சனி, 24 அக்டோபர், 2015

ஏகாதசி! எத்தனை ஏகாதசி!


வருடத்தில் 25 ஏகாதசி!


திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இதில் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும் போது செல்வச்செழிப்பும், வாழ்வுக்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

1. பாபமோசனி ஏகாதசி - சித்திரை மாதம் தேய்பிறை
2. காமதா ஏகாதசி - சித்திரை மாதம் வளர்பிறை
3. வருதினி ஏகாதசி - வைகாசி தேய்பிறை
4. மோகினி ஏகாதசி - வைகாசி வளர்பிறை
5. அபரா ஏகாதசி - ஆனி தேய்பிறை
6. நிர்ஜலா ஏகாதசி -  ஆனி வளர்பிறை
7. யோகினி ஏகாதசி - ஆடி தேய்பிறை
8. தேவசயினி /பத்ம  ஏகாதசி - ஆடி வளர்பிறை
9. காமிகா ஏகாதசி - ஆவணி தேய்பிறை
10. புத்ரதா  ஏகாதசி - ஆவணி வளர்பிறை
11. அஜாஅன்னதா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறை
12. பார்ஷ்வா - வாமன (பத்மநாபா) ஏகாதசி - புரட்டாசி வளர்பிறை
13. இந்திரா ஏகாதசி - ஐப்பசி தேய்பிறை
14. பவித்ரோபன / பாபங்குசா  ஏகாதசி - ஐப்பசி வளர்பிறை
15. ரமா ஏகாதசி     - கார்த்திகை தேய்பிறை
16. பிரபோதினி ஏகாதசி - கார்த்திகை வளர்பிறை
17. உற்பத்தி ஏகாதசி - மார்கழி தேய்பிறை
18. வைகுண்ட ஏகாதசி - மார்கழி வளர்பிறை
19. ஸபலா ஏகாதசி - தை தேய்பிறை
20. புத்ரதா ஏகாதசி- தை வளர்பிறை
21. ஷட்திலா ஏகாதசி - மாசி தேய்பிறை
22. ஜயா ஏகாதசி - மாசி வளர்பிறை
23. விஜயா ஏகாதசி - பங்குனி தேய்பிறை
24. ஆமலகீ ஏகாதசி - பங்குனி வளர்பிறை
25. கமலா ஏகாதசி -  இந்த ஏகாதசிக்குரிய தினத்தை பஞ்சாங்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். இந்த திதி வரும் மாதத்தை புருஷோத்தம மாதம் (பெருமாளுக்குரிய மாதம்) என்று சிறப்பிப்பர்.




நன்றி: தினமலர்
 

துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !



துலா ஸ்நானம்:


காவிரியில் ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன் !


வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும். ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும். இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு. காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.

பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம். தமிழ்நாட்டில் பவானி, உ.பி.யில் அலகாபாத், கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.

காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.

ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி.

ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.



 

அசூன்ய சயன விரதம்



தம்பதிகள் பிரிவதை தடுக்கும் அசூன்ய சயன விரதம்


ஆவணி (சிராவண) மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

பிறகு,

"
லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ கதாசித்யதோ பவான் ததா
களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்

(
ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின் வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பத்ம புராணம்.

தூர்வா கணபதி விரதம்



சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லை நிறைய பரப்பி, புல்லின்மீது ஸ்ரீகணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில்,

கணபதயே நம:
உமாபுத்ராய நம:
அகநாசநாய நம:
ஏகதந்தாய நம:
இபவக்த்ராய நம:
மூஷிகவாஹனாய நம:
வினாயகாய நம:
ஈசபுத்ராய நம:
ஸர்வஸித்திப்ரதாயகாய நம:
குமாரகுரவே நம:

என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//

 இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

சரஸ்வதி 108 போற்றி!


ஓம் அறிவின் வடிவே போற்றி
ஓம் அறியாமை நீக்குவாய் போற்றி
ஓம் அபயம் அளிப்பாய் போற்றி
ஓம் அனுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அட்சமாலை கரத்தாய் போற்றி
ஓம் அறிவின் தலைவியே போற்றி
ஓம் அழகில் அன்னமே போற்றி
ஓம் அளவிலா புகழினாய் போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகிலம் காப்பாய் போற்றி
ஓம் ஆசான் வடிவே போற்றி
ஓம் ஆனந்த ரூபினியே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆயகலை அருள்வாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் இசை வடிவானாய் போற்றி
ஓம் இளமான் சாயலாய் போற்றி
ஓம் இன்னிசை குயிலே போற்றி
ஓம் ஈகை குணத்தாளே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈடேற்றுபவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உலகம் உய்விப்பாய் போற்றி
ஓம் எண் எழுத்து ஆனாய் போற்றி
ஓம் எழிலே உருவானாய் போற்றி
ஓம் ஏடு ஏந்தியவளே போற்றி
ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கலைமகள் தாயே போற்றி
ஓம் கலை களஞ்சியமே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் கலைவாணி தாயே போற்றி
ஓம் கலைக்கு அரசியே போற்றி
ஓம் கம்பரைக் காத்தாய் போற்றி
ஓம் காட்சிக்கு எளியாய் போற்றி
ஓம் காயத்ரியானவளே போற்றி
ஓம் குருவின் வடிவே போற்றி
ஓம் குறை பொறுப்பாய் போற்றி
ஓம் குணக் குன்று ஆனாய் போற்றி
ஓம் குணம் கடந்தவளே போற்றி
ஓம் குருபரர் நாவில் உறைவாய் போற்றி
ஓம் கூத்தருக்கு அருளினாய் போற்றி
ஓம் கூத்தனுõர் வாழ்பவளே போற்றி
ஓம் சகலகலா வல்லியே போற்றி
ஓம் சரஸ்வதி தாயே போற்றி
ஓம் சதுர்முகன் நாயகியே போற்றி
ஓம் சந்தேகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் சச்சிதானந்த ரூபமே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் வடிவே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தி அளிப்பாய் போற்றி
ஓம் சுருதி மறை பொருளே போற்றி
ஓம் ஞான வித்யாம்பிகையே போற்றி
ஓம் ஞானேஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஞாலம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஞான சக்தி வடிவே போற்றி
ஓம் ஞானாசிரியை ஆனாய் போற்றி
ஓம் தவக்கோலத் தாயே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பாய் போற்றி
ஓம் தயை மிக்கவளே போற்றி
ஓம் தயாநிதி தருபவளே போற்றி
ஓம் துõய மனத்தினாய் போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நன்னெறி நாயகியே போற்றி
ஓம் நலம் அருள்பவளே போற்றி
ஓம் நாவின் அரசியே போற்றி
ஓம் நான்மறை வித்தகியே போற்றி
ஓம் நாத வெள்ளமே போற்றி
ஓம் நாதாந்த வடிவே போற்றி
ஓம் நிறைவாழ்வு தருவாய் போற்றி
ஓம் நுட்பம் மிக்கவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பண்ணின் வடிவாய் போற்றி
ஓம் பளிங்கு மனத்தினாய் போற்றி
ஓம் படிக நிறத்தினாய் போற்றி 
ஓம் பாட்டின் இனிமையே போற்றி
ஓம் பாட்டின் பொருளே போற்றி
ஓம் பிரணவப் பொருளே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் பிரம்மன் துணைவியே போற்றி
ஓம் புலமை மிக்கவளே போற்றி
ஓம் பூரண வடிவினளே போற்றி
ஓம் புவனம் காப்பவளே போற்றி
ஓம் புனிதம் மிக்கவளே போற்றி
ஓம் வாக்கில் இருப்பவளே போற்றி
ஓம் வாக்கு தேவதையே போற்றி
ஓம் வித்யாம்பிகையே போற்றி
ஓம் வித்தக ரத்தினமே போற்றி
ஓம் மந்திர வடிவினாய் போற்றி
ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் முக்காலம் அறிந்தாய் போற்றி 
ஓம் முக்தி அருள்பவளே போற்றி
ஓம் மூல நட்சத்திரத்தாளே போற்றி
ஓம் மேதா ரத்தினமே போற்றி
ஓம் மேன்மை மிக்காய் போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் பல தருவாய் போற்றி
ஓம் வீணை தாங்கியவளே போற்றி
ஓம் வெண்தாமரை உறைவாய் போற்றி
ஓம் வெள்ளாடை உடுத்தாய் போற்றி
ஓம் வித்தகம் அளிப்பாய் போற்றி
ஓம் வேதாந்த நாயகியே போற்றி
ஓம் வேத வடிவானவளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
 
 
 
 
 

ஐஸ்வர்யங்கள் சேர்க்கும் அருகம்புல் (தூர்வாஷ்டமி ) வழிபாடு!


அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டு மென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால், கெட்ட கனவுகள் விலகி, நன்கு உறக்கம் வரும்.


துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது.
 
துர்க்கையை அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது.
உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத (ஆவணி) மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இந்த தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.

இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும்.

இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது. தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அறுகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் (இருந்தால் விசேஷம்) அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அறுகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை. இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

சக்திக்குத் தகுந்தாற்போல் நைவேத்தியங்கள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு பரமேஸ்வரனுக்கு அட்சதை, சந்தனம் கலந்த தயிரால் அர்க்யம் தர வேண்டும். பிறகு அறுகம்புலை நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும். அதற்கான மந்திரம்-

த்வம் தூர்வேஸ்ம்ருத ஜன்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை:
ஸௌபாக்ய ஸந்ததிம் தேஹி ஸர்வகார்ய கரீபவ
யதாசாகாப்ரசாகாபி: விஸ்த்ரு தாஸி மஹுதலே
ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வம் அஜராமரம்

பூஜைக்குப் பிறகு அந்தணர்களுக்கும், சுவாசினிகளுக்கும் மங்கள திரவியங்கள் மற்றும் தட்சிணையளித்து விருந்தளிக்க வேண்டும். அன்றைய தினம் பூஜை முடிந்த பிறகு பத்தியமில்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம்.

தூர்வையை தினமும் தலையில் வைத்துக்கொள்வதற்கான மந்திரம்:

ஆயுள் தீர்க்கம் அரோகஞ்ச வபு: ஸ்யாத் வஜ்ர ஸன்னிபம்.
இதன் பொருள், தீர்க்காயுள் கிடைக்க வேண்டும். சரீரமானது நோயற்றதாகவும் வஜ்ரம்போல் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது.

அறுகம்புல்லானது பற்பல ஹோமங்களில் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமம் செய்த அறுகின் புகையை நுகர்ந்தால் பாசம், அபஸ்மாரம் முதலிய தீராத நோய்கள் குணமடையும். அப்புகையை நுகர்வதால் நன்கு பசியெடுக்கும். பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமை அறுகுக்கு உண்டு.
 


அறுகம் புல்லானது ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது.

இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனுஷ்டித்தால் சகலசவுபாக்கியங்களையும் பெற்று, சிறந்த பிள்ளை பாக்கியத்தை அடைந்து, நினைத்த காரியங்களிலும் வெற்றியடையலாம்.


தூர்வையைப் போற்றும் மந்திரம்:

தூர்ஸ்வப்னங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னைத் தொடுவதாலும் பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எனது எல்லாப் பாவங்களும் நீங்கவேண்டும்.
நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ, அவ்விதமே நானும் படிப்படியாக வளர்ந்து சகல ச்ரேயஸ்களையும் அடைய வேண்டும்.
ஹே தேவியே! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக. உன்னை நான் பூஜிக்கிறேன்.
உன்னை என் தலையால் தாங்கிக் கொள்கிறேன். நீ என்னை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.







 

சனி, 10 அக்டோபர், 2015

உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு



 அசுவினியில் பிறந்தவர்கள்  அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று கூத்தனூர் சென்று சரஸ்வதியை வணங்கினால் வித்தை விருத்தி அடையும்.


பரணியில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தன்று கதிராமங்கலம் சென்று ராகு காலத்தில் ஸ்ரீதுர்கையை வழிபட்டால் சுகம் பெருகும்.



கார்த்திகையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திரு அண்ணாமலை கிரிவலம் வந்தால் அக்னி பகவான் அருள் பெற்று பொருளாதார மேன்மை அடைவர்.



ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அமாவாசையன்று கும்பகோணம் சென்று ஸ்ரீபிரம்மாவை வழிபட தடைகள் பல விலகிவிடும்.



மிருக சீரிடம் நட்சத்திரத்தில் உதயமானவர்கள் திங்கட் கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் திங்களூர் சென்று சந்திர பகவானை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.



திருவாதிரையில் பிறந்தவர்கள் சதுர்த்தசி திதி அல்லது மாத சிவராத்திரி வரும் நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கினால் அபூர்வ ராஜயோகம் உண்டாகும்.



புனர்பூசத்தில் பிறந்தவர்கள் நவமி நாட்களில் கும்பகோணம் சென்று ஸ்ரீஇராமசாமியை தரிசனம் செய்தால் இனிய வாழ்க்கை உண்டாகும்.



ஒளி மிகுந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி நாட்களில் தென்குடி திட்டைசென்று ராஜகுருவை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.



ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் காளஹஸ்தி சென்று ராகு காலத்தில் ராகு மற்றும் கேதுக்களை வணங்கினால் மணவாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.


மகம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானின் ஸ்தலமான கஞ்சனூர் சென்று வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்.



பூர நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சமயபுரம் சென்று மாரியம்மாளை வழிபட்டால் நினைத்தது கைகூடும்.


உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வணங்கினால் நல்ல தொழில் வளம் உண்டாகும்.


அஸ்த நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை மாதந்தோறும் சபரிமலை சென்று ஸ்ரீசாஸ்தாவை வணங்கினால் நலம் உண்டாகும்.



சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.



சுவாதியில் பிறந்தவர்கள் வாயுஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சென்று ராகு காலத்தில் இறை வழிபாடு செய்தால் இன்னல்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.


விசாக நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நாட்களில் பழனிக்குச் சென்று முருகனை வழிபட்டால் உயர்வுகள் பல உண்டாகும்.


அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரெங்க நாதரையும் தாயாரையும் தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


கேட்டை நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.


முல நட்சத்திரக்காரர்கள் திருப்பாம்புரம் சென்று ராகு காலத்தில் ராகு கேதுக்களை வழிபட்டால் இனிய இல்லறம் அமையும்.



பூராடம் நட்ச்த்திரக்காரர்கள் கார் காலங்களில் வருணன் வணங்கிய திரு அண்ணாமலையாரை வணங்கினால் செல்வ வளம் உருவாகும்.



உத்திராடம் நட்சத்திரக் காரர்கள் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பிள்ளையார்பட்டி சென்று விநாயக்கடவுளை வழிபட்டால் நலம் தரும் முன்னேற்றம் உண்டாகும்.



திரு ஓண நட்சத்திரக்காரர்கள் அவரது ஜன்ம நட்சத்திரத்தன்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டால் ஐசுவரியங்கள் கிடைக்கும்.
 

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திரு நள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால் தனம் பெருகும்.


சதயம் நட்சத்திரக் காரர்கள் அமாவாசை நாட்களில் ஸ்ரீவாஞ்சியம் சென்று யமதர்மனை வணங்கினால் நல்வழி கிடைக்கும்.


பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமைகளில் திருச்சி திரு வானைக்கா சென்று குபேர லிங்கத்தை தரிசனம் செய்தால் நல்ல தன விருத்தி உண்டாகும்.



உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருவாடுதுறை சென்று ஸ்ரீகோமுக்தீஸ்வரரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.



ரேவதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திருக்கொள்ளிக்காடு சென்று சனிபகவானை வணங்கினால் சிறப்புகள் பல உண்டாகும்.