ஞாயிறு, 12 ஜூன், 2016

குல தெய்வ வழிபாடு!




எந்த ஒரு ஹோமம், பூஜையிலும் சங்கல்பம் செய்யும்போது,

பிள்ளையாரை வணங்கிய பின்,

ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று சொல்லச் சொல்வதை கவனித்திருப்பீர்கள்.

வீட்டில் ஏதேனும் மனக் குறையிருந்தால், பெரியவங்க  கேப்பாங்க - குலதெய்வ வழிபாடெல்லாம் சரியாகச் செய்கிறீர்களா என்று. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குல தெய்வ வழிபாடு.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின்,

ஓம் கணேசாய நமஹ!
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ!
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ!

என்று ஒரு முறை அல்லது மூன்று முறை சொல்லுங்க. இதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும்.

இஷ்ட தேவதை என்பது - நம்மில் பலருக்கும் சிறு வயதில் போன கோவில் அல்லது முருகன், பிள்ளையார், மீனாட்சி அம்மன் என்று ஒரு தெய்வ வடிவம் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தத் தெய்வத்தை இஷ்ட தெய்வமாக நினைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட தேவதை என்பது - நம் வாழ்வில் நடந்த இனிய சம்பவங்கள் - இந்த சாமியை தரிசனம் செய்த பின் நடந்தது, இந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டதும் எல்லாம் நல்லாவே நடக்குது என்று ஒரு நம்பிக்கை இருக்கலாம். அந்தத் தெய்வத்தை அதிர்ஷ்ட தேவதையாக நினைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் பூஜையறையில் ஒரு உண்டியல்/டப்பா வைத்துக் கொள்ளுங்கள். இதில் குல தெய்வத்துக்கான காணிக்கையை போட்டு வைக்கலாம். எவ்வளவு என்பது அவரவர் விருப்பம்.

மாதம் ஒரு முறை ஒரு சிறிய தொகை போடலாம்.

வெளியூர்ப் பயணம் கிளம்பும்போது காணிக்கை போடலாம்.

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லையென்றால்/ஏதாவது செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனால், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, உண்டியலில் காசு சேர்க்கலாம்.

மனதில் நினைத்த நல்ல காரியம் நல்லபடி நடந்ததும், ஆண்டவனுக்கு நன்றி சொல்லி, காசு போட்டு வைக்கலாம்.

இப்படி உண்டியலில் சேர்ந்த தொகையை, வருடம் ஒரு முறை குல தெய்வக் கோவிலுக்குப் போகும்போது, அங்கு உள்ள உண்டியலில் சேர்க்கலாம். அல்லது அந்தத் தொகையைக் கொண்டு, அபிஷேகப் பொருட்கள், மாலை, பூ, வஸ்திரங்கள்(தெய்வத்துக்கான ஆடைகள்) எல்லாம் வாங்கலாம்.

வருடம் ஒரு முறை - எப்போது?

நம் வீட்டில் மாசி மாதத்தில்(ஃபிப்ரவரி - மார்ச்) வரும் சிவராத்திரியன்று கோவிலில் பூஜைகள் நடக்கும். அப்போது போகலாம்.

குழந்தைகளுக்கு முதல் மொட்டை - குலதெய்வக் கோவிலில் போட்டு விட்டு, அதற்குப் பிறகு, மற்ற கோவில்களில் நம் பிரார்த்தனைபடி செலுத்தலாம்.

விரும்பினால் காது குத்தும் வைபவத்தையும், கோவிலிலேயே செய்யலாம்.

கோவிலுக்கு பூஜைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்:

அபிஷேகப் பொருட்கள்:

மஞ்சள் பொடி
நல்லெண்ணெய்
நெய்
சந்தனாதித் தைலம்
பன்னீர்
ஆண்டாள் ஸ்னானப் பவுடர்
பச்சரிசி மாவு
சந்தனம்
விபூதி
இளநீர்
தேன்
பால்
பச்சைக் கற்பூரம்

கோவிலில் பொங்கல் வைப்பதாக இருந்தால்:

பச்சரிசி, மண்டை வெல்லம், கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு, நெய், பாசிப்பருப்பு, பொங்கல் பானை, கரண்டி, தட்டுக்கள், தீப்பெட்டி.

பூஜைப் பொருட்கள்:

ஊதுபத்தி
சூடன்
சாம்பிராணி
தசாங்கம்
சந்தனம்
நல்லெண்ணெய்
வெற்றிலை
பாக்கு
பழங்கள்
கல்கண்டு
தாம்பாளங்கள்

இவற்றுடன், புதிய அகல் விளக்குகள் 12 அல்லது 15  வாங்கிக் கொள்ளவும். (வாங்கியதும் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இவற்றைப் போட்டு வைக்கவும்.  பிறகு காய வைத்து, எடுத்துக் கொள்ளவும். விளக்கேற்றும்போது நெய்/எண்ணெயை, உறிஞ்சாமல் இருக்கும்)

பஞ்சுத்திரி இரண்டு கட்டு, விளக்கேற்ற நெய் அல்லது நல்லெண்ணெய் தனியாக வைத்துக் கொள்ளவும்.

கோவிலில் இந்த விளக்குகளை ஏற்றி வைக்கவும். முதலில் பிள்ளையாருக்கும், பிறகு மற்ற தெய்வஙகளுக்கும் விளக்கு  ஏற்றவும்.


சுவாமிக்கு உடைக்கத் தேங்காய்கள்

மாலை/பூக்கள்



வஸ்திரங்கள்:

குடும்பங்களில் நடக்கும் திருமணங்கள், புதுமனை புகு விழாக்கள் போன்ற விசேஷங்களுக்கு, முதல் பத்திரிக்கையை குல தெய்வத்துக்கு வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவற்றுடன் பத்திரிக்கையை வைக்க வேண்டும்.

மேலே சொன்ன பூஜை முறைகளை (அபிஷேகம், பொங்கல் வைப்பது, அர்ச்சனை செய்வது, வஸ்திரங்கள் சார்த்துவது) வருடம் ஒரு முறையோ அல்லது முடிந்த போதோ செய்யலாம்.

நேரடியாக வந்து செய்ய முடியவில்லையென்றால், காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.


பொங்கல் செய்முறை!




பொங்கல் செய்முறை:

அடுப்பை சுத்தம் செய்து, குக்கரில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைப் பொங்கல்:
தேவையான பொருட்கள்:

பச்சரிசி                      1.5 கப்
பாசிப்பருப்பு             1/2 கப் (அரிசியில் நான்கில் ஒரு பங்கு)
மண்டை வெல்லம் அல்லது அச்சு வெல்லம்   4.5 கப்(அரிசியைப் போல 2 பங்கு)
நெய்                             அரை கப் அல்லது முக்கால் கப்
முந்திரிப்பருப்பு      12
கிஸ்மிஸ் பழம்(ரெய்சின்)   1 ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி               1/4 டீஸ்பூன்

செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும்.
அரிசியைக் களைந்து, பாசிப்பருப்பை அத்துடன் சேர்த்து, நாலரை கப் அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில் 5 அல்லது 6 விசில் வர விடவும்.

(3 மடங்கு தண்ணீர் வைக்கவும். கூடுதலாக இரண்டு விசில் வர விடவும்.) குழைவாக வேக வேண்டும்.

வெல்லத்தை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, கல் மண் இல்லாமல் வடிகட்டி, வைக்கவும்.

குக்கர் ஆறியதும், திறந்து, வெந்த அரிசி பருப்பை, நன்றாக மசிக்கவும்.

வடிகட்டிய வெல்லத்தை, இதில் மெதுவாக ஊற்றி, கட்டிகளில்லாமல் கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, வெல்ல வாசனை போக, கொதிக்க விடவும்.

அடி பிடிக்காமல் இருக்க - நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி, பொங்கலை கிளறலாம்.

பொங்கல் பதமாக, கெட்டியானதும், நெய்யை ஊற்றவும்.

முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களை - நெய்யில் வறுத்து, சேர்க்கவும்.

ஏலக்காய்ப் பொடியை கடைசியில் சேர்த்து, கிளறி விடவும்.
சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்!!!

வெண் பொங்கல்: 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி                      1.5 கப்
பாசிப்பருப்பு             1/2 கப் (அரிசியில் நான்கில் ஒரு பங்கு)
நெய்                             அரை கப் அல்லது முக்கால் கப்

ரீஃபைண்ட் ஆயில்        1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு      12

மிளகுப் பொடி அல்லது முழு மிளகு  - 1 அல்லது 1.5 டீஸ்பூன்

சீரகம்                                                               1 அல்லது 1.5 டீஸ்பூன்

உப்பு(டேபிள் சால்ட்)                                முக்கால் டீஸ்பூன்

இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது இஞ்சி விழுது   1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி                                             1/4 டீஸ்பூன்(விருப்பப் பட்டால்)

கருவேப்பிலை                                           தாளிக்க

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும்.

பச்சரிசியைக் களைந்து, அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 3 அல்லது 3.5 பங்கு தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4 அல்லது 5 விசில் வர விடவும்.

குக்கர் ஆறியதும் திறக்கவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் முந்திரிப்பருப்பை போட்டு, பொன்னிறமாக வறுத்து, பொங்கலில் போடவும்.

ரீஃபைண்ட் ஆயிலும் 1 டேபிள் ஸ்பூன் நெய்யும் கலந்து, வாணலியில் ஊற்றி, சூடு வந்ததும், மிளகு/மிளகுப் பொடி, மற்றும் சீரகத்தை அதில் போட்டு, பொரிய விடவும்.

கருகாமல் எடுத்து, உடனே பொங்கலில் சேர்க்கவும்.

இஞ்சி விழுது, மஞ்சள் பொடி, கருவேப்பிலையையும் பொரித்து, பொங்கலில் போடவும்.

உப்பும் சேர்த்து, நன்றாகக் கிளறவும். மீதமுள்ள நெய்யை மேலே ஊற்றி, கரண்டியால் சமப்படுத்தவும்.

சுவையான வெண் பொங்கல் தயார்.

மஹா நைவேத்தியம்:

2 கப் பச்சரிசியைக் களைந்து, மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.


ஹோட்டல் சாம்பார்



ஹோட்டல் சாம்பார் இட்லிக்கு/வெண்பொங்கலுக்கு:

தேவையான பொருட்கள்:

புளி                       2 எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு     முக்கால் கப்
பாசிபருப்பு         2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி   இரண்டரை டீஸ்பூன்
மல்லிப் பொடி   1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்
உப்பு   சுவைக்கேற்ப

கருவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லி சிறிதளவு

நறுக்கி வைக்க வேண்டியவை:
பெரிய வெங்காயம்      1
பச்சை மிளகாய்         3
தக்காளி             2
கத்தரிக்காய்    2
முருங்கைக்காய் 1
காரட்      2
அரைக்க:
தேங்காய்ப்பூ   கால் கப்
பொரிகடலை    1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு   1 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி  1

தாளிக்க:

எண்ணெய்      1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு    1 டீஸ்பூன்
வெந்தயம்   கால் டீஸ்பூன்
பெருங்காயப் பொடி  அரை டீஸ்பூன்
கிள்ளிய சிவப்பு மிளகாய்  2

செய்முறை:

புளியை நன்றாக ஊற வைத்து, கரைத்து வைக்கவும்.
குக்கரில் துவரம்பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி சேர்த்து, குழைவாக வேக வைத்து, மசித்து, கரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பெரிய் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சாம்பாரில் போடுவதற்கு, கத்தரிக்காய்/ முருங்கைக்காய் இவை இருந்தால், குழையாமல் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
காரட்/முள்ளங்கி போன்ற காய்களாக இருந்தால், வில்லைகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து, குக்கரில் வேக வைத்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு, வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியும் சேர்த்து, குழைய வதக்கவும்.
இதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்க்கவும்.
உப்பும் சேர்க்கவும்.
புளி பச்சை வாசனை போக, கொதித்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து, ஒரு கொதி வ்ர விடவும்.

இதற்கிடையில், மிக்ஸியில் தேங்காய்ப்பூ, பொரிகடலை, கடலை மாவு, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, இவற்றை சேர்த்து, நன்றாக மசிய அரைத்து வைக்கவும்.
தக்காளியையும் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
கொதித்த புளித்தண்ணீர் மற்றும் பருப்புக் கலவையில், அரைத்த தக்காளி மற்றும் தேங்காய்ப்பூ கலவையை கரைத்து ஊற்றவும்.

கடலை மாவு/பொரிகடலை சேர்த்து அரைத்திருப்பதால், கிளறிக் கொண்டே ஊற்றவும். இல்லையென்றால், கட்டிகளாகி விடும்.

அடி பிடிக்காத பாத்திரத்தில், இந்த சாம்பாரை கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட வேண்டும்.
நுரை அடங்கக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

தனியாக காய்கள் வேக வைத்திருந்தால், அவற்றையும் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம், பெருங்காயப் பவுடர், கிள்ளிய சிவப்பு மிளகாய் இவற்றைப் போட்டு, தாளிக்கவும். 
கருவேப்பிலை சேர்க்கவும்.
இதை சாம்பாரில் கலக்கவும்.
கழுவி, சுத்தம் செய்த, பொடியாக நறுக்கிய மல்லித் தழையை, மேலே தூவி, கலக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.
இட்லி, தோசை, வெண் பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.


நவராத்திரி கொலு வைப்போம்!



வீட்டில் வழக்கமாக கொலு வைப்பவர்கள் கலசம் வைப்பார்கள்.

எப்பொழுதும் போல, பிள்ளையார், குல தெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வங்களை மனதினுள் வணங்கி விட்டு, ஒரு வெள்ளிச் செம்பு அல்லது தாமிரச்(செப்பு) செம்பை எடுத்து, நன்றாகக் கழுவி விட்டு, சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

அதனுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். அதனுள் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைத் திரவியங்களையும், மற்றும் காசு இவற்றைப் போட வேண்டும். தங்க நாணயம், வெள்ளி நாணயம், செப்பு நாணயம் இருந்தால் இவற்றையும் போடலாம்.

கலசத்தின் மேல் மாவிலை அல்லது வெற்றிலையை சுற்றி வர வைத்து, அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

இந்தக் கலசத்தை, கொலு அம்மனாக பாவித்து, பூஜை அறையிலிருந்து எடுத்து வந்து, கொலுப் படியில் வைக்க வேண்டும்.

கலசத்தின் மேல் தினமும் பூக்கள் வைக்க வேண்டும்.



பூஜையாக செய்ய வேண்டும் என்றில்லாமல், குழந்தைகளின் ஆசைக்காக கொலு வைப்பவர்கள், கலசம் வைக்க வேண்டும் என்பதில்லை.

புரட்டாசி மாத அமாவாசையன்று,  கொலு வைப்பதற்கான வேலைகளைத் தொடங்கலாம். (கொலு மறு நாள்தான் ஆரம்பிக்கும்)

மரப்பாச்சி பொம்மைகள் இருந்தால், அவற்றை ஜோடியாக அமாவாசையன்று கொலுப்படியில் வைத்து விடலாம்.




கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் வைக்கலாம்.

ஹாலில் கிழக்கு மேற்காக இருக்குமாறு படிகளை அமைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ரெடிமேட் ஆக, படிகள் கிடைக்கின்றன.

நம் வீட்டு ஹாலின் அளவுக்குத் தகுந்த மாதிரி, இவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கொலுவின் முன்னால், விளக்கேற்ற, வருபவர்கள் உட்கார, கொலுவைப் பார்க்க, இதற்குத் தகுந்தாற்போல, இடத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்,





படிகளை அமைத்த பின், சுத்தமான வெள்ளைத் துணியை, படிகளின் மேல் விரிக்க வேண்டும்.

மேல் படிகளில், முதலில் நடுவில் பிள்ளையார் பொம்மையை வைத்து, மற்ற தெய்வ உருவங்களை வைக்க வேண்டும்.

அடுத்த படியாக மீனாட்சி கல்யாணம், தசாவதாரம், போன்ற செட் பொம்மைகளை வைக்கலாம்.

அதற்கு அடுத்தபடியாக, மனிதராகப் பிறந்து, மகான்களாக ஆனவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.(விவேகானந்தர், சாரதா தேவி, ஷீரடி சாயிபாபா, பரம ஹம்ஸர்)

பிறகு, மற்ற பொம்மைகள் - கிரிக்கெட் வீரர்கள், குறவன் குறத்தி, செட்டியார் பொம்மைகள் இப்படி வைக்கலாம்.

பிறகு மிருக பொம்மைகள் - சிங்கம், புலி, குரங்கு பொம்மைகள் போன்றவை.

அடுத்த படியில் பறவை பொம்மைகள்.

கீழ்ப் படிகளில் ஊர்வனவற்றின் பொம்மைகள் மற்றும் அனைத்து பொம்மைகள் வைக்கலாம்.

கலசம் வைப்பதாக இருந்தால், கீழே இருந்து முதல் படியிலோ அல்லது மூன்றாவது படியிலோ(கைக்கு எட்டும் தூரத்தில்) கலசத்தை வைக்கலாம். தினமும் பூ வைக்க வேண்டும். பூப் போட்டு, பூஜை செய்ய வேண்டும் அல்லவா.

கலசம் வைக்கவில்லை என்றாலும், கொலு என்பது அம்மன் வடிவம்தான். அதனால் தினமும் மாலையில் விளக்கேற்றி, சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் தினமும் செய்ய வேண்டும்.

தினமும் கொலுவின் முன்னால், தெரிந்த கோலங்களைப் போடவும். முடிந்தால் ரங்கோலி போடலாம்.

கொலுவின் இரண்டு பக்கமும் கீழே விளக்கேற்றி வைக்கலாம். பாதுகாப்பு குறைவு, குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பூஜையறையில் மட்டும் ஏற்றினாலும் போதும். நைவேத்தியத்தையும் பூஜையறையில் விளக்கேற்றி, நைவேத்தியம் செய்து, கொலுவுக்கு முன்னால், கொண்டு வந்து வைக்கலாம்.



அமாவாசைக்கு அடுத்த நாள் கொலு ஆரம்பம்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு.
அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி வழிபாடு.
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

யு ட்யூபில் துர்க்கா பாடல்கள், மஹாலஷ்மி ஸ்லோகங்கள், சரஸ்வதி ஸ்லோகங்கள் கிடைக்கும். இவற்றை மாலை நேரங்களில் ஒலிக்க விடுங்கள்.

லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி இவற்றைப் படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து, கேட்கலாம்.

ஸ்ரீஸுக்தம், ஸ்ரீ தேவி பாகவதம் இவையும் ஒலி வடிவில் யு டியூபில் கிடைக்கின்றன. இவற்றையும் மாலை வேளைகளில் ஒலிக்கச் செய்யுங்கள்.

வீட்டுப் பெண்கள் தினமும் சுத்தமான, உடைகளை உடுத்தி, மலர் சூடி, மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இன்னும் சில குறிப்புகளை கீழே தருகிறேன். இவற்றில் எதெல்லாம் செய்ய முடிகிறதோ, அவற்றை செய்யலாம்.

ஒன்பது நாட்களும் -  முதல் நாள் - இரண்டு வயது குழந்தை தொடங்கி, பத்து வயது சிறுமி வரை வீட்டுக்கு அழைத்து, ‘குமாரி பூஜை’ செய்யலாம்.

’குமாரி பூஜை’ என்பது, குறிப்பிட்ட வயதுக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து,(அல்லது நம் வீட்டுக் குழந்தைக்கும் செய்யலாம்) , ஒரு கோலமிட்ட பலகையில் கிழக்குப் பார்த்து, உட்கார வைக்க வேண்டும்.

சந்தனம், குங்குமம், பூ கொடுக்க வேண்டும்.

சுண்டல், இனிப்பு, ஏதேனும் பரிசு, தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூவுடன் கொடுக்க வேண்டும்.

முடிந்தால், பொருத்தமான உடைகள் கூடக் கொடுக்கலாம்.

குமாரி பூஜை:

இந்த குமாரி பூஜையின் பலனை ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாதாம், அந்த அளவுக்கு நற்பலன்கள் கிடைக்குமாம்.

நாள்     சிறுமியின் வயது     தேவதா பெயர்     பூஜா பலன்

1                       2                        குமாரிகா                    தரித்திர நாசம்
2                       3                        திரிமூர்த்தி                தன தான்ய வளம்
3                       4                        கல்யாணி                  பகை ஒழிதல்
4                       5                        ரோகிணி                    கல்வி வளர்ச்சி
5                       6                        காளிகா                       துன்பம் நீங்குதல்
6                       7                        சண்டிகா                     செல்வ வளர்ச்சி
7                       8                        ஸாம்பவி                  ஷேம விருத்தி
8                       9                        துர்க்கா                        பயம் நீங்குதல்
9                     10                        ஸுபத்ரா                    ஸர்வ மங்களம் உண்டாதல்

பரிசுப் பொருட்களுக்கான யோசனைகள்:

ரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, மருதாணி கோன், ஹேர் பாண்ட், கிளிப்கள், சிறிய பூஜை புத்தகங்கள், சிறிய கண்ணாடி, சீப்பு, கண் மை, ஐப்ரோ பென்சில், ஐ லைனர், சிறிய லேடீஸ் கர்சீப்கள், பேனா, பென்சில்கள், ஸ்டேஷனரி பொருட்கள்,  குளிக்கும் சோப்கள், லிக்விட் சோப்கள், சென்ட் பாட்டில்கள்,  பார்பி பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை.


தினமும் இரவு படுக்கப் போகு முன், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்த ஆரத்தி எடுக்க வேண்டும். இதை, கால் படாத இடத்தில்(செடியின் கீழ்) ஊற்றி விட வேண்டும்.

தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியை, கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தியை, வாசலில் கோலத்தில் ஊற்ற வேண்டும்.



ஒன்பது நாட்களும் கொலுவின் முன்னால் கோலங்கள்:

1. அரிசி மா                               பொட்டுக் கோலம்
2. கோதுமை மா                     கட்டம்
3. முத்து                                     மலர் வடிவம்
4. அட்சதை                               படிக்கட்டு
5. கடலை                                  பறவையினம்
6. பருப்பு                                     தேவி நாமம்
7. மலர்                                        திட்டாணி
8. காசு                                          பத்மம்(தாமரை)
9. கற்பூரம்                                  ஆயுதம்

ஒன்பது நாட்களிலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் நீராடுவதற்காக

பச்சிலை,
பூலாங்கிழங்கு
சண்பக மொட்டு
கஸ்தூரி மஞ்சள்
திரவியப் பட்டை
காசுக்கட்டி
லாஷாரசம்
கஸ்தூரிகாபத்ரம்
கோரோசனம்

மற்றும்

எண்ணெய்
மஞ்சள்
குங்குமம்
பன்னீர்
சந்தனம்
வாசனைத் தைலம்
நலங்கு மஞ்சள்
மருதோன்றி
புஷ்ப நீர்

இவற்றில் எதெல்லாம் கொடுக்க முடிகிறதோ, அவற்றைக் கொடுக்கலாம்.

தாம்பூலத்துடன்

வாழை, மாம்பழம், பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீச்சைப் பழம், திராட்சை, நாவற்பழம்
 இவற்றை அனைவருக்கும் கொடுக்கலாம்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை நம் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தி, கையில் சந்தனம், குங்குமம் கொடுத்து, மற்றவர்களை அழைக்கச் சொல்லலாம்.

நவராத்திரியின் போது, தினமும் வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல், தாம்பூலமும் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் தாம்பூலம், பரிசு வழங்க வேண்டும். வித்தியாசம் பார்க்கக் கூடாது.


நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள்

சுண்டல்
வறுவல்
துவையல்
பொறியல்
அப்பளம்
வடகம்
சூரணம்
முறுக்கு
திரட்டுப்பால்

வெண்பொங்கல்
புளியோதரை
சர்க்கரைப் பொங்கல்
கதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)
தயிர் சாதம்
தேங்காய் சாதம்
எலுமிச்சம்பழ சாதம்
பாயசம்
அக்கார அடிசல்


இவற்றை செய்யலாம்

கடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.)

கடைசி நாளன்று சுத்தான்னம்(வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

மேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.

நைவேத்தியத்துக்கான யோசனைகள்:

ஞாயிறு:  கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்

திங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்

செவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்

புதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்

வியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்

சனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்

தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:

ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு

திங்கள்:  லேசான ஹாஃப் ஒயிட் நிறம்

செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு

புதன்: பச்சை

வியாழன்: மஞ்சள், பொன் நிறம்

வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்

சனி:  நீல நிறம்

சரஸ்வதி பூஜை:

கொலு வைத்தாலும் வைக்கா விட்டாலும், மஹா நவமி என்னும் சரஸ்வதி பூஜையை, சிறப்பாக செய்ய வேண்டும்.

முந்தைய பதிவான பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடும் பதிவில் சொல்லியிருப்பதைப் போன்று, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

கறுப்பு கலக்காத புதிய ரவிக்கைத் துணியை, அணிவிக்க வேண்டும்.

புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் போன்றவற்றை அடுக்கி, அதன் மேல், புதிய ரவிக்கைத் துணி(வெள்ளையில் பூப்போட்டதும் போடலாம்) விரித்து, அதன் மேல், வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையார் வைக்கலாம்.

இத்துடன் சிறிய கலசம் வைக்கலாம்.(விருப்பமிருந்தால்)

ஒரு செம்பில் நீர் அல்லது பச்சரிசி நிரப்ப வேண்டும்.

கிராம்பு ஏலக்காய், ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்களை உள்ளே போட வேண்டும்.

தங்கம், வெள்ளி, நாணயங்களும் போடலாம்.

இதன் மேல் வெற்றிலை அல்லது மாவிலையை சுற்றி வர அழகாக அமைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை குடுமியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டுப் பிசைந்து, தேங்காயின் மேல் முகம் மாதிரி வைக்க வேண்டும்.

இரண்டு பூண்டுப் பற்களை, கண்கள் மாதிரி வைக்கலாம்

இரண்டு மிளகு எடுத்து, பூண்டுப் பற்களின் நடுவில் வைக்கலாம்.

இந்தத் தேங்காயை, கலசத்தின் மீது(குடுமி பகுதி மேல் நோக்கி இருக்குமாறு) வைக்க வேண்டும்.

மஞ்சளின் நடுவில் மூக்கு மாதிரி செய்து, மூக்குத்தி போல சிறிய கற்கள் வைக்கலாம்.

விரும்பினால், தங்க செயின்கள் அல்லது முத்து மாலைகள் அணிவித்து, அழகு படுத்தலாம்.

பூக்கள் வைக்க வேண்டும்.

வீட்டுக் கதவுகள், டி.வி. ஃப்ரிட்ஜ், அடுப்பு, கார் எல்லாவற்றுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து, பூ வைக்கலாம்.

இசை வாத்தியங்கள்(வயலின்/வீணை/கிடார் போன்றவை) இவற்றுக்கும் சந்தனம், குங்குமம், பூ வைக்கலாம்.

நைவேத்தியங்கள், பூஜைகள் முந்தைய பதிவில் சொன்னது போல(கொழுக்கட்டை தவிர) வடை, பாயசம், சுண்டல் எல்லாம் செய்து படைக்கலாம். பழங்கள் படைக்கலாம்.

மறு நாள் விஜய தசமியன்று, விளக்கேற்றி, ஏதேனும் நைவேத்தியம் செய்து விட்டு, வீட்டுப் பெரியவர்கள் அல்லது வீட்டுத் தலைவர்/தலைவியைக் கொண்டு, புத்தகங்கள், மஞ்சள் பிள்ளையார், கலசம் இவற்றை லேசாக வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும்.

விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.

அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.

பின் குறிப்பு:

நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.

சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும்.

இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.



மாவிளக்கு செய்முறை!



 
மாவிளக்கு செய்முறை



பச்சரிசி கால் கிலோ,

வெல்லம் பாகு கால்கிலோ தூள் செய்யவும்.


ஏலக்காய் நாலு, ஐந்து,


50கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்,)தேங்காய்
நிவேதனம் செய்ய வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, பூ





பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.  சில வீடுகளில் சலிக்கும் வழக்கம் கிடையாது.  மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.  எங்க வீட்டில் சலிப்பதில்லை. நன்கு அரைத்துவிடுவோம்.  மாவாகிவிடும். வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.  பந்து போல் உருட்டவேண்டும்,  அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். எங்க வீட்டில் இரண்டு உருண்டை. உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்





அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.  குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரியைக் கொஞ்சம் நெய்யில் முன்னாலேயே ஊற வைக்கவும்.  பஞ்சுத் திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.  இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.  பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தையும் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.  திரி நன்கு எரியும்.  நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், (இதை அம்மன் மலை ஏறிவிட்டாள் என்று கூறுவார்கள்) அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.  பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.





துள்ளு மாவு: முன் மாவிளக்குக்குச் சொன்ன அதே அளவு பச்சரிசி வெல்லம் மற்றப் பொருட்களை  எடுத்துக்கொள்ளவேண்டும்.  மாவை மிக்சியில் அரைத்துக்கொண்டு நன்கு காய வைத்து வெல்லத் தூளைச் சேர்த்துத் தேங்காய்துருவல், ஏலக்காய் சேர்க்கவேண்டும்.  இது உதிராகப் பொடியாகவே இருக்கும்.





காப்பரிசி: வெறும் பச்சரியை ஊற வைத்து நீரை வடிகட்டிவிட்டுத், தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டு, வெல்லம், ஏலக்காய்  சேர்க்கவேண்டும். இது பிரார்த்தனைகளில் மட்டுமே செய்யப் படும்.  குழந்தை பிறந்து காப்புப் போடும்போது செய்யும் காப்பரிசியின் பக்குவம் வேறு.





பானகம்: வெல்லம், நீர், சுக்கு ஏலக்காய். வெல்லத்தைப் பொடித்துக்கொண்டு வேண்டிய அளவு நீர் விட்டு சுக்கும் ஏலக்காயும் கலந்து கொள்ளவேண்டும்.





சனி, 11 ஜூன், 2016

குருவார லக்ஷ்மி பூஜை!



மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி மாவினால் கோலமிட்டு, அதில் பூக்களை வைத்து லஷ்மியை வீட்டிற்குள் அழைப்பார்கள். வீட்டிற்குள் வந்த லஷ்மியை பூஜை செய்து ஆராதிப்பார்கள். பூஜை இடத்தில் நெற்களை தூவி வைத்து அதன் நடுவில் கோலமிட்டு அந்த கோலத்துக்கு மத்தியில் சிறு மேசை மீது அரிசியை அளக்கும் மூங்கில் கூடையில் நெல்லை நிறப்பி வைப்பார்கள்.


நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இடையில் வரும் 'மார்கசிற்சா' அல்லது 'அக்ரஹாயனா' எனப்படும் மாதத்தில் ஒவ்வொரு வியாழர் கிழமையும் வீட்டுப் பெண்கள் விரதம் இருந்து , லஷ்மி பூஜை செய்து, லஷ்மி புராணம் எனும் புனித பாராயணத்தைப் படிப்பார்கள். அதை படித்து முடித்ததும், பிரசாதங்களை நெய்வித்தியம் செய்து வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். இந்த பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படுவது இல்லை, பண்டிதர்கள் கிடையாது. வீட்டில் உள்ள பெண்களே இதை செய்வார்கள். பூஜை முடிந்ததும் லஷ்மி புராணத்தை பக்தியுடன் படித்து முடித்தப் பின்னரே பூஜை முடிந்ததாக கருதப்படும். 'மார்கசிற்சா' மாதத்தில் அதை ஏன் செய்கிறார்கள் என்றால் அந்த மாதமே விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். ஆகவேதான் விஷ்ணுவின் ஆளுமைக்கு உட்பட்ட அந்த மாதத்தில் அவர் மனதிற்கு ஏற்ற அவருடைய மனைவியான லஷ்மி தேவியை ஆராதித்து பூஜை செய்கிறார்கள். அந்த பூஜை செய்வதற்கும் இன்னொரு காரணம் உள்ளது. அது லஷ்மி புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

பலராம தாஸ் எழுதிய லஷ்மி புராண்

லஷ்மி புராணம் என்பது ஒரிஸ்ஸாவின் புகழ் மிக்க கவிஞரான பலராம தாஸ் என்பவரினால் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. பாடல் வடிவில் எழுதப்பட்டு உள்ள இந்தப் புராணம் ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் பெண்களினால் புனிதப் புராணமாக கருதப்படுகிறது. வயல்களில் அறுவடை முடிந்ததும், செல்வத்தை அள்ளித் தரும் நல்ல அறுவடைக் கிடைக்கக் காரணமாக இருந்த லஷ்மி தேவிக்கு தமது நன்றியை செலுத்த - பெண்கள் இந்த புராணத்தை பாராயணம் செய்கிறார்கள்.


லஷ்மி தேவியானவள் செல்வத்தை மட்டும் கொடுப்பதில்லை, அவள் குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறாள், அழகைத் தருகிறாள், மேலும் அன்பையும் தருகிறாள் என்றே நம்புகிறார்கள். பாராயண காலத்தில் ஒவ்வொரு வியாழற் கிழமை அன்றும் லஷ்மி பூஜையை செய்கிறார்கள். சாதாரணமாக வெள்ளிக் கிழமைகளில்தான் லஷ்மிக்கு பூஜைகள் செய்வது விசேஷம் என தென் மற்றும் வடநாட்டின் பல பகுதிகளிலும் கருதப்பட்டாலும் லஷ்மி புராண பாராயணம் மற்றும் அதை சேர்ந்த லஷ்மி பூஜையை வியாழர் கிழமைகளில் செய்வதே விசேஷம் என்று ஒரு நம்பிக்கை ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ளது.


இந்தப் புராணம் மிகப் புனிதமாக போற்றப்படுவதின் காரணம் லஷ்மி விரத முறையை லஷ்மி தேவியே தனது வாயினால் ஒரு பெண்ணிற்குக் கூறினாள். அதற்கான காரணமும் அதே லஷ்மி புராணத்தில் உள்ளது.


லஷ்மி புராணம் என்பது லஷ்மியின் பிறப்பையும் அவளது மகாத்மியத்தையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல் அல்ல. ஆனால் இது லஷ்மியின் பெருமையை அதாவது லஷ்மி ஆராதனை இல்லை என்றால் வீடு வறுமையில் ஆழ்ந்து விடும் என்பதை விளக்கும் ஒரு புராணக் கதை ஆகும். ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கதை பூரி ஜகன்னாதர் ஆலயத்துடனும் பாலபத்திரர் எனும் பாலராமருடனும் சம்மந்தப்பட்டது என்று கூடக் கூறலாம். லஷ்மி புராணம் என்பது என்ன?
லஷ்மி புராணம்
 
ஒருமுறை நாரத முனிவரும், பராசர முனிவரும் பூலோகத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்றார்கள். அது 'மார்கசிற்சா' மாத வியாழர் கிழமை ஆகும். அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லஷ்மி பூஜையை செய்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.


அப்போது நாரதர் பராசர முனிவரைப் பார்த்துக் கேட்டார் ' முனிவரே, இது என்ன விசித்திரமான கொண்டாட்டம்? எப்போதுமே ஒத்துப் போகாமல் இருந்த பிராமணர்களும் சண்டாளர்களும் இன்று அதிசயமாக ஒன்றாக இணைந்து நடனம் ஆடிக் கொண்டு, லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருக்கிறார்கள் ?'.


அதைக் கேட்ட பராசர முனிவர் கூறினார் ' நாரத மா முனிவரே, இந்தப் பண்டிகை லஷ்மி தேவியின் அருளை வேண்டிப் பெறுவதற்காக 'மார்கசிற்சா' மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து செய்வதாகும். இது பெண்களின் மகத்துவத்தைக் காட்ட ஏற்பட்ட பண்டிகை ஆகும். இதில் 'மார்கசிற்சா' மாதத்தில் வரும் முதல் வியாழற் கிழமை முக்கியமான நாளாகும். அந்த மாதத்தின் பத்தாவது நாளன்று அந்த வியாழற் கிழமை வந்தால் அன்று விசேஷமான சுதாஷா என்ற விரதத்தையும் செய்வார்கள்' என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு லஷ்மி புராணத்தைக் கேட்க ஆவல் ஏற்பட அந்த விரதம் குறித்த கதையை  தனக்குக் கூறுமாறு அவரிடம் கேட்டதும் பராசரர் அந்த புராணத்தை கூறத் துவங்கினார்.


''ஒருநாள் தனது கணவரான பூரி ஜகன்னதரின் அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம் சென்று லஷ்மி தேவி கேட்டாள் 'பிரபோ, இன்று என்னுடைய விரத நாள் ஆகும். பூமியில் பலரும் என்னை ஆராதிப்பார்கள். ஆகவே அவர்கள் என்னை எவ்வாறு ஆராதிக்கிறார்கள் என்பதைப் பார்க்க  நான் வெளியில் சென்று விட்டு வருவதற்கு எனக்கு உங்கள் அனுமதி வேண்டும்' என்று கேட்டாள் . அதைக் கேட்ட ஜகன்னாதரும் மனம் மகிழ்ந்து அதற்கு அனுமதி கொடுத்தார்.


அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட லஷ்மி தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணியின் உருவில் பூமிக்கு சென்றாள். அங்கு சென்றதும் முதலில் அவள் ஒரு பிராமணரின் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அவர்கள் வீட்டின் முன்னால் கோலமோ பிற   அலங்காரமும் காணப்படவில்லை. லஷ்மி பூஜையும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆகவே அந்த வீட்டிற்குள் நுழைந்து வீட்டுப் பெண்மணியை அழைத்த லஷ்மி தேவி 'ஏனம்மா, நீங்கள் லஷ்மி பூஜை செய்யவில்லையா?' என்று அக்கறையுடன் கேட்டாள். அந்தப் பெண்மணி கூறினாள் ' அம்மா, எனக்கும் அந்த பூஜையை செய்ய ஆசையாகதான்  உள்ளது. ஆனால் அதன் விதி முறைத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் எனக்கு அந்த முறையை கற்றுக் கொடுத்தால் நானும் அதை செய்ய முடியும்' என்று அந்த வயதான பெண்மணியின் உருவில் இருந்த லஷ்மியிடம் கேட்டாள். அதைக் கேட்டு மகிழ்ந்து போன லஷ்மி தேவியும் அவளுக்கு அந்த விரத முறையைக் கூறலானாள்.

 

'அம்மா, காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டை நன்கு சுத்தம் செய்தப் பின் , வாயிலில் பசு சாணத்தை தெளித்து துடைத்ததும், அதில் வெள்ளை நிற அரிசி மாவு கோலமிட்டு, வண்ணப் பொடிகளைத் தூவி நன்கு அலங்கரிக்க வேண்டும். அது போல ஸ்வாமி கூடத்தில் ஒரு இடத்தை ஈரத் துணியால் சுத்தம் செய்து விட்டு, அறுவடை செய்த நெல்லைத் தூவி, வண்ணக் கோலமிட்டு, அதன் மீது ஒரு சிறு மேஜையை வைத்து அதன் மீது அரிசியை அளக்கும் ஒரு கூடையை வைத்து அதில் அரிசி நெல்லை நிறப்பி வைக்க வேண்டும்.

மேஜை மீது மூங்கில் கூடையில்  நிரப்பி வைக்கப்பட்டு உள்ள நெல் 

மூன்று வெற்றிலைகளை மஞ்சள் ஜலத்தினால் சுத்தம் செய்து அந்த மேஜை மீது வைக்கவும். அதை சுற்றி உள்ள இடங்களில் காய்கறிகள், கனிகள் மற்றும் மலர்களைக் கொண்டு நன்கு அலங்கரிக்க வேண்டும். அதன் பின் ஊதுபத்தி மற்றும் நெய் விளக்கை ஏற்றி மகாலஷ்மியை வீட்டிற்கு அழைக்க வேண்டும். மூன்று வகைகளினால் ஆன அரிசி உணவை செய்து நெய்வித்தியமாக படைத்தப் பின் இனிப்புக்களையும் வைத்து பூஜை செய்தப் பின், லஷ்மியின் பெருமையை விளக்கும்  புராணத்தைப் படித்தப் பின் நெய்வித்தியத்தை வீட்டினர் உண்ண வேண்டும். இதில் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரசாதங்களை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கோ, விருந்தாளிகளுக்கோ, அவ்வளவு ஏன் திருமணம் ஆகி விட்ட சொந்த பெண்ணுக்குக் கூட- திருமணம் ஆனப் பின் அவள் வேறு வீட்டை சேர்ந்தவள் ஆகி விடுவதினால்- தரக் கூடாது. அப்படி தந்தால் பூஜையின் பலன் கிடைக்காது.




அந்த மாதம் முழுவதுமே, முக்கியமாக விரத தினங்களில் வீட்டில் உள்ள குழந்தைகளை கடுமையாக கடிந்து கொள்ளக் கூடாது, இருட்டிலே அமர்ந்து கொண்டு உணவு அருந்தக் கூடாது, மாலையில் தலைக்கு எண்ணை தடவிக் கொண்டு வாரிக் கொள்ளக் கூடாது, மாமியார்- மாமனாரை அவமரியாதை செய்யக் கூடாது.  இரவு ஆடைகள் இன்றி படுத்து உறங்கலாகாது. கணவரிடம் சண்டைப் போடக் கூடாது. எந்த வீட்டில் உள்ளப் பெண்கள் கணவன் எழுந்து கொண்டப் பின் எழுந்து சோம்பேறியாக உள்ளார்களோ, யார் தன் கணவருடன் சண்டை இட்டுக் கொண்டும், அவரை அவமானப்படுத்தும் விதத்திலும் நடக்கிறார்களோ அவர்கள் வீடுகளை விட்டு லஷ்மி தேவி உடனடியாக வெளியேறி விடுவாள். அதன் பின் அங்கு உள்ளே செல்ல மாட்டாள். இவற்றை எல்லாம் உன்னால் கடை பிடிக்க முடியும் என்றால் நீ விரதத்தை இன்றே துவக்கு' என்று அறிவுறுத்த அந்த பிராமணப் பெண்மணியும் சந்தோஷமாக அதை உடனே செய்வதாகக் கூறி வயதான பெண்மணி உருவில் இருந்த லஷ்மி தேவிக்கு நன்றி கூறி அவளை அனுப்பி வைத்தாள்.


அடுத்ததாக லஷ்மி தேவி இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அது பிராமணர்கள் அல்லாத கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள், முக்கியமாக சண்டாளர்கள் என்று அந்த காலத்தில் கூறப்பட்ட மக்கள் வசித்தப் பகுதியாகும். அங்கு நுழைந்ததுமே ஷ்ரியா என்ற சண்டாளப் பெண்மணி அவள் வீட்டில் வாயிலில் சாணம் தெளித்து, துடைத்தப் பின் வண்ணமயமான அரிசி கோலத்தைப் போட்டு அதன் மீது தாமரை மலர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து இருந்ததைக் கண்டாள். அந்த மலர்கள் அவளுடைய  வீட்டின் உள்ளே பூஜை அறை வரை வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த தாமரை மலர்களைக் கண்டதுமே லஷ்மி தேவிக்கு அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆகவே அவள் அந்த தாமரை மலர்கள் மீது காலை வைத்துக் கொண்டவாறே நடந்து சென்று சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். உள்ளே சென்றவள் ஷ்ரியா லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அவள் எதிரில் சென்று தரிசனம் கொடுத்து விட்டு ' உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.

லஷ்மி தேவி தரிசனம் தந்தாள்

லஷ்மி  திடீர் என தன்  எதிரில் நிற்பதைக் கண்டதும் ஷ்ரியாவுக்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அப்படியே அவள் முன் குனிந்து  நமஸ்கரித்தாள் .  அவள் பாதங்களைப் பிடித்துக் கொண்டு அதில் தன் தலையை வைத்து வணங்கியவள் 'எனக்கு ஆயிரம் பசுக்கள், நிறைய செல்வம், கொஞ்சி மகிழக் குழந்தை, மற்றும் பல நகைகளும் வேண்டும்' என்று கேட்க அவை அனைத்தையும் தந்து அவளுக்கு லஷ்மி தேவி அருள் புரிந்தாள். இப்படியாக லஷ்மி தேவி வேறு சில சண்டாளர்கள் வீடுகளுக்கும் சென்றாள்.


அப்போது ஜகன்னாதரும், அவரது சகோதரர் பலராமர் எனும் பாலபத்திரரும் காட்டில் வேட்டை ஆடிக் கொண்டிருந்தார்கள். லஷ்மி தேவி சண்டாளன் வீட்டிற்குள் சென்றதை அவர்களுக்கு உடனே ஓடிச் சென்று ஒற்றன் கூறினான். அதைக் கேட்ட பலராமர் கோபமடைந்து தனது சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் ' அண்ணா, பார்த்தீர்களா, உங்கள் மனைவி ஒரு சண்டாளன் வீட்டிற்குள் சென்று தோஷமாகி இருக்கிறாள். அங்கு சென்று விட்டு குளித்து தன்னை பவித்திரம் ஆக்கிக் கொள்ளாமல் ஆலயத்துக்கும் வந்து கொண்டு இருக்கிறாள். அது தவறு. அவள் நம் வீட்டிற்குள் (ஆலயத்துக்குள்) நுழையும் யோக்கிதையை இழந்து விட்டாள்' .

அதற்கு ஜகன்னாதர் கூறினார் 'பாலபத்ரா, என்னுடைய மனைவியை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிவது அவள் கடமையல்லவா.  இதில் அவளை வணங்குபவர் யார், சண்டாளனா இல்லை பிராமணனா என்று பேதம் பார்க்க முடியுமா. ஜாதி பேதம் பார்த்து அருள் புரிவது  தெய்வ நீதிக்கு எதிரானது அல்லவா ?' என்று கேட்டதும், பாலபத்திரர் அதிக கோபம் அடைந்தார். அவர் கூறினார் ' அண்ணா, உங்களுக்கு உங்கள் மனைவிதான் முக்கியமாகத் தோன்றினால் அவளுக்கு சண்டாளர்கள் வசிக்கும் இடத்தில் சென்று ஒரு மாளிகையை அமைத்துக் கொடுங்கள். எனக்குக் கவலை இல்லை. ஆனால் அவள் இனி நம் ஆலயத்தில் தங்க முடியாது. அவளை அடித்து விரட்டுங்கள்'.
ஜகன்னாதர் மீண்டும் கூறினார் ' இதோ பார். நாம் வீட்டுப் பெண்ணை  இப்போது விரட்டி விட்டால் அவளைப் போல இன்னொருவள் நமக்குக் கிடைக்க மாட்டாள். வீட்டுப் பெண்ணை விரட்டி விட்டால் செல்வத்தை இழந்து விடுவோம். அவளை மீண்டும் நம்முடன் அழைத்துக் கொள்ள தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு பல கோடி தட்ஷணைகளை கொடுத்து பரிகாரம் செய்து  அவளை மீண்டும் நம்முடன் இணைத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே தவறை அவள் செய்தால் அவளை ஆலயத்தை விட்டு துரத்தி விடலாம்'.

ஜகன்னாதரும், பாலபத்திரரும்

ஆனால் அவர் கூறியதை பாலபத்திரர் ஏற்கவில்லை. அவர் கூறினார் ' அண்ணா, நீங்கள் உங்கள் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு சகோதரன் வேண்டும் என்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்கு ஒரு லட்ஷ மனைவிகள் கூட கிடைக்க முடியும். ஆனால் உங்களுக்கு இந்த மனைவிதான் முக்கியம் என்றால் தாராளமாக அவளை அழைத்துக் கொள்ளுங்கள். நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறேன். என்னால் பாவம் செய்தவள் உள்ள வீட்டில் தங்க முடியாது '. பலராமனின் கோபத்தைக் கண்ட ஜகன்னாதாரால் மேலும் பலராமரை சாந்தப்படுத்த முடியவில்லை.


அந்த இடம் அமைதியாயிற்று. ஆகவே இருவரும் கிளம்பிச் சென்று ஆலய வாயிலில் அமர்ந்து கொண்டார்கள். இதற்கு இடையே ஷ்ரியாவிற்கும் தன்னை ஆராதித்த மற்ற சண்டாள  குடும்பங்களுக்கும்   வேண்டிய அனைத்தையும் செய்து தந்தப் பின் லஷ்மி தேவி ஆலயத்துக்கு திரும்பி வந்தாள். அவளை உள்ளே விட மறுத்த ஜகன்னாதார் ' சண்டாளன் வீட்டிற்குச் சென்று விட்டு வந்துள்ள உனக்கு உள்ளே நுழைய அதிகாரம் இல்லை. நீ செய்த தவறை நான் மட்டும் பார்த்திருந்தாலும் பரவாய் இல்லை. என் சகோதரனுக்கும் அது தெரிந்து விட்டது. ஆகவே உன்னால் நாங்கள் அவமானத்தால் நிற்கிறோம். ஆகவே நீ இங்கிருந்துக் கிளம்பி வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள் '.


அதைக் கேட்ட லஷ்மி கூறினாள் ' நாதா, உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால், நம் திருமணத்தை முறித்து விட்டு என்னை தள்ளி வைத்து விடுங்கள். ஆனால் நான் என்ன தவறை செய்தேன் என்று  கூறுங்கள்'. ஜகன்னாதர் கூறினார் ' திருமணத்தை முறித்து விட்டு உன்னை வெளியேற்ற  நம்முடைய தேவ தர்மத்தில் வழி இல்லை. நீ ஒரு சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டு வந்துள்ளதினால் உனக்கு இங்கு இடம் இல்லை'. லஷ்மி மீண்டும் கூறினாள் 'நாதா அமிர்தம் எடுத்தபோது கடலில் இருந்து வெளி வந்த என்னை திருமணம் செய்து கொண்ட நீங்கள் நான் தவறு செய்தால் மொத்தம் பத்து தவறுவரை பொறுத்துக் கொண்டு என்னை மன்னித்து விடுவீர்கள் என்று என் தந்தைக்கு ஒரு வாக்கு கொடுத்தீர்கள். அதன்படி பார்த்தால்  நான் இப்போது ஒரே ஒரு தவறுதான் செய்துள்ளேன். ஆனாலும் அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள மறுக்கிறீர்கள். இது நியாயமா?'.


ஜகன்னாதர் கூறினார் ' உன் தந்தை நாள் முழுவதும் போடும் கூச்சல் என்னால் தாங்க முடியவில்லை. ஆகவே எங்கள் அரண்மனையை சுற்றி அரண் எழுப்பக் கூட முடிவு செய்துவிட்டோம். நீ என்னடா என்றால் அவரை துணைக்கு அழைக்கிறாய். உன்னை என்னால் ஏற்க முடியாது. உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறேன். நீ வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்'.


அதைக் கேட்ட லஷ்மியும் கோபமுற்றாள். 'நாதா, கடவுளுக்கு ஜாதி பேதம் உண்டா? மனித குலத்துக்கே நீங்கள் செய்யும் அநீதி அல்லவா அந்த பேதம் . நான் செய்தது தவறு என்றால் நீங்கள் ஏன் யாதவ குலத்தில்  பிறந்து பெண் எடுத்தீர்கள்? இடையர்களோடு சென்று நீங்கள் தங்கவில்லையா? தாழ்ந்த ஜாதியை சேர்ந்த நிமா என்பவளின் வீட்டில் நீங்கள் உணவு அருந்தவில்லையா? சாரா மீதி வைத்த உணவை நீங்கள் உண்ணவில்லையா? மனைவி தவறு செய்தால் அதை கணவன் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவளை உதாசீனப்படுத்தக் கூடாது'.


அதைக் கேட்ட ஜகன்னாதரும் கூறினார் 'இதோ பார் லஷ்மி, என் சகோதரனுக்கு எதிராக உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமானால் உனக்கு நான் ஆறு மாத கால உணவிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருகிறேன். எங்காவது சென்று வாழ்ந்து கொண்டு இரு. அதற்கு இடையில் என் சகோதரனை நான் சமாதானப்படுத்த முயலுகிறேன். அவன் சமாதானம் ஆகிவிட்டால்  உன்னை திரும்பவும் அழைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான் என்னால் இப்போது செய்ய முடியும் '.
லஷ்மியினால் அதற்கு மேல் அவமானத்தை தாங்க முடியவில்லை. தன் உடலில் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கயற்றி அவரிடம் கொடுத்து விட்டுக் கூறினாள் ' சரி நான் போய் சண்டாளர்களுடன் வாழ்கிறேன். நம் தர்ம நெறிப்படி, மனைவியை விலக்கி வைத்தால் அவளுக்கு ஆறுமாத உணவிற்கு வழி செய்யும் வகையில் கணவன் ஏற்பாடு செய்தப் பின்னரே வீட்டை விட்டு அவளை அனுப்ப வேண்டும். ஆனால் இன்று நான் உங்களிடம் எதையும் பெற விரும்பவில்லை. மாறாக  நீங்கள் கொடுத்த அனைத்து ஆபரணங்களையும் திரும்ப உங்களிடமே  தந்துவிட்டு செல்கிறேன். போகும் முன் உங்களுக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். நீங்கள் இருவரும் பன்னிரண்டு வருடம் சாப்பிட வழி இன்றி, நல்ல உடைகள் இன்றி அவதிப்படுவீர்கள். மீண்டும் நீங்கள் சண்டாளனாக உள்ள என் கையால் உணவு அருந்தினால் மட்டுமே உங்கள் சாபம் விலகும்' என்று கூறி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள் .


அடுத்த நாள் அவள் விஸ்வகர்மாவை அழைத்தாள். அவரை தனக்கு தங்கத்தினாலும், வைர வைடூரியங்களிளுமான குடிசைக் கட்டித் தருமாறு கூறினாள். அவரும் அப்படிப்பட்ட குடிசை ஒன்றை  சண்டாளர்கள் இருந்தப் பகுதியில் அமைத்துத் தந்தார். அடுத்து லஷ்மி தேவி எட்டு வேதாளங்களை அழைத்தாள். யாருக்கும் தெரியாமல் ஆலயத்துக்குள் சென்று தான் வைத்து இருந்த அனைத்து செல்வங்கள் மற்றும் சமையல் அறையில் இருந்த அனைத்தையும் எடுத்து வந்து விடுமாறும், அவர்கள் படுக்கக் கூட கட்டில் இல்லாமல் அனைத்தையும் எடுத்து வருமாறும் கூறி அனுப்பினாள். சரஸ்வதியை அழைத்தாள். அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் சென்று ஜகன்னாதரும், பாலபத்திரரும் வந்தால் உணவு மட்டும் அல்ல குடிப்பதற்கு தண்ணீர் கூடத் தரக் கூடாது என்று கட்டளை இடுமாறு கூறி அனுப்பினாள் .


அன்று இரவு சகோதரர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது வேதாளங்கள் அங்கு சென்று அந்த சகோதரர்களுக்கே தெரியாமல் அவர்களைக் கட்டிலில் இருந்து இறக்கி கீழே படுக்க வைத்து விட்டு ஆலயத்திலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் இருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.


மறுநாள் கண் விழித்த சகோதரர்கள் வீட்டில் எதுவுமே இல்லை என்பதையும், தாங்களே கீழே ஒரு துணி கூட விரிக்காமல் தரை மீது படுத்துக் கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டார்கள். அதைப் பார்த்த ஜகன்னாதர் கூறினார் 'பலராமா, இதற்குதான் நான் முன்னரே கூறினேன். வீட்டில் இருந்து லஷ்மி சென்று விட்டால் தரித்திரமே நிலைக்கும் என்று. நீ அதைக் கேட்கவில்லை'.


அதைக் கேட்ட பலராமர் கோபமுற்றுக் கூறினார் 'அண்ணா, ஒரு மனைவி என்பவள் தன் கணவர் பட்டி கிடந்து அவதிப் படட்டும் என்று விட்டு வைப்பாளா? அப்படி செய்பவள் நல்ல மனைவியாக இருக்க முடியுமா?'.


இப்படியாக இருவரும் மாற்றி மாற்றி எதையெதையோ  விவாதித்துக் கொண்டே சமையல் அறையில் சென்று பார்த்தார்கள். அங்கோ குடிக்கத் தண்ணீர்க் கூட இல்லை, ஒரு குவளையைக் கூட காணவில்லை. பாத்திரங்கள், பண்டங்கள் என எதுவுமே இல்லை. நேரம் செல்லச் செல்ல பசி, தாகம் எடுக்க 'இன்ரதும்னா' என்ற குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றால் அந்தக் குளமும் வற்றி இருந்தது. கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு பூணூல் உடலில் தெரிய பிராமணர்கள் இருந்தப் பகுதிகளுக்குப் போய்  வீடு வீடாகச் சென்று பிட்ஷைக் கேட்டார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத பிராமணர்களோ அவர்கள் கொள்ளைக்காரர்கள் , பிராமணர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு திருட வந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களை அடித்து விரட்டினார்கள். ஒரே ஒரு இடத்தில் அவர்கள் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட ஒரு பிராமண பெண் அவர்களுக்கு உணவு தர பாத்திரத்தை எடுத்தாள். உடனேயே அது அவள் கையில் இருந்து மாயமாய் மறைந்து போயிற்று. இன்னொரு இடத்தில் கஷ்டப்பட்டு அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதை உண்ணப் போனபோது பெரும் காற்று வீச  அத்தனையும் பறந்து சென்று மண்ணில் விழுந்தது.


ஆகவே அவர்கள் கடலுக்குச் சென்று வேதங்களை ஓதி பிரார்த்திக்க லஷ்மி அவர்களிடம் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவளிடம் அவர்கள் தம் பசிக்கு உணவு கேட்க லஷ்மி தேவி அவர்கள் சண்டாளர்கள் வீட்டில் உணவு அருந்த முடியாது என்பதினால் உணவு தர மறுத்ததாகக் கூறுமாறு செய்தி அனுப்பினாள். அவர்களோ விடாப் பிடியாக தமக்கு உணவு தராவிடிலும் பரவாய் இல்லை, தமக்கு பாத்திரங்களையும், சிறிது அரிசியையும் தந்தால் அக்னியை மூட்டி அதில் தாமே சமைத்து உண்பதாகக் கூறினார்கள். அக்னிபட்டால் எந்த தோஷமும் விலகும் என்பதினால் அப்படிக் கேட்டார்கள். அவளும் அவர்களுக்கு அனைத்தையும் தந்து அனுப்பிவிட்டு அக்னியிடம் அவர்கள் உள்ள இடத்துக்கு செல்லக் கூடாது என்று தடுத்து விட்டாள். சகோதரர்கள் உணவை தயாரிக்க அடுப்பை மூட்டினால் என்ன செய்தும் தீ பற்றவே இல்லை.



ஒரு மாதம் ஆயிற்று. பசியின் கொடுமை தாங்க முடியவில்லை. உணவையும் சமைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரு சகோதரர்களும் சண்டாளர் வீட்டில் லஷ்மி இருந்தாலும் அவள் வீட்டில் உணவு அருந்த சம்மதிக்க லஷ்மியும் நல்ல உணவு சமைத்து அனுப்பினாள். அதை அவள் சண்டாளப் பெண்களின் கையில் கொடுத்து அனுப்பி அவர்களே அதை பரிமாற்ற வேண்டும்  என்று கூறி அனுப்பினாள்.  வேறு வழி இன்றி அந்த சகோதர்களும் சண்டாளர்கள் வீட்டில் அதை உண்டார்கள்.  அது  'மார்கசிற்சா' மாதத்தின் வியாழர் கிழமை ஆகும். இருவரும் பசி அடங்கியப் பின்னரே  தம் தவறை உணர்ந்தார்கள்.


அவமானத்தினால் தலை குனிந்த பலராமர் தன் சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் 'நீங்கள் சென்று உங்கள் மனைவி லஷ்மியின் கையைப் பிடித்து  அழைத்து வாருங்கள்., நடந்த தவறுகளுக்கெல்லாம் நான்தான் காரணம். இனி அவளை விட்டுப் பிரியாதீர்கள்' என்று கூறி அவரை அனுப்ப லஷ்மியும் ஜகன்னாதரை வரவேற்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அதன் பின் அவர் பாதங்களை கழுவி அந்த நீரில் சிறிது தான் அருந்திவிட்டு தன் மீதும் அந்த புனித நீரை தெளித்துக் கொண்டாள். அவரிடம் கூறினாள் ' என்னை சண்டாள பெண்ணாகக் கருதி வெளியே அனுப்பினீர்கள். ஆனால் அதே பெண்ணின் வீட்டில் மீண்டும் உணவு உண்ண வந்துள்ளீர்கள் . ஆகவே நீங்கள் இருவருமே இப்போதுதான் ஜாதி பேதத்தை  கடந்து நிற்கிறீர்கள். உங்கள் சபதம் என்ன ஆயிற்று? நீங்கள் போட்ட சபதத்துக்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்கள் சகோதரனை எண்ணியும் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இனியாவது மனிதர்களில் பேதம் பார்க்காதீர்கள். உங்களை வணங்குபவர்களை அவமானப்படுத்தாதீர்கள். சரி போகட்டும், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்?'.


அதற்கு ஜகன்னாதர் கூறினார் 'லஷ்மி தேவியே, எங்களை மன்னித்து விடு . நங்கள் நீ இல்லாமல் பெரும் அவதிப்பட்டோம். லஷ்மி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை உலகிற்கு எங்கள் மூலம் உணர்த்தி விட்டாய். இனி வியாழர் கிழமையில் உன்னை பூஜித்து உணவு அளிப்பவர்களுக்கு அனைத்து பாபங்களும் விலகி, செல்வம் பெருகி உன் விரதத்தை செய்பவர்கள் சொர்கத்தை அடைவார்கள்.


அதற்கு லஷ்மி தேவி கூறினாள் ' இனி உங்களைப் பொறுத்தவரை ஏழைப் பணக்காரன், ஜாதி என்ற பேதம் எதுவுமே உங்கள் ஆலயத்தில் இருக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் வந்து உங்களை வணங்கலாம். யார் வேண்டுமானாலும் வந்து உங்களுக்கு பிரசாதம் படைக்கலாம் என்று எனக்கு வாக்குறுதி தந்தால் மட்டுமே நான் அங்கு வருவேன் ' என்றாள். அதைகேட்ட ஜகன்னாதரும் உடனடியாக அவள் கூறியதை ஏற்றுக் கொண்டார்.


அதைக் கேட்ட பலராமர் கூறினார் ' அம்மா, எந்த ஒரு வீட்டிலுமே ஒரு பெண் இருந்தால்தான் வீடும் நலமாக இருக்கும். ஒரு பெண்ணாகவே லஷ்மி தேவியான நீ இருப்பதினால் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாத வீடு என்ன ஆகும் என்பதை எங்கள் மூலம் உலகிற்கு விளக்கி விட்டாய். நீ வெளியே சென்று விட்டால், எதுவுமே கிடைக்காது என்பதை இந்த சம்பவம் மூலம் உலகம் புரிந்து கொள்ளும். நாங்கள் பட்ட கஷ்டங்களை விளக்கும் இந்த 'மார்கசிற்சா' மாதத்தின் வியாழர் கிழமைகள் இனி புனிதமாக போற்றப்படும். அன்று உன்னை பெண்கள் வணங்கி பூஜிப்பார்கள். அப்படி பூஜிப்பவர்களுக்கு நீயும் அளவாற்ற செல்வத்தை தருவாய்''.


இந்தக் கதையைக் கேட்ட நாரதர் லஷ்மியின் அருள் இல்லாமல் யாருக்கும் ஒன்றும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டப் பின் கூறினார் 'யார் இந்த புனிதமான புராணத்தை இதய பூர்வமாக பாராயணம் செய்து விரதம் இருக்கிறார்களோ அவர்கள் ஆயிரம் கோடி பசுக்களை தானம் செய்தப் பலனை அடைவார்கள் என்பது மட்டும் அல்ல மோட்சமும் பெறுவார்கள்'.


இப்படியாக பலராம் தாஸ் அவர்கள் எழுதிய லஷ்மி புராணம் முடிவுற்றது.






ருத்ராக்க்ஷ சிவலிங்கம்!



இந்து ஆன்மீக சேவை கண்காட்சியில் , தமிழக ஆன்மீக மக்கள் கேந்திரா அமைப்பு சார்பில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆதரவுடன் , 1 லக்க்ஷம் ருபாய் மதிப்பில் முதன்முறையாக  வடிவமைப்பட்ட 2 லக்க்ஷம் ருத்ராக்க்ஷத்தினால் , 20 அடி உயரமுள்ள, 6 அடி சுற்றளவு கொண்ட , 2 டன் எடை உடைய
 மிகப்பெரிய சிவலிங்கம்.







திருப்பதி அருகில் உள்ள தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி திருகோயிலில் சிவராத்திரி அன்று அமைக்கப்பட்ட ஒரு லக்க்ஷம் ருத்ராக்ஷ கொட்டைகளால் ஆன 12 அடி உயரமுள்ள லிங்கத் திருமேனியை பக்தர்கள் வணங்கி மகிழ்தனர் .