திங்கள், 14 மார்ச், 2016

அதிசயம் நிகழ்த்தும் அரச மரம்!


இறைவனின் உறைவிடமாகவும், உயிர்கள் ஒடுங்கி உய்வுபெற தூண்டுதல் தரும் புனிதத் தலமாகவும் விளங்குபவை ஆலயங்கள். அங்கே ஒரு மரம் அல்லது தாவரத்தை தலவிருட்சம் என்று போற்றிவருவர். அரசு, வில்வம், ஆலம், வன்னி, அத்தி, சரக்கொன்றை, சந்தனம், பாதிரி, நெல்லி, மா, புன்னை, மகிழம், வேம்பு போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. கோவில்களுக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றை சிறப்பாகச் சொல்வர். இவற்றில் தலவிருட்சம் மூர்த்தி வகையைச் சேர்ந்தது. அதுபோல மணி, மந்திரம், ஔஷதம் எனும் மூன்றனுள், தலவிருட்சத்தின் இலையானது ஔஷதம் (பச்சிலை) என்பதில் அடங்கும். இதனையே பூஜிக்கவேண்டும் என்பதை திருமூலர், "யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை' என்கிறார்.

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது.



இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன. இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அச்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம், விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம், இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.

சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.

"
மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//'

என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.

இந்துசமய நெறியில் வாழ்வோருக்கு, அரசமரத்தை வலம்வருதல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை அல்லது திங்கட்கிழமை அல்லது அமாசோம விரத காலங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்வதும் நியதி. பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும் அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.
ஞாயிறு:  ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.
திங்கள்:
திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம்.

புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை அஞ்சலி செய்து அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம்   வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.

சனி: மகாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.


7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.

9 முறை சற்றினால் ஜயம்.

11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும்.

13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.

15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.

108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.

1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்.

வலம்வரும் விதிமுறை

அரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும். அதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம் என்பது சாஸ்திர விதி. அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.
விநாயகருக்கு ஒன்று; சூரியனுக்கு இரண்டு; சிவனுக்கும் பார்வதிக்கும் மூன்று; விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும், மகான்களின் சமாதிகளுக்கும் நான்கு என்ற எண்ணிக்கையில் வலம் வந்தால், அரசமரத்திற்கு மட்டும் ஏழு முறை வலம்வருதல் சாஸ்திர விதிமுறை
.
இவ்விதம் வலம் வரும்போது நிதானத்துடன் அடிமேல் அடிவைத்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, ஸ்தோத்ரத்தை உச்சரித்த வண்ணம் அமைதியுடனும் தூயஎண்ணத்துடனும் வலம்வர வேண்டும். ஒருபோதும் வேகமாகச் சுற்றிவரக்கூடாது. அரச மரத்தடியில் தெய்வமூர்த்தம், நாக லிங்கம் போன்றவை இருப்பின் அவற்றை தனியே விலக்கிவிடாமல் மரத்துடன் சேர்த்தே வலம்வர வேண்டும்
.
திங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும், புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்
.
பூஜைமுறை

அரசமரத்தடியில் அரிசிமாக்கோலங்களால் பூமியை அலங்கரித்து, காலம், தேசம், பயன், நோக்கம் ஆகியவற்றை முதலில் சங்கல்பம் செய்துகொண்டு, கலசபூஜையைச் செய்யவேண்டும்.
அரசமரத்தடியில் ஒரு அந்தணரை அமரச்செய்து பூஜிப்பது நன்மை தரும். தம்பதியராக பூஜித்தால் சிறந்த பயனடையலாம். சனிக்கிழமைகளில் தம்பதியை மரத்தடியில் இருத்தி லட்சுமி நாராயணராகவும், திங்கட் கிழமையில் உமா மகேச்வரராகவும் எண்ணி பூஜிக்கவேண்டும். இவ்வாறு பூஜித்து வலம் வருவோர் பலவகை கொடிய நோய்களிலிருந்தும்; தோஷங்கள், மனத்தளர்ச்சி, மனவருத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற்று, மக்கள் செல்வத்தையும் பெறுவார்கள் என்பது உறுதி.
சனிக்கிழமையில் அரச இலையில் சனி பகவானை எண்ணி வணங்கி வலம்வந்தால், சனிகிரக தோஷம் அகலும். நீண்ட ஆயுளும், உடல்நலமும் கிட்டுவது திண்ணம்.
"
அச்வத்தபர்ணே சரசாபஹஸ்தம்
திஷ்டந்தமீட்யே வரதம் வரேண்யம்/
சநைச்சரம் பூரி வரப்ரதம் தம்
நமாம்யஹம் துக்கவிநாயசனாய//

என்று கூறி வணங்குவதால் சனி பகவானின் அருளும், விஷ்ணுவின் அருளும் கிட்டும்.

தெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள் செய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வீடு கட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.

அரச மரத்தின் அனைத்துப் பொருட்களும் ஆலய சிறப்புப் பூஜைகளிலும், யாகங்களிலும் பயன்படக்கூடியவை. அரச சமித்தின் யாகாக்னி புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தருவது.

அரசமரக் காற்றானது நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. இந்த மரக்கட்டையில் அக்னியை உண்டாக்கும் கருவியாகிய அரணிக்கட்டையைச் செய்து, அதைக் கடைந்து யாகத்தீயைத் தோற்றுவிப்பார்கள். அரசமரமானது யாகத்தில் யூபத்தூண்களாகவும், யாகசாலையில் கிழக்கு அல்லது மேற்கில் தோரணவாயிலாகவும், குச்சிகள் சர்வதேவதா ஹோமங்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.
விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும். மேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் செய்வது உரிய பயனை விரைந்தளிக்கும்.

அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும், ஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர். முருகனின் திருக்கையில் விளங்குகிற ஞானவேல் என்பது அரச இலையின் உருவத்திலேயே இருப்பதும், யாகத்தில் சிதக்னிகுண்டம் என்பது அரச இலையின் வடிவமாய் உள்ளதும் இம்மரத்தின் ஆற்றலை உணர்த்தும். இம்மரத்தின் பட்டை, இலை, மொக்கு, அடிமண்ணை எடுக்கும்போது முதலில் மரத்தைப் பூஜித்து, பின்பு அதனிடம் யாசித்து தான் பெறவேண்டும்.

அரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர். பொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும்.
அரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில் வலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும். நாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.
 
 
 

அஸ்வமேதயாகப் பலன் தரும் வில்வம்!



இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது.இந்த வில்வம் இச்சாசக்தி
, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

அஸ்வமேதயாகம்

வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.தங்கமலர் அர்ச்சனைசிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும்.

 வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்..

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.


வேடனுக்கு மோட்சம்

ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.

கற்பக மூலிகையான வில்வம்

திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும். சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


எப்பொழுது பறிக்கக்கூடாது

வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு. இதனை சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.

மங்களம் செழிக்க வரமருளும் காரடையான் நோன்பு!


விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும். மாசி மாத முடிவில் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலி கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.



இந்த விரதத்தை மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.

காரடையான் நோன்பன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணையுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணையுடன் விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.


நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி, பின்னர் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம்.


நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை, தீபம் சுடர்விட்டு எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.


சொல்ல வேண்டிய வாக்கியம்

உருக்காத வெண்ணையும்ஒரடையும் நான் தருவேன்,
ஒருக்காலும் என்னவிட்டு என்
கணவர் பிரியாதிருக்க வேண்டும்


சரடு கட்டிக் கொள்ள மந்திரம்

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா.


ஸ்லோகத்தின் அர்த்தம்:

 ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும்


 

புதன், 9 மார்ச், 2016

செல்வம் தரும் திருமண்

செல்வம் தரும் திருமண்

ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்றும் உள்ளது. இங்கும் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியின் முன்னால் துளசி மாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் தேவையாக செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசிக் கொள்கிறார்கள். மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது

பொன் மழையே பொழிக!

பொன் மழையே பொழிக! ஆதிசங்கரர் அருளியது

 அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
 ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
 அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
 மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:

அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
 அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
 துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
 சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
 மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
 வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
 பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
 பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே

 முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
 மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
 ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
 நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
 மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
 மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
 பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
 பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
 சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
 சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே

 ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
 ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
 ஆகேகரச்திதகநீநிகபக்ஷ?மநேத்ரம்
 பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:

அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
 ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
 வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
 வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
 புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
 பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
 விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
 வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும்

 பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
 ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
 காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
 கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
 தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
 பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
 பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
 திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
 திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
 பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
 பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே

 காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
 மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
 நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
 சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
 செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
 பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
 பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
 சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
 தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே

 ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
 மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
 மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
 மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
 மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
 சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
 திறம்படைத்த திருமாலின் சௌலப்யம் எதுவோ
 பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
 பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
 தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
 தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா

 விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
 ஆநந்தஹேதுரதிகம் முரவித்வி÷ஷா(அ)பி
 ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
 மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:

விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
 வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
 முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
 முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
 துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
 தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
 விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
 வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே

 இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
 ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
 திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
 புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்

 அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
 இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
 உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
 ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
 விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
 வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே

 தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
 மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
 துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
 நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:

சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
 தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
 பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
 பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
 ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
 அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
 போதனை போல் பொன்மலை என்மீது நீ
 பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால்

 கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
 ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
 ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
 தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை

 சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
 சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
 மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
 மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
 பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
 பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
 குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
 கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம்

 ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
 ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
 சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
 புஷ்ட்யை நமோஸ்து புரு÷ஷாத்தம வல்லபாயை

 வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
 விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
 சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
 தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
 இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
 இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
 உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
 உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம்

 நமோஸ்து நாளீகநிபாநநாயை
 நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
 நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
 நமோஸ்து நாராயண வல்லபாயை


 பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
 பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
 மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
 மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம்

 நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
 நமோஸ்து பூமண்டலநாயிகாயை
 நமோஸ்து தேவாதிதயாபராயை
 நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை

 தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
 தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
 மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
 மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம்

 நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
 நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
 நமோஸ்து லக்ஷ?ம்யை கமலாலயாயை
 நமோஸ்து தாமோதரவல்லபாயை

 மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
 மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
 தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
 தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம்

 நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
 நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
 நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
 நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை

 சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
 செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
 ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
 ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம்

 சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
 சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷ?
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
 மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

 தாமரைக் கண்கள் படைத்த தாயே சௌபாக்ய நல்கும் தேவி
 சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
 நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
 நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய்

 யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

 கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
 புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
 தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
 நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
 அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி

 ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
 தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
 பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
 த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்

 கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
 தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
 திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
 கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
 எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே

 திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
 ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
 ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
 லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்

 தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
 குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
 தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
 திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
 திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே

 கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
 கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
 ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
 பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
 இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
 நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
 எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
 கடைக்கண் வைப்பாய் என்மீதே

 ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
 த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
 குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
 நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
 துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
 ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
 புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே

(ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும்அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்





 

மாசியில் மகா சுக்ல சதுர்த்தி விழா!



கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி என்பது இந்துக் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும். இது தில்குந்த சதுர்த்தி என்றும் வரத சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றது. கணேச ஜெயந்தி விரதமாகவும் பண்டிகையாகவும் அனுட்டிக்கப்படுகின்றது.
 
ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் சுக்கில பட்ச சதுர்த்தியில் கணேச ஜெயந்தி அனுட்டிக்கப்படுகின்றது. இது இந்திய மாநிலங்களானமகாராஷ்டிரா விலும், கோவாவிலும், பெரும்பாலும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட விநாயக சதுர்த்தி  விநாயகரின் பிறந்த நாளாகவே கொண்டாடப்படுகிறது.
 
கணேச ஜெயந்தி மாசி   மாதத்தில்  கொண்டாடப்படுவதும் , விநாயக சதுர்த்தி  ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுவதுமே இவ்விரண்டு விழாக்களுக்குமான வேறுபாடாகும்.