டில் வைத்து, வேக வைத்து, எடுத்து வைக்கவும்.

12 விளக்குகள் செய்ய 24 உருண்டைகள் போதும். இருந்தாலும், வேக வைத்து எடுக்கும்போது, சில விளக்குகள் சரியாக வரவில்லையென்றால், கூடுதலாகத் தேவைப்படும். அதற்காகத்தான் 30 உருண்டைகள் செய்து கொள்ளவும்.

மேலே சொன்ன அளவுக்கு செய்ய அரை கிலோ பச்சரிசி மாவு தேவைப்படும்.

ஒரு தாம்பாளத்தில் வெந்த கொழுக்கட்டைகளை பரப்பி, அதன் மேல் கொழுக்கட்டை அடைகளையும் விளக்குகளையும் அழகாக வைக்கவும். சிறிது குங்குமம் வைக்கவும்.

எல்லா விளக்குகளிலும் உருக்கிய நெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும்.

பூஜையின் போது, இந்த விளக்குகளையும் ஏற்றவும்.



கார்த்திகை அன்று,

ஒரு வாழை இலையில், ஒரு வெற்றிலையின் மேல் - மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, சந்தனம், குங்குமம், பூ, வைக்கவும்.

நைவேத்தியப் பொருட்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் இவற்றையும் வைக்கவும்.

சிறிய தீபங்களை தாம்பாளங்களில் தயாராக வைக்கவும்.


எல்லா விளக்குகளையும் பொறுமையாக ஏற்றவும். மாலை ஐந்து அல்லது ஐந்தரைக்கு ஏற்ற ஆரம்பித்தால், சரியாக இருக்கும்.

மாவிளக்குகளையும் ஏற்றவும்.

தேங்காய் உடைத்து, தூபம், தீபம், காட்டி, நைவேத்தியம் செய்யவும்.

வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு வைக்கவும்.

எல்லா ஹால்களிலும் அங்கங்கே கோலங்கள் போட்டு, அவற்றில் விளக்குகள் வைக்கவும்.


வாசலிலும் போட்டு வைத்திருக்கும் கோலங்களின் மேல், விளக்குகளை வைக்கவும்.

மறு நாள் - மிச்ச கார்த்திகை என்று சொல்வார்கள்.  சில விளக்குகளை மட்டும் வாசலில் ஏற்றி வைக்கலாம்.

மேலே சொன்ன எல்லா நைவேத்தியங்களும் செய்ய முடியா விட்டால், சிலவற்றை மட்டும் செய்து கொள்ளலாம்.

தேங்காய் உடைப்பது இயலவில்லையென்றால், வெற்றிலை, பாக்கு, பழம் இவற்றைப் படைத்து, வணங்கலாம்.

தீபம் ஏற்றுவோம்! தீப ஒளியை வணங்குவோம்!! சிறப்பும் செல்வமும் பெறுவோம்!!!


அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பயன்களும்!


 
ஸ்ரீ வினாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியின் போதும், சிவலிங்கத்துக்கு பிரதோஷத்தின் போதும், பௌர்ணமியின் போது, மற்றும் வழிபடும் விசேஷ தினங்களில் - தெய்வங்களுக்கு கீழ்க் காணும் பொருட்களை அபிஷேகம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள்:
 
மஞ்சள் பொடி           =இராஜ வசியம் தரும்
நல்ல தண்ணீர்     = ஒழுக்கத்தைத் தரும், சாந்தி உண்டாகும்
நல்லெண்ணெய், தேன், வாசனைத் தைலம்,
பச்சைக் கற்பூரம் =     விஷ ஜுர நிவர்த்தி, சுகத்தைக் கொடுக்கும்
பச்சரிசி மாவு      = கடனைப் போக்கும்



எலுமிச்சம்பழம் = உலகம் வசமாகும் நிலை
தரும், பகைமையை அழிக்கும்
விபூதி  =சகல சௌபாக்கியமும் தரும், மோட்சம் தரும்
சந்தனம்  =கீர்த்தியைக் கொடுக்கும், சுகம் பெறுதல்,இறைவனோடு இரண்டறக் கலக்க செய்யும்
பன்னீர் = சருமத்தைக் காக்கும், திருமகள் அருள் கிடைக்கும்
கும்பம்(ஸ்தபனம்), பழ பஞ்சாமிர்தம் = அஷ்டலட்சுமி சம்பத்தைத் தரும்,சாந்தி தரும்
சங்காபிஷேகம்  =சர்வ புண்ணியத்தையும் தரும்
வஸ்திரம், சொர்ணாம்பிஷேகம்   = லாபம் தரும்
சிவனுக்கு தேங்காய்ப் பூ அபிஷேகம் செய்தால், அரசுப் பதவி கிடைக்கும்







நெல்லிப்பருப்பு பொடி, புஷ்பங்கள் = சோகம் போக்கும்
திருமஞ்சனப் பொடி = வியாதியைப் போக்கும்
பஞ்ச கவ்யம் = பாவங்களைப் போக்கும், மனப் பரிசுத்தமாகும்
பால்              = நீண்ட ஆயுளைத் தரும்
தயிர், மாம்பழம்   = புத்திர பலனைக் கொடுக்கும்
நெய்   = மோட்சத்தைக் கொடுக்கும்
சர்க்கரை    =       சத்ருவை ஜெயிக்கும்
பஞ்சாமிருதம், திராட்சை    = (புஷ்டி)பலத்தைத் தரும்
கரும்புச் சாறு     = ஆரோக்கியம் தரும்
பழச்சாறு, நாரத்தை    = எம பயம் அகற்றும்
இளநீர்     = உயர்ந்த பதவி தரும்(போக பாக்கியம்)
அன்னாபிஷேகம்    = விருப்பம் நிறைவேறும்
அரிசி     = சாம்ராஜ்யத்தைத் தரும்
வாழைப்பழம்      = பயிர் விருத்தியாகும்
மாதுளம்பழம்      = கோபத்தைப் போக்கும்
பலாப்பழம்        = மங்களத்தைத் தரும்
சாத்துக்குடி        = துக்கத்தைப் போக்கும்