வெள்ளி, 20 மே, 2016

லஷ்மி குபேர பூஜை!



திருமகளின் திருவருளைப் பற்றி நினைத்தவுடனே அவள்  எப்போதும் நம்மை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணந்தான் முதலில் வருகிறது. ஆம் அவளும் அள்ளித் தரத்தான் ஆசைப்படுகிறாள்

கொடுக்க அந்த அலைமகளுக்குக் கருணை மிகுந்திருந்தாலும் பெற்றுக்கொள்ள நமக்கு தகுதி யிருக்க வேண்டாமா? அந்த தகுதியை வளர்த்து கொண்டு அவள் அருள் பெறுவோம்

ஐப்பசி மாதம் முழுவதும் லஷ்மி குபேர பூஜை செய்ய உகந்தது. அதிலும் குறிப்பாக தீபாவளி அமாவாசை முடிந்து பிரதமை ஆரம்பிக்கும் நேரம் மிக மிக சக்தி வாய்ந்த நேரமாக கருதப் படுகிறது

வீட்டினை சுத்தமாக பெருக்கி முடிந்தால் கோமியத்துடன் கொஞ்சம் மஞ்சள் கலந்து தெளிக்கவும் பின்னர் சுத்தமாக தண்ணீர் கொண்டு துடைக்கவும்


பூஜை செய்யும் முறை -

விநாயகரை வணங்கி பூஜை சிறப்பாக நடக்க வேண்டுவோம் -
மஞ்சளில் பன்னீர் கலந்து மஞ்ச பிள்ளையாரை பிடித்து வைத்து ஆரம்பிக்கவும்

பூஜையறையிலோ அல்லது வேறு எங்கோ கிழக்கு பார்த்து குபேர பூஜை செய்ய வேண்டும்

சுவாமிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியிருக்க வேண்டும்.
நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும் 

குபேரன் படம், லஷ்மி படம் எடுத்து அருகே வைக்கவும்

தாம்பாளம் அல்லது மனைக்கட்டையில் அல்லது சுத்தமான தரையில் குபேரன் படத்திற்கு முன் கீழ்கண்ட படத்தை அரிசி மாவினை கொண்டு வரைந்து கொள்ளவும். அரிசி மாவுடன் தண்ணீர் கலக்காமல் சுத்தமான பன்னீர் கலந்து அரிசி மாவினை செய்யவும் 

அடுத்து வரைந்துமுடித்தவுடன் ஓவ்வொரு கட்டத்திலும் உள்ள எண்களுக்கு ஏற்ப 1 ரூ, அல்லது 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களை வைக்கவும்.

(எண் 27 எனி 27 = 1 ரூநாணயங்களை கட்டத்தில் வைக்கவும்)

அடுத்து அன்னை மஹாலஷ்மியினை கும்பத்தில் ஸ்தபிக்க வேண்டும்

ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் கால் படி பச்சரிசியினை பரப்பவும்  அதன் மேல் சொம்பினை வைக்கவும் அதில் முக்கால் அளவு தண்ணீரை நிரப்பவும், பின்னர் மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு மட்டை தேங்காயினை சொம்பின் மேல் வைக்கவும், மாவிலைகளை தேங்காயினை  சுற்றியும் அழகாக அமைக்கவும்.

இப்போது நம்ம வீட்டுக்கு மஹாலஷ்மியும் குபேரனும் வந்தாச்சு

அடுத்து அவர்களுக்கு முன் அழகான 5 முக விளக்கினை ஏற்றிவைக்கவும்,  மண் அகல் விளக்குகள் 2னையும் உடன் ஏற்றி மேற்கு நோக்கி அமைக்கவும்.

தீபஓளியின் வாயிலில் அன்னை மஹாலஷ்மி ஓளிவடிவில் வந்தாச்சு

2 செட் வெற்றிலை பாக்குகள் எடுத்து குபேரனுக்கும் மஹாலஷ்மிக்கும் வைக்கவும்

அடுத்து 2 தலை வாழை இலைகளை எடுத்து முன்னே வைக்கவும் அதில் பிரசாதம் எடுத்து வைக்கவும்

கண்டிப்பாக இருக்க வேண்டிய பிரசாதங்கள் குபேரனுக்கு

1. சக்கரை
2. பாதாம் பருப்பு
3. பிஸ்தா பருப்பு 
4. முந்திரி பருப்பு
5. அக்ரூட்
6. பனங் கற்கண்டு 
7. ஜாங்கீரி ( அவருக்கு மிகவும் விருப்பம்)
8.  மாதுளம்பழம் ரொம்ப முக்கியம்
9. வாழைப்பூ ரொம்ப ரொம்ப முக்கியம்
10. ஓரு டம்பளர் சுத்தமான பால் ( பனங்கற்கண்டு, பாதாம் சேர்த்து) 
11. ரவா கேசரி  

இவைகளை அழகாக இலையினில் வைக்கவும்
அவசியம் வாழைப்பூ வைக்க வேண்டும்  
  
அன்னை மஹாலஷ்மிக்கு சில கனிவகைகள் வைக்கவும். வாழை, ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை அவளுக்கு படைக்கவும்

அடுத்து நாம் பூஜை ஆரம்பிக்க போகிறோம்

விநாயகர் பாடல் 

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பால் சார்வார் தமக்கு

ஆபிராமி அந்தாதி 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் வழித்துணையே

குபேரன் மந்திரம் 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா  

எனும் இம்மந்திரத்தினை 3000 முறை கண்டிப்பாக படிக்க வேண்டும்

உங்கள் இல்லத்தில் 3 பேர் இருந்தால் ஒன்றாக அமர்ந்து ஆளுக்கு ஆயிரம் முறை சொல்லாம். எண்ணிக்கைகளை கணக்கிட ரோஜா பூக்களை பயன்படுத்தி அன்னைக்கு சமர்பிக்கலாம்

மஹாலஷ்மி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மஹாலஷ்மி ஸ்வாஹா - 108 தடவை சொல்லவும்

அடுத்து சாம்பிரணி மிகவும் முக்கியமாக போடவும்

முடிந்துபின்  தீபம் காட்டி பூஜையினை முடிக்கவும்  

பூஜை முடிந்தவுடனே கலைக்க வேண்டாம்
அடுத்த நாள் காலை முடிந்த அளவு வேறு பிரசாதம் வைத்து தூப தீபம் காட்டி பின்னர் கலைக்கவும்

மஹாலஷ்மியாக வழிபாடு நடத்தப்பட்ட செம்பிலிருக்கும் நீரினை வீடு அலுவலகம் எங்கும் தெளிக்கவும்.

நாணயங்களை எடுத்து ஒரு சின்ன மூட்டையாக கட்டி பெருமாள் கோவில் உண்டியலில் போட்டுவிடவும்.

மஹாலஷ்மி பூஜையினை சிறப்பாக செய்யவும்........

அன்னை அருள் நிச்சியம் உங்களுக்கு உண்டு.
 
 

மத்ஸய அவதாரம்!

Picture
 
சித்திரை தேய்பிரை-திரியோதசி-மத்ஸய  ஜெயந்தி
 
ஓம் சமுத்ரராஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
 
      பிரளயை காலத்தில் தோன்றும், விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக கூறுகிறது
 
   பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது.அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம். பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
 
குருவாயூரப்பனின் அத்யந்த பக்தரான நாராயண பட்டத்ரி, வாத நோயால் பீடிக்கப்பட்டார். அப்போது குருவாயூரப்பன், மீனிலிருந்து ஆரம்பித்து நாராயணீயம் எனும் காவியத்தை எழுத பட்டத்ரிக்கு ஆணையிட்டார். அதை தன் குருநாதர் எழுத்தச்சனிடம் கூறினார் பட்டத்ரி. தசாவதாரத்தில் முதல் அவதாரமான மச்சாவதாரத்தைத்தான் குருவா யூரப்பன் உணர்த்தினார் என எழுத்தச்சன் கூற திருவருளோடு குருவருளும் சேர நாராயணீயத்தை எழுதினார் பட்டத்ரி. அதில் மச்சாவதார மூர்த்தியை தியானித்து ‘ஜஷாக்ருதிம் யோஜந...’ என ஆரம்பிக்கும் துதியில் எட்டு லட்சம் யோஜனை நீளமுள்ள (ஒரு யோஜனை - ஒன்றரை மைல்) மீனாக உருமாறி சப்தரிஷிகளையும் ஓடத்தில் ஏற்றிக் கட்டி இழுத்து பிரளய காலத்தில் காப்பாற்றினாயே, அப்போது அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்களே, அதுபோல நானும் ஆனந்தமாக வாழ உன் அருள் எனும் மருந்தால் என் நோயை நீக்குவாயாக என பிரார்த்தித்தார். அதோடு மட்டுமல்ல சோமுகாசுரன் எனும் அசுரன் நான்முகனிடமிருந்து கவர்ந்த நான்கு வேதங்களையும் இந்த மச்சமூர்த்திதான் சோமுகாசுரனைக் கொன்று அவனிடமிருந்து மீட்டு நான்முகனிடம் தந்தார். அந்த மகத்தான பெருமை யுடைய மச்ச மூர்த்தி அவதார தினம் இது.
 

ஆனி வளர்பிரை-துவாதசி-கூர்ம ஜெயந்தி

ஓம் தராதராய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்
(தசாவதார கூர்ம-காயத்திரி)
 
ஓம் கச்சபேசாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்
(கூர்ம காயத்ரி)
 
   இரண்டாவது அவதாரம், கூர்ம அவதாரம். ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
 ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.
 
சித்திரை தேய்பிரை-பஞ்சமி-வராக ஜெயந்தி
 
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தன்னோ வராஹ ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
      சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.

        குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீஎன்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.
 
       குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள்.
 
          அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
 
          திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும்.
 
          வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார்.  இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
 

வைகாசி வளர்பிரை-சதுர்த்தசி-நரசிம்ம ஜெயந்தி

ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
 
        நரசிம்ம அவதாரம், மனித-மிருக உருவம். உடல் ரீதியாக விலங்கு நிலையில் இருந்து மனித உருவமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது
 
  வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.
 

ஆவணி-திருவோணம்-வாமன  ஜெயந்தி

உலகளந்த பெருமாள் (திருவிக்ரமன்)

ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே
சூக்ஷ்மதேஹாய தீமஹி
தன்னோ வாமந ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
    ஐந்தாவது அவதாரம் வாமனன்: குள்ள மனித அவதாரம். மிருக சுபாவம் கொண்ட உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது.
புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.
    ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன.
 

சித்திரை-தேய்பிரை-துவாதசி-பரசுராம  ஜெயந்தி

ஓம் அக்னி சுதாய வித்மஹே
வித்யாதேஹாய தீமஹி
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
 
பரசுராமர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
 
 
07. ராம அவதாரம்                  
08. பலராமன் அவதாரம்
09. கிருஷ்ண அவதாரம்      
10.கல்கி அவதாரம்
 

நலம் நல்கும் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி!



வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்

சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.

அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு.  செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.

கிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.

மத்ஸ்ய அவதாரம் - கேது     கல்கி அவதாரம்      - புதன்
வராக அவதாரம்   - ராகு      நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்
கூர்ம  அவதாரம்   - சனி       கிருஷ்ண அவதாரம் - சந்திரன்
பரசுராம அவதாரம் - சுக்ரன்   ராம அவதாரம்       - சூரியன்
வாமன அவதாரம்  - குரு       பலராமர் அவதாரம்  - குளிகன்

நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

IMG_0590.JPG


சகலவிதமான பயங்களைப் போக்கும் ஸ்ரீந்ருஸிம்ஹ மந்திரம்!

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

ஸ்ரீந்ருஸிம்ஹ காயத்ரி மந்திரம்!

ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....
 

ஞாயிறு, 15 மே, 2016

வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்!



அடுவாச்சேரி வாசு தேவ புரம் மகாலக்ஷ்மி ஆலயம்


 அடுவாச்சேரிவாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்






கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம் செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார். பின் இவ்வாலயத்தை அந்தணர்களிடம் ஒப்படைத்து பூஜை பொறுப்புகளைத் தந்தார்.



ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற் றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட் சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். பல தலைமுறைகளுக்குப் பின் வந்தவர்கள் கோவில் காரியங்களை உதாசீனப்படுத்தியதால், அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினர். கோவில் பூஜையும் சரிவர நடைபெறவில்லை. அதனால் ஆலயத்தில் மனித நடமாட்டம் இல்லை.



விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.

அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண் டார். லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள்.


 அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.

ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம்.

 

சனி, 14 மே, 2016

தஞ்சாவூர் சொர்ண காமாட்சி!

 
தஞ்சாவூர்  - பங்காரு காமாட்சி

சொர்ண மயமான தங்க காமாட்சியை பிரம்மா செய்தார். ஆனந்த அழுகையோடு தொழுதார்.
  சலிப்பூட்டாத அவளின் வழிபாட்டை தொடர்ந்தவர் பங்குனி மாதம் காஞ்சி ஏகாம்பரத்தில் தவமிருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக விவாகம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவர்ண காமாட்சியை த்ருவம் எனும் அசையா மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அபிஷேக ஆராதனைகள் முரிந்தவுடன் ஒரு தாமரை மலரை ஆகாசத்தில் வீசி எறிந்தார். வானம் தொட்ட தாமரையினின்று ஆகாச பூபதி என்றொருவன் வெளிப்பட்டான். ஆண்டுதோறும் அன்னையின் திருக்கல்யாணத்தை நிகழ்த்து என அன்பாணையிட்டார். மெல்ல நகர்ந்து சத்திய லோகம் ஏகினார். சொர்ணகாமாட்சி வரலாற்றுப் பேரேடுகளில் சில பக்கங்களை எல்லோரையும் புரட்டும்படி செய்யும் காலம் நெருங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் உச்சிக் காலம்.

அந்நியதேசப் படையெடுப்பாலும்,
  வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. திருக்கோயில்களின் விக்ரஹத்தில் ஏதுமில்லை அதை தூக்கியெறியுங்கள். உங்களின் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள் என இந்து மதத்தின்மீது கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரஹங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளை யடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர். காஞ்சிக் கோயிலுக்கும் அந்தகதி வந்து விடுமோ என்று அஞ்சினர். மஞ்சள் ரூபிணியான சொர்ண காமாட்சியை விஜயநகர மன்னர்கள் தெலுங்கில் பங்காரு காமாட்சி என்று அழைத்தனர். அவளும் அவர்களுக்கருகே செல்லலாம் திருவுள்ளம் பூண்டாள். ஆதிகாமாட்சியும் ஆஹா... என்றாள். சோழதேசத்தின் நெல் வயல்கள் தங்கமுலாம் பூசியதுபோன்று செழித்துக் கிடந்தது. தங்க பங்காரு காமாட்சியும் அங்கேயே சென்று தங்கலாம் என்று உறுதி பூண்டாள்.

 தஞ்சை மராட்டிய மன்னனான ஏகோஜியின் ஆட்சியில் இருந்தது. 1737ம் ஆண்டு வாரிசு இல்லாது ஏகோஜி உயிர் நீத்தான். 1739ம் வருடம் பிரதாப சிம்மன் அரியணை ஏறினான். அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 - 1783) மகிழ்ச்சியுற்றார். பிரம்மனால் பிரதிஷ்டை செய்ததாயிற்றே என கண்கலங்கினார். நிலவறையில் சொக்கத் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். ஒரு குழு பீடாதிபதியுடன் கோயில் ஸ்தானிகர்கள் சொர்ண காமாட்சியை கையில் பத்திரமாக சுற்றி எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்புளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் பேரன்பும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியோடு ஸ்தானிகர்கள் நிம்மதியோடு பூஜித்தனர். தஞ்சை மன்னரின் நெருங்கிய நண்பரும் அனக்கடி மிராசுதாரரும் சங்கராச்சாரியாரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார்.

பிரதாபசிம்மன் சுவர்ண காமாட்சி வருகிறாள் என்றவுடன் அகமகிழ்ந்தான். ஓரிடத்தில் பிரம்மன் நிறுத்திய த்ருவம் எனும் சொர்ண காமாட்சி இப்போது எல்லா துருவங்களுக்கும் பயணித்து அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு.... நா பங்காரு...’’ என்று தெலுங்கில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி கதறித் தீர்த்தான். அவளும் மென்மையாக சிரித்தாள். காஞ்சியில் எல்லோரும் கவலை மறந்தனர். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. கி.பி. 1746 முதல் 1887ம் ஆண்டு வரை எல்லா மன்னர்களாலும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கருவறை, விமானம், திருமதில், மண்டபம், கோபுரம் எல்லாமுமே வெவ்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராண காலத்தில் உதித்த பங்காரு காமாட்சி இன்று தஞ்சைவரை யாத்திரை செய்து நிலைபெற்றதென்பது அவளுடைய சங்கல்பம் தானே வேறு எதுவுமன்று. அந்த மகானின் திருநாமம் சியாமா சாஸ்திரிகள் என்பதாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான அவரின் இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். சியாமா சாஸ்திரிகள் சொர்ண காமாட்சி
  சிலகாலம் திருவாரூரில் இருக்கும்போதே மெய்மறந்து அவளின் திருவழகில் லயித்திருப்பார். இப்போது தஞ்சையில் குடியேறியபோது அம்மனின் அழகை வெகு அருகே நின்று ஆராதித்தார். கலையையும், ஞானத்தையும் அருள்வதில் இணையிலா நாயகியாக விளங்கும் காமாட்சி சியாமா சாஸ்திரிகளுக்கு அநாயாசமாக அள்ளித் தந்தாள். ஞானத்தை பதிலுக்கு ஏராளமான கீர்த்தனைகளை அவளின் திவ்ய பாதங்களில் சமர்பித்துப் பாடிக் களித்தார்.

அவர் பார்த்துக் களித்த பங்காரு காமாட்சியை நாமும் தரிசிப்போமா. கோயில் சிறிய ராஜகோபுரத்தோடு அழகுற அமைந்துள்ளது. கோயில் எளிமையாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் உள்ளிருக்கும் மூர்த்தினி புராணப் பெருமையுற்றவள். கோயிலின் வாயிலுக்கும், கருவறைக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. துவார பாலகிகளின் அனுமதியோடு கருவறையை நெருங்கும்போது குங்குமத்தின் மணம் மண்டபத்தையே நிறைக்கிறது. விளக்குச் சுடரொளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளின் பிரகாசம் கருவறையை நிறைக்கிறது.

கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்கதாரியின் ஒயிலும், அவள் ஏன் இங்கு வந்து அமர்ந்தாள் எனும் புரியாத வியப்பும் நம்மை பிரமிக்கச் செய்திருக்கின்றன. ஏதோ சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகியாக காட்சி தருகிறாள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி. காஞ்சி மடமும்,
  இந்து அறநிலையத்துறையினரும் இணைந்து இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். பூஜைக்கான உரிமையை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன் பயணித்து பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரகளான ஸ்தானிக பரம்பரையினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வர். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு. காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சியம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.
 
 

செவ்வாய், 10 மே, 2016

ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம்!

 

ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம்!

ஓம் ஆர்யா ஸ்வர்ணாம்பிகா மாதா  வ்ருத்ராரி மஹிதா சுபா 
காலே வ்ருஷ்டி பிரதானேன லோக க்ஷேமம் கரோது ஸா   

பாதார விந்தயோ காந்த்யா மணிநூபுர  சிஞ்சிதை:
ஸ்வர்ணாம்பிகா கரோத் வஸ்மான் லாஸ்யேனானந்த துந்திலான் 

ஸ்துத்யா பிரம்மாதிபி: தேவீ ஸ்ரீவித்யா ஸர்வமங்களா
அங்காரகா க்ஷேத்ரவாஸா ஸ்வர்ணாம்பா பாது: நஸதா 

ஸ்வர்ணாம்பிகா ஜகன்மாதா அகஸ்யேச்வர  மன: ப்ரியா 
கடாக்ஷயது ந:ஸர்வான் யோக க்ஷேம  துரந்தரா 

கும்பஜேனார்ச்சிதா  நித்யம் மந்தஹாஸனே  மாமகே 
ஸ்வர்ணாம்பிகா தம: ஸ்வாந்தே  த்ராஜ பாகுருதாத்  சிவா!


 தங்கம் அதிகம் சேர இந்த  ஸ்வர்ணாம்பிகா பஞ்சகத்தை ஜபம் செய்ய வேண்டும்.








 

வெள்ளி, 6 மே, 2016

அட்சய திருதியை ஓர் அற்புத பொன்னாள்!



அட்சய திருதியை என்று நாம் செய்கின்ற எந்த வொரு நற்காரியமும், செயலும பன்மடங்கு பெருகி நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதே உண்மை. அட்சயம் என்றால் என்றென்றும் வளர்வது, பூரணமானது குறையாதது, அழியா பலன் தருவது என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாசை அடுத்த வரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் அட்சய திருதியை நன்னாள் என்றழைக்கிறோம். இந்த நன்னாளில் நான் கிருதயுகத்தை பிரம்மன் படைத்ததாக பவிஷ்ய புராணம் சொல்கிறது. அட்சய திருதியை நன்னாளில் தான் ஐஸ்வர்ய லஷ்மி மற்றும் தான்ய லட்சுமி தோன்றினார்கள்.

மாலவனோடு திரு சேர்ந்து திரு மால் ஆன தினம் அட்சய திருதியை திதி. இது பொதுவாகவே லட்சுமி கடாச்சம் நிறைந்த நன்னாள். பரசு ராமர்  அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளில் தான். மஹாபாரதத்தில் திரவுபதி மானம் காக்க குறைவிலா சேலை வழங்கி கிருஷ்ண  பரமாத்மா பாதுகாத்த அட்சய திருதியை நாளில் தான்.

பாற்கடல் கடைந்த போது அமிர்தத்துடன் அவதரித்த திருமால், அகலுமில்லேன் என மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது திருதியை திதி நாளில் தான்.சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் காசியில் உள்ள அன்ன பூரணியிடம் தங்க அட்சய பாத்திரத்தில் ஸ்வர்ண கரண்டியில் பிச்சை பெற்றது திருதியை நாளில் தான்.

ராவணனால் விரட்டப்பட்ட குபேரன்  பெரும் தவம் புரிந்து ஈஸ்வரன் அருளாசிப்படி திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களை பெற்றது அட்சய திருதியை தான்.

வனவாசத்தின் போது தருமருக்கு சூரிய பகவான் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வழங்கியது அட்சயதிருதியை அன்று தான்.  குசேலருக்கு  கண்ணன் கூறிய அட்சயம் என்ற சொல்  குபேர வாழ்வு வழங்கியது அட்சய திருதியையில் தான்.

இத்தனை அற்புதங்கள் நிகழ்ந்த அட்சய திருதியை நாளில் நாம் விரதமிருந்து மஹாலட்சுமி மற்றும் குபேரனை வணங்கி நம் வீட்டிற்கு தேவையான செல்வங்களை வாங்கி கொள்ளலாம். 

அட்சய திருதியை வழிபாடும் தானமும் :

அட்சய திருதியை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையில் கோலமிட்டு மகாலட்சுமி, மஹா விஷ்ணு இருவர்  இணைந்த படத்தின் மீது மாலையிட்டு விளக்கேற்றி பால், பாயாசம், பழம் போன்றவற்றை நிவேதனம் செய்து தூப, தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று நாம் வாங்கும் பொருள்களை விட தானம் செய்வதன் மூலமே நம் செல்வம் பன்மடங்கு பெருகும். அன்னதானம், கோதானம் போன்றவற்றுடன் நம்மால் இயன்ற நீர் மோர் கூட தானம் செய்யலாம்.

அட்சய திருதியை என்பது பல அற்புதங்கள் நடந்தேறிய நன்மை நிறைந்த பொன்னாள் என்பதால் நிறைய பேர் தங்கம் வாங்குகின்றனர். உப்பு, வாங்கி வீட்டில் வைக்கலாம். கைகுத்தல் அரிசி வாங்கி கொஞ்சம் துணியில் கட்டி நமது பொக்கிஷ அலமாரியில் வைக்கலாம்.

மஞ்சள் வாங்கலாம். அதிலும் கஸ்தூரி மஞ்சர் வாங்குவது மிக சிறந்தது. கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். அட்சய திருதியை அன்று பூஜை செய்யும் போது மகாலட்சுமியின் முன்பு கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வேண்டினால் இல்லத்தில் செல்வம் குறையாது வளம் பெருகும்.

தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது. எனவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் நிச்சயமாக அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் தேடி வரும்.

அட்சய திருதியை நன்னாளில் தாங்கள் செய்வதுடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிய பாடங்கள் படிப்பது, கலைகளில் இணைவது போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வாழ்க்கைக்கு உகந்த எல்லா செல்வங்களையும் வாரிவழங்கும் அட்சய திருதியை ஓர் அற்புத பொன்னாள்.

அட்சய திருதியை: ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் என்ன நிற ஆடை அணியலாம்:
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும், தங்களுக்கு ஏற்ற ஜாதக அமைப்புப்படி நிறத்துக்கான உடையை தேர்வு செய்து அணிந்தால் பலன் கிடைக்கும். நட்சத்திரப்படி ஒவ்வொருவரும் அணிய வேண்டிய உடை நிறம் வருமாறு:-

1. அஸ்வினி- சாம்பல்
2. பரணி- வெள்ளை
3. கிருத்திகை- சிவப்பு
4. ரோகிணி- வெள்ளை
5. மிருகசீரிஷம்- செந்நிறம்

6. திருவாதிரை- கருப்பு
7. புனர்பூசம்- மஞ்சள்
8. பூசம்- நீலம்
9.ஆயில்யம்- பச்சை
10. மகம்- சாம்பல்

11. பூரம்- வெள்ளை
12. உத்திரம்- சிவப்பு
13. அஸ்தம்- வெள்ளை
14. சித்திரை- செந்நிறம்
15. சுவாதி- கருப்பு

16. விசாகம்- மஞ்சள்
17. அனுசம்- நீலம்
18. கேட்டை- பச்சை
19. மூலம்- சாம்பல்
20. பூராடம்- வெள்ளை

21. உத்திராடம்- சிவப்பு
22. திருவோணம்- வெள்ளை
23. அவிட்டம்- செந்நிறம்
24. சதயம்- கருப்பு
25. பூரட்டாதி- மஞ்சள்
26. உத்திராட்டதி- நீலம்
27. ரேவதி- பச்சை.
 
அட்சய திருதியை தினத்தன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் விபரம் வருமாறு:-

1. அஸ்வினி- கதம்ப சாதம் தானம்.  மாணவர்கள் படிக்க உதவலாம்.
2. பரணி- நெய்தானம் தானம்.  
3. கிருத்திகை- சர்க்கரை பொங்கல் தானம். .
4. ரோகிணி- பால் அல்லது பால் பாயாசம் தானம்.
5. மிருக சீரிஷம்- சாம்பார் சாதம் தானம்.

6. திருவாதிரை- தயிர் சாதம் தானம். 
7. புனர்பூசம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
8. பூசம்- மிளகு கலந்த சாதம் தானம். கால்நடைகளுக்கு எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாம்.
9. ஆயில்யம்- வெண் பொங்கல் தானம். பச்சை பயிறு தானியத்தை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
10. மகம்- கதம்ப சாதம் தானம். கால்நடைகளுக்கு கொள்ளுத்தானியம் கொடுக்கலாம்.

11. பூரம்- நெய் சாதம் தானம்.
12. உத்திரம்- சர்க்கரை பொங்கல் தானம். கால்நடைகளுக்கு கோதுமை கொடுக்கலாம்.
13. அஸ்தம்- பால் பாயாசம் தானம்.
14. சித்திரை- துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்.
15. சுவாதி- உளுந்து வடை தானம்.  உணவு, உடை வாங்கிக்கொடுக்கலாம்.

16. விசாகம்- தயிர் சாதம் தானம். கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
17. அனுசம்- மிளகு கலந்த சாதம் தானம். வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு கொடுக்கலாம்.
18. கேட்டை- வெண் பொங்கல் தானம். பசு மாட்டுக்கு பச்சைப் பயிறு கொடுக்கலாம்.
19. மூலம்- கதம்ப சாதம் தானம்.
20. பூராடம்- நெய் சாதம் தானம்.

21. உத்திராடம்- சர்க்கரை பொங்கல் தானம்.
22. திருவோணம்- சர்க்கரை கலந்த பால் தானம்.  நெல் தானம்.
23. அவிட்டம்- சாம்பார் சாதம் தானம். கால்நடைகளுக்கு துவரை வாங்கி கொடுக்கலாம்.
24. சதயம்- உளுந்து பொடி சாதம் தானம். கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் கொடுக்கலாம்.
25. பூரட்டாதி- தயிர் சாதம் தானம்.
26. உத்திரட்டாதி- மிளகு சாதம் தானம்,  உணவு, உடை தானம் சிறந்தது.
27. ரேவதி- வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது.